Friday 26th of April 2024 10:11:03 AM GMT

LANGUAGE - TAMIL
-
தேர்தல் அரசியலும் கொரோனாவின் புன்னகையும் - பி.மாணிக்கவாசகம்

தேர்தல் அரசியலும் கொரோனாவின் புன்னகையும் - பி.மாணிக்கவாசகம்


ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபாய ராஜபக்சவுக்கு சிங்கள பௌத்த மக்கள் பேராதரவு வழங்கி, அவரை அமோகமாக வெற்றியடையச் செய்ததன் ஊடாக இன ரீதியானதோர் அரசியல் அலை ஒன்று எழுந்திருந்தது. இந்த அரசியல் அலை எதிர்பாராதது. இலங்கை அரசியலுக்கு முற்றிலும் புதியது. நாடு இன ரீதியாக அரசியலில் பிளவுபடுவதற்கு வழிகோலியுள்ளது.

இனத்துவ ரீதியான இந்த அரசியல் அலையை சாதகமாகப் பயன்படுத்தி பொதுத் தேர்தலில் தமது கட்சியாகிய பொதுஜன பெரமுனவை மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றியடையச் செய்து விட வேண்டும் என்பது ராஜபக்சக்களின் அபிலாசை. அதனை அரசியல் பேராசை என்று கூட குறிப்பிடலாம்.

இந்த வெற்றியின் ஊடாகக் கிடைக்கின்ற நாடாளுமன்ற அரசியல் பலத்தைப் பயன்படுத்தி 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நீக்கி 18 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைத் தன்னிரகற்றதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களுடைய அரசியல் இலக்கு.

நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனநாயகக் கட்டமைப்பில், ஜனாதிபதி என்ற தனி மனித அரசியல் தலைமையின் கீழ் ராஜபக்ச குடும்ப ஆட்சியை நிறுவிக்கொள்ளலாம்.

பெரும்பான்மை பலம் என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டை சிங்கள பௌத்த பெருமபான்மை என்ற நிலையில் முழு நாட்டையும் சிங்கள பௌத்த நாடாக்கி உலகில் தனித்துவமான நாடாகத் திகழ முடியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. அரசியல் ரீதியான கனவு.

இத்தகைய இனவாத அரசியல் போக்கிற்கு உலகத்திலேயே தனித்துவமாக முப்படைக் கட்டமைப்புடன் தன்னிகரற்ற இராணுவ சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப்புலிகளை நீண்ட கால யுத்தம் ஒன்றில் அடைந்த வெற்றி ராஜபக்சக்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பற்றிய எதிர்பார்ப்பு

உலகில் மோசமான தற்கொலைத் தாக்குதல் அணி என்ற மிகப் பலம்வாய்ந்த இராணுவ சக்தியைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த மகிந்த ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் வரலாறு காணாத வெற்றி வீரனாக உருவகம் பெற்றிருந்தார். அந்த வெற்றி மயக்கத்தில் இருந்த மக்களை அதே இராணுவ வெற்றியை உத்தியாகப் பயன்படுத்தி ராஜபக்சக்கள் அரசியல் ரீதியாகத் தனித்துவமான தலைமை நிலையை எட்டியிருந்தார்கள்.

வரலாற்று ரீதியான அரசியல் எதிரியாகிய ஐக்கிய தேசிய கட்சியிடம் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஓர் அரசியல் கூட்டணியிடம் மகிந்த ராஜபக்சக்களின் குடும்ப ஆதிக்கம் கொண்ட கட்சியாகத் திகழ்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியைத் தழுவியது.

ரணில் விக்கிரமசிங்கவின் நரித்தனமான அரசியல் தந்திரோபாய வலையில் வீழ்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளாராக இருந்த மைத்திரிபால சிறிசேன இந்த அரசியல் வெற்றிக்கு துருப்புச் சீட்டாகப் பயன்பட்டிருந்தார்.

அந்த அரசியல் தோல்வி ராஜபக்சக்களை மிகமோசமாகப் பாதித்திருந்தது. தன்னிகரற்ற தலைவனாக வெற்றி நாயகனாக சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த மகிந்த ராஜபக்ச அந்தப் படுதோல்வியை உதறித்தள்ளி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி அரசியலில் கோலோச்ச வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் செயற்பட்டதன் விளைவாகவே 2019 ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபாய ராஜபக்ச 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று தன்னிரகற்ற தலைவனாக வெற்றி பெற்றிருந்தார்.

சிங்கள பௌத்தம் என்ற இனவாத அரசியலுக்கு இத்தகைய சக்தி இருக்கும் என்பதை அவர்கள் முன்கூட்டியே எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த வெற்றி அவர்களை ஒரு வகையில் நம்ப முடியாத வகையில் அசர வைத்திருந்தது என்றே கூற வேண்டும். அந்தத் தேர்தல் வெற்றியை – அந்த அரசியல் செல்வாக்கை முறையாகப் பயன்படுத்தினால், பொதுத் தேர்தலில் தமது பொதுஜன பெரமுன கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை இலகுவாக அடைந்துவிடலாம் என்பது அவர்களுடைய கணக்கு. அரசியல் எதிர்பார்ப்பு.

தேர்தல் ஏற்பாடுகளும் கொரோனாவும்

ராஜபக்சக்களின் இந்த அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் இராஜதந்திர ரீதியாகவும், நுணுக்கமான அரசியல் தந்திரோபாய ரீதியிலும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை நாலரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் திகதி குறித்தமை அவருடைய அரசியல் நிகழ்ச்சி நிரலில் முக்கிய அம்சமாகும்.

மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது. அந்த நேரம் கொரோனா வைரஸ் பல நாடுகளைத் தாக்கி அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தத் தொடங்கி இருந்தது. இலங்கையிலும் இந்த வைரஸ் தொற்றிப் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து உணரப்பட்டிருந்தது. அது குறித்து கவனம் செலுத்தப்பட்ட போதிலும், அரசு குறிப்பாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதிலேயே கூடிய கவனம் செலுத்தி இருந்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மார்ச் 12 ஆம் திகதி முதல் 19 வரையில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற அறிவித்தல் வெளியாகியிருந்த நிலையில் மார்ச் 10 ஆம் திகதி இலங்கைக் குடிமகனாகிய 52 வயதுடைய உல்லாசப் பயணிகளுக்கான வழிகாட்டி ஒருவர் கொரோனா நோய்க் குறிகளைக் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றியிருந்த இத்தாலியில் இருந்து வருகை தந்திருந்த உல்லாசப் பயணிகள் குழுவொன்றுடன் நெருங்கிப் பழகியிருந்த காரணத்தினால் இவர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி நோயாளியாகக் கண்டறியப்பட்டிருந்தார்.

தேசிய தொற்று நோய் வைத்தியசாலையாகிய ஐடிஎச் வைத்தியசாலையில் உடனடியாக இவர் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். மறுநாள் மார்ச் 11 ஆம் விமானப் பயணங்களில் தீவிர கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு, பின்னர் விமானப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டன. ஆனால் படிப்படியாக கொரோனா வைரஸின் தாக்கம் பரவலாக அவதானிக்கப்பட்ட போதிலும் வேட்பு மனுக்களை ஏற்பதற்கான இறுதித் தினமாகிய 12 ஆம் திகதிக்குப் பின்பே முடக்க நிலையும் ஊரடங்கு உத்தரவும் அறிவிக்கப்பட்டது.

நம்பிக்கையூட்டுவதற்கான அறிவித்தல்கள்

தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் தேர்தல் ஆணையகத்தினால் பின்போடப்பட்டதை ஜனாதிபதி தரப்பு விரும்பவில்லை. அந்த நடவடிக்கை அவரை சீற்றம் கொள்ளச் செய்திருந்தது. அதனால் தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி செயலகத்தினால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. மே மாதம் 28 ஆம் திகதியன்று தேர்தலை நடத்துவதற்காக நாள் குறிக்குமாறு ஜனாதிபதி தரப்பில் இருந்து ஆலோசனையும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று நிலைமைகள் மோசமடைந்து கொண்டிருந்ததனால் ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைவாக தேர்தல் ஆணைக்குழுவினால் செயற்பட முடியவில்லை. தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதில் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்டிருந்த இழுபறி நிலைமையும் அதற்கு முடிவு காணும் வகையில் ஜுன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையகம் அறிவித்திருப்பதும் அனைவரும் அறிந்த விடயங்களாகும்.

இதற்கிடையில் தேர்தல் ஆணையகத்திற்கு புறச் சூழலில் அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வகையிலும் தேர்தலை நடத்துவதற்குரிய நிலைமை கனிந்து வருவதாக நாட்டு மக்களை நம்பச் செய்யும் வகையிலும் அரச தரப்பில் அறிவித்தல்கள் வெளியாகத் தொடங்கின.

கொரோனா வைரஸ் பரவலை அரசாங்கம் வெற்றிகரமாகத் தடுத்துள்ளது என தெரிவித்து ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தி தேர்தலுக்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்ற தோற்றம் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 24 ஆம் திகதியுடன் நோய்த்தடுப்பு நடவடிக்கை வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்படும் என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவராகிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் இதற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அதிகாரமும் இல்லை அவசியமும் இல்லை

ஆனால் கொரோன வைரஸ் சமூகத் தொற்று நிலை என்ற ஆபத்தான கட்;டத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றது. கொழும்பு கிராண்ட்பாஸ், வாழைத்தோட்டம் போன்ற பல இடங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்களைத் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாய நிலைமை உருவாகியது. அது மட்டுமல்லாமல் நோய்த்தடுப்பில் வெற்றிபெற்றிருப்பதை 24 ஆம் திகதி அரசு அறிவிப்பதற்கு முன்னோடியாகவும் வசதியாகவும் 20 ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

இடர் வலயங்களாக அடையாளம் காணப்பட்டிருந்த கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் குறிப்பிட்ட இடங்களைத் தவிர்த்து முடக்க நிலை தளர்த்தப்பட்டது, இதனால் கட்டுக்கடங்காமல் மக்கள் கடைவீதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மட்டுமல்லாமல் விசேடமாக மதுபான விற்பனை நிலையங்களிலும் இடைவெளி பேணாமல் முண்டியடித்து நோய்த்தொற்று நிலைமையில் ஏற்பட்டிருந்த முன்னேற்றத்தை சவாலுக்கு உள்ளாக்கினார்கள். இதனால் உடனடியாகவே முடக்க நிலை தளர்த்தலில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாய நிலைமைக்கு அரசாங்கம் ஆளாகியது.

ஆயினும் இந்த நெருக்கடி நிலையை பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் எதிர்க்கட்சிகளினதும் பொது அமைப்புக்களினதும் வேண்டுகோள்களை ஏற்று கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டி ஒருங்கிணைந்த நிலையில் நெருக்கடி நிலைiமைக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தயாராக இல்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே என்ற பிடிவாத நிலையில் இருந்து இறங்கி வரப்போவதில்லை என்பதையும் அவர் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் அதாவது இறுதி தினமாகிய ஜுன் 2 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டிருக்காவிட்டால், என்னால் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது. அதனை வேறொரு நாளிலேயே செய்ய வேண்டும். எவ்வாறாயினும் பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு எனக்கு அதிகாரமில்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை என்று அறிக்கையொன்றில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. நாட்டின் அனைத்து பிரதான கட்சிகளும் பல்வேறு குழுக்களும் தேர்தலுக்காக உரிய முறையில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. அனடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு சுயாதீன குழுவாகிய தேர்தல் ஆணைக்குழுவுக்கே உள்ளது. அதற்கு அவசியமான அனைத்து யாப்பு ரீதியான ஒத்துழைப்பையும் அரசு வழங்கியுள்ளது.

விசேட அரசமைப்பு ரீதியான பிரச்சினை தற்போதைய சூழ்நிலையில் இல்லை. அரசியலமைப்பின்படி எது நடைபெற வேண்டும் என்பது தெளிவாக உள்ளது. அதற்கான பொறுப்பு யாரிடம் உள்ளது என்பதிலும் சந்தேகமில்லை என்றும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

எந்த வகையிலாவது தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கிவிட வேண்டும் என்பதில் அவர் விடாப்பிடியான உறுதியைக் கொண்டிருப்பது இந்த அறிக்கையில் இருந்து தெரிகின்றது. திருப்திகரமான முறையில் கொரோனா கட்டுப்படுத்தப்படாத நிலையில்எந்த வகையிலாவது தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான அறிகுறிகளே இப்போது தென்படுகின்றன.

இந்த தேர்தல் அரசியல் நிலைப்பாடு நாட்டு மக்களை எங்கு கொண்டு சென்று நிறுத்தப் போகின்றதோ என்றெண்ணி பலரும் கவலை கொள்வதையும் அதேவேளை, அந்த நிலைமையை எண்ணி கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் வெற்றிப் புன்னகையோடு பார்த்திருப்பதையும் உணரவும் மானசீகமாகக் காணவும் முடிகின்றது.

பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE