Thursday 25th of April 2024 07:43:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
தாய்லாந்து இளவரசனுக்கு முடிசூட்ட தமிழ் அரசனைக் கொல்லச் சதி (வரலாற்றுத் தொடர்)

தாய்லாந்து இளவரசனுக்கு முடிசூட்ட தமிழ் அரசனைக் கொல்லச் சதி (வரலாற்றுத் தொடர்)


1815ம் ஆண்டு எஹலப்பொல, கெப்பிட்டிப்பொல, மொலிகொட, பிலிமத்தலாவ உள்ளிட்ட சிங்களப் பிரதானிகள் மேற்கொண்ட நயவஞ்சகமான சதி நடவடிக்கைகள் மூலம் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த தமிழ் அரசனான கீர்த்தி ஸ்ரீ விக்கிரமசிங்கனின் ஆட்சி வீழ்த்தப்பட்டதுடன் அரசனும் குடும்பத்துடுன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். 1505ம் ஆண்டில் இலங்கையில் போர்த்துக்கீசர் கால்பதித்த காலம் தொட்டு போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கலேயர் என ஐரோப்பியர்கள் இலங்கையின் கரையோரப்பிரதேசங்களை கைப்பற்றித் தமது ஆட்சியை நிலைநிறுத்திய போதும் 1815 வரை அதாவது 225 வருடங்கள் கண்டி இராச்சியம் அடிபணிந்து விடாமல் தலைநிமிர்ந்து சுதந்திர பூமியாக விளங்கியது.

225 வருடங்கள் கட்டிக்காக்கப்பட்ட சுதந்திரத்தில் நாட்டைக்காக்கும் பணியில் கடைசி 76 வருடங்களிலும் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த தமிழ் அரசர்களே முன்னின்று அந்நியர் கண்டியை கைப்பற்ற மேற்கொண்ட சகல முயற்சிகளையும் முறியடித்தனர். எனினும் சிங்களப்பிரதானிகள் மேற்கொண்ட சதி மூலம் 1815ல் கண்டி அரசு வீழ்ச்சியடைய இலங்கை முழுமையாக பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் அடிமை நாடாக மாற்றப்பட்டது. ஆங்கில அரசுக்கு கப்பம் செலுத்தி கண்டி அரசை ஆட்சி செய்ய விரும்பிய சிங்களப்பிரதானிகளின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. அதன் காரணமாகவே இந்த நாடு 133 ஈண்டுகள் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்தது. மகாவம்சம் காலத்திலிருந்து இன்று வரை வரலாறு முழுவதுமே தமிழ் இனத்துக்கு எதிராகக் கட்டி வளர்க்கப்பட்ட குரோத உணர்வு காரணமாக இந்த நாடு கண்ட, கண்டுகொண்டிருக்கும் பின்னடைவுகள் கொஞ்சநஞ்சமல்ல.

திபேத்திய அரச குமாரனை அரசனாக்கச் சூழ்ச்சி

எவ்வாறு 1815ம் ஆண்டில் சதி மேற்கொள்ளப்பட்டு கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜ சிங்கனின் ஆட்சி துரோகத்தின் மூலம் வீழ்த்தப்பட்டதோ அவ்வாறான ஒரு முயற்சி 1780ம் ஆண்டில் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் ஆட்சிக்கெதிராக மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது நாயக்க வம்ச அரசனான கீர்த்தி ஸ்ரீ விஜயராஜ சிங்கனின் மரணத்தை அடுத்து கண்டியின் இரண்டாவது நாயக்க வம்ச அரசனாக கீர்த்தி ஸ்ரீ இராஜராஜசிங்கன் கி.பி 1749ம் ஆண்டு முடிசூடிக்கொண்டான்.

1739ம் ஆண்டு கண்டியை ஆட்சி செய்த சிங்கள மன்னனான வீர பராக்கிரம சிங்கன் வாரிசின்றி இறந்துவிட்ட நிலையில் கண்டியின் அரசாட்சியை தீர்மானிப்பவர்களாக விளங்கிய ரதல வம்சத்தைச் சேர்ந்த சிங்களப் பிரதானிகள் பொருத்தமான ஒருவனை அரசனாக நியமிக்கும் முயற்சியில் இறங்கினர்.

கண்டி அரசர்கள் தொடர்பாகச் சாதி சமய அடிப்படைகள் மிகவும் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. கண்டி அரசர்கள் சைத்திரீக வம்சத்தைச் சேர்ந்தவர்களாகவும், சூரிய அல்லது சந்திர குலத்தைச் சேர்ந்தவர்களாகவும் பௌத்த சமயத்தை கட்டிக்காப்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அவ்வகையான ஒரு ஆண்வாரிசு வீர பராக்கிரம சிங்கனுக்கு இல்லாத நிலையில் சிங்களப்பிரதானிகள் மதுரையில் ஆட்சி செய்த நாயக்க வம்ச அரசனின் பட்டத்துராணியின் தம்பியாரை அழைத்து வந்து கண்டியின் அரசனாக முடிசூட்டிக்கொண்டனர்.

முதலில் சேனசம்பந்த விக்கிரமபாகு வம்சத்திடமும், பின்பு விமல தர்ம சூரியன் வம்சத்திடமும் இருந்த கண்டியின் அரசுரிமை 1739ல் விஜய ராஜ சிங்கன் கண்டி அரசனாக முடி சூடப்பட்டதையடு;த்து நாயக்கர் வம்சத்தின் கைகளுக்கு வந்தது எனவெ விஜய ராஜ சிங்கனின் இறப்பை அடுத்து அவனின் சகோதரியின் மகனான ராஜாதஜராஜசிங்கனுக்கு முடி சூடப்பட்டது.

அவனது காலத்தில் கண்டி இராசதானியில் உள்ள விகாரைகள் யாவும் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றன. அது மட்டுமன்றி அவற்றை எவ்வித குறைபாடுகளுமின்றி பராமரிப்பதற்காக விவசாய நிலங்களை நிந்தமாக வழங்கியதுடன் அவற்றை விளைவிக்க வேண்டிய ஏற்பாடுகளையும் செய்தான். மேலும் அது வரையும் பாளி மொழியிலேயே சிங்கள மக்களின் இலக்கியங்கள் எழுதப்பட்டு வந்தன. இவன் காலத்திலேயே பல சிங்கள இலக்கிய நூல்கள் வெளிவந்தன. குறிப்பாக சந்தேசய என அழைக்கப்படும் அரசனுக்கும், ஆட்சிக்கும் நல்லாசி வேண்டிப் பாடப்பட்ட தூது இலக்கியங்கள் சிங்கள மொழியில் உருவாகின. மேலும் வாய்மொழி வழியாக தகப்பனிலிருந்து மகனுக்கு என ஒரு சில குறிப்பிட்ட குடும்பங்களுக்குள்ளேயே நிலவி வந்த சிங்கள பாரம்பரிய வைத்தியமுறை நூல்களாக ஏட்டு வடிவில் பதிவாக்கப்பட்டன.

அரசனின் முதல் மனைவியின் வேண்டுகோளின் பேரில் தஞ்சைப் பெரிய கோவிலின் வடிவில் கல்படுவ கோவில் அமைக்கப்பட்டது. இது ஒரு விஷ்ணு கோவிலாகவும், பௌத்த விகாரமாகவும் அமைக்கப்பட்டது. இந்து பௌத்த மக்களிடையே நிலவிய நல்லுறவின் அடிப்படையிலேயே “கல்படுவ”, கோவில் என அழைக்கப்படும் இந்த வாழிபாட்டிடம் அமைக்கப்பட்டது.

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனும் அவனது தம்பியான ராஜாதி ராஜசிம்மனும் மிகச்சிறுவயதிலேயே கண்டிக்கு வந்துவிட்டதால் அவர்கள் சிங்களம், பாளி ஆகிய இரு மொழிகளும் வல்லவர்களாகவும் சிங்கள பௌத்த கலாச்சாரத்தை பினபற்றுபவர்களாகவும் விளங்கிவந்தனர். அதுவரை கண்டி இராச்சியத்தில் எவருமே செய்திராத அளவுக்கு இராஜசிங்க மன்னன் பௌத்த சமய வளர்ச்சிக்கும் பௌத்த கட்டமைப்பின் சிறப்புக்கும் மேன்மைக்கும் பணியாற்றினான். தலதா மாளிகையின் பெருமைக்கும் பெரஹரா விழாவை சிறப்புடன் நடத்தவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தான். இந்த நடவடிக்கைகள் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் அவனுக்கு ஆதரவு பெருகியது. மேலும் புஸ்பராம விகாரத்தை மல்வத்த மஹாபீடமாக்கி உச்ச அந்தஸ்துக்கு உயர்த்தியமை பௌத்த சங்கத்தினர் மத்தியிலும் அவனை போற்றுதலுக்குரிய ஒரு மன்னனாக ஆக்கியது. மன்னன் பௌத்த மதத்திற்கும் கண்டி மக்களுக்கும் செய்த அளப்பரிய சேவைகளை பாராட்டி சில சிங்கள இலக்கிய நூல்களும் அக்கால கவிஞர்களால் பாடப்பட்டன.

கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் முடிசூடப்பட்டபோது அவனுக்கு வயது 16 மட்டுமே. அதன் காரணமாக அவன் முடிசூடப்பட்டு நான்கு வருடங்கள் கழிந்த பின்பே “மதுலஹடுவ” என அழைக்கப்படும் உடைவாள் அவனுக்கு வழங்கப்பட்டது. அவனின் குறைந்த வயது காரணமாக முடிசூடப்பட்ட போது அவனுக்கு அந்த வாள் வழங்கப்படவில்லை. மன்னனின் மூத்த மனைவியின் தந்தையான நரேந்திரப்ப நாயக்கரே அரசனின் பிரதான ஆலோசகராக விளங்கினார்.

மகா அதிகாரம், திசாவ போன்ற பதவிகளை வகித்து வந்த ரதல வம்ச சிங்கள பிரதானிகள் தாங்கள் நினைத்தபடி அரசனை ஆட்டிப்படைக்கமுடியாத நிலையில் நரேந்திரப்பரின் அதிகாரத்தை பறிக்க திட்டமிட்டனர்.

மஹா அதிகாரம் பதவி வகித்த எஹலப்பொல நிலமே நானப்பரின் அதிகாரங்களை பறிக்காவிட்டால் ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்ளப்போவதாக அரசனை மிரட்டினார். இந்த எஹலப்பொல நிலமே கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் வெள்ளையர் கண்டியை கைப்பற்ற வழிசமைத்துக் கொடுத்த எஹலப்பொலவின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வேறு வழியற்ற நிலையில் ரதல பிரபுக்களுடன் மோத விரும்பாத நிலையில் நானப்ப நாயக்கரை அதிகாரத்திலிருந்து அகற்றியதுடன் அவரது ஆலோசனைகளைப் பெறுவதையும் தவிர்த்துக் கொண்டான். எனினும் மகா அதிகாரமும், பிரதானிகளும் எதிர்பார்த்தது போல் அரசனை ஆட்டிப்படைக்க முடியவில்லை. மன்னன் தானாகவே முடிவெடுத்து செயற்படுமளவிற்கு தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டான். நானப்பர் அகற்றப்பட்ட பின்பு அரசனை ஆட்டிப்படைக்க முடியாத நிலையில் சிங்களப்பிரதானிகள் அரசனையே அகற்றுவதென இரகசிய முடிவெடுத்தனர். எனவே தீபெத்திய மன்னன் “பொறம்கொத்தின்” 2வது மனைவியின் மகனை அழைத்து வந்து முடிசூட்ட திட்மிட்டனர். ஆனால் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுக்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு காரணமாகவும் மகா சங்கத்தினர் மத்தியில் நிலவிய மதிப்பு காரணமாகவும் அரசனை நேரடியாக அதிகாரத்திலிருந்து அகற்றுவது சாத்தியப்படவில்லை.

எனவே “உப்பற் சம்பத்தாவ” என்ற பிக்குகள் அபிசேக உற்சவத்துக்கு தாய்லாந்திலிருந்து கப்பலில் பிக்குகளை வரவழைப்பதென்றும் அவர்களுடன் திபெத்திய இளவரசனைப் பிக்கு வேடத்தில் கூட்டி வருவதெனவும் அரசனனை சதி மூலம் கொன்றுவிட்டு அவருக்கு முடிசூடுவதெனவும் இரகசிய முடிவு எடுக்கப்பட்டது.

அவ்வகையில் குழயொன்று வெட்டப்பட்டு அதன்மேல் மறைப்பு போடப்பட்டு அந்த மறைப்பின் மேல் அரசனின் இருக்கை அமைக்கப்பட்டது. அரசனின் ஆசனத்துக்கு கீழ் வெளியே தெரியாதவாறு கூரிய இரும்புக்கம்பிகள் குழிக்குள் நடப்பட்டன. அரசன் மேளதாளங்களுடன் அழைத்துவரப்பட்டு ஆசனத்தில் அமரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான். ஆனால் அரசன் ஆசனத்தில் அமராது தன் கையில் கொண்டுவந்த தடியால் குழிக்கு மேல் மறைப்பாக போடப்பட்டிருந்த துணியை அகற்றிவிட்டு குழியை சுட்டிக்காட்டினான். உடனடியாகவே கலகொட திசாவையினால் குழி மூடப்பட்டு அரசன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். அரசனின் கட்டளைப்படி சதிகாரர்கள் என அனைவரும் கலகொட திசாவையினால் கைது செய்யப்பட்டனர்.

சமரகொடி திசாவ, மொன்போறால், கடுவலரால், மத்தனப்பொல திசாவ ஆகிய நான்கு ரதல பிரபுக்களும் கைது செய்யப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டனர். அரசனின் இராஜகுருவாக விளங்கிய சங்கராஜர் ஆகிய சரணந்த தேரர், திப்பட்டுவ சுமங்கல தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிந்தென்ன என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டனர். பின்பு மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு அமைவாக சிறைவைக்கப்பட்ட பிக்குகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சரணங்க தேரருக்கு மீண்டும் சங்கராஜ பதவி வழங்கப்பட்டதுடன் சுமங்கல தேரருக்கு மல்வத்த பீடத்தில் கௌரவ பதவியும் வழங்கப்பட்டது. பிக்கு வேடத்திலிருந்த திபெத்திய இளவரசனும் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டான்.

அதன் பின்பு மகா அதிகாரமாக பதவியேற்ற பிலிமெத்தலாவை அரசனைக் கொல்வதற்கான சதியில் பங்கு கொண்டாரா இல்லையா என்பது தெரியாத நிலையில் அவர் தொடர்பாக அரசன் மிகவும் எச்சரிக்கையாக இருந்தான். கலகொடதிசாவையை மன்னன் தனது பாதுகாப்புக்கு பொறுப்பாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் வைத்துக்கொண்டான்.

அவன் தொடர்ந்து ஆட்சிசெய்து 1782ம் ஆண்டு வரை எவ்வித குழப்பங்களும் இடம்பெறவில்லை. அவனின் இறப்பின் பின் அவனது தம்பியான இராஜாதி ராஜசிங்கன் மன்னனாக முடிசூடிக்கொண்டான். அவனது ஆட்சிக்காலத்தில் மகா அதிகாரமாக விளங்கிய பிலிமெத்தலாவ தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொண்ட போது அரசனுக்கும் அவனுக்கும் முரண்பாடுகள் எழுந்தன. மக்கள் ஆதரவும் மல்வத்த பீடத்தின் செல்வாக்கும் இருந்த காரணத்தால் அவனால் அரசனை எதுவும் செய்யமுடியவில்லை. எனினும் 1798ல் அரசன் மரணமடைந்த போது அவனது இறப்பின் பின் பிலிமத்தலாவில் சதி இருந்ததாகவே கருதப்பட்டது.

இராஜாதி ராஜசிங்கனின் இறப்பின் பின்பு மன்னனின் மூத்த மனைவியின் சகோதரனான முத்துசாமியே அரசனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழமையான சம்பிரதாயங்கள் மீறப்பட்டு 2வது மனைவியின் சகோதரியின் மகனான கண்ணுச்சாமி அரசனாக்கப்பட்டான். 18 வயதுடைய அவனை அரசனாக்குவதன் மூலம் தானே ஒரு நிழல் அரசனாக அதிகாரத்தை செலுத்த முடியுமென மகா அதிகாரம் பிலிமத்தலாவை நம்பினான். எனவே அவனின் முயற்சியின் காரணமாக கண்ணுசாமி கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் என்ற சிம்மமசனப் பெயருடன் முடிசூட்டப்பட்டான். அவனே இலங்கையின் கடைசி மன்னனாவான். ரதல பிரபுக்களின் சதி மூலம் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயரால் கைப்பற்றுவிட இலங்கையின் சுதந்திரம் முழுமையாக பறிபோனது.

கண்டி இராச்சிய காலத்தில் மூன்று வம்சங்கள் ஆட்சி செய்தன. அதில் முதலாவது சேன சம்பத்த விக்ரம வம்சமும், அடுத்து விமல தர்ம சூரிய வம்சமும் இறுதியில் நாயக்க வம்சமும் கண்டியை ஆட்சி செய்தன. விமல தர்ம சூரிய வம்சத்தின் கடைசி மன்னனான ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கன் வாரிசின்றி இறந்த பின்பு ரதல பிரபுக்கள் நாயக்க வம்சத்தின் இளவரசனை அழைத்து வந்து அவனிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.

கண்டி இராச்சியம் நாயக்க வம்சத்தால் படையெடுப்பின் மூலமோ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலமோ கைப்பற்றப்படவில்லை. மாறாக ரதல பிரபுக்களே மதுரை சென்று விஜயராஜ சிங்கனை அழைத்து வந்து அவனுக்கு முடிசூட்டினர். ஆனால் அவர்களால் வலிந்து அழைத்து வரப்பட்ட நாயக்க வம்ச அரசர்களுக்கு எதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டு அவர்களின் ஆட்சிகளை வீழ்த்த முயன்றதும் வரலாறாக காணப்படுகிறது. பொதுவாக தங்களால் மன்னர்களை ஆட்டிப்படைக்க முடியாத நிலையிலேயே மன்னர்களைக் கொல்லும் முயற்சிகளை மேற்கொண்டனர். அத்தகைய முயற்சிகளில் இறுதிக் கைங்கரியமாக கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் ஆட்சியை வீழ்த்த மேற்கொண்ட நயவஞ்சக சூழ்ச்சி மூலம் இலங்கையின் முழுச் சுதந்திரமுமே அந்நியரிடம் பறிகொடுக்கப்பட்து.

மகாவம்ச காலம் தொட்டு இன்று வரை தேவைகளை நிறைவேற்ற தமிழர்களுடன் நட்புக் கொள்வதும் தமது தேவைகள் நிறைவேறியதும் தமிழர்களுக்கு எதிராக திரும்புவதும் வரலாறாக விளங்கி வந்துள்ளது. அதாவது சிங்கள அதிகார பீடங்கள் மத்தியில் தமிழ் மக்கள் மீதான குரோத மனப்பான்மை நீறு பூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருப்பது அன்றிலிருந்து இன்று வரை நிரந்தரமாக நிலைபெற்று விட்டது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE