Friday 26th of April 2024 12:05:01 AM GMT

LANGUAGE - TAMIL
-
எங்கே தொடங்கியது இன மோதல் - 11 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 11 (வரலாற்றுத் தொடர்)


“நேர்மையின் இளவரசன் விரைவில் எழுவான் அவன் கடவுளால் பாதுகாக்கப்படுவான். அவன் பௌத்தத்தை அதன் தூய உண்மை நிலைக்கு மீட்டெடுப்பான். அவனின் வருகையில் அனைத்து அந்நியரும் பதவிமோகிகளும் மறைந்து போய்விடுவர். இந்த இளவரசன் திருகோணமலைக்கு வருவான் என்பதுடன் சுமண சூத்திரியவில் கூறப்பட்டபடி வீரபோக என்ற இளவரசனின் ஆட்சி முதல் 40 வருடங்கள் தமிழர் படையெடுப்பால் இருள் சூழ்ந்திருக்கும் பின்னர் இந்தியாவிலிருந்து பலம்மிக்க படையுடன் வரும் தியசேன என்ற அரசன் அனுராதபுரத்தைக் கைப்பற்றி இலங்கை இழந்த புராதனப் பெருமையை மீட்டுத்தருவான்.” இலங்கையின் பௌத்த பாரம்பரியத்தின் புத்துருவாக்கம் என்றதொரு ஆய்வை மேற்கொண்ட சிற்சிறி மலல்லகொட என்பவர் மேற்படி விடயங்களை எடுத்துக்காட்டி தர்மராஜபொத்த அதாவது நீதியான அரசனின் புத்தகம் என்ற நூலில் குறிப்பிடப்படும் பிரதான விடயமெனவும், விரைவில் ஒரு அரசனின் வருகையால் இலங்கையில் பொற்காலம் மீட்கப்படும் என்ற செய்தியை அவற்றின் மூலம் பரந்துபட்ட பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டுமெனவும் வலியுறுத்துகிறார்.

வீரபுறங் அப்பு, கொங்கொலகொட பண்டா ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற ஆங்கில ஆட்சிக்கெதிரான பெரும் புரட்சியின் இனமத பேதமின்றி சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் என அனைத்து சமூகத்தினரும் தேசிய அடிப்படையில் ஒன்று திரண்டு பங்கு கொண்டனர். கண்டிய, ஊவா பிரதேச விவசாயிகள், வேடுவ மக்கள், நகர்ப்புறத் தொழிலாளிகள், முஸ்லீம் சிறு வர்த்தகர்கள், வளர்ச்சியடைந்துவரும் புதிய சிங்கள முதலாளித்துவ சக்திகள் என அந்நிய ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர்.

1810 தொட்டு 1843 வரை இடம்பெற்ற அத்தனை போராட்டங்களும் சிங்கள நிலப்பிரபுத்துவ சக்திகளின் தலைமையில் மீண்டும் சிங்கள பௌத்த மன்னராட்சி முறையைக் கொண்டு வரவே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 1848 புரட்சி தலைமை தாங்கியோரே சாதாரண குடிமக்களேயாகும்.

கொங்கொலகொட பண்டா பெலியகொட பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டிருந்தபோதும் உடநுவரவில் வசித்து வந்தவன் எனவும் வகும்புற என்ற சாதாரண சாதியைச் சேர்ந்தவன் என்றும் முதலில் வண்டியோட்டியாகவும், பின்பு ஆயுள்வேத வைத்தியனாகவும் தொழில் பார்த்தவன் என்பதும் ஆங்கிலேயரின் குறிப்புகளிலிருந்து தெரியவருகிறது.

வண்டியோட்டிகள் தொலைதூரப்பயணங்களின் போது அபாயங்களைச் சந்திக்க வேண்டியிருந்ததாலும் நகாப்புறங்களில் பொலிசாரின் தொல்லைகள் காரணமாகவும் இயல்பாகவே போர்க்குணம் மிக்கவர்களாக விளங்கினர்.

வீரபுறங் அப்பு மொரட்டுவவைப் பூர்வீகமாகக் கொண்டவனாகும், இவன் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவன். அவன் அலெக்ஸாண்டர் பொர்னான்டோ என்ற சாராய குத்தகைக்காரருக்கு உதவியாளனாகவே கண்டிக்கு போனான். அக்காலப்பகுதியிலேயே புறங் அப்பு ஒரு கண்டிய பெண்ணை விவாகம் செய்து கொண்டான். அவன் கொள்ளைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இரு முறை சிறைசெய்யப்பட்ட போதிலும் அவன் இருமுறையும் தப்பிவிட்ட காரணத்தால் அவன் ஆங்கில அரசால் தேடப்படும் நபராகப் பிரகடனப்படுத்தப்பட்டான்.

கொவிகம சாதியைச் சேராதவர்களை தமக்குச் சமமாகவோ, தம்மை விட மேலானவர்களாகவோ கண்டியவர்கள் ஏற்பதில்லை. ஆனால் விரபுறங் அப்பு, கொங்கொலகொட பண்டா ஆகியோரின் வீரமும், விடுதலைப் போராட்டத்துக்குள் காட்டிய தீவிரமும் அவர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ள வைத்தன. அதுமட்டுமின்றி போராட்டமும் மக்கள் போராட்டமாக விரிவடைந்துவிட்டமையால் சமானியர்களின் தலைமை ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஏற்கனவே இடம்பெற்ற புரட்சிகளில் 1858 புரட்சி மிகப் பிரமாண்டமானதும் மக்கள் மயப்பட்டதாகவும் இருந்தபோதிலும் ஆங்கிலேயர் தமது முழுப்பலத்தையும் பிரயோகித்தும், இந்தியாவிலிருந்து பெரும் படையணிகளை வரவழைத்து அந்த மக்கள் புரட்சியைத் தோற்கடித்தனர்.

எனினும் இப்போராட்டத்தில் முதலாளித்துவ ஜனநாயகப் போராட்டங்களுக்கான சில வழிமுறைகள் முளைவிட்டமையை அவதானிக்கமுடியும். குறிப்பாக நகரப்புறங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களாக ஆரம்பித்த போராட்டங்கள் வன்முறைக்கலகங்களாக வெடித்தமையை குறிப்பிட முடியும்.

மன்னராட்சியை மீண்டும் கொண்டு வரும் பௌத்த சிங்கள நிலப்பிரபுத்துவ முனைப்பு வரலாற்றுச் சக்கரத்தை பின்பக்கமாகச் சுற்ற முயன்ற வேளையில் 1948ம் ஆண்டு புரட்சி இன மத பேதங்களை கடந்ததாக அமைந்ததுடன் முற்போக்கான அம்சங்களைக் கொண்டும் விளங்கியது.

இதை விரும்பாத, மீண்டும் பௌத்த சிங்கள மன்னராட்சிக் கனவுகளில் மிதந்த சிங்கள நிலப்பிரபுத்துவ சக்திகளின் தத்துவார்த்த பிரதிநிதியாக சிற் சிறி மலல்லகொடவினால் முன்வைக்கப்பட்ட வீரபோக இளவரசன் கதையும் அவன் ஆட்சிக்கு தமிழர்கள் இடையூறு விளைவிப்பார்கள் என்ற போலித்தீர்க்கதரிசனப் பாணியில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளும் சிங்கள பௌத்த மேலாதிக்க போக்கை வளர்ப்பதற்கு பிரயோகிக்கப்பட்டன. அதாவது வீரபோக இளவரசன் கதையும் தியசேனனின் படையெடுப்பு பற்றிய கற்பனையும் மீண்டும் இனங்களுக்கிடையேயான அவநம்பிக்கையும் கசப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. இப்படியான பசப்புகள் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றன.

இன்னொரு புறம் மிசனரிமார் மேற்கொண்ட மதமாற்ற முயற்சிகளும் அதற்குப்பின்னால் இருந்த ஆங்கில அரசின் அனுசரணையும் பௌத்த சமயத்துக்கு ஆபத்து வந்துவிட்டதென்ற உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க ஆரம்பித்தன. எனவே பௌத்த சிங்கள மேலாதிக்கப் போக்கை நிலைநிறுத்தும் நோக்கம் கொண்ட சிங்கள பிரபுத்துவ சக்திகள் மதமாற்றத்தை வைத்து மேலும் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கினார்.

1836ம் ஆண்டு கிறீஸ்தவ மதத்தை பரப்பும் நோக்குடன் கொழும்பில் ஒல்லாந்தரால் ஒரு சிங்கள அச்சகம் நிறுவப்பட்டது. ஒல்லாந்தர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு ஆட்சியதிகாரம் ஆங்கிலேயர் வசம் வந்த பின்பு அந்த அச்சகம் முழமையாகவே கிறீஸ்தவ மிசனரிமாரின் கைகளுக்கு வந்தது. இங்கு கிறீஸ்தவ மதத்தைப் பரப்பும் நூல்கள், பிரசுரங்கள் என்பன அச்சிடப்பட்டு நாடு முழுக்க விநியோகிக்கப் பட்டதுடன் இதன் மூலம் பௌத்த மத எதிர்ப்புப் பிரசாரமும் முடுக்கிவிடப்பட்டது.

கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயம் 16ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டு 1779ல் ஒல்லாந்தரால் இத்தேவாலயத்துக்கு பத்து ஏக்கர் காணி வழங்கப்பட்டது. மிசனரிமார்கள் இவ்வாலயத்தை மையமாகக் கொண்டு பௌத்த மக்களை கிறீஸ்தவர்களாக மாற்றும் நடவடிக்கையையும், பௌத்த மதத்திற்கு எதிரான பிரசாரங்களையும் மேற்கொள்ள ஆரம்பித்தனர். அது பௌத்த தரப்பினர் மத்தியிலும் கசப்பையும் குரோதத்தையும் வளர்க்க ஆரம்பித்தது.

இன்னொருபுறம் கொட்டாஞ்சேனை தீபத்துமாறாய விகாரையை மையமாகக் கொண்டு பௌத்த பிக்குகள், சிங்களப் புத்தி ஜீவிகள், அரச பணியாளர்கள், சிங்கள சிறுவர்த்தகர்கள் எனப் பல தரப்பினரும் பௌத்த மதத்தை பாதுகாக்கவும் மதமாற்றத்தை தடுத்து நிறுத்தவும் அணிதிரண்டனர்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் 1848 புரட்சி இன மத எல்லைகளைக் கடந்து ஆங்கில ஆட்சிக்கெதிரான ஒரு தேசிய ஐக்கியத்தை உருவாக்கியது. அந்த ஒரு முற்போக்கான நிலையை மிசனரிமாரின் மதப்பரப்பல் நடவடிக்கையும் சிங்கள பௌத்த மேலாதிக்க சகதிகளின் மதமாற்றத்திற்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்களும் சீர்குலைக்க ஆரம்பித்தன.

எனினும் தீபத்துமாறாய விகாரதிபதி குணாநந்த தேரர், கிக்கடுவ சுமங்கல தேரர் ஆகியோர் ஆரம்பத்தில் கௌரவமான முறையில் மதமாற்றத்துக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

1885ல் கொழும்பில் ஒரு சிங்கள அச்சகமும் 1862ல் காலியில் ஒரு அச்சகமும் நிறுவப்பட்டு அவை மதமாற்றத்திற்கு எதிரான பிரசுரங்களையும் நூல்களையும் வெளியட்டதுடன் பௌத்த மதத்தின் மேன்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தன.

இவ்வாறு இருதரப்பினரும் தீவிரப்பிரசாரங்களில் ஈடுபட்ட காலத்தில் மிரிக்கட்டுவத்த குணாநந்த தேரர் மிசனரிகளை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தார். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

1873ல் பாணந்துறை விவாதம் எனப்பிரசித்தி பெற்ற ஒரு சொற்போர் குணாநந்த தேரர் தலைமையில் இடம்பெற்றது. இதில் பௌத்தர்கள் சார்பில் கிக்கடுவ சுமங்கல தேரர் பங்கு கொண்டு அதிசயிக்கத் தக்க விதத்தில் விவாதத்தை முன்கொண்டு சென்று மிசனரிமாரின் கருத்துகளை முறியடித்தார். மிசனரிமாரும் வலுவான கருத்துகளை வாதிட்டபோதும் இறுதியில் பௌத்த தரப்பினரே வெற்றி பெற்றனர்.

இவ்வாறு கொழும்பு காலி போன்ற இடங்களில் மிசனரிமாரின் மதமாற்றத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் தலைமையில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பேரெழுச்சி ஏற்பட்ட அதேவேளை வடக்கில் ஆறுமுக நாவலர் தலைமையில் மதமாற்றத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற்று வந்தன.

நாவலர் இந்து சமய மேலான்மைகளை விளக்கியும் மதமாற்றத்தின் தேசிய நலன்களுக்கு விரோதமான நோக்கங்களையும் விளக்கி மேற்கொண்ட பிரசாரங்களை தமிழ் மக்களிடம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தின. அதேவேளையில் மிசனரிகள் ஒரு அச்சகத்தை நிறுவி பிரசுரங்களையும் ‘மோர்னிங் ஸ்டார்’ என்ற பத்திரிகையும் வெளியிட்டு தீவிர மதப்பிரசாரத்தில் ஈடுபட்டனர். நாவலரும் ஒரு அச்சகத்தை நிறுவி இந்து சாதனமென்ற பத்திரிகையையும் பிரசுரங்களையும் வெளியிட்டார். ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு இயங்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்த இந்து ஆங்கிலக் கல்லூரிகளையும், பாடசாலைகளையும் சிறப்புற இயங்க வைத்தார்.

அதேபோன்று இந்தியாவிலிருந்து மிசனரிமாரால் கொண்டு வரப்பட்ட பிரபல மதப்பிரசாரகரான அருளப்ப முதலியருடன் விவாதம் நடத்தி அவரை முறியடித்து இந்து மதத்தின் மேன்மையை ஆறுமுக நாவலர் நிலைநாட்டினர்.

பாணந்துறையில் பௌத்த குருமார் பெற்ற வெற்றியும் யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் பெற்ற வெற்றியும் மதமாற்றத்திற்கு எதிரானதும் ஒரு தேசிய எழுச்சிக்கானதுமான ஒரு சாதனையாக அன்று விளங்கியது.

இந்தியாவில் பிரமஞான சங்கம் என்றவொரு அமைப்பை உருவாக்கி இந்து, பௌத்த மதங்களிலுள்ள மூடத்தனங்களை விமர்சித்து பகுத்தறிவு ரீPதியான வியாக்கியானம் கொடுத்து இந்த இரு மதங்களின் மேன்மைக்கும் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் அமெரிக்க ஆங்கிலேயரான ஒல்கொட் என்பவர். பாணந்துறை விவாதத்தில் பௌத்த குருமார் பெற்ற வெற்றி அவரைக் கவர்ந்து விடவே அவர் இலங்கை வந்து காலியிலுள்ள விஜயராம விகாரையில் தன்னை ஒரு பௌத்தனாக இணைத்துக்கொண்டார்.

ஒல்கொட்டின் வருகையின் பின்பு மதமாற்றத்திற்கு எதிரான போராட்டம் முனைப்புப் பெற்றது மட்டுமன்றி பௌத்த மதத்தை புனருத்தாரணம் செய்து பௌத்த மதக் கோட்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதிலும் ஒரு புதிய உத்வேகம் பிறந்தது.

வடக்கில் நாவலர் இந்து ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவி கல்வியின் மூலம் மிசனரிகள் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்ததைப் போன்று ஒல்கொட்டும் தென்னிலங்கையில் பன்னிரண்டு பௌத்த ஆங்கிலக் கல்லூரிகளையும் 400ற்கும் மேற்பட்ட பௌத்த பாடசாலைகளையும் நிறுவினார். இவற்றில் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி, காலி மகிந்த கல்லூரி, கண்டி தர்மராஜ கல்லூரி குருநாகல் மயிலதேவ கல்லூரி என்பன முக்கியமானவையாகும்.

வடக்கிலும், தென்பகுதியிலும் மதமாற்றத்திற்கு எதிரான போராட்டங்கள் தமிழர்களினதும், சிங்களவரினதும் தேசிய விழுமியங்களை பாதுகாக்கும் முறையிலும் மதத்தின் மூலமான ஆங்கில ஆட்சியதிகாரத்துக்கெதிரான முயற்சியாகவும் இடம்பெற்ற போதிலும் அவை ஒன்றிணைந்து ஒரு பேரெழுச்சியாக முன்னெடுக்கப்படவில்லை. ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு போராட்டமாக வெடிக்கவேண்டிய தனித்தனி போராட்டங்கள் ஒன்றிணையாமை ஒரு பின்னடைவாகும். அதற்குப் பிரதான காரணம் ஏற்கனவே தமிழர்களுக்கு எதிரான குரோத மனப்பான்மை சிங்களப் பௌத்த மதவாதிகளால் சிங்கள மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டமையும் சிற்சிறி மலல்லகொட போன்றோர் தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற கருத்தை தொடர்ந்து ஊட்டிவந்தமையுமே ஆகும்.

இதன் காரணமாகவே சிங்கள பௌத்த தேசியத்தை அழித்துவிட ஆங்கில அரசின் ஆதரவுடன் இடம்பெற்ற மதமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிரான போராட்டமாக பரிணாமம் பெறாமல் மதம் மாறிய மக்களுக்கெதிரான போராட்டமாகக் குறுக்கப்பட்டன.

இதுவே 1883ல் கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கருக்கு எதிரான மதக்கலவரமாக வெடித்தது. இதில் பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு சிங்களவர் கொல்லப்பட்டார். பொலிசார் உட்பட 30பேர் படுகாயமடைந்தனர்.

1848ல் இனமத பேதங்களைக் கடந்து அந்நிய ஆட்சிக்கு எதிராக எழுச்சி பெரும் புரட்சி சிங்கள இனவாத சக்திகளால் திசைதிருப்பப்பட்டு 1883ல் மதக்கலவரமாக குறுக்கப்பட்டு மக்களுக்கிடையேயான போராட்டமாக மாறி அதன் புரட்சிகரத்தன்மையை இழந்துவிட்டது.

அதன் காரணமாக 1883ல் வெடித்த கொட்டாஞ்சேனை கலவரம் கத்தோலிக்க மக்களுக்கு எதிரான மதவெறிக் கலவரமாக மட்டுமின்றி எதிர்காலத்தில் இனமத மோதல்கள் உருவாவதற்கும் இன ஒடுக்குமுறைகள் வலுப்பெருவதற்கும் பலமான அத்திவாரமாகவும் அமைந்துவிட்டது.

நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE