Friday 26th of April 2024 07:48:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதற்கான  திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!


பயணிகள் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கு குறுகியகால நீண்டகால திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போக்குவரத்துச் துறைசார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

புகையிரதம், பஸ் வண்டிகள், இணைந்த சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை...இணைந்த போக்குவரத்து நேரசூசியை நடைமுறைப்படுத்துமாறும், முன் கட்டணம் செலுத்தப்பட்ட அட்டை முறைமை விரைவில் நடைமுறைப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

முதற் கட்டமாக பயணிகளுக்கு சிறந்த மன நிலையுடன் பஸ் வண்டியில் அல்லது புகையிரதத்தில் பயணம் செய்வதற்கான சூழலை ஏற்படுத்தி போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் பணியை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சு மற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்தல், பேருந்து போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டம் குறித்து நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மிகச் சிறியதோர் ஆரம்பத்திலிருந்து பெரிய மாற்றத்தினை செய்ய முடியும். பஸ் வண்டிகளை கழுவி சுத்தம் செய்து பிரயாணிகளுக்கு பயணிப்பதற்கான ஒழுங்குகளை நாளைய தினமே ஆரம்பியுங்கள் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

சுவரொட்டிகளை ஒட்டுவதை நிறுத்துவதற்கு மேற்கொண்ட சிறியதொரு தீர்மானம் நாட்டின் அனைத்து நகரங்களையும் சுத்தமாக வைத்திருப்பதற்கு வழிவகுத்திருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து துறைகளினதும் அபிவிருத்தியை மிகச் சிறிய இடத்திலிருந்து ஆரம்பிக்க முடியுமென குறிப்பிட்டார்.

மோட்டார் கார்களில் வந்து அதனை நிறுத்திவிட்டு பஸ் வண்டிகளில் பணி இடங்களுக்கு செல்லும் முறைமையை விரைவாக நடைமுறைப்படுத்தி வீதி நெரிசலை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். போக்குவரத்து சபை பஸ் போக்குவரத்து சேவையை ஒரு சேவையாக நடாத்திச் சென்றாலும் நட்டம் அடையாத நிறுவனமாக இருக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கிராமிய பிரதேசங்களில் பஸ் போக்குவரத்து தொடர்பாக அரச மற்றும் தனியார் துறைகள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புகையிரதங்கள் மற்றும் பஸ் வண்டிகள் இணைந்த சேவையையும் பஸ் வண்டிகள் இணைந்த பயண நேரசூசியையும் உடனடியாக ஆரம்பியுங்கள். போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்காக முதலில் தீர்வுகளை வழங்கக்கூடிய துறைகளை இனங்காண்பது அவசியமாகும். எதிர்வரும் ஐந்து வருடங்களில் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்டகாலத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். குறித்த இலக்கு அடையப் பெறுகின்றதா என்பது குறித்து ஆராய்வது மிகவும் முக்கியமானதாகும் என்றும் ஜனாதிபதி ; குறிப்பிட்டார்.

பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கக்கூடிய வகையில் புகையிரத பெட்டிகளை புதுப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. கொழும்பு கோட்டை மற்றும் மேலும் நான்கு புகையிரத நிலையங்களை மாதிரி நிலையங்களாக விரைவில் புதுப்பிப்பதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

புகையிரத எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அதிகளவானோருக்கு புகையிரதத்தில் பயணம் செய்ய முடியுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயிற்சி மற்றும் பராமரிப்பு நிறுவனங்களின் சேவையை தனியார் துறைக்கும் வழங்குவதன் மூலம் இலாபமீட்டக்கூடிய வழிவகைகள் குறித்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டினார்.

வினைத்திறனான பயணிகள் போக்குவரத்து சேவைக்கு அரச மற்றும் தனியார் துறைகள் முற்கொடுப்பனவுகள் செலுத்தப்பட்ட அட்டை முறைமையை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தை ஊழல், மோசடிகள் இல்லாத நிறுவனமாக மாற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நல்ல நிலையில் உள்ள பொதுப் போக்குவரத்து பஸ் வண்டிகளை அதிவேக பாதைகளில் பயணம் செய்வதற்கு அனுமதிப்பதன் மூலம் குறைந்த தொகையில் அதிகளவான பயணிகளுக்கு பயண வசதிகளை வழங்கக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் என்.டி.மொன்டி ரணதுங்க ஆகியோரும் போக்குவரத்து அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE