Friday 26th of April 2024 07:45:26 AM GMT

LANGUAGE - TAMIL
.
இங்கிலாந்தில் யூனிஸ் புயல் தாக்கத்தால் பெரும் சேதம்; 3 உயிரிழப்புக்கள் பதிவு!

இங்கிலாந்தில் யூனிஸ் புயல் தாக்கத்தால் பெரும் சேதம்; 3 உயிரிழப்புக்கள் பதிவு!


இங்கிலாந்தை யூனிஸ் புயல் தாக்கியதில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், சொத்துக்களுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது.

பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், கட்டங்களில் கூரைகள் புயல் காற்றில் தூக்கி வீசப்பட்டன. மரங்கள் முறிந்து விழுந்தும், காற்றில் தூக்கி எறியப்பட்டும் கார்கள் உள்ளிட்ட பெருமளவு வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

லண்டனின் விமான நிலைய ஓடுபாதைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானங்களும் புயலால் ஓடுபாதைகளில் இருந்து நகர்ந்துள்ளன. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கையை இங்கிலாந்தின் தெற்கு மற்றும் வேல்ஸின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக நேற்று விரிவுபடுத்தியது.

இங்கிலாந்தில் சில பகுதிகளில் மணிக்கு 122 மைல் வேகத்தில் நேற்று புயல் காற்று சுழன்றடித்தது.

வடக்கு லண்டனின் மஸ்வெல் ஹில்லில் வெள்ளிக்கிழமை கார் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக லண்டன் தீயணைப்பு படையின் அறிக்கை தெரிவிக்கிறது.

லிவர்பூலில் தனது காரை ஓட்டிச் சென்ற 50 வயதுடைய ஒருவரும் புயல் தாக்கத்தால் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக மெர்சிசைட் பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் மரம் முறிந்து விழுந்ததில் 60 வயதான ஒருவர் உயிரிழந்ததாக கார்டெய் எனப்படும் தேசிய பொலிஸ் சேவை உறுதிப்படுத்தியது.

லண்டன் நகரம் உட்பட இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் புயல் தாக்கம் காரணமாக மின்சார இணைப்புக் கம்பங்கள் சேதமடைந்ததால் பல ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

லண்டனின் முக்கிய விமான நிலையங்கள் முழுவதும் டசின் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. லண்டனின் ஹீத்ரோவில் விமானங்கள் தரையிறங்கும் போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டன. சில விமானங்கள் கடும் போராட்டத்தின் மத்தியில் தரையிறங்கிய பின்னர் ஓடுபாதையில் இருந்து காற்றின் வேகத்தால் நகர்த்தப்பட்டன.

குறிப்பிடத்தக்க இடையூறுகள் உள்ளபோதும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பல விமானங்களை தொடர்ந்து தரையிறக்கி வருகிறது. அதேபோன்று இங்கிலாந்தில் இருந்து புறப்படும் சில விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. எனினும் பெரும்பாலான விமான சேவைகள் திட்டமிட்டவாறு இடம்பெறும் எனவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

1987 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஏற்பட்ட பெரும் புயலால் 18 பேர் உயிரிழந்தனர். மணிக்கு 100 மைல் வேகத்தில் வீசிய காற்றில் 15 மில்லியன் மரங்கள் சாய்ந்தன. அதற்குப் பின்னர் ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த புயலாக யூனிஸ் புயல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE