Saturday 19th of June 2021 08:29:20 AM GMT

LANGUAGE - TAMIL
-
“துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்”  - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

“துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்” - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்கழுவின் சட்ட மூலம் உயர் நீதிமன்றத்தால் திருத்தத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மீளவும் நடைமுறைப் படுத்தலுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தியிருப்பதோடு இலங்கையின் முதலீட்டு சபை கொழும்பு துறைமுக நகரத்தின் முதலீடுகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இக் கட்டுரையும் கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான சட்ட மூலம் பற்றிய அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கையின் அரசியலை விளங்கிக் கொள்வதாக அமைய உள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்ட மூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்தகைய சட்ட மூலங்கள் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அல்லது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது விண்ணப்பத்தை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் திருத்தங்களுக்கு உட்படுத்துவது என முடிவு செய்துள்ளது. அவ்வாறு அரசாங்கம் முடிவெடுத்திருப்பதன் பிரதான நோக்கம் தனித்துவமானது. அத்தகைய நோக்கங்களை முழுமையாக விளங்கிக் கொள்ளுதல் அவசியமானது.

முதலாவது நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பு என்பது அரசாங்கத்தின் இன்றைய நிலையில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. பொருளாதார செலவீனம் என்பதை விட கொவிட் தொற்று இன்னுமொரு காரணமாகக் கூறப்பட்டாலும் மக்கள் மத்தியில் அரசாங்கம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி மற்றும் நெருக்கடிகளும் இத்தகைய வாக்கெடுப்பில் வெல்லுதல் என்பது சாத்தியமற்றது எனக் அரசாங்கம் கருத வாய்ப்புள்ளது. அதனாலேயே திருத்தம் நோக்கிப் பயணிப்பதற்கு தீர்மானித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரான ஹெகெலிய ரம்புவெலவின் உடல்மொழி ஊடகங்கள் மத்தியில் அதனையே உணர்த்தியிருந்தது.

இரண்டாவது ஓர் அரசாங்கம் அரசியலமைப்பை மீறிக் கொண்டு ஓர் அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்ளுதல் என்பது இலங்கை அரசின் இறையாண்மை மீதான கேள்விகளையும் தீர்மானங்களையும் எதிர்காலத்தில் தீர்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுத்தும். அதனால் இலங்கை அரசு என்ற கட்டமைப்பு அரசியல் யாப்பின் ஊடாக இறுக்கத் தன்மையையும் பலத்தையும் இழப்பதோடு இறைமையற்ற வடிவத்தை உருவாக்கிவிடும். அரசுகளின் இறைமை அரசியல் யாப்பின் வழி கட்டிவளர்க்கப்பட்டுள்ளது. அது அரசியலமைப்பில் அரசு என்ற தனித்துவத்தை வழங்குகின்றது. அதனால் இவ் அரசாங்கம் உயர் நீதி மன்றத்தினுடைய கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி உள்ளது.

மூன்றாவது கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் திருத்தத்திற்கு உட்படுகின்ற போது இலங்கை அரசியலமைப்பின் வரைபுகளை மீறாத வகையில் ஒழுங்குபடுத்துமாக இருந்தால் இத்தகைய அபிவிருத்தித் திட்டமானது சாத்தியமான ஒரு பொறிமுறையை ஏற்படுத்திவிடும். அதன் மூலம் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் இலங்கை சீன உறவை சுபீட்சமானதாக்கும். சீனாவின் புதிய பட்டுப் பாதையின் பிரதான நகரங்களில் ஒன்றாக கொழும்பு துறைமுக நகரம் மாற்றமடையும். இதனை எப்படியாவது நிறைவு செய்வதில் இந்த அரசாங்கமும் சீனாவும் முனைப்புச் செலுத்துகின்றன.

நான்காவது இலங்கை-சீன உறவினால் மேற்குடனான பகைமையை அதிகம் அனுபவித்து வரும் பொதுஜன பெரமுன அரசாங்கம் சீனாவுடனான உறவை நெருக்கடிக்குள்ளாக்குமாக இருந்தால் அதன் ஆட்சியும் இருப்பும் காலாவதியாகி விடும். அத்தகைய தற்கொலைக்கு ஒப்பான செயலை இந்த அரசாங்கம் மேற்கொள்ள முனையாது. அதனால் தற்போதைய ஆட்சி மட்டுமல்ல எதிர்கால இருப்பும் காலாவதியாகும். அதனாலேயே இத்தகைய தீர்மானத்தை எவ்வாறாயினும் முழுமையாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உழைக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

ஐந்தாவது இலங்கை-சீன உறவின் எதிர்கால இருப்பு ஆபத்தானவை என்ற வாதங்கள் அமெரினாலும் மேற்குலக நாடுகளாலும்; இந்தியாவாலும் முன்வைக்கப்பட்ட போதும் இலங்கையைப் பொறுத்த வரை சீன உறவு புவிசார் அரசியல் தடுப்பையும் பூகோள அரசியல் பலத்தையும் பொருளாதார செழிப்பையும் சாத்தியப்படுதக் கூடியது. சீனாவின் பொருளாதாரக் கட்டுமானம் கொவிட் 19ற்கு முன்னர் இருந்ததை விட தற்போது மேலும் பலமடைந்துள்ளது. மேற்குலகமோ இந்தியாவோ பொருளாதார ரீதியில் நிபந்தனையற்ற உதவிகளை இலங்கைக்கு மேற்கொள்ளப் போவதில்லை. இதனால் சீன இலங்கை உறவு பொருளாதார ரீதியில் மிகப் பலமான நட்புறவாகும். கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் என்பன சிங்கப்பூர் துறைமுகத்திற்கு அடுத்த வர்த்தகப் பரிமாற்ற மையமாக அமையும் என்ற வாதம் சர்வதேச ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால் கொழும்பு துறைமுக நகரம் இந்து சமுத்திரத்தின் மிகப் பிரதான வர்த்தக நகரமாக அமைய இந்த சட்டமூலம் வாய்ப்பளிக்கும்

ஆறாவது புவிசார் அரசியல் ரீதியாக இந்திய எதிர்ப்பு வாதத்தை உள்ளார்ந்த பரிமாணத்தில் கொண்டிருக்கும் இலங்கை சீனாவின் நட்பு மூலம் அதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்கின்றது. இதன் மூலம் இலங்கையின் இருப்பும் அதன் இறைமைக்கான ஒருமைப்பாடும் ஆரோக்கியமானதாக அமையலாம் என இலங்கையின் ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவினது போக்கிலும் கொவிட் தொற்று பொருளாதாரம் மற்றும் பிராந்திய பாதுகாப்பில் பலவீனம் நிகழுவதால் இஙந்கை அரசாங்கத்திற்கு வாய்ப்பான காலமாக விளங்குகின்றது.

ஏழாவது பூகோள ரீதியாக அமெரிக்க தலைமையிலான மேற்கும் இந்தியாவும் ஒரே அணியில் இயங்கினாலும் இலங்கை பொறுத்து இந்தியாவிற்குக் கட்டுப்பட்டே மேற்குலகம் செயற்படுகின்றது. அதே நேரம் மேற்கின் பொருளாதாரப் பலவீனம் இராணுவ தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகளும் இலங்கைக்கு வாய்ப்பான சூழலைத் தந்துள்ளது. அதுமட்டுமன்றி மேற்குலகத்தின் பொருளாதார நெருக்கடி சர்வதேச மட்டத்தில் நெருக்கடியாக மாறியிருப்பதோடு நிபந்தனைகளோடும் பாரிய நலன்களோடும் உலக நாடுகளோடு உறவு வைத்துக் கொள்கின்ற பொறிமுறை ஆபத்தான அரசியலை மேற்கிற்கு ஏற்படுத்தி வருகின்றது. அது மட்டுமன்றி சீனாவின் பொருளாதார எழுச்சியும் ரஸ்யாவின் இராணுவ வல்லமையும் அமெரிக்க தலைமையிலான மேற்குலகை பலவீனப்படுத்தி வருகின்றது. இதிலிருந்து அமெரிக்காவும் மேற்குலகமும் வகுத்துக் கொண்டு இயங்கும் அனைத்துத் திட்டங்களும் சீனா, ரஸ்யா போன்ற நாடுகளால் தோல்வி கண்டு வருகின்றன. ஆசியா 21ம் நூற்றாண்டின் பிராந்தியம் என்ற அடிப்படையில் தனித்துவத்தைக் கொண்டிருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்தும் பலம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிடம் இல்லாது போயுள்ளது. ஆசியாவின் உப பிராந்தியங்கள் எல்லாவற்றிலும் சீனாவும் ரஸ்யாவும் பங்கு போடுவதில் வெற்றி பெற்றுள்ளன. அமெரிக்க அணியில் இராணுவ பலமே வலிமையாக உள்ளது. அதனைப் கூட ரஸ்யாவும் சீனாவும் சவால் லிடும் அளவிற்கு வளர்ந்து வருகின்றன என அமெரிக்காவின் புலனாய்வுத் துறையே அமெரிக்காவிற்கு எச்சரித்துள்ளது.

எனவே கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கத்தினால் நிறைவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அதனால் ஏற்படும் பொருளாதார இலாபங்கள் மற்றும் நலன்களை விட அரசியல் ரீதியான நலன்கள் அதீதமதனவை. அத்தகைய நலன்களை இழப்பது என்பது இலங்கையின் இருப்பிற்கு ஆபத்தானது. அதிலும் தற்போதைய அரசாங்கத்திற்கு அதிக இழப்பீட்டைத் தரக் கூடியது. அதனால் இச் சட்ட மூலம் வெற்றிகரமாக பாராளுமன்றத்திலேயும் நிறைவு செய்யப்படுவதுடன் இலங்கை-சீன உறவும் சரி செய்யப்படும். இச் சட்ட மூலத்தை இலங்கை நிறைவேற்றுவதில் கால தாமதத்தை ஏற்படுத்தினாலும் சீனா அதற்கான வாய்ப்புக்களை வழங்காது.எத்தகைய இழப்பினை கொடுத்தேனும் இந்த சட்டமூலம் நிறைவு செய்வதில் இரு அரசாங்கங்களும் ஆவலாக உள்ளன.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE