Friday 26th of April 2024 08:59:49 PM GMT

LANGUAGE - TAMIL
‘ஆன்ட்டி ஹீரோ கவினின் மோசமான டிராமா’ - சுரேஷ் கண்ணன்

‘ஆன்ட்டி ஹீரோ கவினின் மோசமான டிராமா’ - சுரேஷ் கண்ணன்


போட்டியாளர்கள் தங்க முட்டையை அடைகாத்துக் கொண்டிருந்த காட்சியோடு நேற்றைய எபிஸோட் முடிந்தது அல்லவா? அது இன்றும் தொடர்ந்தது. அடக்க முடியாமல் பாத்ரூம் செல்ல முயன்ற முகின், மற்றவர்கள் எச்சரிக்க பயந்து போய் திரும்ப வந்து விட்டார். பாவம்.

“பிக்பாஸ்.. உங்களுக்கு பத்து நிமிஷம் டைம் தர்றேன். ஒழுங்கா பிரேக் விடுங்க” என்று எச்சரித்த ஷெரீன் சில நிமிடங்களில் சோபாவில் அப்படியே உறங்கி விட்டார். உடனே மற்றவர்களுக்குள் பரபரப்பு பற்றிக் கொண்டது. ரகசியக் குரலில் பேசிக் கொண்டார்கள். ஷெரீனின் முட்டையை சேரன் எடுத்து ஒளித்து வைத்தார். சில நிமிடங்கள் கழித்து எழுந்து பார்த்த ஷெரீன் புன்னகையுடன் ‘என் முட்டை எங்கே?” என்று மழலைக் குரலில் கேட்டார்.

“நாங்க ஆம்லேட் போட்டு சாப்பிட்டுட்டோம். நீ கிளம்பு காத்து வரட்டும்” என்றார்கள். தான் அவுட் என்பதாக சாண்டியும் உணர்ந்தார். ‘எள்ளுதான் வெயில்ல காயணும், எலிப்புழுக்கை ஏன் காயணும்?” என்பது போல் சொல்லியபடி ஷெரீனை அழைத்துச் சென்றார். எனவே சாண்டியின் முட்டையை முகின் உடைக்க முயன்றார்.

மூடியிருந்த கதவில் இருந்த பூட்டை திறப்பதற்காக சிலர் நெடுநேரமாக முயன்று கொண்டிருந்தார்களாம். கடைசியில் பார்த்தால் கதவு பூட்டப்படாமலேயே இருந்ததாம். அந்தக் கதையாக முட்டையை எப்படி உடைப்பது என்று போட்டியாளர்கள் நெடுநேரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் முகின் அதை எடுத்து சூறைத் தேங்காய் போல் கீழே போட முட்டை உடைந்தது. ‘இவ்வளவுதானா விஷயம்?” என்று விழுந்து விழுந்து சிரித்தார் தர்ஷன். ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஷெரீனின் முட்டையை கவின் போட்டு உடைத்தார்.

ஜெயிக்க வேண்டும் என்பதை விடவும் எழவெடுத்த இந்த கேமை எப்படியாவது முடிக்க வேண்டும் என்கிற ஆவேசமே அவர்களிடம் தென்பட்டது. பாவம், இரவு முழுக்க காத்திருந்த ஷெரீனும் சேரனும் தங்களின் வாய்ப்பை இழந்தனர்.

“வண்டி பத்து நிமிஷம் நிக்கும். சுச்சா.. கக்கா போயிட்டு வர்றவங்களாம் போயிட்டு வந்துடுங்க” என்று பஸ் கண்டக்டர் அறிவிப்பதைப் போல, இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தவுடன் மக்கள் அடித்துப் பிடித்து தூங்குவதற்காக கிளம்பினர்.

**

மதியம் 12 மணிக்கு திருப்பள்ளியெழுச்சிப் பாடல் ஒலித்தது. அன்றைய டாஸ்க்கை மேட்ச் பண்ணுவதற்காக ‘காக்கா முட்டை’ என்று தொடங்கும் பாடலைப் போட்டார் பிக்பாஸ்.

முதுகுவலி காரணமாக சேரன் நொண்டி நொண்டி நடப்பதை ஏதோ அவார்டு படக் காட்சி மாதிரி நிதானமாக காட்டிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது போல. பின்னால் பெல்ட் கட்டப்பட்டிருந்தது. மற்றவர்கள் உதவியுடன் தரையில் படுக்க வைத்தார்கள்.

“ஷெரீன் ஜாலிக்காகத்தான் இதை விளையாடறா.. டிக்கெட்டுக்காக இல்லை” என்று முகின் சொல்ல, “ஏண்டா 85 நாட்கள் கஷ்டப்பட்டுட்டு ஜாலியாவா விளையாடுவாங்க.. எல்லோரும் டிக்கெட்டுக்காகத்தான் விளையாடறாங்க” என்று அதை மறுத்தார் தர்ஷன். “நான் ஷெரீனை டார்க்கெட் பண்றேன். நீங்க ரெண்டு பேரும் அதையே பண்ணுங்க..நீங்க ரெண்டு பேரும்தான் டாப்ல வரணும்” என்று சதியாலாசனை தந்து கொண்டிருந்தார் சாண்டி.

பிறகு அங்கிருந்த சாண்டியிடம் “I Want more power. கொடுங்கண்ணே” என்று கேட்டார் தர்ஷன்.

(நான் தெரியாத்தனமாக இன்றைய எபிஸோடை hotstar unseen-ல் பார்த்து விட்டேன். காதில் மட்டுமல்ல, உடம்பிலுள்ள அத்தனை துவாரத்திலும் ரத்தம் வரும் விதமாக ‘சாண்டிமேன்’ கதையை இழுத்துக் கொண்டே செல்கிறார் சாண்டி. ஏறத்தாழ மூன்று மணி நேரமாவது இருக்கும். தர்ஷன் அதை இன்னமும் டெவலப் செய்ய சூழல் ரணக்கொடூரமாயிற்று. பின்னர் இதன் அடுத்த வெர்ஷனை ஷெரீனிடமும் சொல்லிக் கொண்டிருந்தார் சாண்டி.)

ஒவ்வொரு போட்டியாளரையும் தனித்தனியாக வாக்குமூல அறைக்கு அழைத்த பிக்பாஸ், “ஏறத்தாழ பைனலை நெருங்கிட்டோம். எப்படி உணர்றீங்க.. இந்தப் போட்டி முடிஞ்சா எதை மிஸ் பண்ணுவீங்க..” என்றெல்லாம் சில கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.

“எனக்கு ஜெயிக்கணும்லாம் ஆசையில்லை. ஆனா ஃபைனல் வரைக்கும் வந்தா போதும். மத்தவங்களை காலி பண்றதுக்காக ஏதாவது உத்தியைக் கையாளும் போதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கும். அப்புறம் இது ‘கேம்’தானேன்னு சமாதானம் ஆவேன்” என்றார் சாண்டி.

“இந்த டிக்கெட்டை ஜெயிக்கறது எனக்கு ரொம்ப முக்கியம். என்னைச் சேர்ந்தவங்களுக்கு பெருமை சேர்க்கணும். அதுக்காக ஃபுல்லா பைட் பண்ணுவேன். போட்டி முடிஞ்சப்புறம் இந்த வீட்டை மிஸ் பண்ணுவேன்” என்று வெற்றி மேடை சம்பிரதாயத்தோடு பேசினார் முகின்.

ஷெரீனும் இதே போன்று ஏதோ சொல்லி முடித்தார். பிக்பாஸ் கேட்ட கேள்வியிலிருந்து திசை மாறி ஏதேதோ பதில் சொல்லி.. ‘ஸாரி .. பிக்பாஸ்.. கம் அகெய்ன்” என்று கேட்க, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்று ‘அலைபாயுதே’ மாதவன் மாதிரியான டயலாக் ஒன்றை சொன்னார் பிக்பாஸ்.

(ஒவ்வொரு போட்டியாளரும் பிக்பாஸைப் பற்றி சொல்லும் பகுதியில் ‘நான் ரொம்ப அழகா இருக்கேன்’னு நீங்க சொன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்பது போல் ஷெரீன் முன்பு சொல்லியிருந்ததால் அந்த கோரிக்கையை இப்போது பிக்பாஸ் நிறைவேற்றினார்)

பிக்பாஸின் இந்த டயலாக்கை கேட்டு “ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்” என்கிற மோடிற்கு மாறி சந்தோஷமானார் ஷெரீன். பிக்பாஸ் வீட்டு வாட்ச்மேன் முதல் அங்கிருந்த குருவி, அணில் ஒவ்வொன்றிடமும் ‘பிக்பாஸ்.. என்னை அழகா இருக்கறதா சொல்லிட்டாரு” என்று பீற்றிக் கொண்டிருந்தார்.

இரவு முழுவதும் ஷெரீன் விழித்திருந்ததால் ‘ஷெரீன்.. நீங்க ரொம்ப அழுக்கா இருக்கீங்க’ என்றுதான் பிக்பாஸ் சொல்லியிருப்பார் என்று எனக்குத் தோன்றியது.

(இதற்குப் பிறகு காமிராவைப் பார்த்து நீண்ட நேரம் காதல் உணர்வுடன் ஷெரீன் பேசிக் கொண்டிருந்தார். (hotstar unseen) ஓர் இயந்திரக்குரல் மனிதர்களிடம் எவ்வாறான உணர்ச்சிகளையெல்லாம் உசுப்புகிறது என்பதை நிறைய ஆய்வு செய்யலாம் போலிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனை இயந்திரக்குரல்களை தினமும் கேட்கிறோம், அவற்றின் உத்தரவுகளைப் பின்பற்றுகிறோம் என்பதை யோசித்துப் பார்க்கலாம்).

இறுதிப் போட்டி டிக்கெட்டடின் எட்டாவது டாஸ்க் துவங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொவருக்கும் ஒரு கூடையில் ஐம்பது வெள்ளைப் பந்துகள் தரப்படும். அவர்கள் பொதுவில் இருக்கும் மஞ்சள் பந்துகளையும் சிவப்பு பந்துகளையும் பயன்படுத்தலாம். மஞ்சள் பந்துகளுக்கு 2 மதிப்பெண்கள். மற்றவர்களின் மதிப்பெண்களைக் குறைக்க சிவப்பு பந்துகளை சக போட்டியாளர்களின் கூடையில் போட வேண்டும்.

“பிக்பாஸ்.. நான் என்ன பண்ணுவேன்?” என்று குடையை ஊன்றிக் கொண்டே பரிதாபமாக நடந்து சென்றார் சேரன். உக்கிரமான அந்தப் போட்டி துவங்கியது. பஸ்ஸர் அடித்ததும் மஞ்சள் பந்துகளை நோக்கி சிலர் பாய்ந்து செல்ல, சிலர் சிவப்பு பந்துகளை அள்ளி மற்றவர்களின் கூடையில் போட்டு நெகட்டிவ் வைப்ரேஷனை பரப்பினார்கள்.

இவர்களின் மூர்க்கத்திற்கு முன்னால் சேரனால் போட்டியிட முடியவில்லை. தான் வைத்திருக்கும பந்துகளை மட்டும் வைத்துக் கொண்டு அமைதியாக பின்வாங்கி விட்டார். எவராவது அவரை நெருங்கினால் ‘டாய்…கிட்ட வராத. கடிச்சு வெச்சுடுவேன்” என்கிற மாதிரி மிரட்டிக் கொண்டிருந்தார்.

பொதுவாக ஷெரீன்தான் சாண்டி டீமின் ஊறுகாயாக இருந்தார். முன்பே பேசி வைத்துக் கொண்டார்களோ.. என்னமோ. பாவம். கவினிடம் மாட்டி முழித்து மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். அனைவரும் தங்களின் கூடையை கைகளில் எடுத்துக் கொண்டு ஓட ‘அவ்வாறு செய்யக்கூடாது” என்று வலியுறுத்தினார் பிக்பாஸ். இவ்வாறு சொல்லப்பட்டும் கூடையை எடுத்துக் கொள்வதை போட்டியாளர்கள் நிறுத்தவில்லை.

தர்ஷனும் முகினும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்ள, கூடையின் மீதே படுத்து விட்டார் கவின். உணவிற்காக மிருகங்கள் அடித்துக் கொள்ளும் போட்டி மாதிரியே இது இருந்தது. கைகளில் ரத்தக்கீறல்களுடன் மூச்சு வாங்க நின்றார்கள். தன்னுடைய டீஷர்ட்டைக் கிழித்து பாண்டேஜ் தயாரித்து தர்ஷனுக்கு அளித்தார் கைவினைக்கலைஞரான முகின். (what a man!).

ஒரு நிலையில் சாண்டியும் லியாவும் முட்டிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. அப்படியே தடுமாறி பின்னால் விழுந்தார் லியா.

IMAGE_ALT

“இவனை அடிச்சா.. அவனுக்கு வலிக்கும்’ மோடில் இருக்கும் கவின், நண்பன் என்றும் பாராமல்.. “ஏண்ணே.. பார்த்து வரமாட்டியா.. அப்படியே பிடிச்சு தள்றே?” என்று சாண்டியை இதற்காக கோபித்துக் கொண்டார். “ஏண்டா ஓவரா பண்றே?” என்ற சாண்டி பிறகு காண்டாகி எரிச்சலுடன் போட்டியிலிருந்து விலக முயன்றார். மற்றவர்கள் அவரைச் சமாதானப்படுத்தினார்கள்.

“இது கேம்தான். ஒண்ணும் பிரச்சினையில்லை” என்று லியாவே இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்ளும் போது கவின் அடங்குவதாக இல்லை. நாயகியை காப்பாற்றத் துடிக்கும் ஹீரோ போலவே அநாவசியமாக சீன் போட்டுக் கொண்டிருந்தார்.

ஏற்கெனவே லியா உடல் நலம் குன்றியிருந்த செய்தி சேரனின் விசாரிப்பு மூலம் தெரிய வந்தது. உள்ளுக்குள் பலமாக அடிபட்டதோ, என்னமோ உறைந்த நிலையில் முகத்தில் வேதனை தெரிய நின்று கொண்டிருந்தார் லியா. இதை கவினும் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அவளுக்கு அடிபட்டிருக்கு. என்னன்னு விசாரி” என்று ஜாலியாக உசுப்பேற்றினார் ஷெரீன். அவர் நகரும் சமயத்தில் பந்துகளை எடுத்து விடும் ஜாலியான நோக்கத்துடன்தான் அவர் சொன்னார் என்பதை யூகிக்க முடிந்தது. ஆனால் அதை சீரியஸாகவே எடுத்துக் கொண்ட கவின், லியாவின் அருகில் சென்று “அப்பல்லோ போகலாமா,. ஆம்புலன்ஸ் கூப்பிடட்டா?” என்பது போல் சீரியஸான முகபாவத்துடன் விசாரிக்க “நீ புடுங்கற ஆணி தேவையில்லாதது. எனக்கு அடிபட்டிருக்குதான்.. என்ன பண்றது.. கேம் முடியட்டும்.. நீ போய் விளையாடு” என்று சொன்னாலும் கவின் கேட்பதாயில்லை.

IMAGE_ALT

“அவன் நெனக்கும் போது கேமை நாம நிறுத்தணுமா..” என்று எரிச்சல்பட்ட ஷெரீன், கவினின் கூடையில் இருந்த பந்துகளை தனது கூடையில் கொட்டிக் கொள்ள மெளனமாக வந்த கவின், தியாகத்தின் மறுஉருவம் போல கீழே கிடந்த பந்துகளையும் எடுத்து ஷெரீனுக்கு தானம் அளித்தார்.

இதனால் ஷெரீனுக்கும் கவினுக்கும் இடையில் வாக்குவாதம் துவங்கியது. “கேமை ஹோல்ட் பண்ணுனும்னு நான் சொல்லவேயில்லையே.. எனக்கும் அடிபட்டிருக்கு. அதுவும் இல்லாம நான் கடைசி பாயிண்ட்ல இருக்கேன். விளையாடியும் பிரயோசனமில்லை’ என்பது போல் கவின் விளக்கம் அளித்தாலும் அவர் செய்தது முறையற்ற காரியம்.

கவின் –லியா காதல் விவகாரத்தில் தொடர்ந்து பிரச்சினை எழுந்தாலும் டாஸ்க் சமயத்தில் அவர்கள் ஒழுங்காகத்தானே இருக்கிறார்கள் என்று அதை நியாயப்படுத்திக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது டாஸ்க் நேரத்திலும் அது இடையூறு செய்கிறது என்றால் பிரச்சினைதான். கவின் செய்யும் இந்த ஹீரோத்தனத்தால் லியாவும் பாதிக்கப்படுவார் என்பதை கவின் உணர்கிறாரா என்று தெரியவில்லை.

தன்னையும் தர்ஷனையும் பற்றிய ‘காதல்’ உரையாடல்கள் கிளம்பும் போது எரிச்சல் அடைந்த ஷெரீனுக்கு, கவின் –லியா காதல் எரிச்சல் அடைய வைப்பது ஒரு வகையான முரண். அதுவும் அவரின் புகைச்சலுக்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும்.

மட்டுமல்லாமல் டாஸ்க் சமயத்திலும் இது வெளிப்படுவதுதான் அவரைக் கோபப்படுத்தியிருக்க வேண்டும். ஓர் ஆட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் மட்டும் வேண்டுமென்றே சோர்வாக இருந்தால் அது ஆட்டத்தைப் பாதிக்கும். இந்த நோக்கில் ஷெரீனின் ஆட்சேபம் நியாயமானது.

ஆனால் ஆட்டத்தை மட்டுமே கறாராக பார்க்கும் உத்தேசம் இருந்தால் அவர் கவினின் பந்துகளையும் எடுத்துக் கொண்டு அமைதியாக இருந்திருப்பார். அவ்வாறு இருந்திருந்தாலும் தவறில்லைதான். ஆனால் ஷெரீனின் குணாதிசயத்தின் படி அவர் அவ்வாறு இருக்க முடியாது. குற்றவுணர்ச்சி அவரைக் கிளறும். எனவே இந்த வாக்குவாதத்தின் இடையில் தன் கூடையை எரிச்சலுடன் உதைத்து விட்டு போட்டியிலிருந்து விலகி வீட்டுக்குள் சென்றார்.

IMAGE_ALT

கவின் காட்டிய அநாவசியமான ஹீரோத்தனத்தால் போட்டி நிற்க, கவின் தன் தரப்பு நியாயங்களை சகலவிதமான தர்க்கபூர்வத்துடன் விளக்கிக் கொண்டிருந்தார். இவ்வளவு பேசும் அவருக்கு சில விஷயங்களின் அடிப்படை நியாயங்கள் புரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை நடந்தும் தன் லவ் எபிஸொடை தொடர்ந்தால் அது வீட்டின் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி லியாவைப் பாதிக்கும் என்பதை அவர் உணரவில்லை. ஓர் உண்மையான காதலன் இதைச் செய்யக்கூடாது.

கவினின் இந்த அபத்தமான குறுக்கீட்டை லியாவும் பலமாக ஆட்சேபம் செய்தார். அப்போதும் கவினுக்குப் புரியவில்லை. சேரனும் கவினின் செயலை சரியான காரணங்களுடன் ஆட்சேபித்தார்.

போட்டியை நிறுத்தி விட்டு தர்ஷனும் ஷெரீனை சமாதானப்படுத்த வீட்டின் உள்ளே சென்றார். கவின்-லியா டிராமா குறித்து தர்ஷனுக்கும் ஆட்சேபங்கள் இருக்கின்றன. ‘உனக்கும் எனக்கும்தான் ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கு. நான் அடிபட்டா நீ கத்தறியா என்ன?” என்று ஷெரீன் கேட்டதில் ‘உனக்கு இவ்வளவு கோபம் வருமா.. இப்ப பிக்பாஸ் சொல்லட்டுமே.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு” என்று சொல்லி ஷெரீனை சிரிக்க வைத்தார் தர்ஷன்.

IMAGE_ALT

பிறகு வெளியே வந்த ஷெரீன் “கேம் விளையாடத்தான் நாம் வந்திருக்கோம். இந்த மாதிரி டிராமாக்கெல்லாம் எனக்கு டைம் இல்லை” என்று எரிச்சல்பட ‘நீ செஞ்சதும் தப்பு. கூடையை உதைச்சிட்டு உள்ளே போயிருக்கக்கூடாது” என்று அதையும் சமநிலையுடன் கண்டித்தார் சேரன். அதற்காக பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டார் ஷெரீன்.

‘தான் லியாவுடன் வேண்டுமென்றே மோதவில்லை, அதுவொரு விபத்து’ என்பது போல் பரிதாபமாக கவினிடம் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் சாண்டி. பாவம். செஞ்சோற்றுக் கடன் தீர்க்க.. சேராத இடம் தேடி..

“நீங்க எப்படி வேணா அடிச்சுக்கங்க.. என் கடன் அதை வேடிக்கை பார்ப்பது’ என்கிற மோடில் இருக்கும் பிக்பாஸ் போட்டியின் முடிவுகளை அறிவித்தார். வழக்கம் போல் கவின் கடைசியில் இருக்க, முகின் முதல் இடத்திற்கு வந்தார். (பயபுள்ள தர்ஷனை பீட் பண்ணிடுவான் போலயே!).

**

தங்க முட்டை டாஸ்க்கை மீண்டும் துவக்கினார் பிக்பாஸ். இதன் விதிகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. (இந்தக் கட்டுரையிலேயே நேற்று குறிப்பிடப்பட்டிருந்தது. கின்னஸ் போட்டிகளில் கூட ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிட இடைவெளி அனுமதிக்கப்படுகிறது). அதன் படி ‘தங்க முட்டை’ டாஸ்க்கில் இரண்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன.

ஒன்று, ஒரு மதிப்பெண்ணை விட்டுக் கொடுத்து அரை மணி நேர ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். இரண்டு, போட்டியிலிருந்து விலகிய சாண்டி மற்றும் ஷெரீனை முட்டையை பாதுகாக்கச் சொல்லி வேண்டி, ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் ஒரு மதிப்பெண்ணை விட்டுத்தர வேண்டும்.

போட்டி துவங்கியது. ப்ரூட்டி, ஆரஞ்சுப்பழம், பிஸ்கெட் பாக்கெட், குடிதண்ணீர். கடலை மிட்டாய், எள்ளுருண்டை, பாய், தலையணை என்று ஜபர்தஸ்தாக வந்திருந்தார் தர்ஷன். அம்பாசிடர் காரிலிருந்து பத்து, பதினைந்து நபர்கள் வரிசையாக இறங்குவது போல தன் ஜெர்கினில் இருந்து அனைத்தையும் எடுத்து வெளியே வைத்தார்.

நல்ல மழை பெய்தது. குடையுடன் போட்டியாளர்கள் ஓரமாக அமர்ந்திருந்தார்கள். “லியாவோட அப்பா அம்மா வந்து போன பிறகு கவின் உங்க கிட்ட இயல்பா பேசறாரா?” என்று சாண்டியிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் தர்ஷன். “இல்லை. அவன் அந்த வருத்தத்துலயே இருக்கான் போல. அவன் மனசுல ஏதோ ஓடிட்டே இருக்கு. நானும் அதிகம் கேட்டுக் கொண்டதில்லை’ என்பது போல் பதில் சொன்னார் சாண்டி.

ஒருவேளை கவினின் இந்தக் காதல் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் பலர் இதை நம்ப மாட்டார்கள். ஏனெனில் அண்ணனின் முந்தைய டிராக் ரெக்கார்ட் அப்படி. சரி. அது உண்மையாகவே இருந்து தொலைக்கட்டும். ஆனால் அது சார்ந்த தேவதாஸ் விளையாட்டுக்களையெல்லாம் காட்ட இது நேரமல்ல. இப்போது அவர் முக்கியமானதொரு தருணத்தில் இருக்கிறார். தன்னையும் கெடுத்துக் கொண்டு லியாவின் விளையாட்டையும் கெடுக்கிறார்.

ஷெரீனின் கோபம், சாண்டியின் ஆதங்கம் அனைத்தையும் மறந்து விட்டு இந்த மழையிலும் கவினும் லியாவும் அமர்ந்து சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை நடந்த விஷயத்தைப் பற்றிய உரையாடலாக இருக்கலாம். “அவங்க டயர்ட் ஆகட்டும், ஆளுக்கு ஒரு முட்டையை டார்க்கெட் செய்யலாம்” என்று தர்ஷன் முகினுக்கு ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் நெடுநேரம் அமர்ந்திருந்ததால் சேரனின் முதுகு பிடித்துக் கொண்டது. “நான் போறேண்டா.. என் முட்டையை எவனாவது எடுத்துக்கங்க” என்று தள்ளாடியபடி நடந்து சென்றார். ‘ஒரு பாயிண்ட் விட்டுக் கொடுத்துட்டு ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க” என்று லியா சொன்ன ஆலோசனையை சேரன் கேட்கவில்லை. “எப்படியும் டிக்கெட் இல்லைன்னு ஆகிப் போச்சு. என்னால முடியல” என்று வேதனையுடன் நகர்ந்து சென்றார்.

சேரனின் முட்டையை தர்ஷன் சூறைத் தேங்காய் போல் உடைக்க, “கண்ணாடி வழியா நீங்க பார்த்தீங்களா?” என்று இதிலுள்ள சட்ட விதியை ஆராய்ந்து கொண்டிருந்தார் ஷெரீன். சேரன் செய்த காரியத்தால் கவின் –லியாவின் தளர்ச்சி நீங்கி விட “இவங்க தூங்க மாட்டாய்ங்க போலயே.. காலை வரைக்கும் இந்த டாஸ்க் போகும்” என்று முகின் அங்கலாய்ப்பதோடு இன்றைய எபிஸோட் முடிந்தது.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE