Thursday 25th of April 2024 08:39:56 PM GMT

LANGUAGE - TAMIL
-
“நெருக்குதல்களைத் தரப்போகும் தேர்தல்” - பி.மாணிக்கவாசகம்

“நெருக்குதல்களைத் தரப்போகும் தேர்தல்” - பி.மாணிக்கவாசகம்


இயல்பான நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதேவேளை கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான இடைவெளி பேணுதல், சுகாதார நடைமுறைகளைக் கையாள்தல் என்ற இயல்பான தேர்தல் நடைமுறைகள் - நடவடிக்கைகளுக்கு சிரமமான முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இத்தகைய கடினமான நிலைமைக்கே யையே தேர்தல் திணைக்களம் முகம் கொடுத்திருக்கின்றது.

வழமைக்கு மாறாக பல இடங்களில் தேர்தலுக்கான ஒத்திகைச் செயற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்திருப்பதன் மூலம் இதனை உணர முடிகின்றது.

தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அரச தரப்பினர் அழுத்தம் கொடுத்திருந்தார்கள். வேண்டுமென்றே தேர்தல் ஆணைக்குழு தேர்தலை தாமதப்படுத்துகின்றது. எனவே அதன் மீது நம்பிக்கை இல்லை. தேர்தல் நடத்தப்பட்டாலும் நீதியான அமைதியான சுதந்திரமான தேர்தலாக அது இருக்குமா என்று அரச தரப்பினரே கேள்வி எழுப்பி தேர்தல் ஆணைக்குழு மீது குற்றம் சுமத்துகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கலான நிலைமைகள், கடினமான சூழல் என்பன ஒருபக்கம் இருக்க, தேர்தலை எதிர்கொள்வதற்கு அரச தரப்பினரைத் தவிர ஏனைய தரப்பினர் எந்த அளவுக்குத் தயாராக இருக்கின்றார்கள் என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.

வெற்றிகரமான ஜனாதிபதி தேர்தலையடுத்து, உடனடியாகவே பொதுத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்பதற்காகத் துரித நடவடிக்கைகளை எடுத்த போதிலும், கொரோனா நோயிடர் நிலைமை காரணமாக தேர்தலை நடத்த முடியாத சூழல் உருவாகிவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களைப் பாதுகாத்ததிலும் ஜனாதிபதி கோத்தாபாயவும் அவருiடைய தலைமையிலான காபந்து அரசாங்கத்தினரும் எப்படியோ நல்ல பெயரைத் தட்டிக் கொண்டுவிட்டார்கள்.

இதனால் மக்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவான சூழலுக்குள் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைத் தேர்தலில் பெற்று முழுமையான ஆட்சியை அமைத்துவிட வேண்டும் என்று அரச தரப்பினர் அவசரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதேவேளை அத்தகைய தேர்தல் வெற்றிக்கான செயற்பாடுகளையும் அவர்கள் மறைமுகமாக மேற்கொண்டு வந்துள்ளார்கள்.

ஆனால் உட்கட்சிப் பிளவு என்ற அரசியல் புயலுக்குள் சிக்கியுள்ள முக்கிய எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சி, அந்தப் புயலில் இருந்து வெளியில் வரமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இதனால் அரசியல் ரீதியாக அது நாளுக்கு நாள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றது.

அதேவேளை நாட்டின் மூன்றாவது பேரின அரசியல் சக்தியாகக் கருதப்படுகின்ற ஜேவிபியும் ஏனைய சிங்களக் கட்சிகளும்கூட தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றன. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் உட்பிளவு காரணமாகப் பிளவுபட்டு நிற்கின்ற சஜித் பிரேதமதாசாவின் தலைமையின் கீழ் கூட்டிணைந்துள்ள தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சியின் உட்கட்சிப் பிரச்சினை என்ற எரியும் பிரச்சினைக்குள் சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இதனால் தேர்தலை எதிர்கொள்வதில் அந்தக் கட்சிகளும் ஒரு வகையில் அரசியல் ரீதியாகப் பலவீனமடைந்திருக்கின்றன என்றே கூற வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாகாவுக்கும் இடையில் உட்கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள அதிகாரப் போட்டி சார்ந்த குழப்ப நிலைமையே இதற்கு முக்கிய காரணம்.

கூட்டமைப்பின் நிலைமை

தென்னிலங்கையின் தேர்தல் கால அரசியல் நிலைமைகள் இவ்வாறிருக்க, வடக்கு கிழக்கு நிலைமைகளும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. வடக்கையும் கிழக்கையும் தாயகமாகக் கொண்டு அந்தப் பிரதேசத்தின் சுயாட்சிக்காக சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை நோக்கியிருக்கின்ற மக்களுக்கு அரசுடன் சாராத தமிழ் அரசியல் கட்சிகள் நம்பிக்கை அளிக்கின்ற நிலைமையில் காணப்படவில்லை.

இந்தக் கட்சிகளில் பிரதான இடத்தை வகிக்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தன்னளவில் உறுதியாக தேர்தலில் மக்களைச் சந்திக்கின்ற நிலைமையில் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தமிழ் மக்கள் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதிலும், அவற்றுக்குத் தீர்வு காண்பதிலும் ஒன்றிணைந்த முடிவுகளை எடுப்பதிலும்சரி அவற்றுக்குத் தீர்வு காண்பதிலும்சரி, திட்டமிட்ட வகையில் தீர்க்கமான முறையில் காரியங்களை முன்னெடுப்பதில்லை என்ற குறைகேள் நிலைமையிலேயே இருந்து வந்திருக்கின்றன. இருந்து வருகின்றன.

தமிழ் மக்களுடைய எரியும் பிரச்சினைகள் தொடக்கம் அரசியல் தீர்வுக்கான நகர்வுகள் வரையிலான விடயங்களில் கூட்டமைப்பின் தலைமைக்கும் அங்கத்துவக் கட்சிகளுக்கும் இடையில் எப்போதும் ஓர் இடைவெளி இருப்பதைக் காண முடிந்திருக்கின்றது. இதனால் அங்கு உட்கட்சி ஜனநாயகம் பேணப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது.

இதற்கும் அப்பால் சிங்கள தொலைக்காட்சி ஊடகமொன்றிற்குக் கூட்டமைப்பின் பேச்சாளரரும், அதன் அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்களை முன்னின்று கவனிப்பவருமாகிய சுமந்திரன் விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருநதது. இந்த விடயத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பங்காளிக் கட்சித் தலைவர்களும், தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கோரிக்கை முன்வைக்கின்ற அளவுக்கு கூட்டமைப்புக்குள்ளேயே நிலைமைகள் மோசமடைந்திருந்தன. சுமந்திரன் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது போன்ற தோற்றப்பாடு நிலவினாலும்கூட, அந்த விடயத்தில் சார்ந்தும் எதிர்த்தும் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடத்திலும், தமிழரசுக் கட்சிக்குள்ளேயும், மக்கள் மத்தியிலும் அரசியல் ரீதியான மனக்கசப்புக்கள், மனச் சங்கடங்கள் போன்ற உணர்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

முக்கியமான தேர்தல் ஒன்றை எதிர்கொண்டுள்ள தருணத்தில் தேர்தலுக்கான வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள்ளே எழுந்துள்ள இந்த அரசியல் உளவியல் ரீதியான மனக்கசப்புக்களும், மனக்கஸ்டங்களும் அனைத்துத் தரப்பினரதும் மனங்களில் ஆழப் பதிந்திருப்பதைக் அனுமானிக்க முடிகின்றது. இந்த நிலைமையை சீர் செய்வதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியாகச் சிந்தித்திருக்கின்றதா அல்லது அரசியல் ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அதற்குத் தயாராகவுமில்லை.

தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைமை

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பை அவர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் கட்டமைத்து, அரசியல் ரீதியாகப் பலமுள்ளதாக்குவதற்கு கூட்டமைப்பின் தலைமை தவறிவிட்டது. இது கூட்டமைப்புக்கு எதிரான பொதுவானதொரு குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்வதற்கு கூட்டமைப்பின் தலைமையும் அதன் பங்காளிக் கட்சிகளும் சரியான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை என்ற குறைபாடும் நிலவுகின்றது.

இத்தகைய ஒரு நிiமையில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கட்சிகளும், வெளியேற்றப்பட்டவர்களும் தமிழ் மக்களுக்கான ஒரு மாற்று அரசியல் தலைமையை உருவாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்திய போதிலும், அதில் அவர்கள் இன்னும் வெற்றிகாணாத நிலைமையே நிலவுகின்றது.

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு தமிழ் மக்கள் கூட்டணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கூட்டமைப்பும் தனது அங்கத்துவக் கட்சிகள் மற்றும் அங்கத்துவ அமைப்புக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக இறுக்கமான பிடிப்பையும் கட்டமைப்பையும் ஏற்படுத்தி தன்னைப் பலமுள்ளதோர் அரசியல் சக்தியாக்கிக் கொள்வதற்கு இன்னும் பல காரியங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைமையிலேயே காணப்படுகி;ன்றது. மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் அது பின்தங்கிய நிலையில் இருப்பதாகவே தெரிகின்றது.

கொரோனா வைரஸின் தாக்கம் திருப்தி அடையும் அளவில் இன்னும் தணியாத நிலையில்தான் பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாய நிலைமைக்குள் அரசியல்வாதிகளும் நாட்டு மக்களும் சிக்கியிருக்கின்றார்கள்.

தேர்தல் கால அரசியல் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடுவதற்கும் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தடைகளும் மட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளும் இருக்கின்றன. அதேபோன்று தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்களிலும் அதனையொட்டிய அரசியல் விடயங்களிலும் கவனமாகவும் தீவிரமாகவும் மக்கள் கவனம் செலுத்துவதிலும் தடைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. அந்த வகையில் நடைபெறப் போகின்ற பொதுத் தேர்தல் என்பது சிக்கல் மிகுந்ததாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கும் அப்பால் தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் கட்சிகளையும் பொறுத்தமட்டில் இந்தத் தேர்தலில் மும்முனை நெருக்குதல்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்த மும்முனை நெருக்குதல்களையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு அரசியல் ரீதியாக சக்தியுள்ளவர்களாக தேர்தலுக்குள்ளிருந்து வெளிப்பட வேண்டிய கடப்பாடு எழுந்திருக்கின்றது.

முதலாவது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையிலான தேர்தல் களப்போட்டி. இதையும்விட அரசுடன் இணைந்துள்ள தமிழ்க்கட்சிகள் மற்றும் அரச தரப்புக் கட்சிகளினாலும், அதன் ஆதரவு அமைப்புக்களினாலும் களத்தில் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் ஊடாக எழவுள்ள தேர்தல் போட்டிக்கும் கூட்டமைப்பு முகம் கொடுக்க வேண்டி இருக்கின்றது. பல முனை நெருக்குதல்கள்

இது வெறுமனே தமிழ் மக்களுக்கான மாற்று அரசியல் தலைமையை வெளிப்படுத்துவதற்கான தேர்தல் போட்டி என்பதையும் கடந்து தமிழ் மக்கள் சார்ந்த தமிழ்த்தரப்பின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் எதிர் கொள்ளப் போகின்ற அரசியல் பலப்பரீட்சைக்கான களமாகவும் இந்தத் தேர்தல் உருவாகிக் கொண்டிருக்கின்றது. இது ஒரு நெருக்குதல்.

இதுகால வரையிலும் தமிழ்த்தேசியத்தின் அடிப்படையிலான அரசியல் கொள்கைப் பிடிப்புடன் தேர்தலை எதிர்கொண்டிருந்த தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு அரசியல் சக்திகள் ஊடுருவி அவர்களின் அரசியல் உறுதிப்பாட்டை இடித்துக் கொண்டிருக்கின்றன. இது தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்குதலாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூறத் தவறியமை, அரசியல் கைதிகளின் விடுதலை இழுத்தடிப்புச் செய்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றமை, இராணுவம் நிலை கொண்டுள்ள இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றமை, தமிழ் மக்களின் காணிகள், பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள், மீன்பிடி மற்றும் விவசாயத் தொழில்துறைகளில் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களும் அயல் மாவட்டங்கள் மற்றும் அயல் பிரதேசங்களைச் சேர்ந்த சிங்களவர்களின் கட்டுக்கடங்காத ஆக்கிரமிப்பு, இந்து மத வணக்கத்தலங்களில் பகிரங்கமாகவும் அடாவடித்தனமாகவும் ஆக்கிரமிக்கின்ற பௌத்த கடும்போக்காளர்களின் போக்கிரித்தனமான செயற்பாடுகள், இராணுவ பொலிஸ் நெருக்குவாரங்கள், முள்ளிவாய்க்காலில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர முடியாத தனிமனித உரிமைகளில் உள்ள நெருக்குதல்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாகவோ சட்டரீதியாகவோ தீர்வு காண முடியாத நிலைமையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் மீது தமிழ் மக்கள் அதிருப்தியடைந்து மனம் கசந்துள்ள உணர்வு நிலை மற்றுமொரு நெருக்குதலாகும்.

இது, தமிழ் மக்களிடம் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எழுந்துள்ள ஒரு நெருக்கடியாகும்.

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி நியமித்துள்ள இரண்டு செயலணிகளின் மூலமாக மதக் கலாசார ரீதியாகவும், தொல்லியல் சார்ந்த இடங்கள் ரீதியாகவும் கடினமான நிலைமைகள் உருவாகியிருக்கின்றன. இதனால், கிழக்கு மாகாணத்தின் தாயகப் பிரதேசங்கள், வரலாற்றுச் சிறப்பும் வரலாற்றுப் பதிவையும் கொண்ட வணக்கத் தலங்கள் என்பன கபளீகரம் செய்யப்படுகின்ற சூழலில் தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைமைகள் மீது நம்பிக்கை இழப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கான நிலைமைகள் கனிந்து கொண்டிருக்கின்றன. இது இன்னுமொரு வகையிலான நெருக்குதலாக இருக்கும்.

ஆகவே வரப்போகின்ற பொதுத் தேர்தலும்சரி தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகளும்சரி தமிழ் மக்களின் இருப்பு பல கோணங்களில் நெருக்குதல்களுக்கு உள்ளாகப் போகின்ற நிலைமையே உருவாகும் என்பது தெரிகின்றது.

எனவே, இத்தகைய நிலைமைகள் குறித்து முற்கூட்டிய அரசியல் ரீதியாகச் சிந்திக்க வேண்டிய நிலைமைக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களும் தள்ளப்பட்டிருக்கினாறர்கள். இத்தகைய பல முனைகளிலான நெருக்குதல்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே அவர்கள் இந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதுவே இந்தத் தேர்தலுக்கு முந்திய களநிலைமையும் கள அரசியல் யதார்த்தமுமாகும்.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE