Friday 26th of April 2024 06:22:05 PM GMT

LANGUAGE - TAMIL
உரிமைப்போராட்டத்தில் ஒன்றிணைக்கப்படாத நாவலரின் சாதனைகள்!!

உரிமைப்போராட்டத்தில் ஒன்றிணைக்கப்படாத நாவலரின் சாதனைகள்!!


எந்த ஒரு இனத்தினதோ, ஒரு மக்கள் குழுமத்தினதோ விடுதலைப்போராட்டமோ அல்லது உரிமைப்போராட்டமோ திடீரென ஒரே நாளில் வெடித்துவிடுவதில்லை. அவை இழைக்கப்படும் அநீதிகளுக்கும் மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறைகளுக்கும் சமாந்தரமாக தனிமனிதர்களாலும், சிறு குழுக்களாலும் அவற்றுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளாக சிறுகச்சிறுக ஆரம்பிக்கப்டுகின்றன. இவை மெல்ல மெல்ல படிமுறை வளர்ச்சிமூலம் காலப்போக்கில் சில வலிமையான போராட்டங்களாக விரிவடைகின்றன. இவை ஒன்றினைந்து உயரிய கட்டத்தை எட்டும்போது அவற்றை கட்டுப்பாட்டுடனும், வெற்றியை நோக்கியும் வழிநடத்தக்கூடிய தலைமைகள் உருவாகின்றன. அந்த நிலையிலேயே போராட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தும் அளவுக்கு வலுவடைகின்றன.

இப்படியான போராட்டங்களின் நகர்வுகளின் போது அவை கூர்மையடைந்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்கின்றன. இப்படியாகக் கூர்மையடையும் சந்தர்ப்பங்களில் தலைமையேற்கும் சக்திகளின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த தலைமை முன் செல்கிறது.

இதை உலகில் நடந்த அனைத்து விடுதலைப் போராட்டங்களினதும் உரிமைப்போராட்டங்களினதும் வரலாறுகள் மீண்டும் மீண்டும் தெரியப்படுத்தி வருகின்றன. 70 கோடி மக்களை அப்போது கொண்டிருந்த சீன தேசத்தின் விடுதலைப் போராட்டத் தலைவராகிய மா ஓ சேதுங் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கும், கொமிட்டாங் ஆட்சியதிகாரத்திற்கும் எதிராக ஆயுதம் போராட்டத்தை நடத்தி விடுதலையைப் பெற்றார். அவர் எப்போதும் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது கன்பூசியஸ் என்ற சீன தத்துவ ஞானியை முன்வைத்தே தன் பிரசாரங்களை மேற்கொள்வார். கன்பூசியஸ் ஆயுதப்போராட்டங்களை ஏற்றுக்கொண்டவரல்ல. ஆனால் ஒரு மனிதன் தன்னில் தானே நம்பிக்கை வைக்கவேண்டிய தன்னம்பிக்கையையும், தலைவணங்கா வாழ்கையையும், சீன மக்களின் வரலாற்று ரீதியான மேன்மையையும் மக்கள் மத்தியில் வலியுறுத்தித் தன்போதனைகளை மேற்கொண்டார். அவரின் போதனைகளையும், அவரின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையையும், மக்களிடையே அவருக்கிருந்த செல்வாக்கையும் மா ஓ சேதுங் முழுமையாகப் பயன்படுத்தி சீன விடுதலைக்கு வலுச்சேர்த்தார்.

இன்று அமெரிக்காவில் தலைவாசலில் இராணுவ அச்சுறுத்தல் மத்தியிலும், கடுமையான பொருளாதாரத் தடைகள் மத்தியில் சின்னஞ்சிறு தேசமான கியூபா தலைநிமிர்ந்து நிற்கிறது. கியூபாவின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கிய நடத்தி வெற்றிபெற்றதுடன் அண்மைக்காலம் வரை அதைத் தனித்துவமான தேசமாக வழி நடத்தியவர் அதன் தலைவர் பெடல் காஸ்ரோ. அவரைப் படுகொலை செய்ய 70 தடவைகளுக்கு மேலாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் முயன்றபோதிலும் அவர்களால் முடியவில்லை. பெடல் காஸ்ரோ எப்போதுமே முழு லத்தீன் அமெரிக்காவையும் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுவிக்க அர்ப்பணிப்புடன் போராடிய தலைவர் யோசே மாட்டியையே தன் முன்னோடியாக போற்றிவந்தார். 1959 ல் கியூபா படிஸ்டோட்டிஸ்சின் சர்வதிகாரத்திலிருந்து விடுதலைபெற்றபோது “இந்த புரடசிக்கு அடித்தளமிட்டவர் யோசே மாட்டி” எனப் பகிரங்கமாக பெடல் பிரகடனம் செய்தார். கியூபாவில் முதல் புரட்சி தோல்வியடைந்து பெடல் காஸ்ரோ கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது அவர் தனது “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற உரையில் பத்துத் தடவைகளுக்கு மேலாக மாட்டியின் மேற்கோளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறே அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து வெனிசுலாவை விடுவித்த சாவோஸ் லத்தீன் அமெரிக்க நாடுகளை விடுவிக்கப்போராடிய சிமோன் பொலிவியரையே தனது முன்னோடியாகக் கொண்டு வெனிசுலாவுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தார்.

இவ்வாறே உலகம் முழுவதும் விடுதலை பெற்ற நாடுகளில் அதன் விடுதலையைப் பெற முன்னின்று போராடிய அமைப்புகளும் தலைவர்களும் தமது முன்னோடிகளின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டும் அவர்கள் விதைத்த சுதந்திர உணர்வை ஊக்கசக்தியாக கொண்டும் அவர்களின் முற்போக்கான அம்சங்களை மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்களை தட்டியெழுப்பியும் இலட்சியங்களை எட்டியுள்ளனர்.

அவ்வகையில் இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் தமிழ் தேசிய உணர்வை தட்டியெழுப்பி எமது இன அடையாளத்தை நிலைநிறுத்துவதில் தன்னை அர்ப்பணித்து பணியாற்றியவர் ஆறுமுக நாவலர். தமிழ்தேசியம் என்பது பற்றிப்பேசும் போது நாவலரை எவ்விதத்திலும் தவிர்த்துவிட முடியாதபடி அவர் எமது மொழி, பண்பாடு, மதம் என்பவற்றை பாதுகாக்க அர்ப்பணிப்புடனும் பல்வேறு முனைகளிலும் போராட்டங்களை நடத்தியுள்ளார்.

ஆனால் எமது உரிமைப் போராட்டப்பாதையில் நாவலரின் சாதனைகள் ஒன்றிணைக்கப்படாமையும், அவை முன்னோடியாகக் கொள்ளப்படாமையும் ஒரு பலவீனம் என்பது மட்டுமல்ல எமக்கு ஏற்பட்ட ஒரு துரதிஸ்டம் என்று கூட கூறலாம். நாவலர் சைவமதத்தை காப்பாற்றப் போராடியபோது ஒரு சைவமதப் பெரியார் என்ற வகையில் அவருக்கு அவரின் நினைவுநாளின் போது குருபூசை நடத்தி அவரின் சாதனைகளை மதவட்டத்துக்குள் குறுக்கிவிட்டோம். அதன் காரணமாக தமிழ்தேசிய எழுச்சிக்கு அவர் நல்கிய அர்ப்பணிப்பு மழுங்கடிக்கப்பட்டுவிட்டது.

நாவலர் காலத்தில் கத்தோலிக்க திருச்சபை, வெஸ்லி மிசன், அமெரிக்கன் மிசன், மெதடிஸ்ற் மிசன் போன்ற கிறீஸ்தவ நிறுவனங்கள் கல்வித்துறையில் பலம் பெற்று விளங்கின. ஆங்கிலக்கல்வியை கற்பித்தது மட்டுமன்றி பாடசாலைகள் மூலம் மதமாற்றம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அரச பணிகளிலோ, வேறு சமூக நிறுவனங்களிலோ கல்விக்கூடங்களிலோ ஆங்கிலம் கற்ற கிறீஸ்தவர்களுக்கே முதலிடம் என்ற வகையில் மதம் மாறுவது என்பது தங்கு தடையின்றி இடம்பெற்றது. அதேவேளையில் எமது பண்பாட்டு அம்சங்கள் கைவிடப்பட்டு மேற்கத்தைய கலாச்சாரத்தின் பின் இழுபடும் நிலையும் தோன்றியது.

இந்த நிலையில் தான் நாவலர் தமிழ் மொழியையும், சைவத்தையும், தமிழ் பண்பாட்டையும் பாதுகாக்கும் போராளியாகத் தன்னை உருவாக்கிக்கொண்டார். வடபகுதியெங்கும் சைவப்பாடசாலைகளை நிறுவினார். கிறீஸ்தவ ஆங்கிலப்பாடசாலைகளுக்குப் போட்டியாக இந்து ஆங்கிலப்பாடசாலைகளை நிறுவினார். சொற்பொழிவுகள், பிரசுரங்கள், பத்திரிகைகள் மூலம் எமது மொழி, மதம், பண்பாடு தொடர்பான பிரசாரங்களை தொடர்ந்து மேற்கொண்டார். மிசனரிகளுடன் தொடர்ச்சியான விவாதங்களை நடத்தி அவர்களை முறியடித்து மதமாற்றம் என்பது எமது இன சுயாதிபத்தியத்தை இழக்கவைக்கும் இழிசெயல் என உணரவைத்தார். இந்தியாவிலும் இலங்கையிலும் ஏட்டு வடிவில் அழியும் தறுவாயில் இருந்த இலக்கிய, இலக்கண, பக்தி நூல்களை தேடியெடுத்து அச்சேற்றினார். இதற்கென முதலில் ஒரு அச்சகத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்ததுடன் பின்பு சென்னையிலும் ஒன்றைத் தொடங்கினார். அத்துடன் அவராலும் பல நூல்கள் இயற்றப்பட்டன.

அதேவேளையில் அவர் சமூகப்பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். பஞ்சம் ஏற்பட்டபோது கஞ்சித்தொட்டி ஏற்பாடு செய்து மக்களுக்கு கஞ்சி வழங்கினார். பஞ்சத்தில் விவசாயம் நலிவடைந்தபோது விவசாயிகளுக்கு அரசாங்கம் இலவசமாக விதைநெல் வழங்க வேண்டுமெனப் போராட்டம் நடத்தினார். வறிய மக்கள் மத்தியில் “கொலரா” நோய் ஏற்பட்டபோது இளைஞர்களுக்குத் தானே நேரடியாகத் தலைமையேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டாற்றினார். அது மட்டுமின்றி சேர்.பொன். இராமநாதனை அரசியலில் ஒரு சக்தியாக உருவாக்குவதற்கும் கதவுகளை திறந்துவிட்டவர் நாவலர் தான் என்றால் மிகையாகாது.

1879ல் சட்டசபையில் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இடம்பெற்றது அப்போது தேர்தல் வாக்களிப்பின் மூலம் இடம்பெறுவதில்லை. ஒரு பொது இடத்தில் அரச பிரதிநிதி ஒருவர் முன்னிலையில் வேட்பாளர்களை ஆதரித்தும், எதிர்த்தும் விவாதங்கள் இடம்பெறும். அவற்றின் அடிப்படையில் அரசப் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்வார். அத்தேர்தலில் சேர்.பொன். இராமநாதனும், பிறிற்றோ என்ற சட்ட வல்லுனரான கிறீஸ்தவக் கல்விமானும் போட்டியிட்டனர்.

இடம்பெற்ற விவாதங்களின்படி பிறிற்றோ பக்கமே ஆணித்தரமான காரணங்கள் முன் வைக்கப்பட்டன. அந்நேரத்தில் நாவலர் எழுந்து அத்தனை வாதங்களையும் முறியடித்து இராமநாதன் தெரிவு செய்யப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இறுதியில் இராமநாதன் சட்டசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் 13 வருடங்கள் இப்பதவியில் பதவியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. சேர்.பொன். இராமநாதன் இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க ஒரு பாத்திரத்தை வகித்தபோதிலும் இந்து உயர்கல்வி பாடசாலைகளை நிறுவியும் கொழும்பில் கூட இந்து ஆலயங்களை நிறுவியும், செந்தமிழ் இலக்கணம் உட்பட பல இலக்கண நூல்களை எழுதியும் தமிழுக்கும், சைவத்துக்கும் தொண்டாற்றினார். இது ஆறுமுக நாவலர் முன்னெடுத்த தமிழ் தேசிய எழுச்சி ஏற்படுத்திய ஒரு பேரலையின் தொடர்ச்சி என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. அடிப்படையில் தமிழ் தேசிய எழுச்சியை முதன்முதலாக கட்டியெழுப்பி முன்னெடுத்தவர் என்ற வகையிலும் தமிழ் மக்கள் தமது பாரம்பரிய இன அடையாளத்தை புரிந்துகொண்டு நிலைநிறுத்தும் கடமையை தமிழினத்துக்கு ஊட்டியவர் என்ற வகையிலும் நாவலரே தமிழ்தேசியத்துக்காக தன்னை அர்ப்பணித்த முதல் போராளியாகும். அவர் ஏற்படுத்திய அந்த எழுச்சியின் தொடர்ச்சியே காலப்போக்கில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டமாக வெடித்தது.

ஆனால் பின்னால் தோன்றிய தமிழ் மக்களின் உரிமைப்போராட்ட அமைப்புகளும், தலைவர்களும் நாவலரை தமது முன்னோடியாக ஏற்றுக்கொள்ளத் தவறிவிட்டனர். மாறாக சைவமதத்தை பாதுகாத்த ஒரு மதவாதி என்றளவுக்கு அவரின் பணிகளைக் குறுக்கிவிட்டனர்.

பொன்.அருணாச்சலம், பொன்.இராமநாதன் சகோதரர்கள் தமிழுக்கும், சைவத்துக்கும், தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்கும் தனிப்பட்டவர்களாகப் பணியாற்றினார்களேயொழிய நாவலரின் தமிழ் தேசிய எழுச்சியை முன்னெடுக்கமுடியவில்லை. ஏனெனில் அவர்கள் ஆங்கில ஆட்சியில் தமிழர்களின் நிலையை வலுப்படுத்துவதிலேயே பிரதான கவனம் செலுத்தினார். அடுத்து உருவான தமிழ் மக்களின் அமைப்பான யாழ்ப்பாண மாணவர் அமைப்பு முழு இலங்கையின் சுதந்திரத்தைக் கோருவதாகவும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய தீண்டாமை போன்ற அநீதிகளை இல்லாமற் செய்யவும் உருவாக்கப்பட்டது. இது இந்தியதேசியக் காங்கிரஸ் போன்று சட்டமறுப்பு, தேர்தல் பகிஸ்கரிப்பு, மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற வழிகளிலேயே தனது போராட்டத்தை மேற்கொண்டது. இவ்வமைப்பு நாவலரைத் தமது முன்னோடியாகக் கொள்ளாமைக்கு இரு காரணங்கள் இருந்தன. இவர்கள் தமிழ் தேசியத்துக்கு அப்பால் முழு இலங்கையின் விடுதலை என்பது பற்றிச் சிந்தித்தனர் அடுத்து இவ்வமைப்பு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியுடன் தொடர்புடைய கல்விமான்களாலேயே ஆரம்பிக்கப்பட்டது. நாவலர் மிசனரிகளின் மத ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர் என்பதால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

அடுத்த தமிழ் தலைமையான ஜி.ஜி. பொன்னம்பலம் ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைக்காக முதலிலும் தமிழ் மக்களின் உரிமைக்காகப் பின்பும் குரல் கொடுத்தார். அவர் தமிழ் தேசியம் பற்றி அக்கறைப்படவில்லை. அரசியலுரிமையிலும், பொருளாதார வளத்திலும் சிங்களவருடன் சம உரிமை பெறுவதையே இலக்காக கொண்டு செயற்பட்டார்.

அடுத்து தமிழ் மக்கள் மத்தியில் வடக்குக் கிழக்கு மக்களை ஒன்றிணைத்த ஒரு தமிழ் தேசிய இயக்கமாக உருவாகியது தமிழரசுக் கட்சி. இவர்கள் சமஷ்டி முறையில் தமிழ் மக்களுக்கான தமது பாரம்பரிய தமிழ் பிரதேசத்தை கோரி அதில் தமிழ் தேசியத்தை நிலைநாட்டுவதையே கொள்கையாகக் கொண்டிருந்தனர். அவ்வகையில் தமிழரசுக்கட்சி ஆறுமுக நாவலரைத் தங்கள் ஆதர்ச முன்னோடியாகக் கொண்டிருக்கவேண்டும். எனினும் ஆறுமுகநாவலர் பக்கம் பார்வையைச் செலுத்தாமைக்கு மதரீதியான சில காரணங்கள் இருக்கலாம். ஏனெனில் தமிழரசுக்கட்சிக்கு கிறீஸ்தவ மதநிறுவனங்கள் பெரும் ஆதரவுத்தளமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே நாவலரின் தேசிய எழுச்சியும், சங்கிலி மன்னனின் அந்நியருக்கெதிரான விடுதலைப்போராட்டமும் தமிழ் அரசியல் சக்திகளால் முன்வைக்கப்படுவதில்லை. ஏனெனில் நாவலர் மதமாற்றத்தை எதிர்த்தார் என்பதும் சங்கிலியன் மதம் மாறியோரை மன்னாரில் சிரச்சேதம் செய்தான் என்பதுமாகும். அன்று மதப்பரம்பல் மூலம் தமிழ் மக்களின் மொழி, மதம், கலாச்சாரம் என்பன அழிக்கப்படும்போது நாவலர் அதற்கெதிராகப் போராடினார். எமது மண்ணை ஆக்கிரமிக்க போத்துக்கேயர் மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தியபோது சங்கிலி அதற்கெதிராக நடவடிக்கை எடுத்தான். அன்று அவர்கள் இருவரும் மேற்கொண்டது ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டமொழிய கிறீஸ்தவ மதத்திற்கோ, கிறீஸ்தவ மக்களுக்கோ எதிரான போராட்டமல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே எமது உரிமைப் போராட்டத்தில் நாவலரை முன்னோடியாகக் கொள்ளவேண்டியது முக்கியம் என்பது உணரப்படவேண்டும். ஏனைய நாடுகளின் மக்களை முற்போக்கான பாதையில் சிந்திக்கவும் நம்பிக்கையுடன் முன்செல்லவும் வழிகாட்டிய அறிஞர்கள் மேதைகளை விடுதலைப் போராட்ட அமைப்புகள் தங்கள் முன்னோடிகளாக முன்வைத்து தமது போராட்டங்களை மக்கள் மத்தியில் செறிவுபடுத்தினர். அந்த வழிமுறை எம் தலைமை சக்திகளால் பின்பற்றப்பாடாமை ஒரு பெரும் துரதிஷ்டம் என்பதுடன் எமது பின்னடைவுக்கும் காரணமாக இருந்ததென்பதை மறுத்துவிட முடியாது.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: செய்திகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE