Friday 26th of April 2024 10:15:45 PM GMT

LANGUAGE - TAMIL
முடிவடையாத் துயர் கொரோனா!
முடிவடையாத் துயர் கொரோனா!

முடிவடையாத் துயர் கொரோனா!


கொரோனா வைரசின் வீரியம் குறைவடைவதாகத் தெரியவில்லை. நிமிடத்திற்கு நிமிடம் அதன் தாக்கம் உலக நாடுகளில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. உயிரிழப்புக்களில் வீழ்ச்சி ஏற்படவில்லை. சீனாவில் தொடங்கி, இத்தாலியைப் பிடித்து உலுப்பிக் கொண்டிருக்கின்றது. அதனையடுத்து ஸ்பெயின் நாடும் இந்த நோயினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது. வியாழன் மதியம் வரையில் இத்தாலியில் மாத்திரம் 7 ஆயிரத்து 503 பேரைக் கொன்றுள்ள இந்த வைரஸ், ஸ்பெயினில் 3 ஆயிரத்து 647 பேரின் உயிர்களைக் குடித்துள்ளது. சீனாவில் இதுவரையில் 3 ஆயிரத்து 287 பேர் உயிரிழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டிருக்கின்றது.

இந்த மூன்று நாடுகளில் மட்டுமல்லாமல் ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா என்ற வரிசையில் வேறு பல நாடுகளிலும் இந்த நோய் மிகத் தீவிரமாகப் பரவி மனித உயிர்களைக் குடித்துக் கொண்டிருக்கின்றது.

இருப்பினும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் இந்த நோயில் இருந்து சுகமடைந்து வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் ஒப்பீட்டளவில் உயிரிழப்புக்களும் அடுத்த கட்டம் குறித்த நிச்சயமற்ற உலகளாவிய நிலைமையுமே காணப்படுகின்றது. இது நாடுகளிடையேயும் உலக மக்களிடையேயும் எழுந்துள்ள உயிரச்சத்தை மேலிடச் செய்திருக்கின்றது.

கொரோனா வைரஸின் குறைவான தாக்கமுள்ள நாடாக ஐநா மன்றத்தினால் குறிப்பிடப்பட்ட இலங்கையில் நிலைமைகள் தலைகீழாக மாற்றமடைந்திருக்கின்றன. குறிப்பாக கொழும்பு, கம்பஹா மற்றும் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.

கொழும்பு யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றிப் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக சுவிற்சலாந்தில் இருந்து வந்து, யாழ்ப்பாணம் அரியாலையில் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆராதனை நடத்திய போதகர் ஒருவரை தனியாகச் சந்தித்திருந்த யாழ்;ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா நோய்த் தாக்கத்திற்கு ஆளாகி இருந்ததாக யாழ் போதனா வைத்தியசாலையில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையளிப்பதற்காக அவர் கொழும்பு ஐடிஎச் எனப்படும் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு ஆனாகியுள்ள முதலாவது நபர் இவர் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்;ப்பாணத்தில் இருந்து சுவிற்சலாந்திற்குத் திரும்பிச் சென்ற அந்தப் போதகர் அங்கு கொரோனா வரைஸ் நோய்க்கு உள்ளாகியிருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, யாழ் நகரில் அவர் நடத்திய ஆராதனையில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த ஆராதனையில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களையும் சேர்ந்தவர்கள் கலந்து கொணடிருந்ததனால், பல இடங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இந்த நிலையில் இவர்களில் 147 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஆராதனை நடைபெற்ற அரியாலை பிரதேசம் சுகாதாரத்துறையினருடைய நேரடி தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், ஆராதனையில் கலந்து கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த 8 பேர் சுகாதார பரிசோதகர்களினால் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒன்றரை வயதுடைய குழந்தையொன்றும் இவர்களில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரியாலை ஆராதனை சம்பவத்தின் தொடர்ச்சியாகக் கொரோன வைரஸ் நோயாளி ஒருவர் யாழ்ப்பாணத்தில் கண்டறியப்பட்டதையடுத்தே வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதேபோன்று கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களும் புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களும் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து கிடையாது. அதனைத் தடுப்பதற்கான மருந்தும் கிடையாது. இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் உலக மக்களைப் பெரும் அச்சத்திற்குள் ஆழ்த்தி உள்ளது.

உயிர்க்கொல்லியாக உலக நாடுகள் பலவற்றில் இதற்கு முன்னர் பல்வேறு நோய்களும், வைரசுகளும் பரவி மில்லியன் கணக்கில் மனித உயிர்களைக் குடித்திருக்கின்றன. ஆனால் அந்த நோய்களின் தொற்றும் தன்மைக்கும் கொரோன வைரசின் தொற்றிப்பரவும் தன்மைக்கும் பாரிய வித்தியாசமுண்டு.

மனிதரிலும் உயிரினங்களிலும் தொற்றிப் பரவி நோய்த் தாக்கத்தை ஏற்படுத்த வல்ல வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஏனைய வைரசுகளிலும் பார்க்க வீரியம் மிக்கது. ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொடுகையின் மூலம் குறிப்பாக உள்ளங்கைகள் விரல்களின் மூலம் தொற்றிப் பரவும் தன்மையைக் கொண்டது.

கதவுகள், கைப்பிடிகள் மற்றும் பாவனைப் பொருட்களிலும் இந்த வைரஸ் பரவியிருந்து அவற்றின் ஊடாக மற்றவர்களின் கைகளில் தொற்றிப்பரவும் வல்லமை வாய்ந்தது. அவ்வாறு ஒருவருடைய உடலில் தொற்றிக்கொள்கின்ற இந்த வைரஸ் வாய் மற்றும் மூக்கு வழியாகத் தொண்டையை அடைந்து அங்கு நிலைகொள்வதுடன், மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலைச் சென்றடைந்து சுவாசத்தைப் பாதித்து உயிர்களுக்கு ஆதாரமாகிய மூச்சுச் செயற்பாட்டைத் திணறடித்து ஆளைக் கொன்றுவிடும் தன்மையைக் கொண்டது.

ஒருவருடைய தொண்டையில் தங்கியிருக்கின்ற கொரோனா வைரஸ் அவர் தும்மும்போது வெளிப்படுகின்ற ஈரத்துளிகளின் ஊடாகக் காற்றில் பறந்து சென்று அருகில் உள்ளவர்களுடைய மூச்சில் கலந்துவிடுகின்றன. அல்லது அயலில் உள்ளவர்களின் மீது படிந்து பின்னர், அவர்களின் கைகளின் தொடுகை வழியாக மூக்கு அல்லது வாய்வழியாக மற்றவர்களுடைய தொண்டையை அடைந்து நிலைகொள்கின்றன.

இவ்வாறு தொற்றிப் பரவுவதன் காரணமாகவே, மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுத் தொடர்பு கொள்வதையும் அருகில் இருந்து பழகுவதை அல்லது செயற்படுவதையும் தவிர்க்குமாறு மருத்துவத் துறை அறிவுறுத்துகின்றது. இதன் அடிப்படையில்தான் தனித்திருத்தல் முறையும், அடிக்கடி கைகளைத் தொற்று நீக்கித் திரவம் அல்லது சவர்க்காரத்தைப் பயன்படுத்தி கைகளை நன்கு கழுவிக்;கொள்ள வேண்டும் என்றும் வாயையும் மூக்கையும் மறைக்கின்ற முக மறைப்பைப்; பயன்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் கைகளினால் முகம், வாய், மூக்கு, கண் என்பவற்றைத் தொடுவதையும் தவிர்க்குமாறு கூறப்பட்டிருக்கின்றது.

பொதுவாக நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியவர்களையே மருத்துவர்கள் ஏனையவர்களில் இருந்து தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை அளிப்பார்கள். அதேவேளை அவர்களிடம் இருந்து தங்களுக்கு நோய் தொற்றிவிடக் கூடாது என்பதற்கான தடுக்கும் வழிமுறைகளையும் அவர்கள் கையாள்வார்கள்.

ஏனைய நோய்கள் இலகுவாகத் தெரிந்து கொள்ளத்தக்க அறிகுறிகளைக் கொண்டிருப்பது போன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றியிருப்பதற்கு வெளிப்படையான அறிகுறிகளைக் காண முடியாது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். அவ்வாறான நிலைமையிலும்கூட இந்த வைரஸ் தொற்றிப்பரவும் தன்மையைக் கொண்டிருப்பதே மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.

எனவேதான், கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தப்பிக் கொள்வதற்குத் தனிமைப்படுத்துதல் அல்லது தனிமைப்பட்டிருத்தல் என்ற முறையை முதலுதவிச் செயற்பாடாகவும், முதன்மை நிலை மருத்துவச் செயற்பாடாகவும் மருத்துவர்கள் கையாள்கின்றார்கள். இந்த நடவடிக்கையின் வெளிப்பாடாகவே மக்கள் ஐந்து பேருக்கும் மேல் அல்லது மூன்று பேருக்கும் மேல் கூடி நிற்கக் கூடாது என்று சர்வாதிகார முறையிலான கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கையை கொரோனா வைரசின் கூடுதலான பாதிப்புக்கு ஆளாகியுள்ள நாடுகளின் அரசாங்கங்கள் கடைப்பிடிக்கத் தொடங்கி இருக்கின்றன.

அத்துடன் மக்கள் பெரும் எண்ணிக்iயில் ஒன்று கூடுவதும், ஒருவரோடு ஒருவர் உடல்களை உரசியும் கைகளில் தொட்டுப் பழகிச் செயற்படுவதையும் தடுப்பதற்காக வீடுகளிலேயே தங்கி இருக்குமாறு அறிவுறுத்தி, அதற்கு வசதியாகப் போக்குவரத்துக்களைத் துண்டித்து, ஊடரங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து நாடுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி இருக்கின்றன. இலங்கை அரசாங்கமும் அதனையொட்டியே நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி உள்ளது.

இலகுவாகவும் வேகமாகவும் பலரையும் தொற்றிப் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி உயிர்களை வகைதொகையின்றி குடித்து அழிக்க வல்ல கொரோனா வைரஸ் உரிய முறையில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்டது போன்ற பாரிய மனிதப் பேரழிவு நிலைமைக்கு ஏனைய நாடுகளும் ஆளாக நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

நாகரிகம், விஞ்ஞான தொழில்நுட்ப வசதிகள் என்பவற்றின் ஊடாக இயற்கையை வென்று வசதிகளை அதிகரித்துக் கொண்ட மனிதனின் செயற்பாடுகளுக்கு சவாலாக கொரோனா வைரஸ் வெளிக்கிளம்பி இருக்கின்றது.

இந்த வைரஸ் உயிரியல் ஆயுதமாக வல்லரசுகளின் பொருளாதார, வலுவான இராணுவ தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது என்ற ஒரு நோக்கு பலரிடம் இருக்கின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டி உள்ளது.

சுய அரசியல் மற்றும் அதிகார இலாபத்திற்காகக் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டு உலக நாடுகள் மத்தியில் உலவிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், .இந்த வைரசின் வருகையானது மனிதனை உயிருக்கு அஞ்சி தனித்திருக்கின்ற நிலைமைக்கு ஆளாக்கி உள்ளது. இதில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. யார் யாரெல்லாம் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை இலகுவில் அடையாளம் காண முடியாது.

அந்த நோய்த்தொற்றின் அடையாளங்கள் நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதற்கு குறைந்தது 14 நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகின்றது. அதுவரையில் கொரோனா வைரஸ் யார் யாரிடமெல்லாம் பரவி இருக்கின்றது என்பதைக் கண்டறிய முடியாது. அது மனித உடலில் மறைந்திருப்பதுவும், தராதரம் பார்க்காமல் யாராக இருந்தாலும் தொடுகை வசதிக்கு உட்பட்டவர்கள் அனைவரையும் அது தொற்றிக் கொண்டுவிடும்.

அதற்கு ஏழை பணக்காரன் என்றோ அரசியல்வாதிகள், ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்றோ ஆளப்படுகின்ற பொதுமக்கள் தரப்பைச் சேர்ந்தவர் என்றோ வித்தியாசம் கிடையாது. யார் யாரெல்லாம் தனது வழியில் சிக்குகின்றார்களோ அவர்களை, காந்தம் இரும்பைக் கௌவிப் பிடித்துக் கொள்வதைப்போன்று சிக்கென பிடித்து பரவி விடுகின்றது. இதன் காரணமாகத்தான் இந்த வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கையும் முன்கூட்டிய தவிர்ப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்ற, வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் 4500 பேர் 45 தனிமைப்படுத்தும் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இத்தகைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள சிறப்பானவை என ஐநா மன்றத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் நோய்த்தாக்கம் என்பது உலக நாடுகளுக்கும் உலக மருத்துவத்துறைக்கும் புதியது. மிகுந்த சவால்கள் மிக்கது. இந்த நோய்த்தாக்கத்தை இலகுவான பரிசோதனைகளின் மூலம் கண்டறிவதற்கான வசதிகள் மருத்துவத் துறையில் இல்லை. இருக்கின்ற வசதிகளும் மிகக் குறைந்தவையாகவே இருப்பதாகக் கூறப்படுகின்றது.

பல்லாயிரக்கணக்கில் பல்கிப் பெருகுகின்ற நோயத்தாக்கத்திற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற மருத்து பரிசோதனை வசதிகளும், வைத்தியசாலை விடுதிகளுடன் கூடிய வசதிகளும் இல்லை. பேரலையாக இன்னும் குறிப்பிடுவதானால் மருத்துவத் துறையின் சுனாமியாக எழுந்து தாக்கியுள்ள இந்த கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் திணறுகின்றன. திண்டாடிக் கொண்டிருக்கின்றன.

அதேவேளை, ஊடகங்களில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் நொடிகள்தோறும் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய எண்ணற்ற வகையில் பொங்கிப் பிரவகிக்கின்ற தகவல்களும் இந்த நோய்த்தாக்கம் குறித்த உண்மையான அச்சத்திற்கு அதிகமாக மக்களை அச்சமடையச் செய்திருக்கின்றன.

அரச தகவல்களும் நோய் நிலைமைகள் பற்றிய அவ்வப்போதைய அரச மற்றும் உலகளாவிய ரீதியிலான தகுதி வாய்ந்த நிறுவனங்களின் அதிகாரபூர்வ அறிக்கைகள் வெளியாகிய போதிலும், அவற்றையும் மிஞ்சியதாக சமூக வலைத்தளத் தகவல்கள் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவி அச்சத்தையும் பீதியையும் கிளப்பி விட்டிருக்கின்றன.

தனித்திருத்தல், நோய்த் தொற்றில் இருந்து விலகி இருத்தல் அல்லது நோய்த் தொற்றிப் பரவாத வகையில் ஒதுங்கி இருத்தல் என்பது நோயத்தாக்கத்தைக் குறைப்பதற்கானதொரு மருத்துவ ரீதியான உத்தியாக – நடவடிக்கையாக பலராலும் நோக்கப்படுவதில்லை. மாறாக அதனை அச்சத்திற்குரிய ஒரு நடவடிக்கையாகவே சமூகத்தில் இந்த நோய்த்தொற்று நிலைமைக்கு ஆளாகியவர்கள் கருதுகின்றார்கள். இதன் காரணமாகவே தாங்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றோம் இல்லது அதற்கு சமீபமாகச் சென்றிருந்தோம் என்ற தகவலை அவர்கள் சுகாதாரத்துறையினருக்கோ வைத்தியர்களுக்கோ வெளிப்படுத்தாமல் மறைத்து விடுகின்றார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸானது ஒரு மாதத்துக்குள் ஒருவரிடம் இருந்து 403 பேருக்கு மிக வேகமாகப் பரவக் கூடிய அளவு ஆபத்தானது என்று இலங்கையின் அரச மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுபவர்களைத் தேடி, தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் உதவியோடு சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலைமை உருவாகியுள்ளது.

அரசாங்கம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி உள்ளது. அத்துடன் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் விடேசமாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியிருப்பது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளாகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் அனைவரும் தங்களை சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வெளிப்படுத்தி உரிய நோய்த்தடுப்புச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

அதேநேரம் வெளியில் சென்று வருபவர்களும், தொழில் நிமித்தம் பொது இடங்களில் பணியாற்றுபவர்கள், நடமாட வேண்டிய கட்டாய நிலைமைக்கு ஆளாகுபவர்கள் தனி மனித சுகாதாரச் செயற்பாடுகளைக் கடுமையாகக் கடைப்பிடித்து தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ஏனையோருக்கும் நாட்டுக்கும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE