Friday 26th of April 2024 05:33:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் 13ஆம் சீர்திருத்தத்தை காலாவதியாக்குமா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் 13ஆம் சீர்திருத்தத்தை காலாவதியாக்குமா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


இலங்கை தமிழர் அரசியலில் புதிய திருப்பங்களை அடையாளப்படுத்துவதாக இலங்கை தீவில் பல காட்சிகள் நடந்தேறி வருகிறது. அதன் பிரதான கருப்பொருள் இலங்கைத்தீவில் இந்தியாவின் தலையீடு அல்லது செல்வாக்கு அல்லது நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்பதாகவே உள்ளது. 1987ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட 13ஆம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை இந்தியாவினூடாக ஏற்படுத்தவொரு தரப்பு முயல மறுதரப்பு உரையாடிய தகவல் எதனையும் வெளிப்படுத்தாது சூசகமாக அரசியலமைப்பு பற்றிய உரையாடலை வெளிப்படுத்தியிருந்தது. இக்கட்டுரையும் தமிழ்த்தேசிய அரசியலில் முனைப்பு செலுத்தும் அரசியல் கட்சிகள் இந்தியா சார்ந்து முன்னெடுக்கும் நகர்வுகளையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக உள்ளது.

முதலாவது, இலங்கை அரசியல் பரப்பில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான உரையாடல்கள் மீள ஆரம்பித்துள்ளன. மைத்திரி -ரணில் தேசிய அரசாங்கத்தில் இவ்வாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை மையப்படுத்தி தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசியலமைப்பினூடாக ஏற்படுமென்று தமிழ்த்தரப்பு நம்பிக்கையளித்து வந்தது. அதனால் இலங்கை அரசாங்கத்துடனான நியாயப்பாடான விடயங்களையும் தமிழ்த்தரப்பு கோராது கைவிட்டிருந்தது. மீண்டும் அவ்வாறானதொரு உரையாடலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தலைமைகளும் முன்வைக்க ஆரம்பித்துள்ளன. அதேநேரம் ஏனைய தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் புதிய அரசியலமைப்பு உருவாக்க சூழல் ஏற்பட்டால் 13ஆம் திருத்தம் காணாமல் போய்விடுமென்றும் அதுவே இந்திய -இலங்கை உறவுக்கான அடிப்படை என்ற நோக்கிலும் அத்தரப்புக்கள் 13இன் அமுலாக்கம் பற்றிய உரையாடலை நகர்த்துகிறது. ஆனால் இலங்கை அரசு என்பது அரசியலமைப்பு என்ற கோணத்தில் விவாதிக்கின்ற போது 13 மீதான அச்சுறுத்தல் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை அதிக நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பது கவனத்திற்குரிய விடயமாகும். இதற்கு ஆதாரமாக ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி தீவிர சிறுபான்மை எதிர்ப்புணர்வை கொண்ட தரப்பை தலைமையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை அவதானிக்கும் போது 13ஆம் திருத்தம் காலாவதியாவற்கான வாய்ப்பு அதிகம் நிலவுகிறது. இதனாலேயே அதன் முக்கியத்துவம் பற்றிய உரையாடல் இந்தியாவின் நோக்குநிலையிலிருந்து அதிகம் முதன்மைப்படுத்தப்படுகிறது.

இரண்டாவது, தமிழரசுக்கட்சியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் அல்லாத ஏனைய தமிழ்த்தேசிய அரசியல் சக்திகளும் முஸ்லிம் காங்கிரஸிம் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணைந்து 13ஐ முழுமையாக அமுல்படுத்துதல் தொடர்பில் கோரிக்கை ஒன்றினை இந்தியாவிடம் முன்வைத்துள்ளனர். இலங்கை தமிழரின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வில் எஞ்சியிருக்கும் ஒரே விடயமாக 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 13ஆம் திருத்தம் மட்டுமே காணப்படுகிறது. அத்தகைய 13 மிகப்பலவீனமான வடிவத்துக்குள் உட்படுத்தப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு பாரம்பரிய தமிழ்ப்பிரதேசமாக காணப்பட்ட வடக்கு-கிழக்கு உயர் நீதிமன்றத்தால் துண்டாடப்பட்டதும், மாகாண சபைக்கான அதிகாரங்கள் இல்லாமல் செய்யப்பட்டதும் மேலும் அதன் பலவீனத்தைக் காட்டுகிறது. இத்தகைய நெருக்கடிமிக்க காலங்களைக் கடந்து குறைந்தபட்சம் கடந்த பத்தாண்டுகளில் 13ஆம் திருத்தம் பற்றிய முக்கியப்படுத்தல்கள் தற்போது தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து 13இனை வலியுறுத்துவது அதிக குழப்பத்தை உருவாக்குகிறது.

மூன்றாவது, இலங்கைக்கான இந்தியத்தூதுவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மற்றும் பேச்சாளரின் சந்திப்பு 28.10.2021அன்று கொழும்பில் இடம்பெற்றது. அச்சந்திப்பில் எத்தகைய விடயம் உரையாடப்பட்டதென முதன்மைப்படுத்தப்படாத போதிலும், இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட உள்ள அரசியலமைப்பு பற்றிய உரையாடல் முக்கியத்துவப்படுத்தப்பட்டதாக தெரிய வருகிறது. இத்தகைய உரையாடலுக்கூடாக இந்திய-இலங்கை உறவில் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை புதிய அரசியலமைப்பு நிராகரித்துவிடுமா என்ற எண்ணப்பாங்கு இந்திய தரப்பிடம் அதிகமாக மேலெழுந்துள்ளது. எனவேதான் அதற்கான உரையாடலும் அதற்கான செயற்பாடுகளும் வடக்கு-கிழக்கை மையப்படுத்தி தீவிரப்படுத்தப்படுகின்றது. இதனூடாக புதிய அரசியலமைப்பு மீதான அச்சுறுத்தல் வடக்கு-கிழக்கு தமிழ்த்தரப்புக்கு மாத்திரமின்றி இந்திய தரப்புக்கும் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.

நான்காவது, வடக்கு மீனவர்கள் இந்திய தூதருடனான சந்திப்பு ஒன்று 01.11.2021 அன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் மீனவ பிரதிநிதிகள், வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், தேசிய மீனவர் நல்லிணக்கத்துக்கான வடக்கு-கிழக்கு இணைப்பாளார் மற்றும் முல்லைத்தீவு அன்னை வேளாங்கண்ணி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இத்தகைய சந்திப்பில் வடக்கில் அண்மையில் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்திற்கு பதிலாகவும் அதன் பலவீனங்களை சரிசெய்யும் உத்தியோடும் மேற்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது. ஆனாலும் இந்திய தரப்பும் அதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் மீனவர் தொடர்பான விவகாரத்தை சுமூகமாக கையாளுவதற்கான உத்திகளை பின்பற்றுவதான பொறிமுறை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இத்தகைய சந்திப்பிற்கூடாக இலங்கை அரசியலில் அதிலும் குறிப்பாக வடக்கு-கிழக்கு அரசியலில் இந்தியாவின் செல்வாக்கை பாதுகாப்பதில் கரிசனை கொள்வதாகவே தெரிகிறது.

எனவே, மேற்குறித்த நகர்வுகள் ஒவ்வொன்றும் இலங்கை-இந்திய உறவில் முக்கிய பரிந்துரையாக காணப்படுகிறது. அத்தகைய பரிந்துரைகள் பலவீனமானதாகவும் அதனை கடந்து செல்லக்கூடிய விதத்தில் ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்தப்படாமை தெரிகிறது. எனவே அதனை கருத்தில் கொண்டு தமிழ்த்தரப்பு வடக்கு - கிழக்கிலும் இலங்கை முழுப்பகுதியிலும் தனித்துவமான அணுகுமுறைகளை பின்பற்றுவதோடு இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியான சூழலை எவ்வாறு கையாளுதல் என்பதனை முதன்மைப்படுத்த வேண்டும்.

அதனப்படையில் ஒன்று, பலவீனமான 13க்காக போராடுவதை விட்டு பலமான 13க்கான கோரிக்கைகளை முன்னெடுப்பதோடு அதற்கான பிரகடனங்களையும் கோரிக்கைகளையும் தமிழ் பேசும் சக்திகளோடு உரையாடுவதற்கு முயலுதல் வேண்டும் அதற்காக எதிர்கால கூட்டத்தொடர்களில் அவற்றை முன்மொழிதல் அதற்கான திட்டவரைபுகளை உருவாக்குதல் அவசியமானதொன்றாகும். வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்களின் நலன்களை முழுமைப்படுத்த வேண்டுமாயின் கூட்டான அரசியல் அணுகுமுறைகள் அவசியமானதாகும். அதிலும் தென்னிலங்கையோடு பயணித்த முஸ்லீம் காங்கிரஸிம், தமிழர் முற்போக்கு கூட்டணியும் இணைந்திருப்பது ஒரு ஆரோக்கியமான வாய்ப்புக்களை பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பமாகும். இதனை முழுமையாக கட்டமைத்து வடக்கு-கிழக்கில் நிகழுகின்ற அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் கூட்டாக போராடுவதன் மூலம் தடுத்து நிறுத்த முடியும். கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு இத்தகைய கூட்டுக்களை பலப்படுத்தும் விதத்தில் வரைபுகளுக்கூடாக நகர்த்தப்படுதல் அவசியமானதாகும். அதுமட்டுமன்றி அத்தகைய வரைபுகள் வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு மாத்திரமின்றி வேறு சக்திகளுக்கும் அல்லது தேர்தலுக்கும் அல்லது பிராந்திய சர்வதேச சக்திகளுக்கும் சேவை செய்யாது பாதுகாத்து கொள்ளுதல் வேண்டும்.

இரண்டு, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முயற்சி 13இனை காலாவதியாக்கும் என்ற எண்ணப்பாங்கு இந்திய தரப்பிடமும் காணப்படுகின்றது என்பது அவர்களது சந்திப்புக்களிலும் உரையாடல்களிலும் தெரிகிறது. அதாவது, 13 காலாவதியாதல் என்பது வடக்கு-கிழக்கு மீதான இந்தியாவின் செல்வாக்கை மேலும் பின்னடைவுக்கு உட்படுத்தும். எனவே இந்தியாவிற்கு அதனை தடுத்து நிறுத்துவதற்கான அவசியப்பாடு எழுந்துள்ளது. அதனால் அதனைப் பாதுகாக்க அது முயலுகின்ற போது 13பிளஸ் பற்றிய உரையாடலை அல்லது 13க்கு அப்பால் செல்லுகின்ற உரையாடலை தமிழ்த்தரப்பு முன்னெடுக்க வேண்டும். இதனை ஆதாரப்படுத்தம் விதத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்ப்பேசும் கட்சிகளின் சந்திப்பில் சமர்ப்பித்த வரைபு ஆவணத்தில் உயர்ந்தபட்ச சமஷ்டி கட்டமைப்பின் கீழ் அதிகாரப்பகிர்வே நிரந்தர தீர்வாகும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இவ்வகை உரையாடல்களை வரைபுகளாக்குவதோடு அவற்றை இந்திய தரப்பிடம் ஒப்படைத்து அதற்கான உரையாடலை தொடக்கி காலவரையறையை குறிப்பிட்டு அமுல்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னகர்த்த வேண்டும். புதிதாக உருவாக்க திட்டமிடும் அரசியலமைப்பில் அவ்வகை கோரிக்கைகள் முழுமைப்படுத்தப்பட்டு வரைபுகளும் உள்ளடக்கப்பட இந்திய அனுசரணையை அடிப்படையாக கொண்டு நடவடிக்கைகளை தொடக்க வேண்டும்.

எனவே, இந்தியா இலங்கை அரசியலில் அண்மைக்காலமாக முன்னெடுத்துவரும் நகர்வுகள் வலிமையானதாக காணப்படுகின்றன. 2020 டிசம்பரில் இந்திய பாதுகாப்பு செயலாளர் வருகையிலிருந்து தொடங்கிய இலங்கை-இந்திய உறவுக்கான நகர்வு 2021 செப்டெம்பர் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் வருகையோடு பலமடைந்துள்ளது. இது சீனாவிற்கொரு நெருக்கடியையும் இலங்கை-சீன உறவில் விரிசலை உள்ளார்ந்தரீதியில் ஏற்படுத்துவதிலும் இந்தியாவிற்கு வெற்றியை தந்துள்ளது. ஆனால் இலங்கை தரப்பு இதனை எவ்வாறு கையாளப்போவதென்பது அதன் அண்மைய நகர்வுகளில் புலப்படுகிறது. இந்தியாவை அணைத்துக்கொண்டு உள்நாட்டில் தனது நலன்களை முதன்மைப்படுத்துவதோடு வடக்கு-கிழக்கு மீதான ஆதிக்கத்தை அதீதமாக முதன்மைப்படுத்த முனைகிறது. ஆனால் இந்தியா தென்னிலங்கையோடு ஒத்துழைத்தல் என்பது வடக்கு-கிழக்கு இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கும் சூழல் நிலவும் வரையுமே தென்னிலங்கை இந்தியாவோடு புரிதலை வெளிப்படுத்தும். எனவேதான் வடக்கு-கிழக்கு மீதான இலங்கை அரசின் பலவீனப்படுத்தும் நிகழ்வுகளை இந்தியா கருத்திற் கொள்வதும் அதனூடாக வடக்கு-கிழக்கு தமிழர்களின் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதும் தமிழ்க்கட்சிகளின் அணுகுமுறையாக அமைதல் அவசியமாகும்.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE