Friday 26th of April 2024 07:59:39 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஒரு தலைப்பட்சமான தேசத்துரோகமும் தேச பக்தியும் (வரலாற்றுத் தொடர்)

ஒரு தலைப்பட்சமான தேசத்துரோகமும் தேச பக்தியும் (வரலாற்றுத் தொடர்)


“தாயகத்தின் விடுதலையை ஈட்டிக் கொண்டு அதன் மூலம் எமது இறைமையைப் பாதுகாத்துக் கொள்வதைக் குறிக்கோளாகக் கொண்டு போராடுவதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டோம் எனினும் என்னால் அம்முயற்சி முழுமையான வெற்றி பெறப்பாடுபட இயலாமற் போய்விட்டது. நான் தோற்றுப் போய்விட்டேன். இன்னும் சில விநாடிகளில் நான் மரணமடைந்து விடுவேன். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதவனாகவே நான் மடியப் போகிறேன். தாய் நாட்டுக்காக நிறைவேற்ற வேண்டிய கடமையை சரியாகச் செய்யாத ஒருவனுக்கு மரியாதை மிகுந்த நல்லடக்கம் கிட்டக்கூடாது. எனவே நான் இறந்த பிறகு எனது உடலைத் துண்டு துண்டாக வெட்டி காகங்களுக்கும், நாய்களுக்கும் போட்டு விடுங்கள்”

ஊவா வெல்லசக் கிளர்ச்சியின் இறுதிக்கட்டத்தின் போது ஆங்கிலேயரின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்த மாத்தளைப் பிரதேசத்தை முற்றுகையிட்டு அதைக் கைப்பற்ற மடுகல்ல திசாவையுடன் இணைந்து தயாராகிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சில சிங்களப்பிரதானிகளின் காட்டிக்கொடுப்பில் உடும்பறை மரபெத்த பகுதியில் அமைந்திருந்த கற்குகைகளில் வைத்துக் கைது செய்யப்பட்ட விடுதலை வீரன் எல்லோபொலதனவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த சந்தர்ப்பத்தில் ஆற்றிய உரையின் உணர்வு பூர்வமான வரிகள் இவை.

ஊவா வெல்லச கிளர்ச்சிக்குத் தலைமையேற்று பின்னாட்களில் ஆங்கிலேயருடன் நடத்திய கெப்பிட்டிப்பொல அவனின் மைத்துனரான எஹலப்பொல ஆகியோர் 1815ம் ஆண்டு காலப்பகுதியில் இணைணந்து படை நடத்தி கண்டியின் தமிழ் மன்னனான கீர்த்தி ஸ்ரீ விக்கிரமசிங்கனின் ஆட்சியைக் கவிழ்த்து முழு இலங்கையின் சுதந்திரத்தையும் ஆங்கிலேயரை எதிர்த்து கண்டி அரசனுக்கு விசுவாசமாகச் செயற்பட்டவர்களில் மடுகல்ல, எகலப்பொல ஆகியோர் முக்கியமானவாகள் இலங்கையை அடிமை நாடாக்கிய அடிமை சாசனமான கண்டி ஒப்பந்தத்திலும் இவர்கள் கையொப்பம் இடவில்லை.

உடதும்பறையில் வைத்து கைது செய்யப்பட்ட எல்லேபொலவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. அவன் கண்டிய மரபின்படி சிரச்சேதம் செய்யும்படி கேட்கிறான்.

மரணம் நெருங்கிவிட்ட நிலையிலும் தன் தாய் நாட்டின் மீதம் அதன் விடுதலை மீது தான் கொண்ட வேட்கையை வீரத்துடனும், நெஞ்சுறுதியுடன் வெளிப்படுத்தினான் எல்லேபொல.

அதேவேளை நுவரகலவியாவில் உள்ள காவரல்ல கிராமத்தில் வைத்து கெப்பட்டிப்பொல கைது செய்யப்பட்டபொது 300 வீரர்களுடன் தப்பிச் சென்ற மடுகல்ல, எலஹர குன்றுகளுக்கு அப்பாற்பட்ட காடு ஒன்றில் வைத்து தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டான். ஏற்கனவே கீர்த்தி ஸ்ரீ விக்கரமராஜசிங்கன் மறைந்திருந்த இடத்தைக் காட்டிக்கொடுத்த எக்னொலிக்கொட என்ற துரோகியே பிட்டாவ மாத்தையா என்ற பேரில் உலவிய மடுகலவைக் காட்டிக் கொடுத்தான். மடுகல்லவும் கெப்பிட்டிப்பொல சிரச்சேதம் செய்து கொல்லப்பட்ட அன்று அதே இடத்தில் வைத்து சிரச்சேதம் செய்யப்பட்டான்.

பிலிமெத்தலாவ, கெப்பிட்டிப்பொல, எல்லாபொல, மடுகல்ல இஹாகம தேரர், வாரியப்பொல தேரர் உட்பட இருநூற்றுக்கு மேற்பட்டோh ஆங்கில ஆட்சியாளர்களால் 1818ம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டதுடன் சிலருக்கு மரணதண்டனையும் காலவரையற்ற சிறையும் வழங்கப்பட்டன. சிலர் நாடுகடத்தப்பட்டனர். மேலும் அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

1815ம் ஆண்டில் கண்டி ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனும், அவனது உறவினர்களும் தேசத்துரோகிகளாக்கப்பட்டதுடன் கண்டி இராச்சியத்துக்குள் நுழையும் அனுமதியும் மறுக்கப்பட்டது. அப்படி நுழைந்தால் கண்டவுடன் சுடும் அதிகாரம் பாவிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டு 180 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் ஆங்கலேயர் நாட்டையிவிட்டு போய் 68 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இலங்கையின் னடைசி அரசனும் அந்த விடுதலை வீரர்களும் 2016 வரை தேசத்துரோகிகளாகவே சட்டப்படி கணிக்கப்பட்டனர்.

தாய் நாட்டைப்பற்றியும் தமது மதத்தைப் பற்றியுமான மேன்மையான கருத்துகளை ஏனைய இனங்களை ஒடுக்கும் ஆயுதங்களாக பாவிக்கும் எந்த ஒரு சிங்களத் தேசியவாதியும் இலங்கை சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையினில் கடைசிக் கண்டி மன்னனையும் விடுதலை வீரர்களையும் தேசத்துரோகிககளாக ஏற்றுக்கொண்டிருந்தனர் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. அதற்காக அவர்கள் வெட்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

எனினும் 2016ம் ஆண்டில் சில உணமையான தேசிய சக்திகள் கொடுத்த அழுத்தத்தினால் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கெப்பிட்டிப்பொல உட்பட தேசத்துரோகிகளாக ஆங்கிலேயரால் பிரகடனப்படுத்தப்பட்ட 19 பேர் தொடர்பான 1818ம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேசத்துரோகிககளாக பிரகடனப்படுத்தப்பட்டமையை இரத்துச்செய்து அவர்களை தேசிய வீரர்களாக அறிவித்தார். அதன் மூலம் கெப்பிட்டிப்பொலவும் மற்றும் 11பேரும் தேசத்துரோகக் குற்றச்சாடடிலிருந்து விடுவிக்கப்பட்டு தேசிய வீரர்களாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டனர்.

நிச்சயமாக 19பேருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தேசிய வீரர்கள் தகுதி வழங்கப்பட்டமையை பாராட்டாமல் இருக்கமுடியாது. ஆனால் இதில் உள்ளீர்க்கப்பட்டவர்களையும் தவிர்க்கப்பட்டவர்களையும் நோக்கும் போது இப்பிரகடனத்தின் நியாயமின்மை தென்படத்தான் செய்கிறது. இங்கு இனவாதமும், இன ஒதுக்கலும் மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகிறது.

1815ல் கீhத்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் ஆட்சியைக் கவிழ்க்க எகலப்பொல, கெப்பிட்டிப்பொல ஆகியோர் ஆங்கிலப் படைகளுடன் இணைந்து படை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படையெடுப்பின் வெற்றியுடன் இலங்கையின் சுதந்திரம் முற்றாகவே பறிபோனது. அதாவது இலங்கையின் சுதந்திரம் பறிக்கப்பட்டதில் எகலப்பொல, கெப்பிட்டிப்பொல ஆகியோர் பங்காளிகளாக செற்பட்டனர் என்பதை மறுத்துவிட முடியாது. 1816ல் ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஊவாவில் கிளர்ச்சி ஆரம்பமான போது அதை அடக்க கெப்பிட்டிப்பொல தலைமையிலான படை ஆங்கிலேயரால் அனுப்பப்பட்டது. ஆனால் ஊவா வெல்லசப் பிரதேசத்தில் நிலவிய நிலைமைகள் கெப்பிட்டிப்பொலவை கிளர்ச்சியில் இணைந்து கொள்ள வைத்தது. அதுவரை ஆங்கிலேயரின் விசுவாசியாக செயற்பட்டு உவா பகுதியின் திசாவையாக பணியாற்றிய கெப்பிட்டிப்பொல 1816 நடுப்பகுதியில் புரட்சியின்பால் ஈர்க்கப்பட்டதுடன் அதற்கு தலைமை தாங்குமளவுக்கு தீவிரமாக செயற்பட்டான். ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை கெப்பிட்டிப்பொல ஆங்கிலெயரின் விசுவாசியாகச் செயற்பட்ட போதிலும் பின்னாட்களில் புரட்சியை வழிநடத்தியவன் என்ற முறையில் தேசிய வீரனாக அவன் ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறைகூற முடியாது.

போர்த்துக்கேயா, ஒல்லாந்தர், ஆங்கிலேயரென அந்நியப் படையெடுப்பாளர்கள் இலங்கையின் கரையொரங்களைக் கைப்பற்றிய போதும் கண்டிய இராச்சியத்;தை அவர்கள் எவரையுமே கைப்பற்ற விடாது பாதுகாத்த பெருமை கீhத்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுக்கும், அவனுடைய முன்னோர்களான நாயக்க வம்ச அரசர்களுக்குமே உரியதாகும். அதிலும் கீhத்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் காலத்தில் கண்டியைக் கைப்பற்ற 1803, 1812 ஆகிய காலப்பகுதிகளில் மேற்கொண்ட ஆங்கிலேயரின் படையெடுப்புகள் முறியடிக்கப்பட்டனர். ஆங்கிலப் படைகள் கெரில்லாப் போர் முறை மூலம் விரட்டியடிக்கப்பட்டனர்.

ஆனால் 1815ல் எகலப்பொல, கெப்பிட்டிப்பொல உட்பட சில சிங்களப்பிரபுக்களின் ஒத்துழைப்புடன் கண்டி கைப்பற்றப்பட்டதுடன் மன்னன் கைது செய்யப்பட்டு வெலூர் சிறையிலடைக்கப்பட்டு அங்கேயே மரணமடைந்தான்.

இலங்கையின் சுதந்திரம் இறைமை என்பன பற்றிப் பேசும்போது அவற்றிற்காக அhப்பணிப்புடன் போராடியவர்களில் முதலிடத்தில் வைக்கப்பட வேண்டிய கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால் 2016ம் ஆண்டில் ஐனாபதி மைத்திரி பால சிறிசேனவின் பிரகடனத்தில் மன்னன் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு நீக்கப்படவுமில்லை, அவர் தேசிய வீரராக பிரகடனப்படுத்தப்படவுமில்லை.

மடுகல்ல, எல்லேப்பொல ஆகியோர் 1815ல் ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றிய போது அதைத் தீவிரமாக எதிர்த்தது மட்டுமன்றி கண்டி கைப்பற்றப்படுவதற்கு ஆதரவளித்த பிலிமத்தலாவ, எகலப்பொல ஆகியோருடன் முரண்பட்டவர்கள். 1816 – 1818 ஊவா வெல்லசக் கிளர்ச்சியில் தீவிரமாக பங்கு கொண்டு படை நடத்தி ஆங்கில ஆட்சியாளர்களைத் திணரடித்தவர்கள். இருவரும் சில சிங்களப்பிரதானிகளால் காட்டிக்கொடுக்கபட்டு கைது செய்யப்பட்டு இறுதியில் சிரச்சேதம் செய்யப்பட்டனர். எல்லேப்பொல விடுதலையைப் பெறாமல் தான் மரணமடைவதால் தான் ஒரு குற்றவாளியென்றும், குற்றவாளியான தனக்கு முறையான நல்லடக்கம் வழங்கப்படக்கூடாதெனவும் தனது மரணத் தறுவாயில் கேட்டுக்கொண்டான். அவ்வளவு தூரம் அவன் தனது நாட்டின் இறைமையை தன் உயிரைவிட நேசித்தான்.

ஆனால் மடுகல்ல, எப்பாப்பொல ஆகிய ஒப்பற்ற விடுதலை வீரர்களின் மீது சுமத்தப்பட்ட தேசத்துரோகக் குற்றச்சாட்டு முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறீ சேனநாயக்காவால் நீக்கப்படவோ, அவர்கள் தேசிய வீரர்களாய் பிரகடனப்படுத்தப்படவோ இல்லை. அது தொடர்பாக எந்தவொரு சிங்களத் தேசியவாதியும் குறல் கொடுக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் தமிழரின் ஆட்சியைக் கவிழ்க்க நாட்டின் சுதந்திரத்தை விற்றவர்கள் பின்னாட்களில் கிளர்ச்சியில் இறங்கியமையால் அவர்கள் தேசபக்தர்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர்.

ஆனால் இறுதிவரை கணடி அரசின் சுதந்திரத்தை பாதுகாக்க போரிட்ட கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தமிழன் என்பதாலும், மடுகல்ல, எப்பாப்பொல்ல ஆகியோர் ஏனைய சிங்களப் பிரபுக்கள் ஆங்கிலேயரின் அடி வருடிகளாக மாறிய போது தமிழரசனின் பக்கம் நின்று கண்டியின் சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடினார்கள் என்பதற்காகவே இந்த இருதரப்பினரும் தேசத்துரோகக் குற்றம் நீக்கப்பட்டு தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தப்படவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.

கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்க மன்னன் தோற்கடிக்கப்பட்டு இலங்கையின் சுதந்திரம் சிங்களப் பிரபுக்களால் விற்கப்பட்டமைக்கு இனக்குரோதம் எவ்வாறு காரணமாக அமைந்ததோ அவ்வாறே அவரின் மீதும் மடுகல்ல, எப்பாப்பொல ஆகியோர்மீதும் சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டு அவர்கள் தேசிய வீரர்களாக பிரககடனப்படுத்தப்படாமைக்கு அடிப்படைக்காரணம் இனக் குரோதமே என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE