Friday 26th of April 2024 06:51:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியன்  மீதான துன்புறுத்தல்   குறித்து 5 ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் கவலை!

ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியன் மீதான துன்புறுத்தல் குறித்து 5 ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் கவலை!


இலங்கையில் ஊடகவியலாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான தரிஷா பெஸ்டியன் கைது செய்யப்பட்டுத் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக ஐ.நாவின் 5 விசேட அறிக்கையாளா்கள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

சண்டே ஒப்சர்வரின் முன்னாள் ஆசிரியரும், நியூயோர்க் ரைம்ஸின் கொழும்புச் செய்தியாளருமான தரிஷா பெஸ்டியன் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டுத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கைது குறித்து கவலை வெளியிட்டு ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள், கடந்த ஜூலை 13-ஆம் திகதி இலங்கை அரசுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

அவரது ஊடகப் பணி மற்றும் மற்றும் அவா் இல்ஙகையில் மேற்கொண்டுவரும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளின் பின்னணியியேலே அவா் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தரிஷா பெஸ்டியனை தொடர்ந்து துன்புறுத்துவதும், அவரது கணினியைக் கைப்பற்றுவதும், அவரது தொலைபேசி பதிவுகளை அம்பலப்படுத்துவதும் ஆபத்தை விளைவிக்கும்.

இவ்வாறான செயற்பாடுகள் ஏனைய ஊடகவியலாளர்களை பொது நலன் சார்ந்து செயற்பட முடியாதவாறு அச்சுறுத்திப் பணியவைக்கும் செயற்பாடாகவும் அமையும் எனவும் ஐ.நா. விசேட அறிக்கையாளா்கள் குறிப்பிட்டிருந்தனர்.

தரிஷா பெஸ்டியன் மீதான நடவடிக்கைகள் இலங்கையின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்த அவரது அறிக்கையிடலைத் தடுக்கும் முயற்சியாகவும் அவரது பணிகளை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும் இருக்கக்கூடும் என நாங்கள் கவலைப் படுகிறோம் எனவும் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

ஜூன் 2020 இல் கொழும்பில் உள்ள ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியன் வீட்டுக்குள் நுழைந்த சி.ஐ.டியினர். அவரது தனிப்பட்ட கணினியைக் கைப்பற்றினர்.

நவம்பர் 2019 கொழும்பில் வைத்து சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் விசாரணையின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அவரது மடிக்கணினியைக் கைப்பற்றும் முயற்சியுடன் சி.ஐ.டியினர் முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் தனது இல்லத்திற்கு வந்திருந்ததாக தரிஷா பெஸ்டியன் கூறினார்.

எனினும் ஊடகவியலாளர்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் இது குறித்துக் குரல் எழுப்பியதை அடுத்து அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது 5 ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் அரசாங்க சார்பு ஊடகங்கள் தரிஷா பெஸ்டியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஒரு மோசடியான பிரச்சாரத்தை நடத்தியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான திட்டமிட்ட பிராச்சாரங்கள் மூலம் அவர் ஒரு துரோகி மற்றும் குற்றவாளி என்று முத்திரை குத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன எனவும் ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் டேவிட் கயீ, சட்டவிரோத தடுத்துவைத்தல்கள், மரணதண்டனைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் காலமார்ட், சுதந்திரம், அமைதியான சட்டசபை மற்றும் அமைப்புக்கள் குறித்த அறிக்கையாளா் கிளெமென்ட் நயலெட்சோசி வவுல், மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலைமை குறித்த சிறப்பு அறிக்கையாளர் மேரி லாலர் மற்றும் தனியுரிமைக்கான சிறப்பு அறிக்கையாளர் ஜோசப் கன்னடசி ஆகிய ஐ.நா. விசேட அறிக்கையாளா்கள் இணைந்து இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE