Friday 26th of April 2024 10:32:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
“சிறைக் கம்பிகளுக்குள் நிகழும் வெளித் தெரியாத் துயரம்“ - அகநிலா

“சிறைக் கம்பிகளுக்குள் நிகழும் வெளித் தெரியாத் துயரம்“ - அகநிலா


கொழும்பு வெலிக்கடையில் அமைந்துள்ள சிறைச்சாலை தலைமையகத்தின் பெருஞ்சுவற்றின் மீது “சிறைக்கைதிகளும் மனிதர்களே” என்ற ஒரு வாசகம் மும்மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தினைக் கடந்து செல்லும் அனைவருக்கும்; அந்த வாசகத்தினைப் பார்த்த பின்பு கைதிகள் மீது சடுதியாக அனுதாப உணர்வு ஏற்படுவது வழமையாகும். ஆயினும், துரதிருஷ்டவசமாக நாலாபுறமும் அடைக்கப்பட்ட அந்த பெருஞ்சுவற்றுகளுக்குள் உள்ள சிறைச்சாலை என்ற உலகம் மற்றும் அங்குள்ள கைதிகள் பற்றிய பார்வை என்பது சமூகத்தில் மேலோட்டமானதாகவே உள்ளது.

அந்த பெருஞ்சுவர்கள் எத்தனையோ கைதிகளின் துன்புறுத்தல்களின் வலிகளையும். அடக்குமுறையின் வேதனைகளையும் தாங்கிக் கொண்டு நிற்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. வெலிக்கடை சிறைச்சாலை என்றாலே தமிழர்கள் மனதில் ஒருவிதமான அச்ச உணர்வு ஏற்பட்டு விடும். தமிழர்களின் மனங்களில் மாறாத மனவடுவாக இருக்கும் பல கசப்பான வரலாற்று சம்பவங்களில், வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த கொடூரப் படுகொலைகளும் என்றுமே இலகுவில் மறக்கப்பட முடியாததாகவே உள்ளது. அத்துடன் 2012ம் ஆண்டு 27 கைதிகள் கொல்லப்பட்ட துயரச் சம்பவமும் வெலிக்கடை சிறைச்சாலையிலேயே நடைபெற்றது. இச்சம்பவம் தென்னிலங்கையில் அனைவரினதும் கவனத்தினைப் பெற்ற சம்பவமாக இருந்தது.

இந்த அடிப்படையில் பார்த்தால் வெலிக்கடை சிறைச்சாலையில் மட்டுமன்றி இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள தண்டனைக் கைதிகளும், சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் ஒருபோதும் மனிதர்களாக மதிக்கப்படுவது இல்லை என்பதே கசப்பான உண்மையாகும். அவ்வாறாயின் அந்த பெருஞ்சுவற்றின் மீது இருக்கும் அந்த வாசகத்தின் உண்மை நிலை என்பது எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

கடந்த மே 3ம் திகதி நிகழ்ந்த எம்.எச்.காவிந்த இசுறு திசேரா (வயது 27) என்ற கைதியின் மரணம், இலங்கை சிறைக்கைதிகளின் மனித உரிமைகளை மீண்டும் கேள்விக்குறியாக்கிய ஓர் துயரச் சம்பவமாக உள்ளது. மஹர சிறைச்சாலையிலிருந்து தப்பியோட எத்தனித்த வேளை உயரமான சிறைச்சாலை மதில் சுவற்றிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்து இறந்ததாக சிறைச்சாலை அதிகாரிகளினால் கூறப்பட்ட இந்த நபரின் மரணம், சிறை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான சித்திரவதைகளினால் நிகழ்ந்தது என்றும், இது ஒரு கொடூரமான படுகொலை என்றும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு குற்றம் சுமத்தியிருந்தது. திருட்டுக் குற்றம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த ஏப்ரல் 28ம் திகதி கடவத்த பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்நபரை சிறை அதிகாரிகள் அடித்து துன்புறுத்துவதனை நேரில் ஓர் கைதி பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (19) வத்தளை நீதிமன்றத்தில் ஆஜாரான அந்த கைதியின் சாட்சியத்தைப் பெற்றுக் கொண்ட வத்தளை மஜிஸ்திரேட், அந்த கைதிக்கு உரிய பாதுகாப்பினை அளிக்குமாறு ராகம பொலிசாருக்கு பணித்திருந்தார். அத்துடன் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுலை 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று பிரசாரத்தினை முன்வைத்து இந்நபரின் மரணத்தை நியாயப்படுத்த சிறை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளை சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு முறியடித்துள்ளதுடன் கொந்தராத்து ஒன்றின் அடிப்படையில் சிறை அதிகாரிகளினால் இந்த கொலை நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் அந்த குழு சந்தேகம் தெரிவித்துள்ளது. கால்கள் மற்றும் கைகள் முறிக்கப்பட்ட நிலையிலும், தலையின் பின் பகுதியில் ஆழமான வெட்டுக் காயமும், பொல்லுகளால் அவரை அடித்த காயங்களும் அவரது உடலில் இருந்துள்ளன. இந்த சம்பவம் இலங்கையில் சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம் பெறுகின்ற மனித உரிமை மீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் மிக அண்மைக்கால உதாரணம் என்று சிறைக்கைதிகளைப் பாதுகாக்கும் குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக திசேராவின் பெற்றோர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த 1ம் திகதி முறைப்பாடு ஒன்றைக் கையளித்ததுடன், நீதியான விசாரணைகளை நடத்தி தனது மகனின் மரணத்திற்கு நியாயம் பெற்றுத் தருமாறு கேட்டிருந்தனர். ஆனால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டு கிட்டத்தட்ட 3 வாரங்கள் கழிந்துள்ள நிலையில் இது வரை இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை. திசேரா கைது செய்யப்பட்ட ஏப்ரல் 28ம் திகதி முதல் இறக்கும் 3ம் திகதி வரை அவர் பட்டினியாக இருந்துள்ளார். அவர் உணவு உட்கொள்ள தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. அவ்வாறாயின் பல நாட்கள் பட்டினி கிடந்த ஒருவர் சுமார் 20 அடி உயரமான சுவற்றில் ஏறி எப்படி குதித்து தப்ப எத்தனிக்க முடியும் என்று இறந்த சந்தேக நபரின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறைக்கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து கொண்டு சமூக விரோத செயல்களை திட்டமிட்டு மேற்கொள்கின்றனர் என்ற பொதுவான குற்றச்சாட்டினை முன்வைத்து அவர்களைக் களையெடுக்க ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு தரப்புகள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், மறுபுறம் போதைப்பொருள் வைத்திருந்தார் அல்லது அதனை பாவித்தார் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அப்பாவி கைதிகளைப் பலியெடுக்கும் செயற்பாடுகளை சிறை அதிகாரிகள் முன்னெடுத்துச் செல்கின்றமையை இந்த சம்பவத்தினூடாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. திசேராவின் மரணம் போன்று பல சம்பவங்கள் சிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற போதிலும் அவை வெளிவராமல் சிறை அதிகாரிகளினால் திட்டமிடப்பட்டு மூடி மறைக்கப்படுகின்றன.

கவனிக்கப்படாத சிறைச்சாலைகளின் அவலங்கள்!

இலங்கையில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் 10 ஆயிரம் கைதிகளுக்கு மட்டுமே போதுமான இடவசதி உள்ள நிலையில் தற்போது 26 ஆயிரம் பேர் வரை உள்ளனர். சிறைச்சாலைகளில் உள்ள இந்த இட நெருக்கடிப் பிரச்சினையானது பலவிதமான பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. இடவசதியின்மை காரணமாக பலவிதமான நெருக்கடிகளை கைதிகள் எதிர்கொள்வதனுடன் அந்த நிலையிலிருந்து மீள்வதற்கும், வாழும் உரிமைக்காகவும், சித்திரவதைகள் இன்றி விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவித்து விட்டு வெளியேறும் உரிமைக்காகவும் அவர்கள் சிறைகளுக்குள் பல சந்தர்ப்பங்களில் குரல் எழுப்பி வந்துள்ளனர். இவ்வாறு போராடும் கைதிகளை தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி அதிகாரிகள் மிக மோசமாக அடக்குமுறைக்குட்படுத்திய சம்பவங்கள் பல கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் நடந்துள்ளன.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுப்பு கைதிகள் தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகளைப் பெற்றுத் தருமாறு கோரி கூரை மீது ஏறி நின்று மேற்கொண்ட கவனயீர்ப்பு போராட்டமானது மிகவும் மோசமாக அடக்கப்பட்டதுடன், பெண்கள் மிகவும் அடித்து துன்புறுத்தப்பட்டு பஸ்களில் கொண்டு செல்லப்பட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். அத்துடன் மாதவிடாய் நேரங்களில் பெண் கைதிகளுக்கு மாதவிடாய் துவாய்கள் வழங்கப்படாமை குறித்தும் அன்று அவர்கள் குரல் எழுப்பியதுடன் அது சமூகத்தில் மிகவும் பேசப்பட்ட விடயமாகவும் அமைந்திருந்தது.

2018ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் சுமார் 80 சதவீதமானவர்கள் சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களாக இருந்துள்ளனர். அதுவும் தண்டனைப் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிய அளவிலான தண்டப் பணத்தினைக் கூட செலுத்த வசதியின்றி தண்டனை அனுபவிப்பவர்களாக உள்ளனர்.

அண்மையில் கொரோனா காலப்பகுதியில் நோய்த் தொற்றினைத் தடுப்பதற்காக உறவினர்களிடம் இருந்து உணவு கொண்டு வரப்படுதல் சிறைச்சாலைகளில் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் மருந்துகளின்றியும், சரியான உணவின்றியும் கைதிகள் பல பாதிப்புகளை எதிர்நோக்கியிருந்தனர். அவற்றுக்கு எதிராக பேசிய கைதிகள் மிக மோசமான முறையில் அடக்கி வைக்கப்பட்டனர். இவ்வாறான சூழலிலேயே திசேராவின் மரணமும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைகளைக் கண்காணிக்க விசேட அதிரடிப் படையினர் எதற்கு?

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அண்மையில் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்று அங்கு நிலைமைகளை நேரில் பார்வையிட்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதன் பின் சிறைச்சாலைகளில் கண்காணிப்பு பணிகளை சிறை அதிகாரிகளுடன் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பல்வேறு மட்டங்களில் அதிருப்தி நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக சிறைக்கைதிகளை நிர்வகிக்கவும், அவர்களுக்காக செயற்படவும் சிறை அதிகாரிகள் இருக்கும் நிலையில் ஆயுதம் ஏந்திய இந்த விசேட அதிரடிப் படையினரின் பிரசன்னமானது பாதாள உலகக் கோஷ்டியை மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் என்ற பெயரில் கைதிகளை அடக்குமுறைக்குட்படுத்த எடுக்கப்படும் ஓர் மற்றுமொரு நடவடிக்கையாகவே கருதப்படல் வேண்டும் என்றும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

2012ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளிடம் உள்ள தொலைபேசிகளையும், போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்ய அங்கு பிரவேசித்த படையினராலேயே கைதிகளுக்கும் படையினருக்கும் இடையிலான மோதல் ஏற்பட்டு கைதிகள் படுகொலைகளும் இடம்பெற்றன. அண்மையில் அங்குனபெலஸ்ஸ சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி பூஸ்ஸ பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அங்குனபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சிறைக்கைதிகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச்செயலாளர் சுதேஷ் நந்திமால் குறிப்பிட்டார். “அடக்குமுறைகளிலிருந்து மீண்டு வந்து அடிப்படை உரிமைகளுடன் வாழவே அனைவரும் விரும்புகின்றார்கள். இதற்கு சிறைக்கைதிகளும் விதிவிலக்கு அல்ல. ஒரு சில பிழையான அதிகாரிகளினால் நல்ல அதிகாரிகளுக்கும் கெட்டப் பெயர் ஏற்படுகின்றது.

அரசியல்வாதிகள் தமது வசதிகளுக்காகவும், அரசியல் நலன்களுக்காகவும் பாதாள உலகக் கோஷ்டிகளை உருவாக்குகின்றனர். சிறை அதிகாரிகள் சிலரையும் அவர்கள் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. சிறைச்சாலைகளில் நிகழும் ஊழல் மோசடிகள் பற்றியும், அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றியும் எங்களிடம் நிறைய தகவல்கள் உள்ளன. அவற்றை வழங்கி அரசாங்கத்திற்கு உதவ நாம் தயாராக உள்ளோம். ஆனால் போதைமருந்து அல்லது வேறு காரணங்களைக் கூறிக் கொண்டு அப்பாவி சிறைக்கைதிகளின் உரிமைகளை மீறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலோ அவர்களை அசௌகரியத்திற்குள்ளாக்க முயற்சித்தாலோ அவர்களுக்காக நாங்கள் முன் வந்து குரல் கொடுக்க நாம் தயங்க மாட்டோம்” என்றும் நந்திமால் குறிப்பிட்டார்.

தீர்வு தான் என்ன?

“குற்றவாளிகளை உருவாக்கும் பயிற்சிக் கூடமாக சிறைச்சாலைகள் உள்ளன” என்று சட்டமா அதிபர் தப்புல த லிவேரா கூறியுள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவின் அழைப்பின் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை (19) கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையைப் பார்வையிட்ட அவர் பின்பு கொழும்பு சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற சிறை அதிகாரிகளின் செயலமர்வில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியிருந்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “சிறைச்சாலைகள் தொடர்பில் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். இங்கு மோசமான அதிகாரிகள் சிலர் உள்ளனர். அந்த அதிகாரிகளை உடனடியாக இனம் காண வேண்டும். குற்றங்களை எப்படி செய்வது என்பதனைக் கற்பிக்கும் பயிற்சிக் கூடமாகவும், குற்றங்கள் நடைபெறும் மைதானமாகவும் சிறைச்சாலைகள் மாறியுள்ளன. குற்றங்களை இங்கிருந்தே சிலர் திட்டமிட்டு செய்கின்றனர். ஒரு சில அதிகாரிகள் இந்த குற்றங்களை செய்ய உதவி செய்கின்றனர். வெளி உலக பாதாள கோஷ்டியை விட இங்குள்ள பாதாளக் கோஷ்டிகள் படுமோசனமானவர்கள். மோசடிக்காரர்கள் பற்றி எனக்கு அறியத் தாருங்கள். நான் அவர்களைக் கவனித்துக் கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிறைக்கைதிகள் சிறை அதிகாரிகளால் நடத்தப்படும் விதமானது பண பலத்தின் அடிப்படையிலும், சமூக செல்வாக்கின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுகின்ற ஓர் விடயமாக உள்ள நிலையில், பிரபலமான அரசியல்வாதிகளுக்கும், சமூகத்தில் உயர் அந்தஸ்து நிலையில் இருப்பவர்களுக்கும் தனிப்பட்ட கவனிப்புகள் சிறைகளில் இருப்பதனை அறிந்திராதவர்கள் எவரும் இல்லை. இதற்கு உதாரணமாக அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் சிறைகளுக்குள் கைப்பற்றப்பட்ட குளிர்சாதனப்பெட்டி மற்றும் இதர சொகுசு பொருட்களையும் குறிப்பிட முடியும். சிறை அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் இன்றி இவ்வாறான செயல்கள் நடைபெற வாய்ப்புக்கள் இல்லவே இல்லை. அதேவேளை இவ்வாறான செயல்களை செய்வதற்காக ஒரு சில அதிகாரிகளை தூண்டுபவர்கள் அதிகார பலத்தினையும், பண பலத்தினையும் கொண்டிருப்பவர்களே என்பதனையும் அனைவரும் அறிவர். இதனால் சட்ட மா அதிபர் கூறுவது போன்று முற்று முழுதாக அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அதிகாரிகள் மீது மட்டும் சுமத்திவிடவும் முடியாது.

சிறைச்சாலைகளை ஒழுங்குக்கு கொண்டு வரும் செயற்பாடு என்பது மேலோட்டமாக சிந்தித்து செயற்படுத்தப்படும் விடயமல்ல. உண்மையில் இதய சுத்தியுடன் ஜனாதிபதி தலைமையிலான சம்பந்தப்பட்ட தரப்புகள் இவ்விடயத்தினைக் கையாள நினைக்கின்றதாயின் முதலில் சிறைச்சாலைகளில் காணப்படும் அடிப்படை உட்கட்டமைப்பு பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் கைதிகள் தண்டனை அனுபவிக்கும் காலத்தில் அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் அவர்களையும் மனிதர்களாக வாழ விடும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல்களை தடுக்க வேண்டும். ஒரு சில கைதிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளே ‘சிறைக்கைதிகளும் மனிதர்களே” என்ற வாசகத்தினையும் அர்த்தமுள்ளதாக்கும் எனலாம்.

அருவி இணையத்துக்காக அகநிலா


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE