Friday 26th of April 2024 12:35:28 AM GMT

LANGUAGE - TAMIL
.
ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் கைது செய்யப்பட்டதால் இந்தியாவில் பெரும் பரபரப்பு!

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் கைது செய்யப்பட்டதால் இந்தியாவில் பெரும் பரபரப்பு!


உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸை சேர்ந்த 19 வயது பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பின்னர் உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காக நீதி கேட்டு செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா வாத்ரா உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனைக் கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

முன்னாள் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி பொலிஸாரால் கிழே தள்ளி விழுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியனர் கொதித்துப் போய் உள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் சுமார் ஒன்றரை மணி நேரம் மாநில பொலிஸார் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, டெல்லியில் இருந்து ஹாத்ரஸ் நோக்கிச் சென்ற ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை யமுனை விரைவுச்சாலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வழிமறித்த காவல்துறையினர், கூட்டமாக எவரும் முன்னேறக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர்.

மாவட்ட நிர்வாகத்தால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 188ஆவது பிரிவின்கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அவர்கள் விளக்கம் அளித்தனர்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ருவிட்டர் பக்கத்தில், "நெருங்கிய உறவுகள் தனித்து விடப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட உத்தர பிரதேசத்தில் ஆளும் ஆட்சி விரும்பவில்லை. எங்களை பார்த்து அச்சப்பட வேண்டாம் முதலமைச்சரே" என்று கூறியுள்ளார்.

தமது ருவிட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி, ஹாத்ரஸ் நோக்கி நாங்கள் முன்னேறிச் செல்லாதவாறு நிறுத்திய காவல்துறையினர் தடியடியும் செய்தனர். பல காங்கிரஸ் தொண்டர்கள் அதில் காயம் அடைந்தனர். ஹாத்ரஸ் தலித் மகளை காக்க இந்த தடையை காவல்துறையினர் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி மேற்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்று அங்கு வந்த காவல்துறையினர் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, நானும் பிரியங்கா காந்தியும் மட்டும் செல்வதை உங்களுடைய சட்டம் அனுமதிக்கிறதா? என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.

ஆனால், இது உங்களை அனுமதிக்கும் விவகாரம் மட்டுமல்ல, உங்களுடைய பாதுகாப்பு தொடர்புடைய பிரச்னை. அதனால் உங்களை அனுமதிக்க முடியாது. உங்களை தடுத்து நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழயில்லை. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு கூட்ட நெரிசல் அதிகமான நிலையில், திடீரென்று ராகுல் காந்தி கீழே விழுந்தார். அவரை அங்கிருந்த காவல்துறையினர் யாரேனும் தள்ளி விட்டார்களா என தெரியவில்லை.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களை அங்கிருந்து வேறு வாகனத்தில் ஏற்றி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். சட்டவிதிகளை மீறியதால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக அங்கிருந்த உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் திரண்டு உத்தர பிரதேசத்தில் ஆளும் அரசுக்கு எதிராக கோஷிட்டு வருகிறார்கள்.

அங்கு போக்குவரத்தை முடக்கும் வகையில் வீதியில் நின்ற பல தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வழியை ஏற்படுத்தி வருகிறார்கள். அதையும் மீறி அங்கு கூடியிருந்தவர்கள், பொலிஸ் பேருந்துகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர்.

இதேவேளை, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்திய முழுவதும் பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் கடும் கண்டனம் தெரவித்துள்ளா்.

ஹாத்ரஸில் தங்களின் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டபோது அவரது முதுகெலும்பை உடைத்தும் நாக்கை அறுத்தும் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், 14 நாட்களாக உயிருக்குப் போராடிய நிலையில் தங்களின் மகள் உயிரிழந்ததாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களுடைய மகள் உயிரிழந்தது தொடர்பான மருத்துவ அறிக்கையை இன்னும் தங்களுக்கு காவல்துறையினர் வழங்கவில்லை என்று அவா்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக, தங்களுடைய மகள் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்த மறுதினமே அதிகாலை 3 மணியளவில் உத்தர பிரதேச காவல்துறையினர் தங்களை கட்டாயப்படுத்தி அவரது சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்தனர் என்று உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பெற்றோரின் சம்மதத்துடனேயே சடலத்தை எரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கவே அவ்வாறு செய்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தைக் கண்டித்தும் உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு டெல்லியில் இருந்து ஹாத்ரஸ் நோக்கிப் புறப்பட்டனர்.

இதையடுத்து, ஹாத்ரஸ் மாவட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியதை அடுத்து, அங்கு 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது. அந்த பகுதியில் வியாழக்கிழமை காலையில் இருந்து செய்தி சேகரிப்புக்காக டெல்லியில் இருந்து சென்றிருந்த நிருபர்கள், ஒளிப்பதிவுக்குழுவினர் அவசர, அவசராக காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், தடையை மீறி பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் ஹாத்ரஸ் மாவட்டத்துக்குள் நுழைய முற்பட்டால் அவர்களை கைது செய்வோம் என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களிடம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே, பிரியங்காவும் ராகுல் காந்தியும் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுடன் சென்றபோது, டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டா பகுதியை கடந்த நிலையில் எல்லையிலேயே அவர்களுடன் வந்த பாதுகாப்பு வாகனங்களை உத்தர பிரதேச மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து நடந்தே ஹாத்ரஸ் நோக்கிச் செல்வதாகக் கூறி பிரியங்கா காந்தி தமது ஆதரவாளர்களுடன் செல்லத் தொடங்கியினார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE