Friday 26th of April 2024 10:59:19 PM GMT

LANGUAGE - TAMIL
-
நிற வெறிக்கெதிராக கிளந்தெழுந்துள்ள  மக்களால் பற்றி எரியும் அமெரிக்கா!

நிற வெறிக்கெதிராக கிளந்தெழுந்துள்ள மக்களால் பற்றி எரியும் அமெரிக்கா!


அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபிலாய்ட் பொலிஸாரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை எதிா்த்து நாடு முழுவதும் போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவற்றைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.

முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆப்ரிக்க – அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபிலாய்ட் வெள்ளையின பொலிஸ் அதிகாரி ஒருவரால் கழுத்தில் காலால் மிதித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட காட்சி ஊடகங்களில் வெளியானதை அடுத்தே அங்கு கறுப்பின மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஜோர்ஜ் ஃபிலாய்ட் கொலைக்கு நீதி கோரும் போராட்டமாக மட்டும் இல்லாமல் அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் இந்தப் போராட்டம் விரிவடைந்துள்ளது.

மினியாபொலிஸ் பிராந்தியத்தில் ஆரம்பமான இந்தப் போராட்டம் நியூயோர்க், துல்சா, லொஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட 13 -க்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பரவியுள்ளது. பொலிஸ் வாகனங்கள், பொலிஸ் நிலையங்கள், கட்டடங்கள் தீவைக்கப்பட்டன. ஆங்காங்கே கடைகள் சூறையாடப்பட்டன.

கொரோனா சமூக முடக்கலையும் மீறி பெரிய அளவில் நாட்டின் பல மாகாணங்களில் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மக்கள் தெருவில் இறங்கி அமைதிவழியில் எதிர்ப்பைக் காட்டினர். முதல் நாள் போராட்டமும் அமைதியாகத் தொடங்கினாலும் நேற்று அங்கு பெரும் வன்முறை வெடித்தது.

வொஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகிலேயே புலனாய்வு அமைப்புக்கு எதிராகவும் ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராகவும் நேற்று போராட்டம் இடம்பெற்றது. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் பாதுகாப்பு தடுப்புகளையும் மீறி உள்ளே நுழைய முயன்றனர். எனினும் பொலிஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.

பிலடெல்பியாவில் அமைதி போராட்டம் வன்முறையாக மாறியதில் 13 பொலிஸாா் படுகாயமடைந்தனர். 4 பொலிஸ் வாகனங்கள் தீவைத்துக் எரிக்கப்பட்டன. பல இடங்களிலும் ஆங்காங்கே தீவைப்பு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

ஓக்லஹாமாவின் துல்சா கிரீன்வுட் மாவட்டத்தில் உள்ள 1921 கறுப்பர்கள் படுகொலை நிகழ்ந்த இடத்திலும் நேற்று பெரும் போராட்டம் வெடித்தது.

லொஸ் ஏஞ்சலஸில் ‘கருப்பர் உயிர்கள் முக்கியம்’ என்ற கோஷங்கள் எதிரொலித்தன.

இங்கும் பொலிஸாா் தடியடி நடத்தியும் ரப்பர் குண்டுகளைப் பிரயோகித்தும் ஆா்ப்பாட்டக்காரா்களைக் கலைத்தனா். இங்கு போராட்டக்காரா்களால் பொலிஸாரின் காா்கள் அடித்து உடைக்கப்பட்டன. ஒரு பொலிஸ் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது.

நாட்டில் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் 13 அமெரிக்க நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 16 நகரங்களில் இதுவரை 1400 பேர் கைது செய்யப்பட்டனர். லொஸ் ஏஞ்சலில் மட்டும் 500 பேர் கைதாகியுள்ளனா்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE