Friday 26th of April 2024 11:55:18 PM GMT

LANGUAGE - TAMIL
-
பிரான்ஸில் கட்டுப்பாடுகள் இவ்வாரம்  தளர்த்தப்படும் என மக்ரோன் அறிவிப்பு!

பிரான்ஸில் கட்டுப்பாடுகள் இவ்வாரம் தளர்த்தப்படும் என மக்ரோன் அறிவிப்பு!


பிரான்ஸில் கடுமையாக அமுலில் உள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் இந்த வார இறுதி முதல் மெதுவாகத் தளர்த்தப்படும் என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

மூடப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற வணிக நிலையங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். அத்துடன் கிறிஸ்துமஸ் காலத்தில் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முடியும் எனவும் மக்ரோன் அறிவித்தார்.

எனினும் பார்கள் மற்றும் உள்ளக உணவு பரிமாரும் உணவகங்கள் தொடர்ந்து ஜனவரி 20 வரை மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் கூறினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தொலைக் காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மக்ரோன் இதனைத் தெரிவித்தார். அத்துடன் நாட்டில் தொற்று நோயின் இரண்டாவது அலை உச்சத்தை கடந்துவிட்டது எனவும் அவா் கூறினார்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பிரான்ஸில் 2.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புதிய நோய்த்தொற்று நோயாளர் தொகை ஒரு நாளைக்கு 5,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் வரை, திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும். பொதுப் போக்குவரத்து பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படாது. எனினும் பண்டிகைக் காலத்திற்கு முன்னர் டிசம்பர் 15 முதல் சமூக முடக்கல் கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் எனவும் மக்ரோன் தெரிவித்தார்.

பிரான்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை 9,155 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகினர். திங்களன்று இந்த எண்ணிக்கை 4,452 ஆகக் குறைந்திருந்தது. செப்டம்பர் 28-க்குப் பின்னர் திங்கட்கிழமை குறைந்தளவு தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.

அத்துடன் பிரான்சில் கடந்த 7 நாட்கள் தினசரி சராசரி தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 21,918 –ஆகப் பதிவாகியுள்ளது.

நவம்பா் 6 ஆம் திகதி வரையான ஒரு வாரத்தில் இந்த சராசரி 54,440 ஆக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தொடர்பில் வெளியாகியுள்ள சாதகமாக செய்திகள் நம்பிக்கை அளிக்கின்றன. டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் தடுப்பூசிகளை பயன்பாட்டக்குக் கொண்டுவருவதை பிரான்ஸ் இலக்காகக் கொள்ளும் என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.

முன்னணி சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவா் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனவரி 20-ஆம் திகதி பிரான்ஸின் தொற்று நோய் நிலைமை குறித்து மீண்டும் மீளாய்வு செய்யப்படும். தொற்று நோயின் தாக்கம் குறைவடைந்தால் பார்கள் மற்றும் உணவகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் பிரெஞ்சு ஜனாதிபதி கூறினார்.

அத்துடன் பல்கலைக்கழகங்களும் மாணவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள முடியும்.

இருப்பினும், நிலைமை மேம்படாதிருந்தால் தொற்று நோயின் மூன்றாவது அலையைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தொற்று நோயின் மூன்றாவது அலையை தவிர்ப்பதற்கு நாங்கள் சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE