Friday 26th of April 2024 01:08:49 AM GMT

LANGUAGE - TAMIL
.
டெஸ்ட் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் பென் ஸ்ரோக்ஸ் முதலிடம்!

டெஸ்ட் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் பென் ஸ்ரோக்ஸ் முதலிடம்!


சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்ரோக்ஸ் முதன் முறையாக முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.

மான்செஸ்டரில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் முடிவின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை!

இதில் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சகலதுறை ஆட்டகாரர் பென் ஸ்ரோக்ஸ் 6 இடங்கள் ஏற்றம் கண்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்சில் 176 ஓட்டங்களும், 2-வது இன்னிங்சில் அதிரடியாக 57 பந்தில் 78 ஓட்டங்களும் விளாசி மிரட்டிய பென் ஸ்ரோக்ஸ் 101 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 827 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியாவின் லபுஸ்சேனுடன் 3-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

இது அவரது சிறந்த தரநிலையாகும். இதே போட்டியில் முதல் இன்னிங்சில் 120 ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லி 29 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தை பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (911 புள்ளி) முதலிடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்திலும் (886 புள்ளி) நீடிக்கிறார்கள். நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் 5-வது இடமும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 9-வது இடமும் வகிக்கிறார்கள்.

சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசை!

சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசையில் பென் ஸ்ரோக்ஸ் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார். மான்செஸ்டர் டெஸ்டில் சதம், அரைசதம், 3 முக்கியமான விக்கெட்டுக்களையும் வீழ்த்தி சகலதுறை ஆட்டக்காரராக ஜொலித்த ஸ்ரோக்ஸ் அதன் மூலம் 66 புள்ளிகளை திரட்டி மொத்தம் 497 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டியுள்ளார்.

2006-ம் ஆண்டு ஆன்ட்ரூ பிளின்டாப்புக்கு பிறகு இங்கிலாந்து வீரர் ஒருவர் ‘நம்பர்’ ஒன் சகலதுறை ஆட்டக்காரராக வலம் வருவது இதுவே முதல்முறையாகும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஜோசன் ஹோல்டர் 2-வது இடத்துக்கு (459 புள்ளி) தள்ளப்பட்டார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்தில் (397 புள்ளி) இருக்கிறார்.

பந்துவீச்சாளர் தரவரிசை!

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். வேகப்பந்து வீச்சாளர் மேற்கிந்தியத் தீவுகள் ஜோசன் ஹோல்டர் 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். இதனால் நியூசிலாந்தின் நீல் வாக்னெர் 2-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

மான்செஸ்டர் டெஸ்டில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 4 இடங்கள் அதிகரித்து மீண்டும் ரொப்-10 இடத்துக்குள் (10-வது இடம்) நுழைந்துள்ளார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 7-வது இடம் வகிக்கிறார்.

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு உலக சாம்பியன்ஷிப்புக்குரிய 40 புள்ளிகள் கிடைத்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இங்கிலாந்து 186 புள்ளிகளுடன் நியூசிலாந்தை (180 புள்ளி) பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

இந்த வகையில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அவுஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 40 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE