Friday 26th of April 2024 08:20:05 AM GMT

LANGUAGE - TAMIL
“மதுமிதா: தீதும் நன்றும் பிறர்தர வாரா” - சுரேஷ் கண்ணன்

“மதுமிதா: தீதும் நன்றும் பிறர்தர வாரா” - சுரேஷ் கண்ணன்


யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை வழக்கமாக வார இறுதியில் இழுத்து இழுத்து சொல்வார்கள். ஆனால் அதற்கு முன்பே அந்தத் தகவல் வெளியே கசிந்து விட்டிருக்கும். ஆனால் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை மதுமிதாவின் வெளியேற்றத் தகவலோடு ஆரம்பித்து அதிர்ச்சி தந்தார்கள்.

அதற்கும் முன்பே, ‘தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் மதுமிதா கோல்மால் செய்து ஜெயித்து விட்டார், எனவே அவர் வெளியேற்றப்படலாம்’ என்று சமூகவலைத்தளங்களில் வீடியோக்களும் யூகங்களும் வெளியாகிக் கொண்டிருந்தன. தற்கொலை செய்ய முயன்றார் என்றும் இன்னொரு பக்கம் செய்திகள் கசிந்து கொண்டிருந்தன.

ஆனால் கடப்பாறையை முழுங்கி விட்டு அதற்கு மேல் இரண்டு ப்ரூட்டி பாட்டில்களை குடித்து ஏப்பம் விடும் வழக்கமுள்ள பிக்பாஸ் டீம், இந்த விஷயத்தையும் பூடகமாகவே கையாண்டது. சரவணனின் வெளியேற்றம் பற்றி எவ்வித உரையாடலும் நிகழாத சூழலில் மதுமிதாவின் வெளியேற்றப் பின்னணிகளும் பூடகமாகவே உள்ளன. அவை தொடர்பான காட்சிகளை துளியாவது காட்டுவார்கள் என்று பார்த்தால் அதையும் காணோம். அவை காட்டப்படாமல் மதுமிதாவிற்கு ஏற்பட்ட மன உளைச்சலை நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடியாது.

‘தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டார்’ என்ற டெட்டால் போட்ட வார்த்தைகளினால் மதுமிதாவின் வெளியேற்றத்தைப் பற்றி சுருக்கமாகச் சொல்லி முடித்துக் கொண்டார்கள்.

மதுமிதாவின் வெளியேற்றத்திற்கு ஏறத்தாழ அவரேதான் காரணம் எனலாம். இரண்டாவது சீஸன் ரித்விகா மாதிரி, ‘தமிழ்ப்பொண்ணு’ என்னும் ஆயுதத்தை துவக்கத்தில் மெல்ல எடுத்தார் மதுமிதா. அது பயங்கரமாக எதிர்க்கப்படவே, உறையில் போட்டு விட்டு ஆண் x பெண் என்கிற பிரிவினைக்கான விதையை அடுத்து விதைத்தார். ‘இன உணர்வு’ என்று அதை ஒரே வார்த்தையில் சரவணன் ஆஃப் செய்து விடவே அப்போதும் அடங்கினார்.

வனிதாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு தன் அமைதியைக் கலைத்து விட்டு அந்த வெற்றிடத்தை நிரப்ப முயன்றார் மதுமிதா. அப்போதெல்லாம் அவருக்கு கவின் – முகின் விவகாரம் அத்தனை பெரிதாக தெரியவில்லை. மீண்டும் உள்ளே வந்த வனிதாவின் பெண்ணிய உபதேசங்களைக் கேட்டவுடன் அம்மணிக்குள் இருந்த ‘போராளி’ உக்கிரமாக விழித்துக் கொள்ளவே அதை வைத்து காகித கத்தி சண்டையை ஆவேசமாக போட்டார். ஆனால் இது காலம் கடந்தது என்பதால் யாரும் பெரிதாக ஆதரவு தரவில்லை. மேலும் சேரன் சரியாக குறிப்பிட்டது போல் இந்த விஷயம் மறுபடி மறுபடி பேசப்படுவதையும் நினைவுப்படுத்தப் படுவதையும் சம்பந்தப்பட்ட பெண்களே விரும்பவில்லை. தூண்டி விட்ட வனிதாவே இவரைக் கிண்டல் செய்யுமளவிற்கு நிலைமை தலைகீழாக ஆனது. எனில் யாருக்காக இந்தப் ‘போராளி’ வேடம்?

அவரின் தற்கொலை முயற்சி (?!) கூட மற்றவர்களின் அனுதாபத்தை பெறுவதற்கான, கவன ஈர்ப்பிற்கான ஒரு பாவனையாக இருக்கலாம். ஆனால் நிகழ்ச்சியின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது என்பதால் வெளியே அனுப்பி விட்டார்கள்.

சாண்டி டீமின் சிண்டிகேட் அங்கு வலுவாக இருப்பது வெளிப்படை. சாண்டியுடன் நிகழ்ந்த மோதலில் மதுமிதாவிற்கு ஏற்பட்ட பயங்கர கோபத்தை விசாரணையின் போது கமல் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. மாறாக அதைக் கிண்டல் செய்யவும் துணிந்தார். ‘மதுமிதாவிற்கு ஏற்பட்ட அநீதி’ என்கிற முந்தைய கட்டுரையில் அதை விரிவாக காணலாம்.

ஆனால் இத்துப் போன கடந்த கால பிரச்சினையில் ஆண்களை மறுபடி மறுபடி வம்பிழுக்கும் போது நண்பர்கள் ஒன்று சேர்வது இயல்பானது. இதற்காக ஒட்டுமொத்த ஆண் போட்டியாளர்களையும் மதுமிதா அவமதிப்பது முறையானதல்ல.

எளிதில் உணர்ச்சிவசப்படுதலும், சுயபுத்தி பெரிதும் இல்லாமல் சொல்பேச்சில் எதிர்வினையாற்றியதும் மதுமிதாவின் வெளியேற்றத்திற்கு காரணம். அவரின் மனநலனுக்கு இந்த வெளியேற்றம் நல்லதே.

IMAGE_ALT

‘சேரன் – கஸ்தூரி’ ஆகியோரின் முகங்களைத் தவிர வேறு எவரையும் நான் பார்க்கவில்லை என்று மேடையில் மதுமிதா சொன்னது சிறுபிள்ளைத்தனம். அப்படி அவர் சொல்லுமளவிற்கு உள்ளே அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம். ஆனால் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான் இந்த விளையாட்டின் அடிப்படையே. தற்காலிக கோபத்தில் தான் பேசுவது நிரந்தரமாக பதிவாகுமே என்கிற யோசனை கூட மதுமிதாவிடம் இல்லை. அந்தளவிற்கு உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டிருக்கிறார்.

**

அட்டகாசமான உடையுடன் வந்தார் கமல். ஆனால் குரல்தான் கம்மியிருந்தது. வெளியே வந்த மதுமிதாவிடம் ‘வெற்றி வாய்ப்பின் நெருக்கத்தில் இருந்த போட்டியாளர்களில் நீங்களும் ஒருவர். இந்த வாரத்தின் தலைவர் வேறு. அனைத்தும் கூடி வந்த பிறகு அதை எட்டி உதைச்சிட்டீங்களே” என்பது போல் வருத்தப்பட்டார் கமல்.

“என் துணிச்சல் சோதிக்கப்பட்டது. இழிவாகவும் கீழ்த்தரமாகவும் பேசினார்கள். நீ இருந்தா நாங்க போயிடுவோம்’னு சொன்னாங்க’ என்றெல்லாம் விளக்கம் அளித்த மதுமிதா, கமல் சொன்னதின் உட்பொருளை காதில் வாங்கிக் கொள்ளவே தயாராக இல்லை. “என்னைக் கிள்ளிட்டான் சார்” என்கிற ஸ்கூல் குழந்தையின் குரலிலேயே பேசிக் கொண்டிருந்தார். பிக்பாஸ் வெற்றி என்கிற பெரிய வாய்ப்பை இழந்தோம் என்பது அவரின் பிரக்ஞையில் பதியவில்லை.

‘பிக்பாஸ் வரலாற்றின் தவறான முன்னுதாரணம் ஆகி விட்டீர்களே. இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்துக் கொண்டிருப்பார். நான் உங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை. அக்கறையினால்தான் சொல்கிறேன். உங்க குடும்பம் முக்கியமில்லையா,?” என்றெல்லாம் கமல் அறிவுரை சொன்ன போது ‘போராளிங்க வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்” என்பது போல் மதுமிதா சொன்னது கோபம் வரவழைக்கும் காமெடி. “உங்கள் தியாகம் அஹிம்சையின் வழி இருந்திருக்கலாம்” என்றார் கமல்.

அகம் டிவி வழியாக இருவரும் உள்ளே வந்தனர். அதென்னமோ தெரியிவில்லை. பிக்பாஸை விட்டு வெளியே வரும் போட்டியாளர்கள், அந்தச் சமயத்தில் முகத் தெளிர்ச்சியாகவும் மலர்ச்சியாகவும் தோன்றுகிறார்கள். மதுமிதா வசீகரமான ஒப்பனையுடன் இருந்தார். (அந்த வீட்டோட அமைப்பு அப்படி போல!)

IMAGE_ALT

“இரண்டு நபர்களைத் தவிர எவரையும் பார்க்க விரும்பவில்லை” என்று அதிரடியாக தெரிவித்த மதுமிதா “உங்க பேராட்டம் வெல்லணும் சார்” என்று சேரனிடம் சொன்னது என்னவென்று புரியவில்லை. (ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு).

மீராவின் வெளியேற்றத்தின் போது கூட அவர் சிலரிடம் விடைபெறவில்லை. ஆனால் மேடையில் அனைவரிடமும் பேசினார். இதை மதுமிதாவும் பின்பற்றியிருக்கலாம் என்று தோன்றிற்று.

(மதுமிதா வெளியேற்றத்திற்கு காரணமாக ஒரு சம்பவம் பரவலாக சொல்லப்படுகிறது

‘நண்பர்களிடம் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ளலாம்’ என்கிற அப்ளிகேஷன் டாஸ்க் நடந்தது நினைவிருக்கலாம். அதில், “வருண பகவானே!. நீங்கள் கர்நாடகக்காரா என்ன.. தமிழ்நாட்டிற்கு மழை அருளக்கூடாதா?” என்று மதுமிதா ஒரு ‘பஞ்ச்’ டயலாக் பேசியதாகவும், ஷெரீனின் பின்னணி கர்நாடகா என்பதால் பிறகு அது சார்ந்து ஏற்பட்ட உரசல் பெரிதாகியதாகவும் சாண்டி டீமின் கிண்டல்கள் அதிகமாக போனதாகவும் ஒரு தகவல் உலவுகிறது. இது எந்த அளவிற்கு உண்மையென்று தெரியவில்லை. ‘தமிழ்ப் பொண்ணு.. தமிழ் கலாசாரம் என்று துவக்கத்தில் மதுமிதா சொன்னதை ஷெரீன் பயங்கரமாக எதிர்த்ததை நினைவுகூரலாம்).

ஆக.. நீர்ப்பிரச்சினையைத்தான் ‘போராட்டம் வெல்ல வேண்டும்’ என்று மதுமிதா குறிப்பிட்டதாக யூகிக்கலாம். ஆனால் இது பேசப்பட வேண்டிய இடம் ‘கேம் ஷோவா?’ என்ற கேள்வி எழுகிறது. “மதுமிதா எடுத்த முடிவு தவறானது’ என்று சேரன் திட்டவட்டமாக மறுத்தார். ‘தவறான முன்னுதாரணம்’ என்று கமல் சொன்ன வார்த்தையையே சேரனும் குறிப்பிட்டது மிகச்சரியானது.

கஸ்தூரி மற்றும் சேரன் ஆகியோர் மட்டுமே இறுதிப்போட்டியில் வெல்லத் தகுதியானவர்கள் என்று மதுமிதா சொன்னதும் அப்போதைய கோபத்தின் அடிப்படையிலேயே. இத்தனை நாள் பழகியவர்கள் என்கிற பெயரில் மற்றவர்களிடம் சற்றாவது அன்பைக் காட்டி சிறப்பாக விடைபெற்றிருக்கலாம்.

மதுமிதாதான் இப்படி இருக்கிறார் என்றால் இதர போட்டியாளர்களும் அதே போன்ற சிறுபிள்ளைத்தனத்துடனதான் இருந்தார்கள். “ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கமல் கேட்ட போது ‘உங்களைப் பார்த்தது சந்தோஷம் சார்” என்று கமலிடம் வனிதா கூறியது அப்பட்டமான சிறுபிள்ளைத்தனம்.

IMAGE_ALT

‘உங்களுக்கு நல்ல வாய்ப்பு தந்தேன். வேஸ்ட் பண்ணிட்டீங்க’ என்று ஒரு குண்டூசியை செருகினார் கமல். போலவே அமைதியாக நின்று விட்ட இதர போட்டியாளர்களையும் மென்மையாக கண்டித்தார். (நல்லாவே கண்டிச்சிருக்கலாம்!) சீஸன் ஒன்றில் பரணி வெளியேறிய போது ஓவியாவைத் தவிர வேறு எவரும் விடை சொல்லாத காட்சி நினைவில் வந்து போனது.

விருந்தினராக சில நாட்களுக்குத்தான் வனிதா இருப்பார் என்கிற மகிழ்ச்சியும் கலைந்து போனது. அவர் போட்டியாளராக நீடிப்பார் போல. பிக்பாஸின் கோக்குமாக்கான, தங்களுக்கு செளகரியமாக வைத்திருக்கும் விதிகளில் தாராளமாக தீயை வைக்கலாம். மக்களால் நிராகரிக்கப்பட்டவரை மீண்டும் போட்டியில் சேர்த்தால் அவர்களின் வாக்குகளுக்கு என்ன மதிப்பு?

**

தாங்கள் பேசுவது தங்களுக்கே கேட்காத வகையில் சந்தைக்கடை மாதிரி போட்டியாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று கமல் குறிப்பிடுவது சரி. (ஒவ்வொரு வசனத்தையும் தனித்தனியா கவனிச்சு எழுதறதுக்குள்ளே உயிர் போயி வருது.. ஆண்டவரே!)

நாள் 55 மற்றும் 56-ன் நிகழ்வுகளை சுருக்கமாக காட்டினார்கள். ரோபோ மாதிரி உணர்ச்சிகளே இல்லாமல் நடமாடிக் கொண்டிருந்த, ஆனால் சமீபத்தில் ரெட்சிப் வைக்கப்பட்டது போல் உக்கிரமாக விழித்துக் கொண்டிருக்கும் லொஸ்லியாவை கிண்டலடிப்பது போல் ‘ரோபோ’ பாட்டைப் போட்டு விட்டார் பிக்பாஸ்.

சாக்லெட்டுக்காக அடித்துக் கொண்ட போட்டியொன்றில் அத்தனை சுவாரசியமில்லை. ஆனால் மதுமிதா என்றொரு ஜீவன் அங்கு இருந்தாரே என்கிற எவ்வித அடையாளத்தையும் போட்டியாளர்கள் வெளிப்படுத்தவில்லை. வழக்கம் போல் உற்சாகமாக இருந்தார்கள். ‘சரவணன் வெளியேற்றப்பட்ட போது ஒப்பாரி வைத்த வீடு இதுதானா’ என்று ஆச்சரியமாக இருந்தது. (அல்லது எடிட்டிங்கில் ஏதாவது போயிற்றோ. என்னமோ).

ஷெரீனும் அபிராமியும் ‘குசுகுசு’வென்று பேசிக் கொண்டதில் வருங்கால பஞ்சாயத்துக்களுக்கான விதைகள் இருக்கலாம் போல. தர்ஷனின் பக்கம் உண்மையாகவே சாய்ந்து கொண்டிருக்கிறார் ஷெரீன்.

56-ம் நாளின் காலையில் ‘கொலம்பஸ் விட்டாச்சு லீவு’ பாடல் ஒலித்தது. கஸ்தூரி நொண்டி நடந்து கொண்டிருந்தார். (அடிச்ச கைப்புள்ளைக்கே இவ்ள காயம்னா..)

மறுபடியும் கமல் வந்தார். வழக்கம் போல் நின்று கொண்டே விசாரணை செய்கிறவர், இன்று ‘பார்’ நாற்காலியில் அமர்ந்திருந்தார். “வனிதா.. ஒரு பாசமிகு அக்காவா இருப்பீங்க –ன்னு உங்களை உள்ளே அனுப்பிச்சா.. சொர்ணக்காகாவா… மாறி மதுவை வெளியே அனுப்பிச்சிட்டிங்களே.. டிபன்பாக்ஸ்ல பிரியாணிக்கு சைட்டிஷ்ஷா.. குழம்பு வைக்கலாம். நீங்க ரத்தக்குழம்பே வெச்சுட்டீங்களே.. கதவைத் திறந்து வைக்கச் சொல்றேன்-ன்னு சொல்றீங்க.. இங்க நான் கமலா.. நீங்க கமலா..” என்று நக்கல் கலந்த குரலில் கேட்டார் கமல்.

“கேட்டேன் –ன்னு சொல்லலை சார். கேட்டா நல்லா இருக்குமே-ன்னு சொன்னேன் சார்’ என்று கமல் பாணியிலேயே எதையோ சொல்லி சமாளித்தார் வனிதா. “இங்க எல்லோரும் சமம்தான். தன்னை உயர்ந்தவராக யாரும் நினைத்துக் கொள்ளாதீர்கள். ஏதோ நான் திட்டமிட்டு வனிதாவை உள்ளே அனுப்பியதாக பொருள் வரக்கூடாது” என்றார் கமல்.

“பிக்பாஸ் வீட்டிற்கு வனிதா வரமா, பாரமா?” என்று பட்டிமன்றத் தலைப்பு மாதிரி கமல் கேட்டதற்கு “ரெண்டும்தான்.. சார். நல்லா பத்த வெக்கறாங்க.. அதனாலதான் நிகழ்ச்சி சூடு பிடிச்சது” என்ற சாண்டியின் கையிலும் டிரிப்ஸ் ஏத்தின அடையாளம் இருந்தது. “அவங்க பத்த வெச்சாலும் இவங்க ஓவரா பத்திக்கறாங்க” என்று சரியான காரணத்தைச் சொன்னார் லியா. (இந்தப் பொண்ணு சரியாத்தான் பேசுது. ஆனா சொல்ற விதம்தான் லூஸூ மாதிரியே தெரியுது).

“ஆண்கள் அடிமைப்படுத்தறாங்க –ன்ற விஷயம் எங்கே ஆரம்பிச்சது?” என்று கேட்டார் கமல். “வரலாற்றைப் புரட்டிப் பார்த்தீங்கன்னா..இந்த விஷயம் பூமி சுற்றத் துவங்கிய போதே ஆரம்பித்து விட்டது சார். இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்ட விஷயம்’ என்று கஸ்தூரியை விட்டிருந்தால் இப்படியெல்லாம் வில்லுப்பாட்டு பாடியிருப்பார்.

“முகின் முன்னேற்றத்திற்கு அபிராமி தடையாக இருக்கக்கூடாது –ன்னு நீங்க சொன்னது எனக்குப் பிடிச்சது சார். பெண்கள் இங்க வீக்கா இருக்காங்க.. அதனாலதான் என் பாணில இங்கே பத்த வெச்சேன்” என்றார் வனிதா.

“ஆமாம்.. சார். என்னையும் ஷெரீனையும் பற்றி எதையோ சொல்லி பற்ற வெச்சாங்க. அது கிடக்குது லூஸூ –ன்னு நான் ஷெரீன் கூட கடலை போட கெளம்பிட்டேன்” என்றார் தர்ஷன்.

“ஆமாம்.. சார். வெளியில நிறைய மொக்கை வீடியோக்களைப் பார்த்துட்டு ‘அது அப்படி. இது இப்படி’ன்னு இங்க வந்து சீன் போடறாங்க.. அந்தக் கமெண்ட்டுக்கள் எல்லாம் எங்கள் இயல்பைப் பாதிக்கும். வெளில வந்து நாங்களே பார்த்துக்கறோம்”ன்னு சொல்லிட்டோம்” என்று லியா சொன்னது மிகச்சரி. (ஏண்டா.. அந்தக் கார்டை எடுத்துப் போடுறே.. இதை எடுடா.. வென்று” –என்று சூது விளையாடத் தெரியாத வடிவேலு தப்புத் தப்பாக சொல்லிக் கொடுத்து ஆட்டத்தைக் கலைக்கும் காமெடி காட்சி மாதிரி, இந்த விளையாட்டில் தோற்று வெளியே போன வனிதா பலருக்கும் உபதேசிப்பது இம்சையான விஷயம்).

“யார் முன்னேற்றத்திற்கு யார் தடையாக இருப்பது..? சரியா சொல்லித் தொலைங்க” என்ற கமல் பிறகு அபிராமியை மட்டும் பிரத்யேகமாக விசாரித்தார். இனியும் இந்த விஷயம் சர்ச்சையாக மாறினால் பார்வையாளர்களுக்கே கொலைவெறி வந்து விடும். அந்தளவிற்கு போட்டு ராவி விட்டார்கள். “யாரும் இங்க குழந்தை இல்ல” என்று திடீரென்று பெரிய மனுஷியாகி அபிராமி பேசியதுதான் ஆச்சரியம்.

“அபிராமியிடம் பிடித்த விஷயம் அந்த ராப் பாடலாம்.. அதை விட்டுட்டு ஏன் அழுமூஞ்சி அபிராமியா இருக்கணும்?” என்று கேட்டார் கமல். (அந்தப் பாடலும் ரொம்பக் கொடுமையாத்தான் இருந்தது.. ஆண்டவரே!)

“இந்தப் பசங்க திருந்தித் தொலையணுமேன்னு நான் சில விஷயங்களைச் செய்தேன். ஆனா.. அதை ‘கொளுத்திஃபையிங்’ன்னு பேரு வெச்சு.. என்னை அவதூறு பண்றாங்க சார்” என்று வனிதா ஆரம்பிக்க.. பார்வையாளர்களிடமிருந்து கேலியான கைத்தட்டல்கள் கிடைத்தன. “யார்ரா..அவன் கூட்டத்துல கைத்தட்றவன். தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க” என்று வனிதா மிரட்டலாக எச்சரிக்க.. “அதானே.. யார்ரா அது கைத்தட்டறது?” என்று வடிவேலு பேருந்தில் இழுந்து விழுந்ததை ஆதரிக்கும் ஆசாமி மாதிரியே கமலும் பாவனையாக கேட்டார்.

IMAGE_ALT

“முடிஞ்சுப் போன விஷயத்தையே இங்கு மறுபடி பேசறாங்களா?” என்று கமல் கேட்க ‘ஆமாம்.. சார் .. அதையேன் கேட்கறீங்க.. முதல் சீஸன்லாம் நடந்த பிரச்சினைலாம் இங்க கொண்டு வர்றாங்க… சார். வெங்கட்ராமன் முட்டையை எடுத்துத் தின்னுட்டாராம். ஏன் அப்படிச் செஞ்சாரு –ன்னு அரைமணி நேரத்திற்கு சண்டை போட்டாங்க சார்.. முடியல.. ஆஸ்பத்திரில இருந்து இப்பத்தான் டிஸ்சார்ஜ் ஆகி வர்றேன்” என்றார் சாண்டி.

‘பிரிட்டிஷ்ஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியிலிருந்து இப்பத்தான் நாம வெளியே வந்துக்கிட்டு இருக்கோம்” என்று ஆரம்பித்தார் கமல். (இப்போதும் அது போன்ற சூழ்ச்சிகள் மத அரசியலின் வழியாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன). எனவேதான் வனிதாவை மென்மையாக கண்டித்தாராம். (அதுக்கு நீங்க வேலைக்கு ஆக மாட்டீங்க ஆண்டவரே.. வெளக்கெண்ணைய் மாதிரியே பேசிக்கிட்டு…தெலுங்குல –லாம் பாருங்க.. சும்மா காரசாரமா வெச்சு செய்யறாங்க. வனிதாவிற்கெல்லாம் அந்த டிரீட்மெண்ட்தான் சரி).

கமலின் உபதேசத்திற்குப் பிறகு “இனிமே அழமாட்டேன்’ என்று நெகிழ்ந்து கொண்டே சொன்னார் அபிராமி. அதற்காகவே அழுது விடுவாரோ என்று கலவரமாக இருந்தது.

‘மோசமான பங்கேற்பாளர்’ தேர்வுகளின் போதெல்லாம் உத்தரவாதமாக சண்டை வந்து விடுகிறதே?’ என்று விசாரித்தார் கமல். ‘டாஸ்க்கில் சுவாரசியம் குறைவாக பங்கேற்பதற்கும் ஆங்கிலம் பேசும் பொதுவான புகாருக்கும் தொடர்பே இல்லை’ என்று கஸ்தூரி சொன்னது மிகச்சரி. (மதுமிதாவும் அப்போது சொன்னார்). ஆனால் “இந்த விஷயத்தை முதல்லயே மீட்டிங் போட்டு பேசி ஒப்புக் கொண்டோம்” என்றார் கவின். (எனக்குத் தெரியாது என்றார் கஸ்தூரி).

சாண்டி குழுவின் அராஜகத்தையும் மென்மையாக கண்டித்தார் கமல். ‘நீங்க ஒட்டு மொத்த வீட்டிற்கும் தலைவர் –ன்றதை மறந்துட்டீங்க” என்றார். (தலைவர்னாலே அப்படித்தான் இருப்பாங்க) ஹோட்டல் மேனேஜராகவே மாறியிருந்த சேரனைப் பாராட்டினார். (டைரக்டர் வேலை போனாலும் பரவாயில்லை). இதற்காக நெகிழ்ச்சியுடன் எழுந்து நின்று நன்றி சொன்னார் சேரன்.

‘ஒருபக்கம் ரணகளமா சண்டை நடந்திட்டு இருக்கும் போது இன்னொரு பக்கம் வெண்டைக்காய் மாதிரி வெங்காயம் வெட்டிட்டு இருந்தீங்களே..” என்று கிண்டலடிக்க ‘தெரியும் சார்.. இப்படி விமர்சனம் வரும்’னு’ என்று சிரித்தார் சேரன். சாண்டியின் பாடலுக்கு புண்பட்டு ‘டைரக்டர்’ என்ற ஹோதாவில் விசாரித்தற்காக மன்னிப்பும் கேட்டார் சேரன்.

“பசங்க கற்பூரம் மாதிரி இருக்காங்க சார். உரசின உடனே பத்திக்கறாங்க” என்று சர்காஸ்டிக்காக சொன்னார் கஸ்தூரி. “கற்பூரங்களா.. இதோ வந்துடறேன். ஒரு விஷயம். இந்த வாரமும் எவிக்ஷன் இருக்கு. மதுமிதா போயிட்டதால கிடையாதுன்னு ஜாலியா இருக்காதீங்க’ என்று வெடிகுண்டை ஜாலியாக வீசி விட்டுச் சென்றார் கமல்.

‘டிவிட்டர் பாஷைல உங்க பிரச்சினையைச் சொல்லுங்க” என்று கஸ்தூரியை விசாரித்தார் மறுபடியும் வந்த கமல். “டிவிட்டரில் நான் ஒரு சமூகப் புரட்சியையே செய்து கொண்டிருக்கிறேன். இங்கும் அதைச் செய்கிறேன். ஆனால் கேட்கிறவர்களிடம் மட்டும்தான் உபதேசம் சொல்ல முடியும். இங்க மனித உரிமைப் போராளிகள் நிறைய பேர் இருக்காங்க” என்று வியாக்கியானமாகச் சொன்னார் கஸ்தூரி. ‘யார் அந்த மனித குல மாணிக்கம்?” என்று கமல் கேட்டதற்கு ‘நீங்க பார்க்கலையா.. பார்த்துட்டே இருப்பேன் –னு சொல்றீங்களே” என்று முந்திரிக்கொட்டைத்தனமாக கஸ்தூரி கேட்டதற்கு “அதெல்லாம் எனக்குத் தெரியும். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு வென்று” என்ற மாதிரி திருப்பியடித்தார் கமல்.

IMAGE_ALT

கவினிடம் விசாரிக்கும் போது “ஏதோ ஷோவை ஹோஸ்ட் பண்ற மாதிரியே கடுப்பேத்தறாங்க சார். விஷயத்தை முழுசா தெரிஞ்சுக்காம.. புரிஞ்சுக்காம.. நடுவுல புகுந்து குட்டையைக் குழப்பறாங்க.” என்று கஸ்தூரியைப் பற்றி சொன்னார் கவின். “கஸ்தூரி வந்தவுடனேயே நீங்க கடுப்பாயிட்டீங்க. ஏன் அப்படி.. அவங்க பேசின வீடியோ ஏதாவது முன்னமே பார்த்துட்டீங்களா,?” என்று சரியாக விஷயத்தைக் கண்டுபிடித்து விட்டார் கமல். (குசும்புய்யா!)

“இந்த வீட்டோட வாஸ்து சரியில்ல.. சார். முதல் நாளே.. காதலும் கர்ப்பமும் ஒண்ணா வருது” என்றார் கஸ்தூரி. (கவின் ரெண்டாவது நாளே காண்டானதுல தப்பேயில்ல).

“தம்பி.. கமல் இங்க என்னைப் பாரு.. இதுல என் கருத்து என்னன்னா..” என்பது போல் வனிதா எதையோ சீரியஸாக சொல்ல ஆரம்பிக்க, பார்வையாளர்களிடமிருந்து கேலியான குரல்கள் கேட்டன. “அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன்’ மோமெண்ட் அது. ‘சொல்ல வந்ததையே மறந்துட்டேன்’ என்று வனிதாவே குழம்பும் அளவிற்கு ஆக்கினார்கள் புத்திசாலித்தனமான பார்வையாளர்கள்.

“இந்த வீட்டில் அனுதாபமே கிடையாது” என்று ஆரம்பித்த கஸ்தூரியை ‘அவர் நீச்சல் குளத்தில் தடுக்கி விழுந்த போது ஆண்கள்தான் வந்து தூக்கினார்கள்” என்று சொல்லி ஆண் குலத்தை காப்பாற்றினார் வனிதா. ஷெரீனும் “என்னது.. அது லூஸூ மாதிரியே பேசுது” என்றார்.

இந்தக் களேபரம் அடங்கிய பிறகு எவிக்ஷன் பற்றிய பேச்சை ஆரம்பித்து விடைபெற்றார் கமல்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE