Friday 26th of April 2024 12:40:20 PM GMT

LANGUAGE - TAMIL
-
தீயுடன் சங்கமமானது ஆறுமுகன் தொண்டமானில் புகழுடல்!

தீயுடன் சங்கமமானது ஆறுமுகன் தொண்டமானில் புகழுடல்!


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இன்று மாலை தீயுடன் சங்கமானது.

மாரடைப்பால் கடந்த 26 ஆம் திகதி காலமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இரண்டு நாட்களாக கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் அதன்பின்னர் கம்பளை - நுவரெலியா வீதியூடாக வாகன பேரணியில் இரம்பொடை வேவண்டன் இல்லத்துக்கு எடுத்துவரப்பட்டது.

அன்னாரின் பூர்வீக இல்லத்தில் வைத்து ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடுகளும், இந்துமத முறைப்படியிலான சடங்குகளும் இடம்பெற்றன.

அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செலுத்தினர். மக்கள் திரள ஆரம்பித்ததால், தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பு கருதி நுவரெலியா மாவட்டத்துக்கு இரண்டு நாட்கள் பொலிஸ் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின்னர் ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சிஎல்எப் வளாகத்துக்கு அன்னாரின் பூதவுடல் எடுத்துவரப்பட்டது.

ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீதிகளில் இருமருங்கிளில் காத்திருந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கொட்டகலை சிஎல்எப் வளாகத்தில் வைத்து சர்வமதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு இரு நாட்களாக அஞ்சலி செலுத்தினர். இவ்விரண்டு நாட்களும் நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். பொது சுகாதார அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபட்டனர். புலனாய்வாளர்களும் சேவைக்கு அமர்த்தப்பட்டனர். பொலிஸாரின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஏனையோர் திருப்பியனுப்பட்டனர்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து நகரங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்களின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

பிற்பகல் 2 மணியளவில் கொட்டகலையில் இருந்து நோர்வூட் மைதானத்தை நோக்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் எடுத்துவரப்பட்டது. மக்கள் வீதிகளில் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நோர்வூட் மைதானத்தைசூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு சூழல் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.

சர்வமதத் தலைவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையின் உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மேலும் சில பிரமுகர்களும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களும், அமரர் தொண்டமானின் குடும்பத்தாரும் என 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின்னர் மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான மகாநாயக்க தேரர், இந்து மதகுரு, இஸ்லாம் மௌலவி, அருட்தந்தை ஆகியோர் ஆன்மீக உரை நிகழ்த்தி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வழிபட்டனர்.

சர்வமத தலைவர்களின் உரைகள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அனுதாப செய்தி மும்மொழிகளிலும் வாசிக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆனுதாப செய்தி, மத்திய மாகாண ஆளுநரால் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஜீவன் தொண்டமானிடம் கையளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அனுதாப உரை இடம்பெற்றது. அமரர். ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் பயணத்தை பாராட்டிய பிரதமர், இறுதி சந்திப்பின்போது தன்னிடம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

அதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இரங்கல் உரையாற்றினார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள எதிர்க்கட்சிகளின் சார்பில் நவீன் திஸாநாயக்க அனுதாப உரையாற்றினார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியின் சார்பில் மஹிந்தானந்த அளுத்கமகே உரையாற்றினார். ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தின் சார்பில் ஜீவன் தொண்டமான் நன்றியுரை ஆற்றினார்.

இவ்வாறு இரங்கல் உரைகள் முடிவடைந்த பின்னர் இந்துசமய முறைப்படி மகன் ஜீவன் தொண்டமான் பூதவுடலுக்கு தீ மூட்டினார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE