Friday 26th of April 2024 12:26:32 PM GMT

LANGUAGE - TAMIL
ஒரு ஊழியருக்கு கொரோனோ வைரஸ்;  300 பேரை வீட்டுக்கு அனுப்பியது சிங்கப்பூர் வங்கி!

ஒரு ஊழியருக்கு கொரோனோ வைரஸ்; 300 பேரை வீட்டுக்கு அனுப்பியது சிங்கப்பூர் வங்கி!


ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதை அடுத்து அந்த வங்கி கிளையில் பணியாற்றிய 300 பேரையும் இன்று வீடுகளுக்கு அனுப்பியது சிங்கப்பூரில் உள்ள டி.பி.எஸ். வங்கி.

பணியாளர்கள் யாரும் அலுவலகம் வரவேண்டாம். வீடுகளில் இருந்தே பணியாற்றுங்கள் என அந்த வங்கி அறிவித்துள்ளது.

இந்த வங்கியில் பணியாற்றும் ஒருவர் கொரோனோ வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் காணப்பட்டதை அடுத்து அவரிடம் நேற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இன்று புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் அவருக்கு கொரேனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் வேலை செய்த வங்கியில் வேலை செய்யும் 300 பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

வீடுகளில் இருந்தவாறு வேலை செய்யும்படி ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த வங்கி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கலான இத்தருணத்தில் பாதிக்கப்பட்ட ஊழியருக்கும், அவரது குடும்பத்துக்கும் தேவையான எல்லா ஆதரவையும், வழிகாட்டுதலையும் வங்கி அளிக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வங்கி ஊழியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் குறித்து ஆராயப்பட்டு அவர்களிடம் மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்படும் என சிங்கப்பூர் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதேவேளை, வங்கி அமைந்திருந்த கட்டடத்தின் மின் தூக்கி, கழிப்பிடங்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு இடங்கள், முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.

வீட்டுக்கு அனுப்பப்பட்ட அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் காய்ச்சலை அளவிடும் கருவி, முகக் கவசம், கிருமி நீக்கிகள் ஆகியவை உள்ளடங்கிய பராமரிப்பு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவருக்குமான மருத்துவ பரிசோதனைக்கான ஏற்பாடுகளையம் வங்கி மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, சிங்கப்பூரில் கொரோனோ கிருமித் தொற்று தொடர்பான எச்சரிக்கை சமிக்ஞையை ஒரேஞ் நிறத்துக்கு அந்நாட்டு கிருமித் தொற்று எதிர்வினை அமைப்பு மாற்றியுள்ளது.

இந்த நோய் தீவிரமானது, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது என்பது இதன் பொருளாகும்.

இதனையடுத்து சிங்கப்பூரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்கள் மற்றும் அங்கு வருகை தருவோருக்கு காய்ச்சல் இருக்கிறதா? என பரிசோதிக்கத் தொடங்கியுள்ளன.

சிங்கப்பூரில் ஏற்கெனவே 47 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவை அடுத்து அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE