Friday 26th of April 2024 06:46:36 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா நெருக்கடியை அடுத்து மெல்போர்னில்  மீண்டும் 6 வார கால  சமூக முடக்கல் அமுலாகிறது!

கொரோனா நெருக்கடியை அடுத்து மெல்போர்னில் மீண்டும் 6 வார கால சமூக முடக்கல் அமுலாகிறது!


அவுஸ்திரேலியா - மெல்போர்ன் நகரில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அங்கு மீண்டும் 6 வாரங்களுக்கு ஊடரங்கு, சமூக முடக்கல் அமுல் செய்யப்படவுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை 191 புதிய தொற்று நோயாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாளை புதன்கிழமை இரவு 11.59 மணி முதல் மெல்போர்ன் பெருநகரத்தில் 6 வார கால சமூக முடக்கல் உத்தரவு நடைமுறைக்கு வரும் என விக்டோரியா மாநில முதல்வா் டேனியல் ஆண்ட்ரூஸ் இன்று செய்தியாளா்களிடம் தெரிவித்தார்.

இந்த சமூக முடக்கல் உத்தரவு மெல்போர்ன் நகரின் வடக்கே உள்ள மிட்செல் ஷைருக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் புதிய நோய்த்தொற்று பரவல் விரைவாக கட்டுப்பாட்டை மீறும் எனவும் முதல்வா் ஆண்ட்ரூஸ் செய்தியாளர்களிடம் கூறினாா்.

இது மிகவும் கடினமாக நடவடிக்கை என்பதை நான் உணா்கிறேன். ஆனால் எங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவா் தெரிவித்தாா்.

விக்டோரியா மாநிலத்தில் இதுவரை 2824 போ் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளனா். தற்போது 772 போ் தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா் என மாநில தலைமை சுகாதார அதிகாரி பேராசிரியர் பிரட் சுட்டன் இன்று செய்தியாளா்களிடம் கூறினாா்.

இதேவேளை, தொற்று நோய் வேகமாகப் பரவி வருவதை அடுத்து அவுஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய மாநிலங்களாக விக்ரோரியா மற்றும் நியூ சவுத்வேல்ஸ் இடையிலான எல்லைகள் 100 ஆண்டுகளின் பின்னா் இன்று செவ்வாய்க்கிழமைமுதல் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

விக்டோரியா மாநிலத்துடனான தனது எல்லையை மூடும் அறிவிப்பை நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசு நேற்று வெளியிட்டது.

இரண்டு மாநில முதல்வர்களும் இணைந்து நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோயின்போது இந்த இரு இரு மாநிலங்களுக்கிடையிலான எல்லை மூடப்பட்டது. அதன் பின்னா் 101 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த எல்லைகள் கொரோனா வைரஸ் தொற்று நோயால் மூடப்படுகின்றன.

அவுஸ்திரேலிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணி முதல் எல்லைகள் மூடப்படும் என மெல்போர்னில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விக்டோரியா முதல்வா் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தாா்.

இதேவேளை, எல்லை மூடல் உத்தரவை அமுல்படுத்த இராணுவ உதவியை கோரியுள்ளதாக நியூ சவுத்வேல்ஸ் ஆணையாளா் மிக் புல்லர் தெரிவித்தார்.

சிட்னியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய புல்லர், எல்லையுடான பயணங்களைத் தடுக்க 24 மணி நேர கண்காணிப்பு நடைமுறையில் இருக்கும். எல்லைகளின் வழியாக யாரும் நுழைந்துவிடாமல் நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸார், இராணுவத்தினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆளில்லா சிறிய ரக கண்காணிப்பு விமானங்கள் மூலமாகவும் எல்லைகள் கண்காணிக்கப்படும் எனவும் அவா் குறிப்பிட்டாா்.

இரண்டு மாநிலங்களினதும் எல்லைகளில் வசிப்பவர்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்வதற்கு சென்றுவருவதற்காக விசேட அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE