Friday 26th of April 2024 12:47:34 AM GMT

LANGUAGE - TAMIL
.
ரிம் சௌதே அபார பந்து வீச்சு: முதல் இனிங்சில் 275 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து!

ரிம் சௌதே அபார பந்து வீச்சு: முதல் இனிங்சில் 275 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து!


சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிம் சௌதேவின் அபார பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து அணி முதலாவது இனிங்சில் 275 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி லோட்சில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் 378 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக நியூசிலாந்து ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக களமிறங்கிய அறிமுக வீரரான டிவோன் கொன்வே இரட்டைச் சதம் விளாசி 200 ஓட்டங்களையும், ஹென்ரி நிக்கோல்ஸ் 61 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ரொபின்சன் 4 விக்கெட்டுக்களையும், மார்க் வூட் 3 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்திதியிருந்தனர்.

இதையடுத்து முதலாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி போட்டியின் 2வது நாள் நிறைவில் 43 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் 3வது நாள் கடும் மழைகாரணமாக ஒரு பந்து கூட வீசப்படாது கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற நான்காவது நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி 275 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்திருந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோரி பேர்ன்ஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி சதமடித்து 132 ஓட்டங்களுடனும், ஜோ ரூட் மற்றும் ரொபின்சன் ஆகியோர் தலா 42 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் 4 வீரர்கள் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்திருந்தமை இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தில் பலவீனமாக அமைந்திருந்தது.

பந்துவீச்சில் ரிம் சௌதே 6 விக்கெட்டுக்களையும், ஜேமிசன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதையடுத்து 103 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2வது இனிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய 4வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் 165 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ள நியூசிலாந்து அணி போட்டியின் இறுதி நாளாகிய இன்று விரைவாக ஓட்டங்களை குவித்து சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்து இங்கிலாந்து அணிக்கு துடுப்பெடுத்தாட சந்தர்ப்பத்தினை வழங்கி போட்டியை வெற்றி-தோல்வி முடிவுக்கு வழியேற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE