Saturday 4th of May 2024 04:03:57 AM GMT

LANGUAGE - TAMIL
போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் மறைந்தார்!

போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் மறைந்தார்!


போர் நடைபெற்ற போது வன்னிக்குச் சென்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு தமிழ் கற்பித்த தமிழ் ஆசான்களில் ஒருவராகிய தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் என்றழைக்கப்படும் மு.செ.குமாரசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

விடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழேந்தியுடன் இணைந்து 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டுவரை வன்னியில் பல்வேறு மொழிச்செம்மைப் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அதேபோல பெருமளவான போராளிகளுக்கு தமிழ் கற்பித்திருந்தார்.

அந்த அனுபவங்களை “ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்” என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் நெல்லை ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், “புத்தன் பேசுகிறான்” என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ் அறிவோம்” என்ற பெயரில் இலக்கணம் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

பாளையங்கோட்டை சைவ சபையில் தொடர்ச்சியாக இலக்கண வகுப்பு எடுத்து வந்தார். இவருக்கு பகுத்தறிவாளர் கழகம் தமிழிசை பாவாணர் என்ற பட்டத்தையும், கடையம் திருவள்ளுவர் கழகம் சார்பில் பைந்தமிழ் பகலவன் என்ற பட்டத்தையும் வழங்கி மதிப்பளித்துள்ளன.

இவருக்கு ஞானத்தாய் என்ற மனைவியும், முத்துசெல்வி, தமிழ்செல்வி ஆகிய இரு மகள்களும், செல்வநம்பி, தினமணியின் அம்பாசமுத்திரம் பகுதி நேர செய்தியாளராக பணியாற்றி வரும் அழகியநம்பி ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

இவருடைய உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தானமாக வழங்கப்படுகிறது என்று தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE