Friday 26th of April 2024 12:04:33 PM GMT

LANGUAGE - TAMIL
ராஜித சேனரத்ன
ராஜிதவின் பிணை மனு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்: ஜூன்-10 வரை விளக்க மறியல் நீடிப்பு!

ராஜிதவின் பிணை மனு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்: ஜூன்-10 வரை விளக்க மறியல் நீடிப்பு!


விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னவின் பிணை மனுவை பரிசீலிப்பதை, மற்றுமொரு நீதிமன்றிற்கு மாற்றும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (மே-27) இவ்வுத்தரவை வழங்கினார். இன்று (மே-27) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையில் அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா பிணை மனுவை சமர்ப்பித்தார்.

இவ்வழக்கு தொடர்பில் கடந்த காலத்தில் ஏற்பட்ட நிலைமைகளை கருத்திற் கொண்டு, குறித்த பிணை மனு பரீசீலனையை மற்றுமொரு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

சட்டமா அதிபர் விடுத்துள்ள இக்கோரிக்கை தொடர்பில் தமக்கு வருத்தமளிப்பதாக, இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா தெரிவித்தார்.

சுயாதீன எண்ணம் கொண்ட நீதிபதியொருவர் முன்னிலையில் இந்த பிணை விண்ணப்பத்தை பரீசீலிப்பதற்காகவே தாம் இக்கோரிக்கையை முன்வைத்ததாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அதற்கு பதிலளித்தார்.

இதன்போது திறந்த நீதிமன்றத்தில் அதற்கு பதிலளித்த கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, நீதிபதிகளுக்கு சுதந்திரமான மனதுடன் முடிவெடுக்கும் திறன் உள்ளது என்று கூறினார்.

ஆயினும், நீதிபதி ஒருவரால் எந்தவொரு தரப்பினரும் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக தப்பெண்ணம் கொள்ளும் நிலையில், இப்பிணை மனு விண்ணப்பத்தை மற்றுமொரு நீதிபதிக்கு அனுப்ப தாம் தயாராக உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். அதற்கமைய, குறித்த பிணை மனுவை கொழும்பு இலக்கம் 02, மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவிற்கு மாற்றுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் குறித்த பிணை மனு சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியல் உத்தரவை நீடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றையதினம் (ஜூன்-10) குறித்த பிணை மனு தொடர்பான முடிவை அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பான வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து, சட்டமா அதிபர் விண்ணப்பித்த மீள்திருத்த மனுவிற்கு அமைய, கொழும்பு மேல் நீதிமன்றம் அவரது பிணையை இரத்து செய்வதாக (மே-13) அறிவித்திருந்தது.

இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, ஊஐனு யிற்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அன்றையதினம் (மே-13) தனது சட்டத்தரணியுடன் ஊஐனுயில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டதோடு, அவருக்கு இன்று (மே-27) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக விளக்கமறியல் செய்யப்படும் அனைத்து சந்தேகநபர்களும் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்படும் நடவடிக்கைக்கு அமைய, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீர்கொழும்பு பல்லன்சேனவிலுள்ள இளம் குற்றவாளிகளை சீர்திருத்தும் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE