Thursday 25th of April 2024 09:28:13 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஒன்ராறியோவில் தொற்று நோய் அதிகரித்தாலும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க  ஃபோர்ட் மறுப்பு!

ஒன்ராறியோவில் தொற்று நோய் அதிகரித்தாலும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க ஃபோர்ட் மறுப்பு!


ஒன்ராறியோ மாகாணத்தில் தொற்று நோயின் இரண்டாவது அலை தீவிரமாகிவருகின்றபோதும் முழு மாகாணமும் மீண்டும் இரண்டாம் கட்டக் கட்டுப்பாடுகளுக்குத் திரும்புவதற்கான நேரம் இதுவல்ல என மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோவில் நேற்று புதன்கிழமையும் 625 புதிய தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.

இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட தொற்று நோயாளர்கள் ரொரண்டோவில் மட்டும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, ஒக்டோபரில் தொற்று நோயின் இரண்டாவது அலை உச்சத்தை எட்டும். ஒக்டோபர் நடுப்பகுதியில் இருந்து நவம்பர் முதல் வாரம் வரை தினசரி தொற்று நோயாளர் தொகை 1000-க்கும் அதிகமாகப் பதிவாகலாம். இதனால் அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளர் தொகை அதிகரிப்பதுடன், மரணங்களும் உயரலாம் என மாதிரிக் கணிப்பீடுகள் எச்சரித்துள்ளன.

இந்நிலையில் தொற்று நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த மாகாணம் விரைவாக இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என மாகாண சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இருந்தபோதிலும், ஒன்ராறியோ 2 ஆம் கட்டத்திற்கு திரும்புவதற்கான நேரம் இது அல்ல என முதல்வா் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

குயின்ஸ் பார்க்கில் புதன்கிழமை பிற்பகல் செய்தியாளர்களுடன் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒன்றாரியோவில் திங்கட்கிழமை மாகாணத்தில் இதுவரை இல்லாத வகையில் மிக உயர்ந்த அளவான 700 தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை 554 போ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஏழு நாட்களான தினசரி தொற்று நோயாளர் தொகை சராசரி 507 என்ற கட்டத்துக்கு உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் தொடக்கத்தில் தினசரி தொற்று நோயாளர் தொகை சராசரி 85 ஆக குறைந்திருந்த நிலையில் இப்போது சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட புதிய தொற்று நோயாளர்களில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டவா்கள் (484) கிரேட்டர் ரொரண்டோ பகுதியில் பதிவாகியுள்ளனர்.

ரொராண்டோவில் 288, பீல் பிராந்தியத்தில் 97, யோர்க் பிராந்தியத்தில் 41, டர்ஹாம் பிராந்தியத்தில் 25 மற்றும் ஹால்டன் பிராந்தியத்தில் 33 தொற்று நோயாளர்கள் நேற்று உறுதி செய்யப்பட்டனர்.

ஒட்டாவா (64), சிம்கோ முஸ்கோகா மாவட்டம் (12), ஹாமில்டன் (11) மற்றும் மிடில்செக்ஸ் லண்டன் (11) ஆகியள 10-க்கும் மேற்பட்ட தொற்று நோயாளர்கள் பதிவான பிற பொது சுகாதார பிரிவுகளில் அடங்குகின்றன.

இதற்கிடையில், ஒன்ராறியோவின் 34 பொது சுகாதார பிரிவுகளில் 11 பிரிவுகளில் கடந்த 24 மணிநேரங்களில் புதிய தொற்று நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை.

இந்நிலையில் புதிய தொற்று நோயாளர் எண்ணிக்கை தற்போது ஒவ்வொரு 10 முதல் 12 நாட்களில் இரட்டிப்பாகி வருவதாகவும், ஒக்டோபர் முதல் பாதியில் தினசரி தொற்று நோயாளர் தொகை மாகாணத்தில் ஆயிரத்தைத் தாண்டக் கூடும் எனவும் புதிய மாதிரிக் கணிப்பீடு கூறுகின்றது.

ஆரம்பத்தில் 20 முதல் 39 வயதிற்குட்பட்டவர்களிடையே தொற்று நோய் அதிகளவில் பரவி வந்த நிலையில் இப்போது அனைத்து வயதினரிடையேயும் தொற்று நோய் பரவல் அதிகரித்து வருகிறது என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை பதிவான 625 புதிய தொற்று நோயாளர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் 20 முதல் 39 வயதிற்குட்பட்டவர்களாவர். 40 முதல் 59 வயதிற்குட்பட்ட 169 பேர் நேற்று தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டனர். 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மிகக் குறைந்தளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து நேற்றுக் கருத்து வெளியிட்ட ரொராண்டோ மேயர் ஜான் டோரி, தொற்று நோய் மீண்டும் நீண்ட கால பராமரிப்பு மையங்களை நெருங்க முன்னர் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜோன் டோரி கூறினார்.

இதேவேளை, மாகாணத்தை மீண்டும் 2 ஆம் கட்டத்துக்குத் நகர்த்தும் ஒன்ராறியோ மருத்துவமனை சங்கத்தின் அழைப்பு குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ஒன்ராறியோ தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ், உட்புற உணவகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உட்புறக் நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து ஆராய்வதாகக் கூறினார்.

மாகாணத்தில் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொற்று நோயின் முதல் அலையின்போது இருந்தது போலன்றி, மாற்று வழிகளில் இருக்கும் எனவும் அவா் குறிப்பிட்டார்.

அதேநேரம் நாங்கள் எந்தப் பாடசாலைகளையும் மூடத் திட்டமிடவில்லை எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, மாகாணத்தில் புதன்கிழமை 35,753 கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று கண்டறியப்பட்ட புதிய தொற்று நோயாளர்களுடன் மாகாணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளர் தொகை 67,126 ஆக உயர்ந்துள்ளது.

மாகாணத்தில் தற்போது செயலில் உள்ள தொற்று நோயாளர் தொகை 4,955 ஆக உள்ளது.

அத்துடன் நேற்று மேலும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. இவா்களுடன் மார்ச் மாதத்திலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 2,848 ஆக உயர்ந்துள்ளது.

புதன்கிழமை அறிவிக்கப்பட்ட நான்கு புதிய இறப்புகளில், மூன்று நீண்டகால பராமரிப்பு மையங்களில் வசிப்பவர்களுடன் தொடர்புடையது.

நீண்டகால பராமரிப்பு மையங்களுடன் சம்பந்தப்பட்ட ஒன்பது புதிய தொற்று நோயாளர்களும் நேற்று உறுதிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE