Friday 26th of April 2024 06:14:23 AM GMT

LANGUAGE - TAMIL
.
முதலாவது டெஸ்ட்: மே.இந்திய தீவுகள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 204 ஓட்டங்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!

முதலாவது டெஸ்ட்: மே.இந்திய தீவுகள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 204 ஓட்டங்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!


உலகளாவிய கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட்டின் ஆரம்பமாக இங்கிலாந்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்டின் முதல் இனிங்சில் மேற்கிந்தியத் தீவு வீரர்களின் அபார பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 204 ஓட்டங்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து - மே.இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். முதல் நாளில் அடிக்கடி மழை இடையூறு செய்ததால் 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 35 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டென்லி மேலும் 4 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், ரோரி பேர்ன்ஸ் கூடுதலாக 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கேப்ரியல் பந்தில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த கிராவ்லி 10 ஓட்டங்களிலும், ஒல்லி போப் 12 ஓட்டங்களிலும் வெளியேறினர். அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் சரிவை தடுத்து வலுவான இணைப்பாட்டத்தை ஏற்படுத்த முயற்சிக்க ஹோல்டர் இந்த ஜோடியை பிரித்தார்.

பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்களிலும், பட்லர் 35 ஓட்டங்களிலும் ஆர்சர் ஓட்டமெதுவும் எடுக்காமலும் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 157 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது. ஹோல்டர் ஐந்து விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்தின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

டொமினிக் பெஸ் ஒருபக்கம் தாக்குப்பிடித்து நின்றாலும், மறுமுனையில் மார்க் வுட் (5), ஜேம்ஸ் ஆண்டர்சன் (10) ஓட்டங்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 67.3 ஓவரில் 204 ஓட்டங்களை எடுத்தது. பெஸ் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து கடைசி இரண்டு விக்கெட்டுக்கு 47 ஓட்டங்கள் எடுத்தது இங்கிலாந்து கௌரவமான ஓட்ட எண்ணிக்கையை அழைடய உதவியது.

மே.இந்திய தீவுகள் அணி சார்பில் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட்டும், கேப்ரியல் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதன் பின்னர் தனது முதலாவது இனிங்சை ஆரம்பித்த மே.இந்திய தீவுகள் அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 19.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 57 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பிராத்வெயிட் 20 ஓட்டங்களுடனும், ஷாய் ஹோப் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்தை விட மே.இந்திய தீவுகள் அணி இன்னும் 147 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள நிலையில் இன்று போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தொடர உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE