Thursday 25th of April 2024 09:45:35 PM GMT

LANGUAGE - TAMIL
-
ரொரண்டோ பல்கலைக்கழக  தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும் -கமல்ஹாசன்!

ரொரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும் -கமல்ஹாசன்!


கனடா - ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

ஒரு மொழி மேன்மையுற எடுக்கும் பல்வேறு முயற்சிகளுள் ஒன்று மேலைப் பல்கலைக்கழகங்களில் இருக்கை அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ள வழிவகை செய்வது முக்கியமானது.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழக அரசு 10 கோடி ரூபா நிதி உதவி அளித்து ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைய உதவி செய்தது. அதற்கு நானும் நிதி வழங்கியிருந்தேன். ஹார்வர்டின் ஒரு தொடர்ச்சியாக ரொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பமாகி முன்னேற்றம் கண்டிருக்கிறது.

கனடாவில் மூன்றரை லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழர்களுக்கும், தமிழுக்கும் பலவித முன்னுரிமைகள் வழங்கும் நாடு கனடா. ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக அறிவித்து கனடா மக்கள் அதை வருடாவருடம் கொண்டாடுகிறார்கள்.

கனடாவில் முதல் இடத்தில் உள்ள ரொரண்டோ பல்கலைக்கழகம் கடந்த பல வருடங்களாக தமிழ் மரபைக் கொண்டாடி வருகிறது. ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி வேகமாக முன்னேறியிருக்கிறது.

இதற்கு 3 மில்லியன் டொலர்கள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. அங்கேயுள்ள தமிழ் மக்கள் ஏற்கெனவே 2.44 மில்லியன் டொலர்களை திரட்டிவிட்டார்கள். இன்னும் 5 இலட்சத்து 60 ஆயிரம் டொலர்கள் மட்டுமே தேவை.

இந்நிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு பத்து கோடி வழங்கிய தமிழக அரசு, இந்தப் பெருமுயற்சிக்குத் தேவைப்படும் மீதி நிதியைக் கொடையாக வழங்க வேண்டும்.

193 வருடங்கள் பாரம்பரியம் மிக்க ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையும் தமிழ் இருக்கை, தமிழுக்கான ஆராய்ச்சிகளை உயரிய முறையில் நடத்தி தமிழின் தொன்மையையும், பெருமையையும் நிலைநாட்டுவதோடு, உலகின் பல்வேறு தமிழ் ஆய்வுகளை சுதந்திரமாக முன்னெடுக்கும் மையப் புள்ளியாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. இதற்குக் கிடைக்கும் வெற்றி தமிழக அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைக்கும் வெற்றி என கூறப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE