Thursday 25th of April 2024 11:19:13 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஏதிலிகளைச் சுமந்து கரை சேர்த்த கடற்சூரியன் - பத்தாண்டு நிறைவுப் பகிர்வு

ஏதிலிகளைச் சுமந்து கரை சேர்த்த கடற்சூரியன் - பத்தாண்டு நிறைவுப் பகிர்வு


ஒவ்வொரு ஆண்டுகளும் முடியும் போதும் அடுத்த ஆண்டும் ஆரம்பிக்கும் போது ஏதிலிகளாக வாழும் எம் மனங்கள் ஒரு விடிவைத்தேடும். இவ்வாறாக கானல் நீராக எம் பொழுதுகள் உருண்டு ஓடி 10 ஆண்டுகளைக் கடந்து விட்டது.

2010 ஆவணி, 13 நாள் கடற்சூரியன் (MV Sun Sea ) என்ற கப்பலில் 492 ஈழத்து ஏதிலிகள் பிரிட்டிஸ் கொலம்பியாவின் விக்டோரிய துறைமுகத்தை வந்தடைந்தோம்.

இலங்கையில் இடம் பெற்ற இறுதி யுத்தம் மற்றும் கொலைகளின் சாட்சிகளாக வந்த எம்மில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரையும் குற்றவாளியாக்கி கைகளில் விலங்குகளை மாட்டி சிறையில் தள்ளியது அன்று ஆட்சியில் இருந்த ஸ் ரீபன் கார்ப்பரின் தலைமையிலான கனேடிய பழமைவாத அரசு(Conservative Government). எமக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை, மனித உரிமை பற்றி வரிக்கு வரி விளக்கம் கொடுக்கும் கனேடிய மண்ணில் அன்று எமக்கு நடந்தது பெரும் துயரம். தாய் நாட்டை பிரிந்து அநாதையாக வந்த எம்மை வந்தோரை வாழவைக்கும் கனேடிய மண்ணும் அநாதைகளாக்கியது மறக்க முடியாத வலி.

நீண்ட போரட்டங்களுக்கு பிறது 03 மாதங்களின் பின்னர் ஒவ்வொருவராக பல கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டோம். இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். எங்களை இலங்கைத் தமிழர்கள் என்று உறுதிப்படுத்த மட்டுமே தடுத்து வைத்தார்கள். இந்த உறுதிப்படுத்தலை மேற்கொள்ள எனக்கு 06 மாதங்களுக்கு மேல் தேவைப்பட்டது.

வெளியில் சொல்லும் காரணம் அதுவாக இருந்தாலும் எம்மை ஏதிலிகளாக அன்றைய பழமைவாத அரசு கையாளவில்லை என்பது எம் துரதிஸ்ரம் தான். திருப்பி பலர் அனுப்பப்பட்டார்கள் அதில் ஒருவர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டார்.

தாய்லாந்தில் இருந்து கனடாவை நோக்கிய எமது பயணத்துக்கு 41 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கடலில் பலரது வாழ்வு கிட்டதட்ட 180 நாட்களுக்கு மேல். ஏன் அவ்வளவு நாட்கள் ? எம் கப்பலான கடற்சூரியன் சர்வதேச கடல் பரப்பில் தரித்து நிற்கும் , சிறிய மீன்பிடி வள்ளங்களில் 15 தொடக்கம் 20 பேராக கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றப்படுவோம், எனவே முதலில் ஏறியவர்கள் அதிக நாட்கள் கப்பலில் இருந்தார்கள் நிற்க இங்கு ஏன் இந்த ஆபத்தான கடல் பயணம் ? என்று கேட்டால், கடற் சூரியன் சுமந்துவந்த பெரும்பாலான ஏதிலிகள் இலங்கையில் நடைபெற்ற இறுதியுத்தத்தில் பேரினவாத படையினரின் கைகளில் இருந்து தம் உயிரை பறித்து கொண்டுவந்தவர்கள். எனவே நிம்மதியான வாழ்வை தேடி வந்தவர்கள் வாழ்வதற்காக சாவின் இறுதித் தருணத்தையும் எதிர்கொண்டு போராடத் தயாராக வந்தவர்கள் .

பல பிரச்சனைகளுக்கு பிறகு ஆடிமாதம் 05ம் நாள் ,2010 ஆண்டு எம் கடற்சூரியன் 493 ஏதிலிகளுடன் கனடா நோக்கி தன் பயணத்தை சர்வமத வழிபாடுகளுடன் தொடங்கியது. உணவு மட்டுப்படுத்தப்பட்டு ஒரு நேர உணவும், குடி தண்ணீரும் வழங்கப்பட்டது. குழந்தைகள் ,பெண்கள், நோய்வாய்ப்பட்டவ்ர்களுக்கு விசேடமான நூடில்ஸ் கொடுக்கப்பட்டது. நம்பிகையான வார்த்தைகளை கப்பல் மாலுமிகளிடம் இருந்து பெற்று கொண்டோம் இருந்தும் எம் அனைரினது மனதிலும் ஒரு இனம் புரியாத கவலை வாட்டியது.

கடற்பயணம் பலருக்கு புதியது. ஆரம்பத்தில் அதை இரசித்தோம் நாட்கள் செல்ல செல்ல சோர்வுற்றோம் பலர் ஏறிய நாட்கள் தொடக்கம் வாந்தி எடுத்த வண்ணம் மிகவும் சோர்வடைந்தனர். கடல் அலையில் கப்பல் அங்கும் இங்கும் ஆடும் போது எம் தலைகள் எல்லாம் சுற்றும். எம்முடன் ஒரு கற்பினிப்பெண்ணும் பயணித்தார் என்பது குறிப்பிட்டாக வேண்டும். அவரின் அசாத்திய துணிவை நாம் வியந்தோம்.

எம் அனைவருடனும் பயணித்த ஒரு உறவுதான் “நேசன் ”அண்ணா. அவரைப் பற்றி இங்கு குறிப்பிடகாரணம், நாம் இறுதியாக கனேடிய மண்ணை அடையும் போதும் இந்த உறவு எம்முடன் இல்லை. வெளி நாடு நோக்கிய அவரின் வாழ்க்கை தொடங்கும் போது தன் மனைவியை 03 மாத கைக்குழந்தையுடன் விட்டு வந்திருந்தார். கப்பலில் அனைவருடன் அன்பாக பழகியவர். இவர் அல்சர் எனப்படும் குடற்புண் வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தார். எனவே இவருக்கு நூடில்ஸூம் வழங்கப்படும் ஆனால் காலம் கடக்க கடக்க அவரின் உடல் நிலைமோசமாகிக் கொண்டு போனது மருத்துவதுறையில் கல்வி கற்ற சிலரும் எம்முடம் பயணித்திருந்தார்கள். அவர்களின் முயற்சியில் இவரின் உயிர் சிலகாலம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் விதியை வெல்லும் சத்தி யாரிடமும் இல்லை. நோய்க்குரிய சரியான மருந்துகளும் எம்மிடம் இருந்திருக்கவில்லை. கிட்டதட்ட கனடாவை நாம் அடைய 10 நாட்கள் இருக்கும் போது அவரின் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. அன்றைய நாள் முதல் கப்பலில் ஒரு வகையான அமைதியுடன் சோகமும் அனைவரின் முகங்களிலும் குடிகொண்டது. அடுத்து எவர் உயிர் பிரியப் போகின்றது என்ற பீதி அனைவரின் மனதிலும் வலுவாக தோன்றியது. குழந்தைகள், முதியவர்கள் ,பெண்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் இருந்ததால் அவரின் உடலை பாதுகாத்து வைப்பது ஆபத்தானது என்ற முடிவு மாலுமிகளாலும் , பயணிகளாலும் எடுக்கப்பட்டு அனைவரினதும் இறுதிவணக்கத்துடன் அவரின் உடல் ஒரு இரும்புடன் பிணையப்பட்டு கடலில் இறக்கப்பட்டது.

அதற்கு பிறகு நகர்ந்த பொழுதுகள் அமைதியாக கடந்தது உணவும், தண்ணீரும் முடியும் தறுவாயிலும், அனைவரது பிராத்தனைகளின் பலனாக கனேடிய எல்லைக்குள் பலத்த எதிர்பார்புக்களுடன் வந்து சேர்ந்தோம். ஆனால் எமக்கு கிடைத்த வரவேற்பு நேர் எதிர்மாறாக இருந்தது.

இங்கு ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும், இன்றுவரை எந்த ஒரு ஈழத்து தமிழ் ஏதிலிகளும் கனேடிய மக்களுக்கோ அரசுக்கோ, அல்லது கனேடிய மண்ணுக்கு எதிராகவோ அல்லது பாதகமாகவோ எதுவும் செய்யவில்லை. எம் ஈழத்து தமிழ் இனத்தை வாழவைத்த கனடாவுக்கு நன்றியுடன் விசுவாசமாகதான் இருந்தார்கள், இருக்கிறார்கள் , இருப்பார்கள். இன்றைக்கு 10 ஆண்டுகளாக ஏதிலிகளாக இருக்கும் எம் வாழ்வில் பிரகாசம் இன்னும் இல்லை. ஆனால் சிரியாவில் இருந்து வந்த ஏதிலிகளை இன்றைய கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ விமான நிலையத்துக்கு நேரே சென்று கைகளை குலுக்கி வரவேற்கிறார். அதே யுத்த வலிகளை அனுபவித்து வந்த ஈழத் தமிழ் ஏதிலிகளாகிய எம் கைகளில் அன்றைய பிரதமர் ஸ் ரீபன் ஹாப்பரின் அரசு விலங்கு போடப்பட்டு சிறைகளில் அடைத்தது. இங்கு ஏன் எமக்கு மட்டும் ஓரகவஞ்சகம் என்று நாம் நினைத்து நினைத்து கண்ணீரால் எம் தலையணைகளை நனைத்த நாட்கள் அதிகம் .

இன் கொலைக் கொடூரத்தால் உயிர் பறிக்கப்பட்ட கிருஸ்ணகுமார் கனகரட்ணம், தனது ஏதிலிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தன்னை மறைத்து வாழ்ந்த வேளை இவரின் உயிர் பறிக்கப்பட்டது.

கோரயுத்ததில் இருந்த தப்பி இறுதியாக அடைக்கலம் தேடி கனடாவை வந்தடைந்தவன் இந்த மண்ணிலேயே கொன்று புதைக்கப்பட்டிருக்கிறான் என்பது ஏற்று கொள்ள முடியாத சோகம். இன்றைய நிலையில் சமஷ்டி லிபரல் கட்சி ஆட்சியை தொடங்கிய பின் ஏராளமான ஏதிலிக் கோரிக்கைகள் ஏற்று கொள்ளப்பட்டமை மன நிறைவைத் தந்தாதும் பலரின் நிரந்தர வதிவிடத்துக்கான விண்ணப்ப படிவம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த கோவிட்-19 நுண்மித் தொற்று ஓர் அசாதாரண சூழ் நிலை என்று காரணமாக காட்டினாலும் அதை ஏற்று கொள்ள முடியாது.

பத்து ஆண்டுகள் முடியும் இந்த நேரத்தில் பலர் தங்கள் குடும்பத்தை பிரிந்து மனைவியை பிரித்து கணவன் பிள்ளைகளை பிரிந்த சோகம் இன்றும் தொடர்கிறது. மனித உரிமை குறித்து அக்கறை கொள்ளும் பலருக்கு இந்த குடும்பங்களின் சிதைவுகள் கண்களுக்கு தெரிவதில்லை என்பது சோகம்தான்.

இனிவரும் வருடங்களாவது கிடப்பில் போடப்படுள்ளவர்களின் வழக்குகளுக்கு ஒரு சரியான முடிவு கிடைக்க வேண்டும் . எமது கப்பல் கனேடியக் கரையைத் தொட்டதற்குக் காரணம், எங்கள் கப்பல் மாலுமிகளும் இயந்திர அறையில் பணிபுரிந்தவர்களதும் அர்பணிப்புடனான மனித நேயச் சேவையே என்றால் மிகையாகாது. ஆனால் எம்மை பாதுகாப்பாக கரை சேர்ந்த அவர்கள் மீது ஆட்கடத்தல்காரர்கள் என்ற குற்ற வார்த்தைகளைப் பிரயோகித்து அவர்களது எதிர்கால வாழ்க்கை இன்று நிர்க்கதியாகியுள்ளது. சட்டத்தின் முன் அவர்கள் குற்றவாளிகளாக தோன்றினாலும் மனித நேயம் என்று நோக்கு போது அவர்கள் நிரபராதிகளே.

கனேடிய மண் கடந்த 10 வருடமாக எம் உயிரைப் பாதுகாத்துள்ளது. எம்மை போன்ற பல இலட்சம் ஏதிலிகளின் உயிரை காப்பாற்றி வாழ்வழித்த எம் கனேடிய தாய்க்கு என்றும் நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். எம் போன்று யுத்த வடுக்களைச் சுமந்து இனி வரும் காலங்களிலும் அடைக்கலம் தேடி வரும் ஏதிலிகளை எம்மை போன்று நடந்தாமல் அவர்களின் மன வலிகளை உணர்ந்து நடத்தகூடிய அரசியல் தலமைகளை கனேடிய அன்னை தேர்தெடுக்க வேண்டும் என்பதே எமது பணிவுடனான அன்பான வேண்டுகோளாக உள்ளது. பிரணவன் தங்கவேல்


Category: செய்திகள், புதிது
Tags: கனடா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE