Friday 26th of April 2024 03:46:20 AM GMT

LANGUAGE - TAMIL
அடிப்படைவாதிகள் இல்லாத நாடாளுமன்றை நிறுவுவோம் !

அடிப்படைவாதிகள் இல்லாத நாடாளுமன்றை நிறுவுவோம் !


"அடிப்படைவாதிகள் இல்லாத அனைத்து இன மக்களையும் இணைத்துக்கொண்ட நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதே எமது நோக்கம். அடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்."

இவ்வாறு இராஜாங்க அமைச்சரும் அரசின் இணை ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:-

"நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குக் கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலே நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார். அவ்வாறு இடம்பெற்றால் நாடாளுமன்றம் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என நம்புகின்றோம். தேர்தலுக்குப் பின்னர் அடிப்படைவாதிகள் இல்லாத அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கிய, நாட்டின் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்க மக்கள் ஆதரவளிக்கவேண்டும்.

ஏனெனில் கடந்த 25 வருடங்களாக நாட்டில் ஆட்சி செய்த கட்சிகள் அடிப்படைவாதிகளுக்கு முன்னால் தலைகுனிந்தன. நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட ஆசனங்களை வைத்துக்கொண்டு, ஆட்சியாளர்களுடன் பேரம்பேசி அவர்களின் அடிப்படைவாதத்தை அதிகரித்துக்கொண்டனர். அவ்வாறான அடிப்படைவாதிகளின் பேரம் பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்.

சிறிமா பண்டாரநாயக்கவின் காலத்தில் கல்வி அமைச்சராக பதியுதீன் மொஹமத் இருந்தார். அதேபோன்று பாக்கீர் மாக்கார் சபாநாயகராக இருந்தார். அவ்வேளை யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

கதிர்காமரை பிரதமாரக்க வேண்டும் என இந்த நாட்டு மக்கள் தெரிவித்தனர். அப்போது நாட்டில் இனவாதம், அடிப்படைவாதம் இருக்கவில்லை.

ஆனால், அதன் பின்னரான காலப்பகுதியில் நாடாளுமன்றம் முற்றாக அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்துக்கு கீழ் இருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆட்சியாளர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்குக் கீழ்படிய வேண்டிய நிலையே இருந்தது.

உதாரணமாக உள்ளூராட்சி சபை சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் அனுமதித்துக்கொள்ளும்போது சிலர் வாக்களிக்க மறுத்துச் சென்று விட்டனர்.

இறுதியில் அந்த அடிப்படைவாதிகளை வரவழைத்து, அவர்களுக்குத் தேவையான வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுத்தே அந்தச் சட்டமூலத்தை அனுமதித்துக்கொள்ள முடிகின்றது.

அந்த நிலைமைக்கு நாடாளுமன்றம் சென்றுவிடாமல் பாதுகாக்க எதிர்வரும் தேர்தலில் மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் அரசு ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நிறைவடைந்துள்ளன. நூறு நாட்களில் எமது கொள்கையின் பிரகாரம் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவேண்டிய அடித்தளத்தை அமைத்திருக்கின்றோம்.

குறிப்பாக பாடசாலைக் கட்டமைப்பைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். நாட்டில் இருக்கும் 372 தேசிய பாடசாலைகளில் 280 பாடசாலைகளில் கடந்த 5வருடங்களாக நிரந்த அதிபர்கள் இல்லாமல் இருந்திருக்கின்றன.

இந்தப் பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க தற்போது நேர்முகப் பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அத்துடன் ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டமும் இடம்பெற்று வருகின்றது.

மேலும், ஜி.சீ.ஈ. உயர்தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதேபோன்று 54 ஆயிரம் பட்டதாரிகள் தொழில் இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் அரச தொழிலில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்த அனைத்து வேலைத்திட்டங்களுக்குமான அடித்தளத்தை பூர்த்திசெய்வோம்" - என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE