;

Saturday 15th of August 2020 05:35:27 AM GMT

LANGUAGE - TAMIL
மதவாத வைரசும் கொரோனா கொடூரமும்!
மதவாத வைரசும் கொரோனா கொடூரமும்! - மனம் உழன்ற தமிழக பொது சனம்

மதவாத வைரசும் கொரோனா கொடூரமும்! - மனம் உழன்ற தமிழக பொது சனம்


சில, பல நேரங்களில் கூறியன கூறல் தவிர்க்கமுடியாததாக இருக்கும்; குறித்த விதயங்களை நினைவூட்டுவது இன்றியமையாததாகவும் அமைந்துவிடும். வாரங்கள் கடந்தாலும், மாதம் ஆனாலும் இந்தியாவில் இன்னும் விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டு வரும் ஒற்றைச் சொல்லாக இருந்துவருவது, தப்லிக் சமாத்(து).

கிழக்காசியாவிலும் ஈரானிலும் இத்தாலியிலும் சங்கிலித் தொடராக ஏற்பட்ட கொரோனா வைரசு கோவிட்-19 கொள்ளைநோய்த் தொற்று, இந்தியத் துணைக்கண்டத்தில் கேரள மாநிலத்தின் முதலில் பதிவானது.

சீன நாட்டின் வூகான் மாநிலத்தில் படித்துக்கொண்டிருந்த 20 வயது கேரள பெண் மாணவர், கடந்த சனவரி 24 அன்று, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது என்பது சனவரி 30ஆம் நாளன்று உறுதிசெய்யப்பட்டது.

அதன் பிறகு வரிசையாக, பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று பீடித்து, இந்திய நலவாழ்வுத் துறையின் இணைச் செயலாளர் அன்றாடம் செய்தியாளர்களைச் சந்தித்து, ’இன்றைய நிலவரம்’ என கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடத் தொடங்கினார். இடையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பிலும் இத்தகவல்கள் வெளியிடப்பட்டன; பிறகு திடீரென அது நிறுத்தப்பட்டு, இந்திய ஒன்றிய அரசின் நலவாழ்வுத் துறையே அந்தப் பணியைக் கையில் எடுத்துக்கொண்டது.

போலவே, தமிழ்நாட்டிலும் மாநில நலவாழ்வுத் துறையின் அமைச்சரான விசய பாசுக்கர் சென்னையில் இரவு 9 மணிக்கும் அதற்கு மேலுமாக செய்தியாளர் கூட்டங்களை நடத்தினார். அதிலும் என்ன நடந்ததோ திடீரென அவருடைய சந்திப்பும் நிறுத்தப்பட்டு, அவருக்குப் பதிலாக (இந்திய) ஆட்சிப் பணி அதிகாரியான நலவாழ்வுத் துறையின் செயலர் பீலா இராசேசு அம்மையார் ஊடகச் சந்திப்பை நிகழ்த்தினார். அவருடையதிலும் என்ன மர்மமோ சிக்கலோ தமிழ்நாட்டு அரசின் தலைமைச்செயலாளரான சண்முகம், கொரோனா விவகாரம் பற்றி ஊடகங்களுக்கு உரை ஆற்றினார். பொதுவாக, அரசுத் துறைகளின் செயலாளர், அதிலும் தலைமைச்செயலர் நிலை அதிகாரிகளிடம் இருக்கும் மக்களுடன் ஒட்டாத தன்மை இன்றியும் வட இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகளின் குறிப்பிட்ட குறிகுணங்கள் இன்றியும் தமிழ்நாட்டு மக்களுடன் ஒட்டியவராகத் தோன்றுவது, இவருக்கு சாதகமான அம்சங்கள். இயல்பான பேச்சுவழக்கில் உரையாடுவதும் தம்மைப் போன்ற ஆள் இவரெனும் மனநிலையை எளிதில் உருவாக்கிவிடும். அரிதான நிகழ்வு என்றாலும் அமைச்சர் பதவியிலிருந்து முதலமைச்சர் நாற்காலியைப் பிடித்ததிலிருந்து அதை விட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம்தான், சண்முகத்துக்கும்! இதன்படியாகவும் இன்னும் சில மாதங்களீல் ஓய்வுபெறப் போகிறவர் என்பதாலும், அவருக்கு பழனிசாமி அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புகளிலிருந்து பாதுகாக்கும் பணியை ஆர்வத்தோடு மேற்கொள்கிறார் போலும்! இவ்வளவு இணக்கப்பாடு இருந்தபோதும் அவருடைய ஊடகச் சந்திப்பை அடுத்து முதலமைச்சர் பழனிசாமியே ஊடகச் சந்திப்பை நிகழ்த்தினார். இடையில் என்ன நடந்ததோ, மீண்டும் ஊடகச் சந்திப்பைத் தொடங்கினார், நலவாழ்வுத் துறை அமைச்சர் விசய பாசுக்கர்.

இத்துணை அன்றாட ஊடகச் சந்திப்புகளிலும் நூற்றுக்கு தொண்ணூரு விழுக்காடு அளவுக்கு பூடகமாக சாட்டுக்கு உள்ளான தொடர்புடைய சொற்களின் கண்ணி - ’தப்லிக் சமாத்து- டெல்லி மாநாடு- முசுலிம்கள்- இசுலாமியர்கள்- கொரோனா தொற்று’ என்பதாக இருந்தது. அதாவது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை டெல்லி மாநாட்டுக்குச் சென்றுவந்த தப்லிக் சமாத்து முசுலிம்கள்தான், கொரோனா வைரசைக் கொண்டுவந்துவிட்டனர் என்பதே செய்திச் சந்திப்புகள் மூலமாக தமிழ்நாட்டில் வலுவான பொதுப்புத்தி கருத்து உருவானது; அல்ல, உருவாக்கப்பட்டது. இயல்பாகவே, இந்திய மக்கள்தொகையில் இந்துக்கள் எனக் கூறப்படும் மக்கள் பிரிவினரே பெரும்பான்மையோராக இருக்கும்நிலையில், நிலவுகின்ற ’இந்து பொதுபுத்தி’க்கு பெருத்த ஆதரவும் வலுவும் இருக்கும் அல்லவா? அதுவும், ’எப்போதுமே அவர்கள் ஆரோக்கியத்தில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை” எனும் பொதுபுத்திக் கருத்து கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ள நிலையில், சீனத்தில்கூட கடல் இறைச்சி சந்தையில்தான் வைரசு தோன்றியது. அங்கிருந்துதான் மற்ற இடங்களுக்கே பரவியது; இங்குள்ள முசுலிம்களும் இறைச்சி உண்போர் என்பதால் அவர்கள் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிவிடும் என பீதி பெருகியது.

முதலில் 500-க்கும் மேற்பட்டவர்கள் என தமிழ்நாட்டு அரசுத் தரப்பை மேற்கோள் காட்டி, ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அரசுத் தரப்பில் அதை மறுக்கவுமில்லை, ஏற்கவுமில்லை. அதுவே பிறகு சில நூறுகள் கூடியபோதும் இதே நிலை நீடித்தது. பொது சமூகத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பரப்பிகளாக டெல்லி தப்லிகி சமாத்து கூட்டத்துக்குப் போய்வந்த முசுலிம்களே எனும் கருத்து பரவலாகவும் சாதி, மதம்கடந்த அமைப்புகள் ஆபத்தை உணர்ந்தன. பல முசுலிம் அமைப்புகளையும் சாதி, மதம்கடந்த கட்சிகள், அமைப்புகளும் இணைந்து சென்னையில் ஊடகங்களின் ஊடாக ஒரு விளக்கத்தை அளித்தன. கூடவே, டெல்லி கூட்டத்துக்குப் போய்வந்தவர்கள் தாங்களாக முன்வந்து அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அதையடுத்தே டெல்லி கூட்டத்துக்குச் சென்ற நூற்றுக்கணக்கானவர்கள் அந்தந்த மாவட்டங்களில் பரிசோதனைக்காக அணுகினர்.

ஆனால் அதற்கு முன்னதாக, இங்கே பொதுநிலை எனப்படும் பெயர்பெற்ற பெரும்பாலான ஊடகங்கள் மூலம், டெல்லி மாநாட்டு முசுலிம்களே கொரோனா தொற்றுப் பரப்பிகள் என்கிற கருத்து, அழுத்தமான படிமமாக ஆகிப்போனது. நாளுக்கு நாள் அந்தப் படிமம் உறுதியாகியபடி இருந்ததே தவிர, நிலைமை தெளிவாகவில்லை.

முசுலிம் அல்லாதவர்களிடமும் பொது சமூகத்திலும் இந்தக் கருத்துக்கு பரலவான இணக்கப்பாடு உருவாகியிருந்தது. ஊடகமும் அரசாங்கத்தின் அமைச்சரும் அதிகாரிகளும் திரும்பத் திரும்ப தப்கில் சமாத்தின் கூட்டம் என அதிகாரபூர்வ அறிவிப்புகளிலும் செய்திச் சந்திப்புகளிலும் எழுத்துப்பூர்வமான ஆவணங்களிலும் வெளிப்படையாகக் குறிப்பிட்டனர்; எந்தத் தயக்கமும் அவர்களிடம் இல்லை. நோயாளிகளென ஐயத்திற்கு உள்ளாகும் யார் ஒருவரின் சாதி, மதம், இனம் குறித்த விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்ற நெறி கொண்ட மருத்துவர்களின் நீதியான குரல், எந்த பொதுநிலை ஊடகத்திலும் சன்னமாகக்கூட ஒலிக்கவில்லை. அது குறித்த விமர்சனங்களின் பொருட்டு, ஊடகக் கோமான்களிடம் எந்தவித உறுத்தல் உணர்வும் வெளிவரவிரவில்லை.

பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில், இந்தியாவுடன் தொடர்புடைய குறித்த மதவாதப் பரப்புரை அமைப்பினர் 60-க்கும் மேற்பட்டவர்கள் என்பதை இந்தியாவின் சில அமைப்புகளின் (நம்பகமான) தகவலாக வெளியானதே தவிர, குறித்த நாட்டின் ஊடகங்கள் மதவாத அடையாளப்படுத்தல், கருணையோடு பார்க்கவேண்டியவர்களை வெறுத்து ஒதுக்குதல் போன்ற மனிதநேயமற்று நடந்துகொள்ளவில்லை. சரி முசுலிம்களைக் குற்றப்படுத்தும் குறிப்பிட்ட இந்திய ஊடகங்கள் இதையும் அந்த அடிப்படையில் பதிவுசெய்தனவா என்றால் இல்லவே இல்லை. இங்குள்ள அரசாங்கத்தினராவது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அயல்நாட்டில் இப்படி அவதிப்பட்டுள்ளனர் என வெளிப்படையாகக் கூறினார்களா.. அப்படியா என வாய் பிளக்கமட்டும்தான் செய்வார்கள்!

காரணம், உள்ளுறையாக அவர்களிடம் மண்டிக்கிடக்கின்ற- முசுலிம்கள் மீதான மதவாதப் பார்வை; வன்மம் என்றும்கூட குறிப்பிடமுடியும். நாகரிக மனிதர்களின் காலத்தில், சனநாயக சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டத்தில் இது மோசமான பின்னுக்கு இழுக்கக்கூடிய சிந்தனையாகும். சனநாயகத்தின் நான்காவது தூண் என்று ஊடகத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

அண்மையாக, வலதுசாரி, இந்துத்துவ மதவாதக் கருத்துகளைக் கண்மூடித்தனமாக ஆதரித்துவரும் தினமணி நாளேடு, டெல்லி மாநாட்டின் விதிமீறலைப் பற்றி ஏப்பிரல் 4 அன்று கொந்தளிப்போடு தலையங்கம் தீட்டியது. மருத்துவ அறநெறியை அப்பட்டமாக மீறி, ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவினரை அடையாளப்படுத்தியதைப் பற்றி இன்றுவரை அதே தினமணியிடம் ஒரு பொறுப்பான சுயவிமர்சனமும் இல்லை.

இது ஒரு பக்கம், முசுலிம்களுக்கு எதிரான கருத்துருவாக்கத்தை குறிப்பிட்ட மதவாத அமைப்புகளின் உள்ளார்ந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டு இருக்க, மையமான சர்ச்சைக்கு உரிய டெல்லி தப்லிக் சமாத்து ஆட்கள் நிலைமையைத் தெளிவுபடுத்தினார்களா? அவர்கள் தெளிவுபடுத்தியும் அதை ஊடகங்கள் வெளியிடவில்லையா? அவர்கள் என்னதான் செய்துகொண்டிருந்தார்கள் என்கிற கேள்வி எழுவது இயல்பு. அவர்கள் தரப்பிலிருந்து ஊடகத் தரப்புகளை அணுகவோ ஊடகத் தரப்பிலிருந்து அணுகியவர்களுக்கு உரிய பதில் அளிக்கவோ அவர்கள் தரப்பில் அக்கறை காட்டப்படவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல்வேறு இசுலாமிய அமைப்புகளும் சேர்ந்து பொது அறிவித்தலாகத்தான் செய்தார்களே தவிர, இலகுவான - வெளிப்படையான தகவல் பரிமாற்றம் நடைபெறும் சாத்தியம் அரிதாகவே இருக்கமுடியும் என்றே எண்ணச்செய்கிறது. உள்ளூர் ஊடகத்தினர் முதல் உலகளாவிய நிறுவனங்களின் ஊடகத்தினர்வரை பல்வேறு முசுலிம் அமைப்புகள், தனிநபர்களை அணுகினாலும் யாருக்கும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. குறித்த கூட்டம் நடைபெற்ற நாள்கள் குறித்தே ஏப்பிரல் முதல் வாரம்வரை தமிழ்நாட்டில் காங்கிரசு போன்ற கட்சிகளின் தலைவர்களுக்கே உரிய தகவல் தெரியவில்லை.

மார்ச் முதல் வாரத்தின் சில நாள்களையும் மையத்தில் சில நாள்களையும் குறிப்பிட்டு பல தகவல்கள் ஓடிக்கொண்டிருந்தன. இவை எவற்றையும் மறுத்தோ விளக்கியோ தப்லிக் தரப்பிலிருந்து பொறுப்பான பதில் முன்வைக்கப்படவில்லை. அடுத்து, அதில் வெளி நாடுகளிலிருந்து கலந்துகொண்டவர்கள், அவர்கள் எந்தெந்த நாட்டினர், இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனும் பட்டியலை வெளியிட்டிருந்தால் ஊகங்களுக்கும் கட்டுக்கதைகளுக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. அதில் அவர்களுக்கு என்ன சிரமம் என இன்றுவரை புதிராகவே இருக்கிறது. அதேவேளை அவர்கள் அதை சமூக ஊடக அளவில் சிறிய அளவிலான துணுக்குத் தகவல்களாக வெளியிட்டனர் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், அவற்றால் நிலைமையைத் தெளிவுபடுத்த முடியவில்லை. டெல்லியின் ஊடகங்களாலேயே, அங்கு என்ன நடந்தது என்பதை உறுதிசெய்ய முடியாதபடியாததாகவே தப்லிக் சமாத்தின் பொறுப்புணர்வு இருந்தது. விளைவு, யதார்த்தத்தில் உள்ள கருத்துருவாக்க ஊடகங்கள் விதைக்கும் தகவல்கள், படிமங்களையே நம்பவேண்டிய நிலைக்கு பொது சமூகம் அல்லது சமூகத்தின் பொதுப் புத்தி தள்ளப்படுகிறது.

டெல்லியில் குறித்த கூட்டம் நடைபெற்ற காலம், சரியாக, மார்ச் 13 முதல் 15வரை ஓராண்டுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட மதரீதியான அந்தக் கூட்டம் நடைபெற்று முடிந்தும்விட்டது. கலை, இலக்கிய திருவிழாக்களைப் போல அந்த நிகழ்வுகளைத் தவிர்த்து, தொலைவிலிருந்து வரும் பங்கேற்பாளர்கள் சந்தித்து உரையாடுவதும் தங்கல் அனுமதி உள்ளவரை சில மாநிலங்களுக்குப் பயணம்செய்வதும் தப்லிக் ஆட்களும் செய்ததுதான்; அதாவது, எந்த சுற்றுலாப் பயணியும் செய்யக்கூடிய சட்ட நடைமுறைகளுக்கு உள்பட்ட வழமையான ஒரு செயல்பாடுதான்.

மதமாற்றம் அன்றி, இசுலாமிய மதத்தவரிடம் மட்டும் மதக் கொள்கைகளில் பிடிப்போடு இருப்பதற்கான பரப்பல்பணிதான் இந்த தப்லிக் சமாத்தின் செயல்பாடு எனக் கூறப்படுகிறது. நாம் விசாரித்து அறிந்தவரையில் தம் மதத்தைத் தாண்டிய செயல்பாடுகளில் இவர்கள் ஈடுபடுவதில்லை; போலவே தம் மதத்திற்குள்ளாக தீவிர மதப்பிடிப்புடையவர்களாக விளங்குகின்றனர். மற்ற முசுலிம் அரசியல் அமைப்பினரைப் போல தீவிர அரசியல் தன்மை இவர்களிடம் துளியும் இல்லை. முழுக்க முழுக்க மார்க்கம் மார்க்கம் என்பதாகவே இருக்கிறார்கள். அதற்கேற்ற மென்மைத் தன்மையையும் பார்க்கமுடிகிறது. சீனம், சிங்கப்பூர், மலேசியா போன்ற கிழக்காசிய நாடுகளிலிருந்து வந்த குழுவினரிடமிருந்து டெல்லி கூட்டத்தில் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதற்காக, தொற்று ஏற்பட்ட அந்த மலேசியா, சிங்கப்பூர், சீனம் போன்ற நாடுகளை எதிரியாகவா முன்னிறுத்தினார்கள்? சீனத்திடமிருந்துதானே தென்கொரியாவிடமிருந்துதானே மருத்துவக் கருவிகள் வாங்கப்படுகின்றன?

எனில், இதில் தெளிவாக வெளிப்படுவது, மதத்தின் படியாக குறிப்பிட்ட மக்களை குற்றத்துக்கு காரணிகளாக ஆக்குவது, கடைந்தெடுத்த மோசடியும் சதித்தனமும் ஆகும். ஒருவேளை குறிப்பிட்ட மக்கள் பிரிவினர் கொள்ளை நோய் போன்ற பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்றாலும், அதை மருத்துவ அறநெறிக்கு உட்பட்டே வெளிப்படுத்தவேண்டும்; அதன் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் இணக்கப்பாடும் தெரிவிப்பதாகவே இருக்கவேண்டும். இங்கு நடந்திருப்பது அதற்கு நேரெதிரான செயல்பாடு! உற்றுநோக்கினால், திட்டமிட்ட செயல்பாடாக இருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது.

ஏனென்றால், கொள்ளை நோயைக் கட்டுப்படுத்துவதில் பல இயலாமைகளையும் குழப்பங்களையும் கிட்டத்தட்ட நூறு குடிமக்களின் உயிர் பலியையும் அளித்துக்கொண்டு இருக்கும் ஆளுகைச் சவடால்தனம், கள்ள மௌனத்தைக் கடைப்பிடிக்கிறது. தாடி வைத்து குல்லா போட்டவர்களை எல்லாம் தொற்றுப்பரப்புக் குற்றவாளியென உரக்கக் கூவியவர்கள், மறைந்துநின்று மக்களிடம் வெறுப்பைப் பரப்பியவர்கள் யாரும், சில நாள்களாக அந்த மாநாட்டுக் கூட்டத்தினரில் சில பல பத்து பேராக மாவட்டம்மாவட்டமாக கொரோனா அபாயம் இல்லாதவர்களென உறுதியாகி வெளிவருவதை ஒரு வார்த்தைகூட சொல்வதற்கு முன்வரவில்லை.

சமூக ஊடகங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக உண்மைத் தகவல் வெளியானதை அடுத்து, பெருவூடகங்களும் கூச்சநாச்சமின்றி இந்தச் செய்தியை வெளியிடவும் தொடங்கியுள்ளன.

அரச ஒடுக்குமுறை, அடக்குமுறையின் அதிவேக வளர்ச்சிக் காலகட்டத்தில், பாதிக்கப்படுவதாகக் கருதும் எந்த ஒரு சமூகப் பிரிவும் அதற்குள் இருக்கும் சிறு பிரிவும்கூட, இறுக்கமான- வெளிப்படைத் தன்மை குறைவான தங்களின் அணுகுமுறை குறித்து தன்னாய்வு செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் இந்த மத வைரசு அரசியல் உணர்த்துகிறது.

இர. இரா. தமிழ்க்கனல்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடுபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE