Monday 29th of November 2021 06:21:48 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஒரே நாடு ஒரே சட்டம் எனும் பிரகடனம் எழுப்பும் கேள்விகள் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

"ஒரே நாடு ஒரே சட்டம் எனும் பிரகடனம் எழுப்பும் கேள்விகள்" - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் சட்டங்களை நீதி தீர்த்தல் மற்றும் நடைமுறைப்படுத்தலும் பாதுகாத்தலும் என்பதன் பிரகாரம் இனம், மதம், சாதியம் அல்லது வேறேதும் காரணத்தால் எந்தவொரு நபரும் சட்டத்தின் பாகுபடுத்தலுக்கு அல்லது விசேட கவனத்துக்கு ஆளாகக் கூடாது என்பதை முன்னிறுத்தி 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதை உருவாக்க ஜனாதிபதி செயலணி வர்த்தமானி பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையினுள் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை செயற்படுத்தல் தொடர்பாக கற்று ஆராய்ந்து அதற்கானதொரு சட்ட வரைபை தயாரிக்கவும் நீதி அமைச்சினால் இதுவரை தயாரிக்கப்பட்ட சட்டவரைபுகள் மற்றும் திருத்தங்களை கற்று ஆராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அவற்றுக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு ஏற்றவாறு உரிய வரைபை தயாரிக்க இக்குழுவிற்கு பணிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இக்கட்டுரை ஒரே நாடு ஒரே சட்டம் என்பதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் அரசியலையும் தேடுவதாக அமைய உள்ளது.

கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் ஒரு நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணி உருவாக்க வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த குழுவில் தமிழர்கள் இடம்பெறாமை தமிழ் சமூகத்திடையே அதிருப்தியையும் சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது. குறித்த செயலணி தொடர்பாக கருத்துரைத்துள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், 'தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே இந்தச் செயலணி' என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே சிறுபான்மை சமூகங்கள் மீது அதிகம் முரண்பாடான கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் ஞானசார தேரரின் தலைமை என்பது சந்தேகங்களை மேலும் மேலும் வலுப்படுத்துவதாக அமைகின்றது. அத்துடன் புதிதாக ஒரு நாடு ஒரு சட்ட அமுலாக்க முயற்சிகள், இலங்கையில் இதுவரை இருநாடு இரு சட்டங்கள் இருந்தனவா என்ற கேள்விகளையும் எழுப்பவே செய்கின்றது.

எனவே இலங்கையில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஒரு நாடு ஒரு சட்டத்தின் அரசியல் பின்புலங்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

முதலாவது, இலங்கை பல இன மொழி மற்றும் பல கலாசார சமூகங்களை கொண்ட தேசமாகும். ஒரே மரபணுவில் தோன்றினாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் தனித்துவமானவை. ஒவ்வொரு சமூகங்களும் தங்கள் மகிழ்ச்சி மற்றும் சோகங்களை வெளிப்படுத்தும் முறைமைகளும் வேறுபட்டே காணப்படுகின்றது. இத்தகைய பல்தேசிய சமூகங்களை கொண்ட இலங்கை தேசத்தில் ஒரு நாடு ஒரு சட்டம் எனும் அமுலாக்க முயற்சிகள் நாட்டின் பல்லின தேசிய கட்டமைப்பை நிராகரிக்கும் செயற்பாடுகளா என்ற சந்தேகம் பொது வெளியில் எழுப்பப்படுகிறது. இத இலங்கையின் இனமத மொழிகளுக்கிடையிலே ஏற்கனவே வலுவடைந்துள்ள வேறுபாடுகள் இன்னும் தீவிரம் பெறுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தம் என்ற எண்ணமும் காணப்படுகிறது. இனநல்லிணணக்கத்திற்கு பதில் இனமுரண்பாட்டின் கூர்மைப்படுத்தல் ஏற்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று அதிகம் விமர்சிக்கப்படுகிறது.

இரண்டாவது, தற்போது நடைமுறைப்படுத்த பிரயத்தனம் மேற்கொள்ளப்படும் ஒரு நாடு ஒரு சட்ட மூலம் என்பது பிரதானமாக இஸ்லாமிய சட்டங்களை குறிவைத்து அதனை நீக்குவதற்கான முயற்சி என்பதே பலரது எண்ணங்களாகவும் உள்ளது. குறித்த சட்ட மூல முன்மொழிவுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் பரவலாக இஸ்லாமிய சமூக பிரதிநிதிகளை உள்ளீர்த்துள்ளமை இஸ்லாமிய சட்டங்களை புறக்கணிப்பதற்கான உத்தியா என்ற சந்தேகம் நியாயமானது. அதுமட்டுமன்றி இது இஸ்லாமிய நாடுகளிலிருந்தும், மேற்கு நாடுகளிலிருந்தும் எழுகின்ற விமர்சனங்களை சீர்செய்வதற்கான உத்தியாக காணப்படுகிறது. முன்னைய நாட்களில் இஸ்லாமிய மக்களின் புர்கா ஆடை தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்ட போது இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அரசாங்க தரப்பினர் அரசாங்க செயற்பாடுகளை நியாயப்படுத்திக்கொண்டிருந்தனர். இதனால் இஸ்லாமிய சட்டங்களும் அதுக்கான நியாயப்பாடுகளும் ஒரே நாடு ஒரே சட்டத்தின் மூலம் தகர்ந்து போய்விடுமா எனற சந்தேகம் வலுவடைந்து வரகின்றது. இலங்கை தீவை பொறுத்தவரை இஸ்லாமிய சமூகம் தனித்துவமான தேசிய அடையாளங்களுடன் செயற்படவும் இயங்கவும் முனைகிறது. இதனால், ஒரே நாடு ஒரே சட்டம் என்பது இஸ்லாமியரின் உள்ளார்ந்த இருப்பையும் வாழ்க்கை முறையையும் பழக்கவழக்கங்களையும் முற்றாக கைவிட வேண்டிய நிலையை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் நியாயமானதாக உள்ளது.

மூன்றாவது, ஒரு நாடு ஒரு சட்டத்தின் மூலம் இலங்கையின் பல்லின மக்களின் பல்லின மரபுகள் சிதைக்கப்பட வாய்ப்புள்ளது. மரபுகளை சிதைப்பது குறித்த இனங்களின் கலாசாரம் சிதைக்கப்படுவதுடன் அதன்வழி தேசிய சிந்தனைகளும் அழிக்கப்படுவதற்கான ஆபத்துக்களே அதிகமாக உள்ளது. இது இலங்கையின் ஏனைய தேசிய இனங்களின் தேசிய சிந்தனை கருத்துக்கள் இல்லாதொழிக்கப்பட்டு பெருந்தேசியவாதத்தின் தேசிய சித்தாந்தம் பெரும் விருட்சமாக வளர்வதற்கான சூழலை உருவாக்கக்கூடியதாகும். அதனூடாக இலங்கை தீவு பெருந்தேசியத்தின் தீவாக மாற்றுகின்ற நடைமுறை முன்னெடுக்கப்படும் அபாயம் உள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பது இலங்கை தீவின் ஒரே தேசிய இனத்தை அடையாளப்படுத்துவதாகவே புரிந்து கொள்ளப்படுகின்றது. அது ஏனைய தேசிய இனங்களையும் அவற்றின் இருப்புக்களையும் கேள்விக்குறியாக்கும். அத்தகைய செய்முறை தேசியங்களின் இருப்பில் சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்குவதோடு நம்பிக்கையீனத்தை அதிகரித்து அவற்றின் இருப்பு பலவீனப்படுவதற்கான அபாயம் உள்ளது.

நான்காவது, ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் மூலம் தேசவழமைச்சட்டம் நிர்மூலமாவதற்கான சூழலும் காணப்படுகின்றது. இலங்கையில் காலணித்தவ காலத்திலிருந்தே ஒவ்வொரு பிரதேசத்துக்குமான மரபுவழி தேசவழமை சட்டங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒல்லாந்தர் காலத்தில் சட்டங்கள் நிறுவனமயப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட காலங்களில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் பின்பற்றப்பட்டவந்த சட்டங்கள் தேசவழமை சட்டங்களாக எழுத்துருவாக்கப்பட்டு அரச சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. அந்தவகையில் இலங்கையில் யாழ்ப்பாண தேச வழமைச்சட்டம், கண்டி தேச வழமைச்சட்டம் மற்றும் மட்டக்களப்பு தேச வழமைச்சட்டங்கள் என்பன அக்குறித்த பிரதேசங்களின் தனித்துவ சட்டங்களாக காணப்படுகின்றன. அவை ஒரு நாடு ஒரு சட்டத்தின் மூலம் முழுமையாக இல்லாதொழிக்கப்படுவதனூடாக பிரதேசங்களின் தனித்தன்மை பலவீனமுற்று போகக்கூடிய சூழல் காணப்படுகிறது. இதுமட்டுமன்றி நீதிமன்றங்களிலும் ஏனைய நியாயாதிக்க பொறிமுறைகளிலும் தேசவழமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்ட முடிவுகளுக்கு உதவுகின்றது. தேசவழமை சார்ந்து நீதிமன்ற தீர்ப்புக்களும் நியாயாதிக்கங்களும் சுதேச பண்பாட்டின் கூறுகளை மீள மீள உத்தரவாதப்படுத்தி வருகின்றது. ஆனால் ஒரே நாடு ஒரே சட்டம் இதன் மீதான இரப்பை நெருக்கடிக்குள்ளாக்கும் சூழலை ஏற்படுத்தம் என்ற சந்தேகம் வலுவானதாக காணப்படுகின்றது.

ஐந்தாவது, தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை ஒத்திப்போடுவதற்காக குறுகிய பெருந்தேசியவாத அலையை உருவாக்கும் செயற்பாடாகவும் ஒரு நாடு ஒரு சட்டம் முன்முயற்சிகள் அவதானிக்கப்படுகின்றது. தென்னிலங்கை அரசாங்கங்கள் அதிகமாக நெருக்கடிகள் வரும் சூழல்களில் கடந்த காலங்களில் பெருந்தேசியவாத அலைகளை உருவாக்கியே தமது நெருக்கடிகளை ஒத்திப்போகச் செய்து வந்துள்ளார்கள். 1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா அத்தகைய பெருமுயற்சியையே முன்னெடுத்திருந்தார். தனிச்சிங்கள சட்டம் என்று அழைக்கப்பட்ட அவ்அம்சம் இன்றுவரை இலங்கை தீவின் அரசியல் பொருளாதார இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதேபோன்றதொரு குழப்பத்தை உருவாக்கும் உத்தியுடனேயே ஒரு நாடு ஒரு சட்ட மூல முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என்பது வலுவான சந்தேகமாகவே தென்படுகிறது.

எனவே, ஒரே நாடு ஒரே சட்டம் என்பது அதிகம் முரண்பட்ட சூழலை வெளிப்படுத்த முயலுகிறது. காரணம், இலங்கை தீவு இறைமை படைத்த ஒரே நாடு ஒரே சட்டத்துக்குள் கடந்த பல தசாப்தங்களாக செயற்பட்டு வருகிறது. அவ்வப்போது நெருக்கடி ஏற்பட்டாலும் அதிலிருந்து விடுபட்டு கொண்டதோடு இறைமை படைத்த ஒரு நாட ஒரு தேசம் என்ற எண்ணத்தோடு இயங்குவதற்கு பல போர்களையும் சமாதான உடன்பாடுகளையும் மேற்கொண்டிருந்தது. ஆனால் திடீரென தற்போதைய தென்னிலங்கை ஆட்சி ஒரே நாடு ஒரே சட்டம் என அழைப்பது உள்நாட்டு மரபுகளிலிருந்தும் வழக்காறுகளிலிருந்தும் தேசவழமைகளிலிருந்தும் இஸ்லாமிய சட்ங்களிலிருந்து மட்டும் விலகியிருக்கவா அல்லது பிராந்திய சர்வதேச சட்டங்களிலிருந்தும் அதன் சமவாயங்களிலிருந்தும் பிரகடனங்களிலிருந்தும் விலகியிருக்கவா? என்ற சந்தேகத்தை தருகிறது. டச்சு சட்டத்தை முன்னிறுத்திய நியாயாதிக்கங்களும் நியாயாதிக்க மன்றுகளும் ஆங்கில சட்டத்தின் மூலங்களை மையப்படுத்திய நிறுவனங்களும் எத்தகைய நிலைக்கு தள்ளப்படும் என்ற கேள்வி நியாயமானதாகும்.

-அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE