Thursday 25th of April 2024 10:17:12 PM GMT

LANGUAGE - TAMIL
பிக்பாஸ் 3 – நாள் 23 – “வீ மிஸ் யூ.. சொர்ணாக்கா.. ஸாரி.. வனிதாக்கா” - சுரேஷ் கண்ணன்

பிக்பாஸ் 3 – நாள் 23 – “வீ மிஸ் யூ.. சொர்ணாக்கா.. ஸாரி.. வனிதாக்கா” - சுரேஷ் கண்ணன்


அதாகப்பட்டது… பிக்பாஸ் வீட்டிலே.. இன்றைய தினத்திலே… இரண்டு நீளமான பஞ்சாயத்துக்களும் ஒரு சிறிய பஞ்சாயத்தும் நடந்தன. மூன்றுமே உப்புப் பெறாத விஷயங்கள். (இவற்றில் ஒன்று இனிப்புப் பெறாதது!).

இவையெல்லாமே சிறுபிள்ளைத்தனமான சர்ச்சைகள்தான் என்றாலும் மனித மனம் எவ்வாறெல்லாம் நுட்பமாக காயப்படுகின்றன, ஒரு சிறிய தகவல் இடைவெளி எத்தனை பெரிய சர்ச்சைகளையும் மனப்புழுக்கங்களையும் உருவாக்குகிறது என்பதை அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. ஒரு சிறுபொறிதான் பெருநெருப்பு வெடிக்க காரணமாக இருக்கிறது. (எப்படில்லாம்.. சமாளிச்சு எழுத வேண்டியிருக்கு!).

நீளமான பஞ்சாயத்துக்களைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம். முதலில் சாக்லேட். இந்த சர்ச்சைக்கான விதை நேற்றே போடப்பட்டு விட்டது. வீட்டில் உள்ள அனைவருக்கும் சாக்லேட்டை வழங்கிக் கொண்டிருந்தார் சாக்ஷி. அவர் சாக்லேட் சாப்பிட மாட்டார் என்பதால் தன்னுடைய பங்கையும் சேர்த்து கவினுக்குத் தந்து விட்டுச் சென்றார். அருகில் இருந்தவர் லொஸ்லியா.

ஏதோவொரு விஷயத்தில் லொஸ்லியாவைச் சமாதானப்படுத்துவதற்காக (இது கவின் ஓவர்டைம் போட்டு செய்யற விஷயம்) தன்னுடைய பங்கு சாக்லேட்டையும் லொஸ்லியாவிற்குத் தந்து விட்டார் கவின். சாக்ஷி தந்ததை பத்திரமாக வைத்துக் கொண்டிருந்தார். சரியா!.. இது நேற்றைய கதை.

இன்று என்னவாயிற்று என்றால், லொஸ்லியா தன்னிடமிருந்த இனிப்புகளை எடுத்துக் கொண்டிருந்த போது, “ரெண்டு சாக்லேட் இருக்கே..யாரு தந்தது?” என்று சாண்டி விசாரித்து “கவின் தந்ததா?” என்கிற ஜாலியான யூகத்தையும் கேட்டு விட்டார். இதை மேலும் கொளுத்தி விட்டவர் ஷெரீன். இதற்கு பதில் சொல்லாமல் தன் வழக்கமான பாணியில் சிரித்து மழுப்பினார் லொஸ்லியா.

அருகில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த சாக்ஷி, தான் தந்ததைத்தான் கவின் லொஸ்லியாவிற்கு தந்து விட்டான் என்று எண்ணிக் கொண்டார். கவின், லொஸ்லியாவிடம் பழகுவதில் இவருக்குப் பொறாமை என்பது பல முந்தைய சமயங்களில் வெளிப்பட்டிருந்தது. எனவே அந்த சாக்லேட் தன்னுடையதுதான் என்று மனம் தன்னிச்சையாக முடிச்சு போட்டுக் கொண்டது.

IMAGE_ALT

மனதிற்குள் சந்தேகம் என்னும் நெருப்பு புகுந்து கொண்டால் எல்லாமே எதிர்மறையான சித்திரங்களாகத் தெரியும் என்பதற்கு இந்தச் சிறிய சம்பவம் ஒரு நல்ல உதாரணம்.

கோபமடைந்த சாக்ஷி கவினிடம் சென்று விசாரிக்க ‘விளக்கம் அளிக்கிறேன் பேர்வழி’ என்று “நீ கொடுத்த சாக்லேட்டை சாப்பிட்டுட்டேன்” என்பது போல் அவர் உளறிக் கொட்ட நெருப்பு இன்னமும் அதிகமாக பற்றிக் கொண்ட பாவனையில் சாக்ஷி விலகிச் சென்றார். அருகே சென்று சமாதானம் செய்ய முயன்ற கவினை “என் உணர்வுகளோடு இனி விளையாடாதே. Leave me alone” என்று துரத்தியடித்தார் சாக்ஷி. கவின் அளிக்க முயன்ற விளக்கத்தை அவர் நிதானமாக கேட்கத் தயாராக இல்லை. பொறாமை என்னும் நெருப்பினால் மனம் அவிந்து கொண்டிருக்கும் போது மூளை எப்படி வேலை செய்யும்?

இந்த விஷயத்தை பிறகு சாண்டியிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார் கவின். “சின்னப்புள்ளத்தனமா இருக்கே” என்ற சாண்டி ‘சரி..பிரச்சினை முடிந்ததும் சொல்லு..அந்த சாக்லேட்டை ஷேர் பண்ணி சாப்பிடலாம்” என்று நக்கல் அடிக்கவும் தவறவில்லை. சாக்ஷி கோபித்துக் கொண்ட தகவல் லொஸ்லியாவின் காதிற்குச் செல்ல, கோபித்துக் கொள்வது இப்போது அவருடைய முறை. கவின் தனக்குத் தந்த சாக்லேட்டை வருத்தத்துடன் திருப்பித்தர வந்தார். ஒரு காதலிக்கு.. சரி.. தோழிக்குத் தந்து விட்ட பரிசை, அவள் திருப்பித் தந்தால் அது வேதனையளிக்கும் விஷயம்.

லொஸ்லியாவை மீண்டும் சமாதானப்படுத்த அவர்களின் ஃபேவரைட் சந்திப்புக்கூடமான கழிவறையின் பக்கம் சென்றார் கவின். ஆனால் அது இயலவில்லை.

தான் செய்த விளையாட்டுத்தனமான காரியம் வினையானதால் லொஸ்லியா கண் கலங்க அவரை பாசத்துடன் அணைத்துக் கொண்டார் சேரன். (தங்கமீன்கள் படத்தின் காட்சியைப் பார்த்த மாதிரியே ஒரு ஃபீலிங்). “இப்ப பாரேன்.. சேரனுக்கு கோபம் வருது.. பல்லைக் கடிக்கப் போறார்” என்கிற ‘பசங்க’ பக்கோடா மாதிரியே சேரனை உசுப்பேற்றிக் கொண்டிருந்தார் ரேஷ்மா.

இந்தப் பஞ்சாயத்தில் தவறு கவினுடையதுதான். முதலில் அபிராமியின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த கவின், இப்போது லொஸ்லியா, சாக்ஷி என்கிற இரட்டை மாட்டு வண்டியில் பயணம் செய்ய முயற்சிக்கிறார். “விளையாட்டாகத்தான் பழகுகிறேன்” என்று இவர் சொன்னாலும் நட்பிற்கும் காதலுக்குமான உறவின் இடையில் இவர் ஊசலாடுவதாக தோன்றுகிறது. இந்த விஷயத்தை ஒருவரிடம் கையாள்வதே பெரிது என்னும் போது இரண்டு பேரிடம் இந்த விளையாட்டைத் தொடர்வது ஆபத்தனது.

ஆண்களின் possessiveness-ஐ விடவும் பெண்களின் possessiveness மிகவும் நுட்பமானது; அழுத்தம் வாய்ந்தது. ஏறத்தாழ வெடிகுண்டிற்கு இணையான ஆபத்து. இந்த உலகிலேயே அதிகமாக அவதிப்படுகிற உறவுகளில் பிரதானமானது இரட்டை திருமண உறவு. அனுபவிக்கிறவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள். பிக்பாஸ் வீட்டிலேயே அதற்கான உதாரணம் உண்டு. இங்கிருந்து வெளியேறத் துடிக்கும் சரவணன், குழந்தைப் பாசத்தால் அப்படிச் சொல்கிறார் என்று பார்த்தால்… ‘இரண்டு மனைவிகளுக்குள் என்னென்ன பிரச்சினைகள் வந்திருக்குமோ என்கிற கலக்கமே அதிகமாக இருப்பதாக’ தெரிவித்தார். கமலும் இதைக் கண்டுபிடித்து கிண்டலடித்தது நினைவிருக்கலாம்.

இந்த இரட்டைச் சவாரியிலிருந்து கவின் உடனே வெளியே வருவது அவருக்கு நல்லது. இனிப்பில் துவங்குகிற காதல் விழுங்க முடியாத கசப்புடன்தான் பெரிதும் முடியும் என்பதுதான் இதன் நீதி. (நோட் பண்றா.. நோட் பண்றா.. பின்றாம்ப்பா.. பின்றாம்ப்பா.. இவன்!)

**

அடுத்த நீளமான பஞ்சாயத்து உருவானது மீராவினால். ஆனால் இதில் தவறு அவருடையது மட்டுமே என்று சொல்லி விட முடியாது. இது முந்தைய பஞ்சாயத்தை விடவும் சிக்கலானது.

லக்ஸரி பட்ஜெட்டிற்காக ‘டிக்டிக்டிக்’ என்றொரு விளையாட்டு நடத்தப்பட்டது. ஓர் அறையில் இருக்கும் ஏராளமான கடிகாரங்களில் இரண்டில் மட்டும் அலாரம் அடிக்கும். அதை பத்து நொடிகளில் கண்டுபிடித்து நிறுத்தி விட்டால் 600 புள்ளிகள் கிடைக்கும். மீரா தானே முன் வந்து இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். இன்னொரு சக போட்டியாளராக சாண்டி தேர்வு செய்யப்பட்டார்.

இருவரும் டாஸ்க் ரூமிற்குச் சென்று பரபரப்பாக அலாரம் அடிக்கும் கடிகாரங்களைத் தேடினார்கள். முதல் வெற்றி சாண்டிக்கு கிடைத்தது. ஓரிடத்தில் மீரா பரபரப்பாக தேடிக் கொண்டிருக்கும் போது சட்டென்று சாண்டி அதை எடுத்து இன்னொரு வெற்றியும் பெற்றார். இருவரும் மகிழ்ச்சியாக வெளியே வந்தனர்.

இதுவரைக்கும் பிரச்சினையில்லை. ஆனால் அவர்கள் வெளியே வந்ததும் “நீ ஒண்ணும் பண்ணிடலே.. சாண்டிதான் ரெண்டையும் ஸ்டாப் செஞ்சான். அவன் மட்டுமே இதற்குப் போதும்” என்பது போல் சரவணனும் கவினும் மீராவைக் கிண்டலடிக்க, ‘ஒருவேளை அப்படித்தான் காமிராவில் காட்டப்பட்டதோ” என்கிற சந்தேகம் மீராவிற்குள் புகுந்து கொண்டது. சாக்ஷிக்குள் புகுந்து கொண்டது மாதிரியே இன்னொரு நெருப்பு.

இந்த விளையாட்டில் தன்னுடைய பங்கும் இருக்கிறது என்பதை உலகிற்கு தெரியப்படுத்த மீரா முயன்றார். எனவே இது குறித்தான தன் ஆட்சேபங்களை வெளியில் புலம்பிக் கொண்டிருந்தார். இது குறித்த தனிப்பஞ்சாயத்தும் பொதுப்பஞ்சாயத்தும் பிறகு நடந்தது.

IMAGE_ALT

‘நான் விளையாட்டாகத்தான் சொன்னேன். அது உன்னைக் காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்’ என்று கவின் தனியாக மன்னிப்பு கேட்டு விட்டார். அப்போதைக்கு மீரா மன்னித்தாலும் அவரின் மனக்காயம் ஆறவில்லை. ஆனால் மீராவிற்கு இன்னொரு பிரச்சினையும் ஏற்பட்டு விட்டது. தான் சொல்லித்தான் பொதுப்பஞ்சாயத்து நடந்ததாக கவின் தவறாக நினைத்துக் கொள்வானோ என்கிற சந்தேகம்.

இதை தீர்க்க என்ன செய்கிறார் என்றால் “நான் இந்த பொதுப்பஞ்சாயத்தை கூட்டவில்லை. கேப்டன்தான் கூட்டினார்” என்று கவினிடம் சொல்கிறார். மீராவின் நன்மைக்காக செய்த விஷயத்தில் தன் மீது கையைக் காட்டுகிறாரே என்று சாக்ஷிக்கு கோபம் வருகிறது. இது தொடர்பான மனவருத்தங்கள் உண்டாகின்றன.

இந்தப் பிரச்சினையை சற்று நிதானமாக கவனித்தால் .. மீரா.. சாக்ஷி என்று இருவரின் தரப்பிலுமே தவறு இல்லை. தன்னுடைய முயற்சி சாண்டியினால் மறைக்கப்பட்டதாக கருதிக் கொள்ளும் மீரா அது குறித்த புலம்பலை பொதுவில் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் official புகாராகத் தரவில்லை. இயல்பான புலம்பல் அது. ஆனால் இதைக் கேட்டுக் கொண்டிருந்த சாக்ஷி, வீட்டின் கேப்டன் என்கிற முறையில் தாமாக முன் வந்து ‘சரி.. ஒரு மீட்டிங் போட்டு இதை கிளியர் பண்ணிடலாம்” என்று சொல்ல, மீராவிற்கும் அது சரி என்று படுவதால் சரி என்று உடன்படுகிறார்.

இந்தப் பொதுப் பஞ்சாயத்து சாண்டியுடன் நிகழ்ந்த வெற்றிப்பங்கீடு பற்றிய புகார் தொடர்பானது மட்டுமே என்று சாக்ஷி கருதுகிறார்.. கவினுக்கும் மீராவிற்கும் இடையில் நிகழ்ந்த மனவருத்தமும் மன்னிப்பும் பற்றி சாக்ஷிக்குத் தெரியாது. (மண்டை குழம்புதா?!)

இந்தப் பொதுப்பஞ்சாயத்தைக் கூட்டுவதற்கான முதற்புள்ளி யார் என்பதில் குழப்பம் நேர்வதால் சர்ச்சைகள் இன்னமும் சிக்கலாகின்றன. ஒரு சிறிய தகவல் இடைவெளி எத்தனை பெரிதாக வளரும் என்பதற்கு இந்தச் சம்பவங்கள் உதாரணம்.

**

குறுகிய நேரத்திற்குள் ஒரு விளையாட்டை முடிக்க வேண்டுமென்கிற நெருக்கடியில் சக வீரர் துரிதமாக செயல்படுவது இயல்பே. இந்தச் சாதாரண விஷயத்தை மீராவால் இயல்பாக கடக்க முடியவில்லை.

ஆனால் - அவருடைய நோக்கில் இருந்து பார்த்தால் இந்தப் பிரச்சினைகளின் ஆதாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். மற்றவர்களால் ஏற்கெனவே அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். நாமினேஷனில் வேறு இருக்கிறார். எனவே எதையாவது செய்து தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். எனவேதான் தானே முன் வந்து ‘விளையாடப் போகிறேன்’ என்கிறார். அதில் ஏற்படும் சாண்டியின் குறுக்கீடு அவரை எரிச்சல்படுத்துகிறது. அதைத் தொடரும் பஞ்சாயத்துக்கள் இந்த விஷயத்தை இன்னமும் சிக்கலாக்குகின்றன.

இதர போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் முன்னால் தன்னை நிரூபிக்கும் உளவியல் சிக்கல் மீராவிடம் இருக்கிறது. இதனுடன் பாதுகாப்பற்ற உணர்ச்சியும் இணைந்து கொள்கிறது. இவைதான் மீராவின் குழப்பமான நடவடிக்கைகளுக்கு அடிப்படையான காரணங்கள் என்று தோனறுகிறது.

இந்த விஷயத்தில் சாண்டியையும் கவினையும் குற்றஞ்சாட்டிய மீரா, கிண்டலடித்த சரவணணை ஏதும் சொல்லவில்லை என்பதையும் கவனிக்கலாம். அவர் தூக்கியெறிந்து பேசிவிடும் சுபாவமுள்ளவர் என்பதால் ஜாக்கிரதையாக அவரைத் தவிர்க்கிறார்.

IMAGE_ALT

இந்தப் பஞ்சாயத்து உரையாடல்களில் கவின் – லொஸ்லியா – சாக்ஷி ஆகியோருக்கு இடையான முக்கோண உறவின் சிக்கல்களும் இடையிடையே வந்து போனதைக் காணலாம். “என்னாலயும் சிரிச்சு சிரிச்சு க்யூட்டா நடந்துக்கத் தெரியும். ஆனா நான் உண்மையா நடந்துக்க நெனக்கறேன்” என்று மீரா கவினிடம் சொல்வது லொஸ்லியா குறித்ததாக இருக்கலாம்.

“ஆமாம்.. எல்லோரையும் ஹர்ட் பண்ணத்தான் என்னை இங்க அனுப்பிச்சிருக்காங்க.. அதை நான் சிறப்பா செஞ்சிட்டிருக்கேன்.. போதுமா?” என்று கவின் எரிச்சலுடன் சொல்வது மீரா குறித்தது மட்டுமல்ல. அந்த வாக்கியம் சாக்ஷியை நோக்கி சொல்லப்பட்டதாகவும் புரிந்து கொள்ளலாம்.

**

இந்த இரண்டு நீளமான பஞ்சாயத்துக்களைத் தாண்டி, இன்னொரு உப பஞ்சாயத்தையும் பார்த்து விடுவோம்.

“எனக்குத் தண்ணி ஒத்துக்கல.. அதனால பாத்ரூம் க்ளீனிங் டீம்ல இருந்து விடுவிச்சுடு” என்று கேப்டன் சாக்ஷியிடம் உருக்கமாக வேண்டிக் கொண்டிருந்தார் மோகன். ‘சேரனே எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சுடறாரு” என்று மோகன் நினைக்கிறார். எனில் இதைப் பற்றி சேரனிடமே அவர் முதலில் பேசியிருக்கலாம். இதையேதான் சேரனும் பிறகு சொல்கிறார். ஆனால் மோகன் அதைச் செய்யாமல் கேப்னிடம் சென்று மாற்றுவழியைக் கேட்கிறார்.

“நான் வேணா சமையல் டீமிற்குப் போறேன்” என்பது அவரது வேண்டுகோள். “அங்க உங்க பங்காளி சரவணன் இருக்கிறாரே.. தாக்குப் பிடிப்பீங்களா?” என்று சாக்ஷி கேட்க.. ‘அப்ப பாத்திரம் கழுவும் டீமிற்குப் போகிறேன்” என்று மோகன் சொல்ல.. “அங்கயும் தண்ணி இருக்குமே” என்று சாக்ஷி சொல்ல.. இப்படியே இந்த உரையாடல் காமெடியாக போய்க் கொண்டிருந்தது.

IMAGE_ALT

பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் ஏதாவது ஒரு வேலையில் ஆர்யாவைச் சேர்த்து விட சந்தானம் முயல்வார். ஆனால் ஒவ்வொரு வேலைக்கும் ஏதாவதொரு அற்பமான குறையைக் கண்டுபிடித்து மறுப்பார் ஆர்யா. நல்ல நகைச்சுவைக் காட்சி அது. மோகன் சொல்லிக் கொண்டிருந்ததும் அப்படியேதான் இருந்தது.

இந்த உரையாடலிலும் தகவல் இடைவெளி தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டன. இந்தப் பஞ்சாயத்து முடிந்ததும் மூன்று பெண்களுக்கு முத்தம் தந்தும் பெற்றும் கூலானார் மோகன். மனிதர் ஒருவேளை இந்த முக்கியமான விஷயத்திற்காகத்தான் பஞ்சாயத்தையே கூட்டுகிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது.

இந்த இரண்டு சலிப்பான நாட்களில் ஒரு விஷயத்தை தெளிவாக உணர முடிகிறது. என்னதான் ஒருபக்கம் அவரைத் திட்டித் தீர்த்தாலும் இதை சொல்லித்தான ஆக வேண்டியிருக்கிறது….

“வீ மிஸ் யூ.. சொர்ணாக்கா.. ஸாரி.. வனிதாக்கா”

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE