Friday 26th of April 2024 11:26:25 PM GMT

LANGUAGE - TAMIL
-
விடுதலைப்போராட்டம் தொடர்பில் மனம் திறந்த எரிக் சொல்ஹெய்ம்! (நேர்காணல்)

விடுதலைப்போராட்டம் தொடர்பில் மனம் திறந்த எரிக் சொல்ஹெய்ம்! (நேர்காணல்)


விடுதலைப் புலிகள் - அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கு (2002 - 2006) நோர்வே அரசு அனுசரணை வழங்கியது. இதன்போது விசேட தூதுவராக - பிரதிநிதியாக செயற்பட்டவர் எரிக் சொல்ஹெய்ம். அவர் அவர் 'வியோன்' (WION) தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின் முழு வடிவம் வருமாறு,

கேள்வி: எவ்வாறு அல்லது எப்போது நோர்வே அரசு இலங்கையில் மத்தியஸ்தம் செய்ய முடிவெடுத்தது? அதற்கு நோர்வே அரசு ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்?

நாங்கள் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவால் இரகசியமாக அழைக்கப்பட்டோம். அந்த நேரத்தில் அவரும் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகிய இருவர் மட்டுமே இது குறித்து கொழும்பில் அறிந்திருந்தார்கள். இந்தநிலை அண்ணளவாக ஒரு வருடம் தொடக்கம் ஒன்றரை வருடங்கள் நீடித்தது. அதன் பின்னரே இவ்விடயம் வெளியில் வந்தது.

நாங்கள் சிறிய நாடாக இருப்பதால் எங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதால் நாம் அழைக்கப்பட்டோம் என நான் நம்புகின்றேன். அத்துடன், அந்தக் காலப்பகுதியில் மத்திய கிழக்கில் சில வெற்றிகளைக் கண்டோம். அவை சிறு வெற்றிகளாகவே இருந்தன. ஆனால், நோர்வே ஒரு சிறுதேசமாகவும் அத்துடன் மிகத் தொலைவிலுள்ள தேசமும் என்பதனால், நாம் இலங்கையைக் குழப்பமாட்டோம் என்று கருதப்பட்டது. தவிர, புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் என இரு தரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவர்களாகவும் நாம் இருந்தோம்.

கேள்வி: நீங்கள் புதுடில்லியாலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவர்களாக இருந்தீர்களா?

எல்லாவற்றிலும், இந்தியாவானது இலங்கையுடன் நெருக்கமான கலாசார, சமய மற்றும் மொழி உறவுடன் இருக்கும் மிகப்பெரிய அண்டை நாடாகும்.

புதுடில்லிக்கு நிறையச் சந்தேகங்கள் இருந்தன. தெற்காசியா குறித்த உண்மையான போதிய அறிவைக் கொண்டிராத இந்த ரோசா நிறமுடைய கிறிஸ்தவ ஐரோப்பியர்கள் என்ன சிக்கல்களை இந்தக் கண்டத்தில் ஏற்படுத்துவார்கள்? என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. ஆனால், அதன் பின்னரான காலத்தில் நாங்கள் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை மட்டுமல்லாமல் அவர்களுடன் மிக நெருங்கிய உறவில் இருந்தோம். ஒவ்வொரு தடவையும் நான் இலங்கைக்குச் சென்று திரும்பும் போது புதுடில்லிக்குச் சென்று அங்குள்ள அரசியல் தலைமையிடமும் இந்திய உளவு அமைப்பிடமும் நான் எதனை அடைந்தேன் அல்லது எதனை அடையவில்லை எனத் தகவல் தெரிவித்து விட்டுத்தான் செல்வேன்.

கேள்வி: இலங்கையில் உங்களது சமாதான மத்தியஸ்தத்தின் முதலாவது முயற்சி பற்றிய நினைவூட்டல்களுக்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள். அது எப்போது நடந்தது? அதன் விளைவு என்னவாக இருந்தது?

அது நான் பிரபாகரனை முதற் தடவை சந்திக்கச் சென்ற போது ஆரம்பித்தது. இந்தச் சந்திப்புக் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை. நாங்கள் பிரபாகரனைச் சந்திக்க ஜனாதிபதியால் அனுமதிக்கப்பட்டோம் என்ற விடயம் பிரதம மந்திரிக்குக்கூடத் தெரிந்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நாம் பிரபாகரனைச் சந்தித்தோம். நாம் உலங்குவானூர்தியில் அங்கு சென்றோம். சமவெளி வயல்களின்மேல் தாழ்வாகவும் மலைகள் வரின் அதன் மேல் உயர்வாகவும் பறந்து சென்றோம். அது ஒரு பீதியூட்டும் பயணமாகவே இருந்தது.

ஏனெனில், அந்த உலங்குவானூர்தியில் நாம் பயணிக்கின்றோம் என்று களத்திலிருந்த இலங்கை இராணுவத்தினருக்கோ புலிகளுக்கோ தெரியாது. எனவே அவர்கள் எம்மை இலகுவில் சுட்டு வீழ்த்தியிருக்கலாம். அங்கு சென்று நாம் பிரபாகரனைச் சந்தித்தோம். அது ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது. அவர்கள் சமாதான முன்னெடுப்புகளில் தங்களது ஆர்வத்தை உறுதிப்படுத்தினர். ஆனால், பிரபாகரன் தமிழ் மக்களிடத்தில் இந்த மகத்தான நிலையை எப்படி அடைந்தார் என்பதைப்புரிந்துகொள்ளச் சிறிது கடினமாக இருந்தது. அவர் எவ்வாறு தெய்வமாக, படைப்பராக மற்றும் இரட்சகராக தமிழ் மக்களால் பார்க்கப்பட்டார் என்றும் அவரை மக்கள் இப்படியெல்லாம் ஏன் பின்பற்றினார்கள் என்றும் எம்மால் உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை.

கேள்வி: சமாதான மத்தியஸ்தம் நடந்த காலங்களில் மிகப் பெரிய தடையாக இருந்தது எது?

இதில் இரண்டு பெரிய தடைகள் இருந்தன. சிங்கள சமூகமானது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. சுதந்திரத்தின் பின் இவ்விரு கட்சிகளும் ஆட்சி அதிகாரத்திற்காக மோதிக்கொண்டன. அதிகாரப் போட்டியில் இவ்விரு கட்சிகளும் அதிகம் நுகரப்பட்டனவே தவிர தமிழ்ச் சமூகத்திடம் இவைகள் அதிகம் செல்லவில்லை. ஒரு கட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அது எது செய்யினும் மற்றைய கட்சி அதனை எதிர்க்கும். பிறகு அதிகாரம் மற்றைய கட்சிக்கு மாற்றப்பட்டு இது தொடர்ச்சியாக நிலைநாட்டப்படும். இதுவே மிகப் பெரிய சிக்கலாக இருந்தது. சிங்களத் தலைவர்களிடமிருந்து எந்தவொரு சலுகைகளையும் தமிழர்கள் உண்மையில் பெற முடியும் என நம்பிக்கை வைக்க முடியாது. ஏனெனில், அந்தத் தலைமை எதுவரை நீடிக்கும் எனத் தெரியாது.

மற்றைய முக்கியமான சிக்கல் என்னவெனில், ஒரே தீர்வு தனிநாடல்ல. ஆனால், சமஷ்டி முறையிலான இலங்கை என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தமிழர்கள் சுயாட்சி கோரலாம். ஆனால், அது ஒன்றுபட்டஇலங்கைக்குள் இருக்க வேண்டும்.

கேள்வி: தமிழீழம் தவிர்ந்து ஏனைய எதற்காவது பிரபாகரன் தயாராக இருந்தாரா? அவர் சமஷ்டி சுயாட்சியை ஏற்றாரா?

விடுதலைப் புலிகள் 2002 இல் ஒஸ்லோவில் நடந்த கூட்டத்தில் இதனை ஏற்றார்கள். ஆனால், பிரபாகரன் தொடர்ச்சியாக இந்தக் கூட்டாட்சியை ஏற்க மறுத்தே வந்தார். அவர் அதனை பிந்தைய காலங்களில் ஏற்றிருப்பாரா என்பது எமக்கு இன்னமும் தெரியாது. இதனால் இப்படியான தடைகளின் மத்தியில் பணியாற்றுவது மிகக் கடினமானது.

கேள்வி: நோர்வேஜியன் மத்தியஸ்தர்களுக்கு எதிராக நிறையக் குற்றச்சாட்டுகள் உள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பானது இந்தப் போராட்ட காலங்களில் ஒரு ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதக் குழு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தும் நோர்வேஜியன்ஸ் இதுகுறித்துப் பாராமுகமாகச் செயற்பட்டார்கள். அத்துடன், “நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்” போன்ற புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளின் பல குழுக்களுடன் நீங்கள் தொடர்புகளைப் பேணி வருகின்றீர்கள். இது போரிற்குப் பின்பும் தொடர்கின்றது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் கருத்துப் பகிரலாமா?

இலங்கையில் நாம் பணியாற்றிய பல வருடங்களில், இலங்கை அரசாங்கத்தினால் எம்மிடம் கேட்கப்படாத எதனையும் நாம் அங்கு செய்யவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் இலங்கை அரசாங்கத்துடனும் புலிகளுடனும் வேலைசெய்தோம். இலங்கை தொடர்பாக எமது அறிவு வரையறைக்கு உட்பட்டது என்பதால், நாம் எமது கருத்துகளை பெருமளவில் இங்கு எடுத்துவரவில்லை. நான் தமிழ் பேசுவதில்லை. நான் சிங்களம் பேசுவதில்லை. நான் பௌத்தன் அல்ல. நான் இந்து அல்ல. நான் எப்படி இலங்கையை விளங்கிக்கொள்ள முடியும்? அதனால் நாம் என்ன செய்தோமெனில், இலங்கை அரசாங்கத்தின் தேவை என்ன? புலிகளின் தேவை என்ன? என்பதனைப் பார்த்து அதனை ஒருங்கிணைத்து வந்தோம். இது தான் எங்களுடைய வகிபாகம்.

கேள்வி: நீங்கள் குறிப்பிட்டபடி, விடுதலைப் புலிகளின் தலைமை கிறிஸ்தவமாக.?

ஆமாம். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமை உண்மையில் மதமாக இல்லை. அங்கு இந்துக்கள் இருந்தனர். ஆனால், மதம் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது என்று நான் நினைக்கவில்லை. பிரபாகரனுக்கு உந்துசக்தியாக அவரது தமிழ்த் தேசியப் பார்வையே இருந்தது. அவர் புலிகளுக்குப் பெயரை வரலாற்றுத் தமிழ் மன்னர்களின் பெயர்களிலிருந்தே எடுத்தார். அவர்கள் தமிழ் மொழியை மிகவும் ஆழமாக நேசித்தார்கள்.

கர்நாடகா, மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து வந்த வேறு வடிவ மொழிகள் என அவர்களின் சில ஆலோசகர்கள் அடிக்கடி சொல்வார்கள். எனவே, அவர்களிடம் இருந்தது மிக மிக வலுவான தமிழ்த் தேசியமாகும். உண்மையில் தமிழர்கள் வெற்றியடைந்தவர்களாக இருந்து வந்தார்கள். உலகெங்கிலும் புலம்பெயர் தமிழர்கள் மிகவும் வெற்றியடைந்தவர்களாக உள்ளார்கள். பங்குதாரர்கள், மருத்துவர்கள், சட்டவாளார்கள் என அவர்கள் மிகவும் நன்றாகவே இருக்கின்றார்கள். இந்தியாவில் கூட, தமிழ்நாடு மாநிலம் ஏனைய மாநிலங்களிலும் சிறப்பாகவே உள்ளது. ஆகவே தமிழர்கள் பெருமைப்பட நிறையவே இருக்கின்றது. அதுவே பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் உந்துசக்தியாக இருந்தது. மதம் அல்ல...

கேள்வி: உண்மையில் இன்னுமொரு குற்றச்சாட்டு என்னவெனில், நோர்வேயின் மக்கள் தொகையில் கணிசமானளவு இலங்கைத் தமிழர்கள் உள்ளார்கள். இதனாலேயே நோர்வே அரசாங்கமும் எரிக்சொல்ஹெய்மும் இலங்கை விடயத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் நீங்களும் உங்கள் நாட்டில் ஒரு அரசியல்வாதியாகவே இருந்து வந்துள்ளீர்கள்?

இதில் நோர்வேயிலுள்ள இலங்கைத் தமிழர்களுடன் நாம் மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தொடர்புகளையே வைத்திருந்தோம். ஏனெனில், புலிகளுடனான எமது தொடர்பில் பிரதான புள்ளியானவர் விடுதலைப் புலிகளின் மூத்த அரசியல் ஆலோசகரானஅன்ரன் பாலசிங்கம். அவர் லண்டனில் இருந்தார்.

அவரை நான் ஒவ்வொரு வாரமும் சந்தித்து வந்தேன். கொழும்பிலுள்ள எங்கள் தூதுவர், சந்திரிகா, லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் பின்னாளில் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் ஒவ்வொரு வாரமும் சந்தித்து வந்தார். நாம் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துடன் தொடர்புகொள்வதை அன்ரன் பாலசிங்கம் விரும்பவில்லை. எனவே, புலம்பெயர் தமிழ்ச் சமூகம் சமாதான முன்னெடுப்புகளில் செல்வாக்குச் செலுத்தவோ அல்லது அந்த வலயத்திற்குள் வைக்கப்படவோ இல்லை. ஆனால் இந்தியத் தலைவர்கள் அதில் இருந்தார்கள். நான் ஒவ்வொரு தடவையும் புதுடில்லி சென்றேன். நாம் நோர்வேயிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இது பற்றித் தெரிவிக்கவில்லை.

கேள்வி: உங்களுக்கு அடுத்து வந்த ஜோன் கான்சன் பயருடன் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகின்றது. அன்று மாலை நோர்வேயினர் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சமாதான மத்தியஸ்திலிருந்து விலகுவதற்கு முடிவெடுத்தார்கள். உங்கள் சகிப்புத்தன்மையை இழக்கச் செய்த - இறுதியாக நடைபெற்ற விடயம் என்ன? எப்பொழுது நீங்கள் இதனை விட்டெறிந்து விட்டு இந்த விடயத்திற்குள் நாம் மேலும் வர மாட்டோம் என்று கூறினீர்கள்?

நாம் உண்மையில் அப்படிச் செய்யவில்லை. இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நாம் பயன்படுகின்றோம் எனில் நாம் தொடர்ந்து இருப்போம் என்றே நாம் இறுதி வரை கூறினோம். எங்களின் அந்த அணுகுமுறைக்காக நாம் தொடர்ந்து விமர்சிக்கப்பட்ட வண்ணமே இருந்தோம். நாம் மேலும் அங்கே தங்கியிருக்க வேண்டும். இன்னும் அதிகமாகச் செயலாற்றி இருக்க வேண்டும் என்று மக்கள் கூறிக்கொண்டிருந்தார்கள்.

சிறிய நாடான நாங்கள் இலங்கையிலுள்ள இரண்டு சமூகங்களான தமிழர் மற்றும் சிங்களவர்களுக்கு உதவ வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். எனவே, நாம் இதனைக் கைவிடாமல் அவர்களுக்கு உதவ வேண்டும் என்றே டில்லியிலிருந்தும் வாஷிங்டனிலிருந்தும் உறுதியான செய்தி வந்தது. - டில்லி எங்களுக்கு மிகவும் முதன்மையானதாக இருந்தது. எங்களால் பெரிதாக எதனையும் செய்ய முடியாவிடினும் சிறிதாகவேனும் செய்யுமாறே அவர்கள் தொடர்ந்து கூறினார்கள். நான் டில்லிக்கு முதன் முதலாகப் பயணம் செய்த போது, ஜஸ்வந்த் சிங் வெளிவிவகார அமைச்சராக இருந்தார். நீண்ட உரையாடலுக்குப் பின்னர், என்னிடம் ஒரு கேள்வி கேட்பதாகக் கேட்டார். எனக்குப் பொறுமையிருக்கிறதா? என்று அவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான் “இல்லை. எனக்குப் பொறுமையில்லை. மக்கள் ஒவ்வொரு மாதமும் இலங்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். தாய்மார்கள் அழுகின்றார்கள். பிள்ளைகள் இறக்கின்றார்கள். இதில் எப்படிப் பொறுமையாக இருப்பது” என்று பதிலளித்தேன்.

அதற்கு ஜஸ்வந்த் சிங் சொன்னார, “உமக்கு இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் பாதை தெரியுமா? போய் பயணச்சீட்டை எடுங்கள். நீங்கள் ஒரு வழிப் பயணச்சீட்டைத் தான் ஐரோப்பாவிற்குச் செல்வதற்கு எடுக்கின்றீர்கள் என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களுக்குப் பொறுமை இல்லையெனில் நீங்கள் சிக்கல்களுக்குள் மட்டுமே வேலை செய்ய நேரும்”. 10- 15 வருடம் முன்னோக்கில், இலங்கையில் கொஞ்சம் நல்ல விடயங்களைச் செய்யலாம் என்றும் சொன்னார். நிச்சயமாக, அவர் சொன்னது சரியாக இருந்தது. நான் சொன்னது பிழையாக இருந்தது. ஆனால், இலங்கையில் அடிப்படைச் சிக்கல்கள், தமிழர்களின் நிலை, இலங்கைத் தீவில் தமிழர்களின் செல்வாக்குக் குறித்த விடயங்கள் என்பன இன்னும் தீர்க்கப்படவில்லை.

கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் உங்களுக்கிருந்த உறவு பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். நீங்கள் அவருடன் இணைந்து மீன் பிடிக்கச் சென்றதாக ஒரு தடவை என்னிடம் கூறியது நினைவில் வருகின்றது?

நான் அவருடன் அதிக நேரத்தைச் செலவிடவில்லை என்பது வருத்தமளிக்கின்றது. ஆனால், உலகிலுள்ள ஏனைய வெளிநாட்டவர்களிலும் பார்க்க நான் அவரை அடிக்கடி சந்தித்திருக்கிறேன். ஏனெனில், அடிப்படையில் அவர் தமிழர்களை மட்டுமே சந்தித்தார். ஒரே ஒரு தடவை இலங்கையிள்ள முஸ்ல்ம்களின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்தார். ஒரு சில சிங்களவர்களையும் சந்தித்திருக்கிறார். ஆனால், பெரும்பாலும் தமிழர்களையே சந்தித்திருக்கிறார். நாம் அவருடன் இன்னும் நேரம் செலவழித்திருந்தால், நாம் ஒருவேளை அவர் மீது செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம். அவர் உண்மையிலேயே அதிக அக்கறை கொண்டிருந்த விடயங்களைப் பற்றிப் பேசுவதன் மூலம் அவருடன் ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்த முயற்சி செய்தோம்.

அவர் திரைப்படங்களிலும் உணவிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் ஒரு நல்ல சமையல் செய்யக் கூடியவராகவும் அறியப்பட்டிருக்கிறார். இயற்கையிலும் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். தனிப்பட்ட உறவை அவருடன் கட்டியெழுப்புவது கடினமானதாக இருந்தது. ஏனெனில் எமக்குப் போதிய நேரம்இருக்கவில்லை என்பதுடன் போர் பகுதியான வடக்கிற்கு அடிக்கடி செல்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை. மொழியும் ஒரு தடையாக இருந்தது. அவர் தமிழில் பேசினார். ஒரு மொழிபெயர்ப்பாளர் எங்களுக்குத் தேவைப்பட்டார். அவர் வெளிப்படையான பழக்கமுள்ள ஒரு நபராக இருக்கவில்லை. வெளிப்படையில்லாத அதிகம் எச்சரிக்கை உணர்வுள்ள ஆனால் இயல்பான ஈர்ப்புடைய ஒருவராக இருந்தார்.

கேள்வி: ஆனால்? விடுதலைப் புலிகள் குழந்தைப் போராளிகளைப் பயன்படுத்தியமை, தற்கொலைத் தாக்குதல்களை நடைமுறையில் பயன்படுத்தியது என்பன உண்மையில்லையா? நீங்கள் அவருடன் உரையாடிய போது இந்த உண்மைகள் உங்களைத் தொந்தரவு செய்யவில்லையா? எல்லாவற்றிலும் மனித உரிமைகள் பற்றி உறுதியாக இருக்கும் ஐரோப்பிய/ ஸ்கண்டினேவியப் பாரம்பரியத்திலிருந்து நீங்கள் வந்தமையால்....?

நிச்சயமாக. பாரிய போர்க் குற்றங்களையும் தீய செயல்களையும் செய்த இலங்கை அரசாங்கத் தரப்பில் இருப்பவர்களுடனும் நாம் பேச்சுக்களில் ஈடுபட்டோம். இருந்தும் நான் என்னுள் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வேன். அதாவது, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள்? நாம் இரு தரப்போடும் பேசி, போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றே பாதிக்கப்பட்டவர்கள் எம்மிடம் விரும்பினார்கள் என நான் முடிவுக்கு வந்தேன். எனவே நான் எனது தனிப்பட்ட உணர்வுகளிலும் மக்களின் தாக்கங்களிற்கே முதன்மையளித்தேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் இலங்கையில் இறந்தனர். ஆயிரக் கணக்கான இளம் புலிப் போராளிகள், தென்னிலங்கையைச் சேர்ந்த இளம் இராணுவத்தினர் மற்றும் போரின் இறுதிக் காலங்களில் பல்லாயிரக் கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டார்கள். எனவே பாதிக்கப்பட்டவர்கள் என்ன விரும்பினார்கள்? யேமன், சிரியா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள் எதனை எம்மிடம் எதிர்பார்க்கிறார்கள்? எப்படிப் போரை முடிவுக்குக் கொண்டு வரலாம்? என்பனவற்றில் அக்கறை செலுத்தப்பட வேண்டும்.

கேள்வி: மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற விடயத்தை உங்களது அரசமைப்பில் நன்கு பொதித்து வைத்துள்ள ஸ்கண்டிநேவியர்களும் ஐரோப்பியர்களும் ஏன் மற்றைய இறைமையுள்ள நாடுகளின் இராணுவத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களில்அவ்வளவு அக்கறை கொள்கின்றீர்கள்? இலங்கையைப் பொறுத்தளவில், இலங்கை இராணுவத்தால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதென உறுதியான குற்றச்சாட்டுகள் இருப்பதுடன், அவை இன்னும் இலங்கை இராணுவத்தால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், மத்திய கிழக்கு, ஈராக், சிரியா போன்ற நாடுகளில் மேற்கு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட போர்களில், நூற்றுக் கணக்கான மற்றும் ஆயிரக் கணக்கான மனித உரிமை மீறல்கள் உங்களின் மேற்கு நாடுகளின் படைகளால் நாள்தோறும் இழைக்கப்பட்டுள்ளது பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்? ஏன் அவைகள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன? ஏன் இவைகள் குறித்துப் பெரிய ஈடுபாடு காட்டவில்லை? நேட்டோ நாடுகள் போன்றோர் இந்தப் போர்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதனாலேயா?

அப்படி ஒருவருக்குப் பார்வை இருக்குமெனில், அது முற்றிலும் தவறானது. நான் அரசியலைப் பரந்தளவிற்குள் பார்க்கின்றேன். ஏனெனில், வியட்நாமில் நடந்த போரில் அமெரிக்கா பாரிய எண்ணிக்கையிலான குற்றங்களைச் செய்தது. முற்றிலும் தேவையற்ற இந்தப் போரினால் எதுவும் அடையப்படவில்லை. ஏறத்தாழ 2- 3 மில்லியன் வரையிலான வியட்நாமியர்களும் 55 ஆயிரம் அமெரிக்கர்களும் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். ஆனால், நிச்சயமாக வியட்நாம் இன்று ஒரு வளரும் நாடு. விரைவாகப் பொருளாதார ரீதியில் நகருவதோடு, அமெரிக்காவின் சிறந்த நண்பனாகவும் உள்ளது. இறுதியில் மில்லியன் கணக்காக இறந்தோரும் துன்பப்பட்டோரும் எதுவுமில்லாமல் வீணாகிப் போனார்கள். அமெரிக்கா வியட்நாமை விட்டு வெளியேறியிருந்தால், இது நடந்திருக்காது.

போர்க்குற்றங்களும் எல்லாப் பக்கத்திலிருந்தும் மேற்கொள்ளப்படும் போர்களும் கண்டிக்கப்பட வேண்டும். அத்துடன், முரண்பாடுகளை அதிகப்படுத்திப் போர்களை ஆரம்பிப்பவர்கள் மீது நாம் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்கா பல தேவையற்ற போர்களை ஆரம்பித்துள்ளது. ஈராக்கைத் தாக்கியது நல்லது என மிகச் சிலரே இன்று நம்புகிறார்கள். சதாம் ஹூசைன் ஒரு கேவலமான - கொடூரமான - சர்வாதிகாரியாக இருந்தாலும், அமெரிக்கா பல சிக்கல்களை அங்கு ஏற்படுத்தியுள்ளது. அந்தப் போர் நடந்திருக்காவிட்டால், இன்று ஐ.எஸ். அமைப்பு உருவாகியிருக்காது. எனவே, மேற்கு மற்றும் மேற்கு அல்லாத நாடுகளின் போர்களின் மீதும், பயங்கரவாதிகள் மற்றும் இராணுவத்தினர் மீதும் சமமான கவனம் செலுத்துவோமாக.

கேள்வி: ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் இலங்கையில் நடந்த பிரிவினைப் போரை ஒரு விடுதலைப் போராகப் பார்த்தது. அவர்கள் ஆயிரக்கணக்கான புலிப் போராளிகளுக்கு அகதி அடைக்கலம் கொடுத்தனர். ஏனைய, வெளிநாட்டிலிருந்த ஆதரவாளர்கள் புலிகளுக்கு ஆயுத மற்றும் நிதியுதவி அளித்துள்ளனர். இந்த வருடத்தின் முற்பகுதியில் நான் புலிகளின் மூத்தவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதனை செவ்வி கண்ட போது, அவர் இதனை எனக்குக் கூறினார். ஏன் மேற்குலக நாடுகள் சிலசமயங்களில் மெய் உலகத்தில் இல்லாமல், தொலைவில் நடக்கும் பிரச்னைகளில் கவனமெடுக்கின்றன? இந்தக் குழுக்களைப் போசாக்கூட்டி வளர்த்து மேற்குலகு தவறு இழைக்கவில்லையா?

பெரும்பாலான மேற்கு நாடுகளில் வாழும் மக்கள் உலகின் பிறபகுதிகளைப் பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அறிவைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும் அவர்கள் அடிக்கடி தவறுகள் செய்கிறார்கள் என்பதனையும் ஏற்றுக்கொள்வோம். பல ஆண்டுகளாக நான் மியான்மாரில் இருந்தேன். மேற்குலக நாடுகள் மியான்மாரின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஆனால், அது பயனளிக்கவில்லை. நான் இது பற்றி மேற்குலகத்தாருடன் பேசிய போது, “ஆம். இந்தத் தடைகள் பயனளிக்காது என எமக்குத் தெரியும். ஆனால், நாம்அதனைத் தொடருவோம்” என்றார்கள். ஆகவே, இந்தப் புறக்கணிப்பு அல்லது உண்மையான அக்கறையின்மை நிச்சயமாக அங்கு உள்ளது. அதற்குப் பதிலை இன்னும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

எந்த வகையான முரண்பாட்டுக்கும் நாம் அமைதியானதீர்வைக் காண வேண்டும். இதனை 50 களில் அல்லது 70 களில் சிங்கள மற்றும் தமிழ்த் தலைவர்கள் செய்ய முடிந்திருந்தால், இந்த மோதல் வந்திருக்காது. தமிழர்களின் உரிமைக்காகப் போராடுதல் என்பதில் எனக்குப் பரிவுணர்வு உண்டு. ஆனால், தற்கொலைத் தாக்குதல், ராஜீவ் காந்தி படுகொலை, பேருந்துகளில் குண்டு வைத்தல் மற்றும் கண்டியிலுள்ள பௌத்தர்களின் புனித தலத்தைத் தாக்கியமை போன்றவற்றில் எனக்குப் புலிகள் மீது அனுதாபமில்லை. இவ்வாறு மக்களைக் கொல்லும் மோசமான முடிவுகளையும் புலிகள் எடுத்தார்கள். ஆனால், நாம் இலங்கையிலுள்ள தமிழர்கள் மீது அனுதாபப்பட வேண்டும். நீங்கள் இலங்கையிலுள்ள தமிழரெனின், நீங்கள் காவல் நிலையத்திற்குப் போக நேரின், பொலிஸார் சிங்களத்திலேயே உங்களுடன் உரையாடுவர். இது இலகுவானதொன்றல்ல என நீங்கள் விளங்கிக் கொள்ளலாம்.

கேள்வி: ஐரோப்பாவில் இருக்கும் ஈழப் பிரிவினைவாத அமைப்புகள் தம்மை மீளக்கட்டியமைத்து வருகின்றன. அவை புலிகளின் கொடியை உயர்த்திப் பிடிக்கின்றனர். இது பிரிவினைவாதத்தை அடையாளப்படுத்துகின்றது. அந்தக் கொடி வெறுமனே தமிழர்களின் உரிமைகளை அடையாளப்படுத்தவில்லை. ஏன் உங்களுடைய அரசாங்கங்கள் இதனை அனுமதிக்கின்றது?

ஐரோப்பிய நாடுகள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அனுமதிக்கின்றன. சிலர் அதனை நேர்மறையாகப் பார்ப்பர். சிலர் அப்படி இல்லை. ஆனால், நான் இதில் உங்களுடன் உடன்படுகிறேன். ஒரு பகுதியினர் அதாவது வெவ்வேறு குழுக்கள் இப்படிச் செயற்பட விரும்புவது தடுக்கப்பட வேண்டும். ஆனால், நாங்கள் இலங்கையில் பணியாற்றும் போது, இலங்கை அரசாங்கம் என்ன விரும்புகிறது? புலிகள் என்ன விரும்புகிறார்கள் என்ற அடிப்படையிலேயே தொடர்ச்சியாக எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தோம். இது தொடர்பாக எமது அறிவு மட்டுப்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிந்திருந்ததால், நாம் அந்த வரையறையிலிருந்தே இதனைச் செய்து கொண்டிருந்தோம். அதனாலேயே நாம் எப்போதும் இந்தியாவுடன் கலந்தாலோசித்தோம். ஏனெனில், இலங்கையின் உண்மையான களநிலவரம் தொடர்பான தகவல்களை என்னிலும் பார்க்க மிக மிக அதிகமாக இந்திய உளவுத்துறை வைத்திருந்தது. எனவே இலங்கையின் முரண்பாடு தொடர்பான அவர்களின் ஆழ்ந்த அறிவினை நாம் பெறுவதற்கு இது பயனுள்ளதாக இருந்தது.

கேள்வி: இலங்கையில் உங்களுடைய பணி இன்னும் பெரும்பாலான மக்களுக்கு மர்மமாகவே உள்ளது. எனக்கு நினைவிருக்கிறது... அந்த நேரத்தில் நீங்கள் இது பற்றி என்னுடன் சுருக்கமாக உரையாடியுள்ளீர்கள். எனினும் பெரும்பாலான தகவல்கள் மறைக்கப்பட்டே இருந்தன. விடுதலைப் புலிகளின் உயர்மட்டத்தினரான புலித்தேவன், நடேசன் உட்பட்டோர் சரணடைய விரும்பி வெள்ளைக் கொடியுடன் வந்த போதும் கொல்லப்பட்டமை தொடர்பாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து நீங்கள் எங்களுக்குச் சொல்ல விரும்புகிறீர்களா?

அன்று மே மாதம் 17 ஆம் திகதி. அன்று தான் நோர்வேயின் தேசிய தினம். எனவே எனக்கு நினைவிலிருக்கிறது... நான் ஒஸ்லோவில் எங்கள் அணிவகுப்புக்குச் சென்ற போது விடுதலைப் புலிகளின் மிகச் சிறந்த உறுப்பினர்களில் ஒருவராக இருந்தபுலித்தேவனின் அழைப்பு எனக்கு வந்தது. அவர் புலிகளின் அரசியல் பிரிவில் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். தாங்கள் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைய விரும்புகின்றனர் என்றும், அதற்கு எங்களால் உதவ முடியுமா? என்றும் கேட்டார். நான் அவருடன்நேரில் பேசவில்லை. “போரின் இறுதி மிகவும் நெருங்கிவிட்டதால், எம்மால் தலையிடக் கூடிய காலம் தாமதிக்கப்பட்டு விட்டது” என என்னுடன் கூடப் பணியாற்றுபவர் புலித்தேவனுக்குத் தெரிவித்தார்.

நாம் தலையிடக் கூடிய வாய்ப்பிருந்த கடந்த காலத்தில் போராட்டத்தைக் கைவிடுமாறு நாம் அவர்களுக்குச் சந்தர்ப்பங்களை வழங்கியிருந்ததை அப்போது சுட்டிக்காட்டினோம். ஆனால் அப்போது காலம் மிகவும் தாழ்த்தப்பட்டு விட்டது. நாங்கள் அவரைக் கேட்டது... கூறியது என்னவெனில், பெரிய வெள்ளைக் கொடியைத் தூக்கிச் செல்லுமாறும் (அதனாலேயே வெள்ளைக் கொடி விவகாரம் என்று சொல்லப்படுகிறது) ஒலிபெருக்கிகள் மற்றும் என்னென்ன சாதனங்கள் இருந்தனவோ அவற்றைப் பயன்படுத்தி சரணடைய விரும்பும் அவர்கள் எண்ணத்தை இலங்கை இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தும்படி கூறினோம். எங்கள் பக்கத்திலிருந்து, சரணடைய விரும்பும் உங்கள் எண்ணத்தை இலங்கைத் தலைவர்களுக்குத் தெரியப்படுத்துவோம் என்றும் புலித்தேவனுக்கு மேலும் கூறினோம்.

கேள்வி: நீங்கள் அதனை இலங்கைத் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தினீர்களா?

ஆம். நிச்சயமாக. நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரான பஸில் ராஜபக்ஷவுக்குத் தெரியப்படுத்தினோம். நாங்கள் மட்டுமல்ல, சில முக்கியமான தமிழர்கள் மற்றும், நான் நினைக்கிறேன்... சில இந்தியத் தொடர்பாளர்கள் மூலமாகப் புலிகளும் இலங்கையின் அரசியல் தலைமைகளுக்குச் செய்தி அனுப்பினர். மறுநாள் நடேசன் மற்றும் புலித்தேவன் கொல்லப்பட்டனர் அறிந்தோம். ஆனால், இந்தக் கொலை நடந்த சரியான சூழ்நிலை இன்னும் தெரியவில்லை. பிரபாகரனும் அப்போது அவர்களுடன்கூட இருந்தார் என நான் நினைக்கவில்லை. எனினும் இதுவும் எனக்கு உறுதியாகத் தெரியாது. பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதும் தெரியாது. ஆனால், பிரபாகரனின் 12 அகவையுடைய மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டார் என்று எமக்கு மிக மிக உறுதியான சந்தேகம் உண்டு. இது இலங்கை இராணுவத்தின் பொறுப்பற்ற மிகத் தீய செயலாகும். துரதிர்ஷ்டவசமாக, இலங்கை இராணுவம் ஏன் சரணடைய வந்தவர்களை ஏற்று அவர்களை நீதிமன்றின் முன்னிலையில் நிறுத்தாமல் கொலை செய்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கேள்வி: இந்த விடயங்கள் தொடர்பாகத் தற்போதைய இலங்கை அரசாங்கத்துடன் நீங்கள் இன்னும் தொடர்பில் உள்ளீர்களா? ஏனெனில், இது குறித்த விசாரணைகள்...

இல்லை. நான் தற்போது சுற்றுச் சூழல் பிரச்னைகள் குறித்து மட்டுமே அவர்களுடன் தொடர்பில் உள்ளேன். ஆனால், போரின் பின்னரான தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் பற்றித் தற்போது கலந்துரையாடுகிறோம். மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பான ஐ.நாவின் அதிகாரியாக நான், சுற்றுச் சூழல் தொடர்பாகவும், சுற்றுச் சூழல் சிக்கல்களுக்கு எப்படி உதவுவதென்றும், முதலீட்டு வசதிகளை அமைப்பது, யானைகளைக் காப்பது, நீர் மேலாண்மை செய்வது போன்ற பணிகளில் கவனம் செலுத்துகின்றேன்.

கேள்வி: நீங்கள் சுற்றுச் சூழல் அமைச்சராகவும் பன்னாட்டு அபிவிருத்தி அமைச்சராகவும் உங்கள் நாட்டில் இருந்தீர்கள். பின்னர், இலங்கையில் சமாதான மத்தியஸ்தராக இருந்தீர்கள். பின்னர், பாரிஸிலுள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் தலைவராக பணியாற்றினீர்கள். தற்போது, ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைவராக உள்ளீர்கள். இவற்றில், எதில் நீங்கள் மகிழ்வுடன் பணியாற்றினீர்கள்? இதில் எது மிகவும் சவாலானதாக இருந்தது?

இலங்கையில் சாமாதன முன்னெடுப்பு மிகவும் சவாலானதாக இருந்தது. ஏனெனில், அது மக்களின் உயிர் தொடர்பான விடயம். நாம் சரியாகச் செயற்படாவிட்டால், எமது தவறுகள் கொலைகளை அதிகரிக்கச் செய்துவிடும் என நாம் அறிந்திருந்தோம். இரண்டுவருட காலப்பகுதியில், ஓர்அரசியல் படுகொலை கூட இலங்கையில் நடைபெறவில்லை. இது அந்த நேரத்தில் மிகப் பெரிய முன்னேற்றமாகக் கருதப்பட்டது. பின்னர் அது கட்டுப்பாட்டை மீறிப் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நாம் எதுசெய்தாலும் விமர்சிக்கப்பட, இந்த இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வது மிகப் பெரிய சவாலாக இருந்தது.

கேள்வி: எனவே, நீங்கள் சமாதான மத்தியஸ்தர் பதவி வகித்ததற்கு வருத்தப்படவில்லையா?

எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரேயொரு வருத்தம் என்னவெனில், எமது சமாதான முயற்சி வெற்றியளிக்கவில்லை. எமது முயற்சி வெற்றியளித்திருந்தால், கொல்லப்பட்ட இந்தப் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிருடன் இருந்திருப்பார்கள். தமது கணவர்களை இழந்த பெண்களினதும், பிள்ளைகளை இழந்த தாய்மார்களினதும் கண்களைப் பார்க்கும் போது அவர்கள் சிங்களமோ அல்லது தமிழோ, நாம் ஏதாவது இந்த மக்களிற்கு அதிகம் செய்திருக்கலாமோ என எனக்குள்ளே கேள்வியெழுப்பிக் கொள்வேன். நீங்கள் நான் மகிழ்வாகப் புரியும் பணி எதுவென்று கேட்டால், நான் எனது தற்போதைய பணியையே சொல்வேன். ஏனெனில், உலகளாவிய சுற்றுச்சூழலுக்காகப் பணியாற்றுவது என்பது எனது பார்வையில் இன்றைய காலத்தில் முதன்மையானது.

கேள்வி: நீங்கள் எதிர்வரும் அண்மைக் காலங்களில் இலங்கைக்குத் திரும்புவதற்குத் திட்டமிட்டுள்ளீர்களா? நீங்கள் அந்த அனுபவங்களைப் புத்தகமாக எழுதப்போகிறீர்கள் எனக் கேள்விப்படுகிறோம்.

இலங்கை குறித்து அப்படி ஒரு புத்தகத்தை நான் எழுதவில்லை. நான் இலங்கைக்குத் திரும்பிச் செல்வதற்கு மிகவும் மகிழ்வுடையவனாக இருப்பேன். சமாதனத்தை ஏற்படுத்துபவர்களுக்குச் சிக்கலாக அமையும் வகையில் நான் அங்கு திரும்பிச் செல்ல மாட்டேன். சந்திரிகா, ரணில், மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள், ரவூப் ஹக்கீம் என எனக்கு அதிகளவான நண்பர்கள் அங்குள்ளனர். நான் அவர்களைப் பார்க்க வேண்டும். ஆனால், எவருக்கும் சிக்கல்கள் ஏற்படாத நேரத்தில் நான் அங்கு செல்வேன்.

கேள்வி: இலங்கை உங்களுக்கு இரண்டாவது வீடாக மாறியதா?

நிச்சயமாக. எனது சொந்த நாட்டுக்கு அடுத்ததாக நான் மிகவும் கவனம் எடுக்கும் நாடு இலங்கை தான்.


Category: கட்டுரைகள், நேர்காணல்
Tags: நோர்வே, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE