Friday 26th of April 2024 10:34:19 AM GMT

LANGUAGE - TAMIL
“ரோமியோ கவினும் ‘போர்ட்ரே’ மீராவும்”- சுரேஷ் கண்ணன்

“ரோமியோ கவினும் ‘போர்ட்ரே’ மீராவும்”- சுரேஷ் கண்ணன்


இந்த சீஸனில் பிக்பாஸ் அட்டகாசமாக செய்த முதல் குறும்பு இதுதான். 25-ம் நாள் காலையில் போட்ட பாட்டுதான் அது. ‘கரகாட்டக்காரன்’ படத்திலிருந்து “ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க”.

தூங்கிக் கொண்டிருந்த அல்லது அப்படி பாவனை செய்து கொண்டிருந்த கவினைத் தவிர மற்ற எல்லோரும் இந்தப் பாடலை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். செம டைமிங். கவினுக்கு மிகப் பொருத்தமான பாடல். இந்த மகிழ்ச்சி அனைவரின் முகத்திலும் தெரிந்தது. கவினுக்கு மட்டுமல்ல, ஊர் தாண்டி வந்திருக்கும் லொஸ்லியா, தர்ஷன், முகின் ஆகியோருக்கும் கூட பொருந்தக்கூடிய பாட்டுதான் இது.

பொதுவாக டான்ஸ் ஆடாத சேரன் கூட இன்று மகிழ்ச்சியாக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். கவினின் பிடியிலிருந்து லொஸ்லியா தப்பித்த மகிழ்ச்சியை கொண்டாடினாரோ.. என்னமோ.

அதற்கும் முன்னால் 24-ம் நாளில் சம்பவங்கள் தொடர்ந்தன. “சரி.. தொலைந்து போ…” என்று சாக்ஷயிடம் கவின் சொன்னவுடனேயே இந்த நாசமாகப் போன ‘லவ் டிராக்’ சற்று ஓயும், நாமும் நிம்மதியாக இருப்போம் என்று பார்த்தால் அதே உக்கிரத்துடன் தொடர்ந்தது.

ஓர் லட்சணமான ஆணாக, முகினைப் போல் கவின் அமர்ந்திருப்பான் என்று பார்த்தால், ‘பழைய குருடி, கதவைத் திறடி’ கதையாக சாக்ஷியை சமாதானம் செய்ய அவரது ஃபேவரைட் ஏரியாவான பாத்ரூம் பக்கம் பின்னாலேயே சென்றார். உள்ளே இருக்கும் சாக்ஷி, அவர் சென்றிருக்கும் பணியைச் செய்ய விடாமல் ‘கதவைத் திறடி பாமா.. என் காலு வலிக்கலாமா?” என்று கக்கூஸ் கதவின் வாசலில் ‘தேவுடு’ காக்கத் துவங்கி விட்டார்.

IMAGE_ALT

ஷெரீன் வந்து சாக்ஷியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றவுடன் காமிரா முன்னால் சுயவாக்குமூலம் சொல்லத் துவங்கி விட்டார் கவின். சாக்ஷியுடன் இவரும் ஏதோ ஃபீல் ஆனாராம். என்றாலும் அதை ஒரு பக்கம் ஓரமாக வைத்து விட்டு தன் ரோமியோ விளையாட்டை சீஸன் முழுவதும் தொடரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் விஷயம் இப்போது சற்று சீரியஸாகி விட்டதாம். இவருடைய லீலைகளை சாக்ஷியும் லொஸ்லியாவும் ரசிக்கிறார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாராம்.

“நீங்க லவ்வுன்னா.. பண்ணுங்க.. எரியற ஸ்டவ் மேலன்னா கூட ஏறி உக்காருங்க.. எங்களை ஆள வுடுங்கடா சாமி” என்று பார்வையாளர்களாகிய நாமே கதறும் போது ‘இதை பெண்கள் ரசிப்பார்கள்’ என்று எப்படி கவின் முடிவிற்கு வந்தார் என்று தெரியவில்லை. ‘ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதையெல்லாம் எத்தனை கொடுமையானது’ என்று வரலாறு பலமுறை நிரூபித்திருக்கிறதே?! ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ திரைப்படத்தில் நடித்த சரவணனைக் கேட்டால் கூட சொல்வாரே?’

இது இப்படியாக போய்க் கொண்டிருக்க, ‘எங்கிருந்தாலும் வாழ்க’ மோடிற்கு வந்து விட்டார் லொஸ்லியா. விட்டத்தைப் பார்த்து பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்.

‘என் கிட்ட இனிமே வந்து பேசாத’ என்று சாக்ஷி விலகியவுடன் நியாயமாக கவின் என்ன செய்திருக்க வேண்டும்? தனியாகப் போய் குப்புற அடித்து தூங்கியிருக்க வேண்டுமா, இல்லையா? இந்த வெட்கங் கெட்டவர் நேராக லொஸ்லியாவிடம் சென்று ‘ஹிஹி.. தூங்கலையா…’ என்று பேச்சை ஆரம்பித்தார். ‘த்ரிஷா இல்லைன்னா நயனதாரா’ பாலிஸியை ரணகளத்திலும் கடைப்பிடிக்கும் கவினின் துணிச்சல் யாருக்கும் வராது. ‘நான் மதியமே நித்திரை கொண்டுட்டேன்’ என்றார் அவர். (ஏம்ப்பா.. பிக்பாஸூ..இதையெல்லாம் கேட்க மாட்டியா?!)

“சரி.. இனி மேல் என் கிட்ட அதிகம் பேசாத. அவளுக்கு ஹர்ட் ஆகுது.. அப்புறம் அது உனக்கு ஹர்ட் ஆகும்… உனக்கு ஹர்ட் ஆனா எனக்கும் ஹர்ட் ஆகும்” என்கிற மாதிரியே லொஸ்லியா பேசிக் கொண்டிருக்க பார்க்கும் நமக்குத்தான் ஹார்ட் அட்டாக் வரும் போல் இருந்தது.

நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல கவினை துரத்தி விட்டாலும் ஒரு பக்கம் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று உளவு பார்ப்பதிலேயே கவனமாக இருக்கும் சாக்ஷி பாத்ரூமிற்குச் செல்லும் சாக்கில் எழுந்து வந்து இவர்கள் இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து … “மை காட்.. கவின் இன்னமும் அவ கூட பேசிட்டிருக்கான்” என்று ஷெரீனிடம் ரகசியமாக அதிர்ச்சியானார். சாக்ஷி வந்து சென்ற பிறகுதான் கவினும் லொஸ்லியாவும் தங்களின் உரையாடலை நிறுத்தித் தொலைத்து விட்டு நித்திரை கொள்ளச் சென்றார்கள். (முடியல!).

ஒருபக்கம் காமெடியாக இருந்தாலும் லொஸ்லியாவின் உணர்வையும் புரிந்து கொள்ள முடிகிறது. அவருக்கும் கவினின் மீது தன்னிச்சையானதொரு மெல்லிய மையல் இருப்பது போல் தெரிகிறது. கவினுக்காக அதை விட்டுத்தர முன்வருகிறார். ஆனால் சாக்ஷி அப்படியில்லை. ஆனால் இதற்கெல்லாம் மூலக்காரணம் கவின்தான். ‘என் உணர்வுகளோடு விளையாடதே” என்று முன்னர் சாக்ஷி சொன்னது மிகச்சரி. விளையாட்டாக நினைத்துச் செய்தாலும் இப்படி மற்றவர்களின் ஆதாரமான உணர்வுகளோடு விளையாடுவது முறையானதல்ல. விளையாட்டு வினையாகி விடும் ஆபத்தும் உண்டு.

**

மீராவின் கைங்கர்யத்தால் காலையிலேயே ஒரு பஞ்சாயத்து ஆரம்பித்தது. “டைனிங் டேபிளை க்ளீன் செய்யச் சொல்லி இரவே சொன்னேன். நீ செய்யவில்லை. எப்போதும் இப்படித்தான் ஓபி அடித்துக் கொண்டிருக்கிறாய்” என்று கேப்டன் சாக்ஷி குற்றச்சாட்ட, தன்னைப் பற்றி ஏதும் தவறாக ‘போர்ட்ரே’ ஆகி விடுமோ என்கிற பீதியான கற்பனையிலேயே இருபத்து நான்கு மணி நேரமும் வாழும் மீரா, “சண்டை போடணும்னு முடிவு பண்ணிட்டுதான் பேசவே ஆரம்பிப்பியா.. இப்ப செஞ்சுட்டு போறேன். இதெல்லாம் ஒரு பிரச்சினையா?’ என்று பதிலுக்கு மல்லுக்கட்டினார்.

இதற்கிடையில் இன்னொரு காமெடி ஆரம்பித்தது. லொஸ்லியாவை வெறுப்பேற்றுவது என்று ஷெரீனும் தர்ஷனும் முடிவு செய்து விட்டார்கள். இதில் ஷெரீனுக்கு உள்ளூற சற்று காழ்ப்பும் இருக்கலாம். தன் தோழியான சாக்ஷியின் வாழ்க்கையில் குறுக்கே வரும் லொஸ்லியா மீது சற்று வன்மம் உருவாகியிருக்கலாம். தர்ஷனுக்காக பிரத்யேகமாக இதய வடிவில் ஒரு சப்பாத்தியை உருவாக்கினார். (கவினின் காதல் சக்ஸஸ் ஆகிறதோ.. இல்லையோ.. சைடு கேப்பில் ஷெரீன் வெற்றியடைந்து விடுவார் என்று தோன்றுகிறது.).

IMAGE_ALT

தன் அண்ணனின் வாழ்க்கையில் இப்படியொரு விநோதமான ஆபத்தா.. என்று காண்டான லொஸ்லியா.. ஒரு கத்தியை எடுத்து அந்த இதயத்தின் மீது குத்தினார். இந்தச் செய்கையை விளையாட்டாக ஆட்சேபித்தாலும் ஷெரீனின் குரலில் ஒரு எரிச்சல் தெரிந்தது.

IMAGE_ALT

பாத்ரூம் ஏரியாவில் இந்த விஷயத்தைப் பற்றி சேரனும் தர்ஷனும் பிறகு லொஸ்லியாவிடம் விசாரித்தார்கள். “அப்படித்தான் செய்வேன்” என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார் லொஸ்லியா. தனக்கென்றால் ரத்தம், மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி தத்துவத்தை இவரும் பின்பற்றுவது முறையல்ல. என்றாலும் இதை லொஸ்லியா சொன்ன விதம் க்யூட்டாக இருந்தது. ‘ஜானி’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் ரஜினியிடம் படபடவென்று பேசி விடுவார் ஸ்ரீதேவி. ரஜினி இதை சிரித்துக் கொண்டே விசாரிக்கும் போது ‘அப்படித்தான் செய்வேன்’ என்று வீம்புக் குழந்தையின் பாணியில் சொல்வார். இதுதான் நினைவிற்கு வந்தது.

இவர்கள் பேசி முடித்ததும் கழிப்பறையின் உள்ளேயிருந்து ஷெரீன் வந்தார். தர்ஷனின் முகத்தில் அசடு வழிந்தது. இதன் பிறகும் இந்தக் கூட்டணி லொஸ்லியாவை வெறுப்பேற்றுவதை விடவில்லை. தர்ஷனும் ஷெரீனும் ஒரே தட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்க, பார்த்துக் கொண்டிருந்த லொஸ்லியாவின் காதில் பயங்கர புகை.

மறுபடியும் ரத்தம், தக்காளி சட்னி. இவரும் கவினும் இதே போல் ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, முன்னர் சாக்ஷியின் காதில் புகை வந்த காட்சி நினைவிருக்கலாம். ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என்று விஜய்ண்ணா சொன்ன தத்துவம்தான் எத்தனை உண்மை!.

**

லக்ஸரி டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்ந்தெடுக்கும் கட்டம் வந்தது. இதற்காக தர்ஷனையும் ரேஷ்மாவையும் தேர்ந்தெடுத்தார்கள். அனைத்து டாஸ்க்கிலும் சிறப்பாக செயல்பட்டவர் என்கிற நோக்கில் சேரனை ஏகமனதாக தேர்ந்தெடுக்கும் போது குறுக்கே கட்டையைப் போட்டார் மதுமிதா. ‘எப்போதுமே பேசாத சித்தப்பூ சரவணன், விவாத டாஸ்க்கில் நன்றாகப் பேசினார். அவரையும் பரிசிலீக்கலாம்’ என்று சொல்ல மக்கள் மனம் மாறினார்கள். வாக்கெடுப்பில் சரவணன் வெற்றி பெற்றார். (பேசினாத்தான் வெற்றி கிடைக்கும் என்கிற நீதியை நிறுவி தனது அணிக்கு இன்னமும் விடாமல் பாயிண்ட் சேர்த்துக் கொண்டிருக்கிறார் மதுமிதா).

தர்ஷன், ரேஷ்மா, சரவணன் ஆகிய மூவரும் அடுத்த வார தலைவருக்கான போட்டிற்கு தகுதி பெற்றிருக்கிறார்கள்.

சிறப்பாக செயல்படாதவர் என்கிற தேர்வில் பலியாடாக மீரா தேர்ந்தெடுக்கப்பட்டார். பாவம், அவரும் சாண்டியும் இணைந்த அணி புள்ளிகளை சேர்த்துக் கொண்டு வந்தது. எனில் இந்தத் தேர்வு அநியாயமானது. தனது பலியை மீராவும் ஏற்றுக் கொண்டார். இதற்காக சண்டை வேறு போட்டு தான் தவறாக ‘போர்ட்ரே’ ஆகி விடுவோம் என்கிற தயக்கம் காரணமாக இருந்திருக்கலாம்.

இன்னொரு நபர் யாரென்று யோசித்துக் கொண்டிருந்த போது ‘கேப்டனான நீயே தவறு செய்ததால்தான் புள்ளிகள் குறைந்தன’ என்று நெற்றிக் கண்ணைத் திறந்தார் சேரன். இதை சாக்ஷியும் ஒப்புக் கொண்டார். எனவே மீராவிற்கும் சாக்ஷிற்கும் சிறைத்தண்டனை கிடைத்தது.

பூனையையும் எலியையும் ஒரே அறையில் அடைத்து வைத்தால் என்ன ஆகும்? அந்தக் கலாட்டாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

சாக்ஷிக்கு கம்பெனி தருவதற்காக சிறைக்கம்பியின் அருகே வந்தார் அபிராமி. இவரும் சாக்ஷியும் கவின் விவகாரத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, ‘ஐய்யோ.. தலைவலிக்குது.. இங்கே சத்தமா இருக்கு” என்று புலம்பத் துவங்கினார் மீரா. (எங்களுக்கும் அதே தலைவலிதான் ‘போர்ட்ரே’ ஆகுது மீரா! கவின் பிரச்சினை பெரும் பிரச்சினை). இதைக் கேட்டு .. “யாருடா இந்தக் கோமாளி நடுவுல’ என்பது மாதிரி அபிராமியும் சாக்ஷியும் சிரித்துத் தீர்த்தார்கள். இதைக் கண்டு மேலும் காண்டான மீரா கழிவறையின் உள்ளே சென்று கதவைத் சாத்திக் கொண்டார். (காந்தி கண்டுபிடித்த சத்தியாகிரகம் எப்படியெல்லாம் பரிமாண வளர்ச்சியடைகிறது?!).

“அது கெடக்குது. .சும்மா சீன் போடுது” என்று எண்ணிய சாக்ஷி தன் உரையாடலை மறுபடியும் தொடர்ந்தார். ‘லொஸ்லியாவிற்கு மக்கள் கிட்ட இருந்து நெறய க்ளாப்ஸ் கிடைக்குது. அதனாலதான் கவின் டிராக் மாறிட்டான்” என்பது சாக்ஷியின் கண்டுபிடிப்பு. எனில் சாண்டிக்கு கூடத்தான் மக்கள் கைத்தட்டுகிறார்கள். அப்ப கவின் சாண்டியையா லவ் பண்ணுவான்? பாதுகாப்பற்ற உணர்ச்சியில் யோசிக்கும் போது எப்படிப்பட்ட அபத்தமான சிந்தனைகள் எல்லாம் வருகின்றன?!

IMAGE_ALT

இதற்கிடையில் பாத்ரூம் உள்ளே மறைந்திருக்கும் மீரா வெளியே வராததால் சேரன் கவலைப்படத் துவங்க.. வேறு வழியில்லாமல் பிக்பாஸிடம் புகார் தந்தார் சாக்ஷி. வடை வாசனையை வைத்து எலியைப் பிடிப்பது போல சாமர்த்தியமாக மீராவை வெளியே வர வைத்தார் பிக்பாஸ். “மீரா.. மைக் பாட்டரியை மாத்துங்க”.

வெளியே வந்த மீரா “நான் தலைவலிக்குது –ன்னு மட்டும்தான் சொன்னேன். ஆனா ‘எனக்கு யாரோடயும் பேசப்பிடிக்கலை’ன்னு கூட சேர்த்து சொல்றாங்க.. இந்தப் புகாரை எழுதிக்கோங்க” என்று காமிராவைப் பார்த்து புலம்ப ஆரம்பித்து விட்டார். இதற்குப் பதிலடியாக சாக்ஷியும் காமிராவைப் பார்த்து பதில் பேச.. அந்தக் காமிராக்கள் பிறகு சார்ட் சர்க்யூட் ஆகி வெடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தச் சண்டை சற்று ஓய்ந்து சாண்டியை நோக்கி மீரா ப்ளையிங் கிஸ் அனுப்ப அதை மோகனின் பக்கம் தள்ளிக் கொண்டிருந்தார் சாண்டி. “இவ என்ன லூஸா’ என்று சிரித்தது சாக்ஷி குழு.

ஒரே அறையில் எத்தனை நேரம்தான் பேசாமல் இருக்க முடியும்? எனவே பழைய பஞ்சாயத்தை தூசு தட்டி உதறியெடுத்தார் மீரா. “நீதான் மீட்டிங் போடலாம்-னு முதல்ல கூப்பிட்டே. நினைவிருக்கா?” என்று ஆரம்பிக்க .. மறுபடியும் மொதல்ல இருந்தா… என்று நமக்குத்தான் மயக்கம் வந்தது. “இதற்கான வீடியோ ஆதாரத்தைப் பார்த்தா உண்மையெல்லாம் தெரிஞ்சுடும்” என்று ஏதோ கொலைக்குற்றத்திற்கான ஆதாரம் போலவே சீரிஸயாக பேசும் மீராவைப் பார்க்கும் போது முதல் சீஸன் ஜூலியின் ஞாபகம் சிறப்பாக வந்து போகிறது.

“உனக்குத் தமிழ் சரியா தெரியல. வார்த்தைகள் புரிய மாட்டேங்குது” என்று சொல்வதின் மூலம் ‘நான் தமிழ்ப்பொண்ணு’ என்று மதுமிதா உபயோகித்த அதே ஆயுதத்தை இப்போது மீராவும் பயன்படுத்துகிறார் என்பது தெரிகிறது. இப்படியே இந்த காமெடி ராவடி நீண்டு கொண்டிருந்தது. சாக்ஷயும் பதிலுக்கு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.

ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘அழகிய தீயே’ என்றொரு திரைப்படத்தில் எனக்குப் பிடித்தமான காட்சி ஒன்று உண்டு. நாயகன் பிரசன்னாவும் நாயகி நவ்யாவும் சேர்ந்து வாழ வேண்டிய சூழல் இருக்கும். ஏற்கெனவே எலியும் பூனையுமாக இருப்பவர்கள் இந்தச் சூழல் காரணமாக இன்னமும் பலமாக ஒருவரையொருவர் பிறாண்டிக் கொள்வார்கள்.

ஒரு கட்டத்தில் பிரசன்னா வந்து சொல்வார். “எப்படியோ இந்தச் சூழல் வந்துடுச்சு. அவங்க அவங்க கோபம் அப்படியே ஒருபக்கம் இருக்கட்டும். நாம ஏன் அதையெல்லாம் தற்காலிமாக ஒதுக்கி வைச்சுட்டு.. இந்தச் சூழலை இனிமையாக ஆக்கக்கூடாது? இதனால் ரெண்டு பேரோட நேரமும் நல்லாப் போகும் இல்லையா.. நாம பிரெண்ட்ஸ் ஆயிடலாம் ஒகேவா?” என்று கேட்பார். பிறகு அவர்களுக்கு இடையான பகைமை மட்டுப்பட்டு பிரியங்கள் பெருகத் துவங்கும்.

இந்தக் காட்சி மீரா – சாக்ஷிக்கு மட்டுமல்ல, ஒரு சூழலில் சிக்கிக் கொண்டு ஒருவரையொருவர் பலமாக பிறாண்டிக் கொண்டிருக்கும் அனைவருக்குமே பொருந்தும் இல்லையா?

இவர்களின் சண்டையை கேட்டுக் கொண்டிருந்த கவின்.. ‘ஐய்யா.. ஜாலி… இப்போதைக்கு நான் எஸ்கேப்’ என்று துள்ளிக் குதித்தார். நீ தப்பிச்சிட்ட.. நாங்க மாட்டிக்கிட்டோமடா.. கவினு..

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE