Tuesday 19th of March 2024 01:22:49 AM GMT

LANGUAGE - TAMIL
-
கனடாவில் கொரோனா மரணங்கள் ஜனவரியில்  16,000-க்கு மேல் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை!

கனடாவில் கொரோனா மரணங்கள் ஜனவரியில் 16,000-க்கு மேல் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை!


கனடாவில் கொரோனா வைரஸ் இறப்புக்களின் எண்ணிக்கை ஜனவரி 01–க்குள் 16 ஆயிரத்துக்கும் அதிகமாக உயரலாம் என அமெரிக்கா வொஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார கணிப்பீட்டு நிறுவனம் ((IHME) எச்சரித்துள்ளது.

உரிய சுகாதார –பாதுகாப்பு நடவடிக்கைகள் பேணப்படாவிட்டால் இந்த ஆண்டு இறுதியில் கனடாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை வியத்தகு அளவுக்கு உயரக்கூடும் எனவும் அந்த நிறுவனத்தின் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் இறப்புக்கள் தொடர்பில் வொஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் முற்கூட்டிய மதீப்பீடுகள் மிகவும் துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் கனடா குறித்து அவர்கள் அச்சமூட்டும் வகையில் இவ்வாறான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

தொற்று நோயால் ஜனவரி - 01 க்குள் கனடாவில் 16,214 பேர் உயிரிழக்கக் கூடும் என அந்த கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சமூக இடைவெளி பேணி, முக கவசங்களை அணிந்து உரிய சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாகப் பின்பற்றினால் உத்தேச இறப்புக்களின் எண்ணிக்கை 12,053 –ஆக மட்டுப்படுத்தப்படலாம் எனவும் அந்த கணிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கனடாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி கண்டறியப்பட்டார். அதிலிருந்து இன்றுவரை 9,244 கனேடியர்கள் தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர். ­

இந்நிலையில் கனடாவில் மேலும் பெருமளவான கொரோனா மரணங்கள் டிசம்பரில் நிகழக்கூடும் என வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார கணிப்பீட்டு அறிவியல் பேராசிரியர் டாக்டர் அலி மொக்தாத் தெரிவித்துள்ளார்.

டிசெம்பரில் கனடாவில் மிகவும் குளிரான காலநிலை நிலவும். இது தொற்று நோயாளிகளுக்கு மேலும் பாதகமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வாரமாக கனடா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த எழு நாட்களில் தினசரி தொற்று நோயாளர் எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது.

ஒப்பீட்டளவில் கனடாவில் கொரோனா மரணங்கள் தற்போது குறைந்துள்ளன. ஜூலை- 03 முதல் நாட்டில் தினசரி இறப்பு எண்ணிக்கை 20-க்கும் மேல் பதிவாகவில்லை.

செப்டம்பர் மாதத்தில் தினசரி இறப்பு எண்ணிக்கை சராசரியாக 10-க்கும் குறைவாகவே காணப்பட்டது.

ஆனால் மீண்டும் தொற்று நோய் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொற்று நோயாளர் தொகை குறையாவிட்டால் நிலைமை மீண்டும் மாறக்கூடும் என பேராசிரியர் டாக்டர் அலி மொக்தாத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கடந்த கோடையில் தொற்று நோயாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்த ஒரு மாதத்திற்குப் பின்னர் இறப்புக்களின் எண்ணிக்கை தினசரி 1000-க்கும் அதிகமாகப் பதிவானதை அவர் சுட்டிக்காட்டினார். ஏனைய நாடுகளிலும் இதுதான் நடந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளையும் வணிக நிறுவனங்களையும் திறக்கத் தொடங்கும்போது இளைய தலைமுறையினர் அதிகம் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட நேரும்.

இவ்வாறு தொற்றுக்குள்ளாகும் இளையவர்கள் மூலம் அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகள் உள்ளிட்ட ஆபத்தான பிரிவினர் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரும். இதனால் இறப்பு அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது எனவும் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார கணிப்பீட்டு அறிவியல் பேராசிரியர் டாக்டர் அலி மொக்தாத் மேலும் குறிப்பிட்டார்.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE