Friday 26th of April 2024 03:49:10 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து

கிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து


காத்தவராயன் கூத்து ஏனைய நாட்டுப்புறக் கூத்துக்களைவிட மூன்று சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகிறது. ஒன்று இது இலங்கையில் மட்டுமே ஆடப்படும் ஒரு கூத்தாகும். இந்தியாவில் காத்தவராயன் கதை கூத்தாக ஆடப்பட்டாலும் அது அங்கு ஆட்டக்கூத்தாகவே இடம்பெற்று வருகிறது. இலங்கையில் இடம்பெறும் காத்தவராயன் கூத்தில் ஆட்டங்கள் இடம்பெறுவதில்லை. ஆனால் பாடல்களின் தாளத்திற்கேற்ப ஒரு அழகிய துள்ளுநடை இதன் தனித்துவமாகும்.

இரண்டாவது இக்கூத்து கிராமிய சிறு தெய்வ வழிபாட்டுடன் சம்பந்தப்பட்டது. இதன் பிரதான பாத்திரம் முத்துமாரியம்மனாகவும் அடுத்த பாத்திரம் காத்தவராயனாகவுமாகவே விளங்கிவருகின்றனர். இது பெரும்பாலும் அம்மன் கோவில்களிலேயே மேடையேற்றப்படுவதுண்டு. அநேகமாக அம்மன் பருவம் அடைந்த நாளாக கருதப்படும் ஆடிப்பூரம், அம்மன் வழிபாட்டுக்குரிய சித்திரைக்கஞ்சியன்று வரும் சித்திராபௌர்ணமியிலேயே அது மேடையேற்றப்படுவதுண்டு.

மூன்றாவது இந்த நாடகத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நாளாந்தம் பாவனையிலுள்ள நாட்டார் பாடல்களின் மெட்டிலேயே அமைந்திருக்கும். அவ்வகையில் தாலாட்டு, ஒப்பாரி, கரகப்பாடல், கும்மி மெட்டு, காவடிச்சிந்து, அம்மானை, அம்பா வகையான கடற்பாட்டு ஆகிய மெட்டுகளிலேயே அமைந்திருக்கும். அதன் காரணமாக இத ஒரு மக்கள் மயப்பட்ட கலையாக விளங்கிவருகிறது. அதன் காரணமாக இக்கூத்தில் நடிக்காதவர்கள் கூட தொழில் செய்யும்போதும், பொழுதுபோக்காகவும் இப்பாடல்களை பாடுவதுண்டு. இக்கூத்திலே பக்கவாத்தியங்களாக உடுக்கு, ஆர்மோனியம், தாளம் என்பன பயன்படுத்தப்படும். உடுக்கு ஒலிக்கு ஒரு வெறியூட்டும் தன்மை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. உடுக்கின் ஓசையையே நடிகர்கள் தாளத்திற்கு ஏற்ற வகையில் துள்ளுநடை போட ஒரு கட்டுப்பாட்டைக்கொடுக்கும் அதே போன்று நடிகர்களின் பாடல்கள் சுருதி தவறவிடாமல் இருக்கும் வண்ணம் ஆர்மோனியம் கட்டுப்படுத்தும் சுருதி தவறாத பாடலும், ஆர்மோனிய இசையும், உடுக்கொலியும் ஒன்றிணைந்து வர நடிகர்களின் பாடலும், நடிப்பும், நடையும் பார்வையாளர்களை தங்களுடன் கட்டிப்போடும்.

இசை நாடகங்கள் ஓரளவுக்காகவாது இசையுடன் பரீட்சயம் உள்ளவர்களே ஆடக்கூடியதாக உள்ள அதே வேளையில் நாட்டுக்கூத்துக்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் போன்ற உழைக்கும் மக்களின் தலைகளாகவே விளங்கிவருகின்றன. அவ்வகையில் காத்தவராயன் கூத்தும் அறுவடை முடிந்து அடுத்த விதைப்பு தொடங்குவதற்கு இடையேயுள்ள காலப்பகுதி மேட்டு நிலப்பயிர்களின் அறுவடை முடிந்து அடுத்த போகம் ஆரம்பிப்பதற்கு இடையேயான காலப்பகுதி என்பவற்றில் ஆடப்படும்.

அண்ணாவியார் நடிகர்களுக்கு கொப்பி கொடுப்பதுடன் சம்பிரதாயபூர்வமாக கூத்துப்பழக ஆரம்பிப்பார்கள். இதில் முக்கிய விடயம் கூத்து பழகும் போதே நடிகர்களின் உறவினர்கள், அயலவர்கள் எனப்பலரும் பார்வையாளர்களாகக் கூடிவிடுவார்கள். கூத்து மேடையேறும் நாளில் ஊருக்கெ பொதுவான ஒரு விழாவாக ஊரே திரண்டுவிடும். பாய்களும் கொண்டு, கச்சான் கடலையும் வறுத்துக்கொண்டு கூத்துப்பார்க்க குடும்பம் குடும்பமாக பிரசன்னமாகிவிடுவார்கள்.

அங்கு சில தற்காலிக தேனீர் கடைகளும் உருவாகிவிடும். கூத்தில் நடிப்பவர்கள் எவரும் மேடையேறும்போது மது அருந்தமாட்டார்கள். சிலர் விரதமிருந்தே கூத்தாடுவார்கள். முக்கியமாக கடைசி அம்மனாக நடிப்பவர் விரதம் அனுட்டித்தே நடிப்பார்.

முதல்நாள் இரவு எட்டுமணிபோல் ஆரம்பமாகும் கூத்து மறுநாள் காலை சூரியன் உதிக்கும்போது காத்தவராயன், ஆரியமாலை திருமணத்துடன் நிறைவுபெறும். கூத்து நிறைவு பெற்றதும் அனைவரும் பொங்கிப்படைத்து அம்மனை வழிபட்டு அண்ணாவியாருக்கு வேட்டி சால்வை உட்பட தட்சணை பிரதம நடிகரால் வழங்கப்படும். அந்த நாட்களில் இது ஒரு கலைப்படைப்பின் மேடையேற்றம் என்பதை விட ஒரு பக்தி பூர்வமான வழிபாடு எனவும் அம்மை, கொப்பிளிப்பான் போன்ற நோய்கள் வராமல் அம்மன் பாதுகாப்பதற்காக அம்மனை ஆற்றுப்படுத்தும் ஒரு வேண்டுகையாகவும் கருதப்பட்டது.

இக்கூத்து வடபகுதி முழுமைக்கும், கிழக்கின் சில பகுதிகளுக்கும் பொதுவான ஒரு கலையாக இருந்தபோதிலும் இடத்துக்கிடம் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு. இதன் மூல வடிவத்திற்குள் சில இடைச்சொருகல்கள் இருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. அதே போன்று சில பாடல்கள் சில இடங்களில் மத்திம கதியிலும் சில மந்த கதியிலும், அதே பாடல்கள் வேறு சில இடங்களில் துரித கதியிலும் அமைந்திருப்பதை காணமுடியும். ஆனால் பாடல்களிலோ, துள்ளுநடையிலோ எவ்வித பெரும் வேறுபாடுகளும் இல்லை.

வடமராட்சி மாதனையில் வழக்கத்திலுள்ள கூத்தை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் முயற்சியால் காத்தவராயன் கூத்து நூல் வெளியிடப்பட்டது. அதில் இடைச்செருகல்கள் மிகவும் அவதானமாக அகற்றப்பட்டிருந்தன. மாதனைக்கூத்திலுள்ள சிறப்பம்சம் இசை, நடை, நடிப்பு எல்லாவற்றிலுமே உயர்தரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். நயினாதீவு, நெடுந்தீவு போன்ற இடங்களில் ஆடப்படும் கூத்துக்களில் இசை தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படும். தென்மராட்சி பகுதிகளில் மாதனைப்பகுதி போன்றே அமைந்திருக்கும். அதே பாணி கிளிநொச்சி, பரந்தன், கண்டாவளை பகுதிகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. முல்லை மாவட்டத்தில் பாடல் மெட்டுக்கள், நடை என்பன துரித கதியில் அமைந்திருப்பதால் கூத்து தொடங்கி முடியும் வரை பார்வையாளர்களை ஒரு உற்சாகமான நிலையில் வைத்திருக்கும். மன்னார் முல்லை மாவட்டங்களின் இந்த துரித கதிக்கு அங்கு நிலவும் ஆட்டக்கூத்துக்களின் தாக்கம் காரணமாக இருக்கலாம் எப்படியும் அவற்றில் ஒரு தனிக்கவர்ச்சி இருப்பதை மறுக்கமுடியாது. புத்தூர் பகுதிகளில் மேடையேற்றப்படும் புதுவை அன்பனின் நாடகங்களிலும் துரித கதியையும் தொடர்ச்சியான எழுச்சியையும் அவதானிக்கமுடியும்.

கூத்து ஆரம்பமாவதற்கு முன்பாக நடிகர்கள் அனைவரும் வேடம் புனைந்து ஒப்பனை செய்ததும் ஆலயத்திற்குச் சென்று தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி, கூத்து சிறப்புற நடைபெற அருள் வேண்டி வணங்குவார்கள்.

அடுத்து நடிகர்கள் அனைவரும் ஒன்றாக மேடையிலேறி இறைவணக்கப்பாடலை பாடுவார்கள். அண்ணாவியார் பாட மற்றைய நடிகர்கள் பிற்பாட்டாக பாடுவார்கள்.

சில கூத்துக்களில் பாத்திர அறிமுகமும், வரவும் ஒரே பாடலில் அமைந்திருக்கும். இங்கு முதல் அம்மன் வரும்போது முதலில் அறிமுகப்பாடலும், பின்பு வரவுப்பாடலும் பாடப்படும் மேடையில் தோன்றும் பாத்திரங்கள் தாமாகப்பாடி அறிமுகம் செய்தாலும் பாடல் வரிகள் இன்னொருவர் கூறுவது போன்று அமைந்திருக்கும்.

“அக்காளும் அக்காளும் தங்காளுமாம் - அந்த ஆயிழைமார் கன்னியர்கள் ஏழுபேராம். இலங்கையிலே மாரி பெண் பிறந்தாள் - அந்த ஏழு பேர்க்கும் அம்மன் நேரிளையாள்” இது அம்மனின் அறிமுகப்பாடலில் சில வரிகள். இவை வேறு ஒருவர் அம்மனை அறிமுகம் செய்வது போன்று அமைந்திருந்தாலும் கூட மேடையில் அம்மன் பாத்திரத்தாலேயே பாடப்படும் இதில் இலங்கையிலே மாரி பெண் பிறந்தாள் என்ற வசனம் இக்கூத்து இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியிலேயே உருவானது என்பதற்கான வலுவான சாட்சியமாகும்.

அடுத்து அம்மனின் வரவுப்பாட்டு இடம்பெறும.; இது கரகாட்டமெட்டில் அமைந்துள்ளபடியால் சில இடங்களில் அம்மன் பாத்திரம் வேப்பிலையை கையிலேந்திக் கரகாட்ட ஆட்டம் ஆடுவதுண்டு. வேறு சில இடங்களில் வரவுப்பாடல் வழமையான துள்ளுநடையாகவே இடம்பெறும்.

“பட்டாடை தானுடுத்தி முத்துமாரியம்மன் பவுசுடனே வாறாவாம் மாரிதேவி அம்மன் பொன்னாடை பூண்டல்லவோ முத்துமாரி அம்மன் போதரவாய் வாறாளாம் மாரிதேவி அம்மன்” இவ்வாறு அம்மன் தனது வரவை பிறர் கூறுவது போன்ற வார்த்தைகளில் வெளியிடுவாள். மாரியம்மன் காத்தவராயனைப் பாடசாலைக்கு அனுப்பும் கட்டத்தில் - “பள்ளிக்கூடம் போகவேணும் என் மகனே பாலா”, என்ற பாடலுக்கு பதில்பாடலாக காத்தவராயன்,

“சட்டம்பி துட்டனனை பெற்றவளே தாயே! பிரம்பெடுத்து அடித்திடுவான் பெற்றவளே தாயே”, எனப்பாடுவான். சட்டம்பி என்ற சொல்லால் ஒரு காலத்தில் வடபகுதி தமிழ்மக்களால் ஆசிரியர்கள் அழைக்கப்படுவதுண்டு. அதுமட்டுமன்றி அந்நாட்களில் கையில் பிரம்பில்லாத ஆசிரியரைக் காண்பது அரிது. சாதாரண உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு வீட்டில் படிப்பதற்கோ பாடம் சொல்லிக்கொடுப்பதற்குப் பெரியவர்களோ இருப்பதில்லை. அதனால் அவர்கள் நாளாந்தம் வாத்தியாரிடம் பிரம்படி வாங்கவேண்டி வரும். இப்படியான சம்பவங்களின் பிரதிபலிப்பே அப்பாடல் வரிகளாகும். இதுவும் வடபகுதியில் அக்கூத்து உருவானமைக்கு இன்னுமொரு சாட்சியாகும்.

இது இரவு முழுவதும் இடம்பெறும் கூத்தாகையால் ஒரு பாத்திரத்தை ஒரே நடிகர் தொடர்ந்து பாடி நடிப்பது மிகவும் சிரமமான காரியமாகும். எனவே அம்மன் பாத்திரத்தை முதல் அம்மன், இரண்டாவது அம்மன், மூன்றாவது அம்மன் என மூவர் நடிப்பதுண்டு. இவ்வாறே காத்தவராயன் பாத்திரமும் பால காத்தான் ஒரு சிறுவனாலும், ஏனைய ஆதிகாத்தான், கிளிக்காத்தான், கழுக்காத்தான் என நால்வர் நடிப்பதுண்டு.

முன்பெல்லாம் பெண் பாத்திரங்களையும் ஆண்களே நடிப்பதுண்டு. ஆனால் இப்போது பெண் பாத்திரங்களை பெண்களே நடிப்பது கூத்துக்கு மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளது. புராண இதிகாசங்களில் வரும் நாரதர் பாத்திரம் இதிலும் வருவதுண்டு. இனிய குரல் வளம் உள்ளவர்களையே இப்பாத்திரத்திற்கு தெரிவு செய்வார்கள். நாரதர் வரவின் போது பாடப்படும்.

“சம்போ சங்கர அட்சய ரூபா – தாள் பணிந்தேன் கைலையின் வாசா ஆனந்தத்தேவா அம்பிகை பாகா - அடிபணிந்தேன் தேவாதிதேவா”, என்ற இப்பாடலில் கர்நாடக இசைக்குரிய அசைவுகள் சங்கதிகள் தொனிப்பதை அவதானிக்கமுடியும் அடுத்துவரும் அவரின் வரவுப்பாடலும் துரித கதியில் அமைந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும். “விரித்த சடையும் முப்பிரி நூலும் பஞ்சாட்சரமும் துலங்கவே வீணை கையில் ஏந்திக்கொண்டு நாரதமாமுனி தோன்றினான்”,

சாதாரணமாக இரவு பதினொருமணியளவில் கட்டுப்படுத்தமுடியாதவாறு தூக்கம் கண்களைச் சுழற்றும் அந்த நேரத்தில் இடம்பெறும் ஆதிக்காத்தானின் வரவு பார்வையாளர்களின் தூக்கத்தை விரட்டிவிடும்.

“ஆதி சிவன் மைந்தனல்லோ - இங்கு ஆதிகாத்தான் ஓடி வாறேன் சபையோரே சோதி சிவ சங்கரனை தாள் பணிந்து சபையோர்க்கு வணக்கம் செய்தேன்”, அதுபோன்றே இரண்டு மூன்று மணியளவில் தூக்கம் தொல்லை கொடுக்கும்போது காத்தான், சின்னான் விவாதப்பட்டுக்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

காத்தான் : விடமாட்டேன் தம்பி நான் விடமாட்டேன். ஆரியமாலையை மாமணம் செய்யாமல் விடமாட்டேன்.

சின்னான் : விடமாட்டேன் அண்ணா நான் விடமாட்டேன். ஆரியமாலையை மாமணம் செய்திடவிடமாட்டேன்.

இவ்வாறு இரவு முழுவதும் உற்சாகம் குன்றாமல் பார்வையாளர்களை தன்னுடன் கூட்டிச்செல்லும் இக்கூத்தில் அதிகாலையில் கோழி கூவும் போது காத்தான் கழுவேறும் காட்சி ஆரம்பமாகும்.

“ஓராம்படி ஏறையிலே பெற்றவளே தாயே – என் உடலோ நடுங்குதனை பெற்றவளே தாயே”, என ஆரம்பமாகும் பாடல் பத்தாம்படி வரை நீளும். இப்பாடல் வரிகளும், பாடல் மெட்டும் பார்வையாளர்களை கண்ணீர்விட வைத்துவிடும் இம்மெட்டு நாட்டார் இசையைச் சேர்ந்தது என்றாலும் கூட முகாரி இராகத்திற்குரிய சோகமயமான அம்சங்கள் தொனிப்பதை அவதானிக்கமுடியும்.

இறுதியில் சூரியன் உதிக்கும் போது காத்தவராயன் ஆரியப்பூமாலை திருமணத்துடன் கூத்து முத்துமாரி வணக்கத்துடன் நிறைவு பெறும்.

“மலரோ மலரெடுத்து காத்தலிங்கம் நானும் மாதாவைத் தெண்டனிட்டேன் மாரிபிள்ளை நானும், மலரோ மலரெடுத்து ஆரியப்பூமாலை மாமியார்க்குச் சூடவந்தேன் ஆரியப்பூமாலை”.

இவ்வாறு மகிழ்ச்சிகரமான முடிவுடன் நிறைவுபெறும் ஒரு இரவு முழுவதும் நடைபெறும் கூத்தை பார்த்து இரசித்த மனநிறைவுடன் மக்கள் அம்மனை வழிபட்டு வீடு செல்வார்கள்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், கலை
Tags: வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE