;

Thursday 29th of October 2020 05:02:28 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையின் வெளியுறவு கொள்கை - ஒத்துழைப்புக்கும் முதலீட்டுக்கும் முதலிடம் வழங்குகிறதா?

இலங்கையின் வெளியுறவு கொள்கை - ஒத்துழைப்புக்கும் முதலீட்டுக்கும் முதலிடம் வழங்குகிறதா?


இலங்கை -இந்தியப் பிரதமர்களுக்கிடையிலான உரையாடல் அதிக அரசியல் முக்கியத்துவமிக்கதாக காணப்படுகிறது. இன்றைய புவிசார் அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கும் பூகோள அரசியலில் முதன்மை அடைந்துவரும் இரு துருவ அரசியல் போக்குக்கும் மத்தியில் இரு நாட்டுத் தலைவர்களது பேச்சுவார்த்தை அரசியல் ரீதியில் மட்டுமன்றி பொருளாதார மற்றும் இராஜதந்திர ரீதியில் அதீத முக்கிய விடயமாக தென்படுகிறது. இதில் அதிக கவனமும் கரிசனையும் கொள்ள வேண்டியவர்களாக தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் காணப்படுகின்றனர். இக்கட்டுரையும் இரு நாட்டுத் தலைவர்களது உரையாடல் ஏற்படத்தியுள்ள அரசியல் மற்றும் இராஜதந்திரீதியான முக்கியத்துவத்தை தேடுவதாக அமையவுள்ளது.

இலங்கையின் வெளியுறவானது இந்தியாவை மையப்படுத்தியதொன்றாக அமையும் என புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்பு வலியுறுத்தி வந்தது. அதற்கு அமைவாக 26.09.2020 அன்று இரு நாட்டுப் பிரதமர்களுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலில் இலங்கை தனது நலன்களையும் இந்தியா தனது நலன்களையும் முதன்மைப்படுத்திக் கொண்ட ஒரு போக்கினை காணமுடிந்தது. 13 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது இரு நாட்டுக்குமான இராஜதந்திரப் பொறியாகவே தென்படுகிறது. கடந்த 33 வருடங்கள் இரு நாட்டுக்குமான உறவைத் தீர்மானிப்பதில் 13 வது சீர்திருத்தத்திற்கு கணிசமான பங்கிருந்தது என்பது மட்டுமல்ல இந்தியா இலங்கை மீதும் இலங்கை இந்தியா மீதும் நெருக்கடியை ஏற்படுத்தும் ஒன்றாகவும் காணப்பட்டுள்ளது. இரு நாட்டுப் பிரதமர்களும் உரையாடிய போது பரிமாறிக் கொண்ட தமிழர் விடயத்தில் பேசப்பட்டவற்றையும் அதற்கான பதிலையும் நோக்குவோம்.

நல்லிணக்க செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம் நீதி கௌரவம் குறித்து தீர்வைக்காணுமாறும் 13 வது திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்துமாறும் இந்தியப் பிரதமர் இலங்கைப் பிரதமரை கேட்டுக் கொண்டார். இதில் இந்தியப் பிரதமர் தெரிவித்த வார்த்தைகள் அனைத்தும் இராஜதந்திரீதியில் முக்கியமானவை. 'சமத்துவம்' 'நீதி' 'கௌரவம் என்பன நீண்ட அர்த்தங்களை கொண்டவை. அது மட்டுமன்றி அரசறிவியல் கோட்பாடுகளை பிரதிபலிப்பவை. அத்தகைய கோட்பாட்டுக் கல்விக்கூடாக தமிழரது பிரச்சினைக்கான தீர்வுகளை எட்டுவதென்பது கடந்த காலம் முழுவதற்கான பதிலாக அமையும். அதனை புரிந்து கொள்வதும் பின்பற்றுவதற்கான முனைவுகளை தொடக்குவதும் அவசியமானவை. இதனையே தமிழர் தரப்பு மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு பதிலளித்த இலங்கைப்பிரதமர் மக்களின் ஆணை மற்றும் அரசியலமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து இன மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்கும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார்.

இவற்றை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்தியாவின வெளியுறவுத்துறையின் பேச்சாளர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். அதன் பிரகாரம் அரசியலமைப்புக்கான 13 வது சட்டத்திருத்தம் படி தமிழருக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியது எனத் தெரிவித்தார். அவ்வாறே அமைதி மற்றும் சமாதானத்திற்கான பேச்சை முன்னெடுக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியதாகவும் பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகள் வர்த்தகம் முதலீட்டு ஒத்துழைப்புக் குறித்து இரு தரப்பும் உரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இது பற்றி இந்திய வெளியுறவு அமைச்சக இந்திய பெருங்கடல் பிரிவு இணைச்செயலாளர் அமித்தரங் குறிப்பிடும் போது இந்த உச்சி மகாநாட்டின் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை முன்னோக்கிச் செல்வது மற்றும் உறவுகளை மேலும் ஆழப்படுத்த மிகப்பெரிய திட்டத்திற்கு வழிவகுக்கச் செய்யும் என்றார். மேலும் இரு நாட்டுத் தலைவர்களது உரையாடலில் மீனவர் பிரச்சினை பௌத்தத்திற்கான விருத்திக்கு 15 மில்லியன் டொலர் நிதி உதவியளித்தமை மலையக வீட்டுத்திட்டம் பூர்த்தி செய்வதற்கான நடைமுறை சக்திவள விருத்திக்கான சோலர் திட்டத்திற்கு 100 மில்லியன் அ.டொ. திட்டம் தொழில் சார் தகமையை விருத்தி செய்யும்வகையில் விவசாயம் விஞ்ஞான தொழில் நுட்பம் சுகாதாரபாதுகாப்பு நுட்பத்தினை விருத்தி செய்யும் வகையிலான தகமைகாண் பயிற்சிகள் வழங்குவது மற்றும் சமூகவிருத்திக்கான திட்டமிடல்கள் என்பன ஏற்படுத்த திட்டமிடப்பட்டதன் மூலம் இலங்கையுடனான உறவை வளர்க்க வழிவகுத்துள்ளார் இந்தியப்பிரதம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். .

எனவே இரு தரப்பினதும் காணொளி சந்திப்பானது இராஜதந்திர உரையாடலாக அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. அப்படியாயின் இதில் அதிகம் சாதித்த தரப்பு எதுவாக உள்ளது என்ற கேள்வி முக்கியமானது. இலங்கையின் பிரதமர் காணொளி உரையாடல் முடிந்து நான்கு நாட்களுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போது இந்தியப்பிரதமருடன் உரையாடியதை மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.அதனால் இந்தியப் பிரதமர் அதிகம் சாதித்துள்ளதாக தெரிகிறது. அதற்கு வலுவான ஒரு காரணம் உண்டு. புதிய அரசியலமைப்பின் மூலம் 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது பற்றி இலங்கையின் மாகாணசபைகள் மற்றும் உள்@ராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரா உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துவந்தனர். ஆனால் காணெளி உரையாடலுக்கு பின்பான ஊடக சந்திப்பொன்றில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா குறிப்பிடும் போது மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் எனவும் 13 வது திருத்தச் சட்டமூலமோ மாகாணசபை முறைமையோ கலைக்கப்படமாட்டாது எனவும் இந்தியாவுடனான உறவு சுமூகமானதாக அமையும் எனவும் தெரிவித்தார். இந்தியாவுக்கு விரோதமாக இலங்கை செயல்படாது எனவும் குறிப்பிட்டார். எனவே இந்த விடயத்தில் இந்திஜயத் தரப்பு வெற்றிகரமாக இலங்கை அரசாங்கத்தை கையாண்டுவிட்டதாக தெரிகிறது. அவ்வாறே சரத் வீரசேகராவை இந்திய தூதரகத்திற்கு அழைத்ததன் மூலம் அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது. எனவே இந்தியா இலங்கையை தனது பிடிக்குள் வைத்துக் கொள்வதில் கணிசமான அடைவை எட்டியுள்ளது எனலாம்.

இதே நேரம் இலங்கைத் தரரப்பும் இராஜதந்திர ரீதியில் செயல்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக இலங்கை பிரதமரது பதில் மக்கள் ஆணையை முதன்மைப்படுத்தியதுடன் தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களதும் நலன்கள் என்பதன் மூலம் வெளிப்படுத்திய இராஜதந்திர சொல்லாடல் இந்தியாவை உடனடியாக எதிர்கொள்ளக் கூடியதாக அமைந்திருந்தது. இந்தியப் பிரதமர் தமிழ் மக்கள் எனக்குறிப்பிட்ட சொல்லை இலங்கைப்பிரதமர் பொதுமைப்படுத்தும் விதத்தில் தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களதும் என்பதன் மூலம் சமாளித்துள்ளார். இதனாலேயே இரு நாட்டுக்கும் 13 சீர்திருத்தம்' ஒர் இராஜதந்திர சரத்தென குறிப்பிடமுடியும்.

இது மட்டுமன்றி அத்தகைய காணெளி உரையாடலுக்கு பின்பு இலங்கைப் பிரதமர் சீனக் குடியரசின் 71 வது சுதந்திரதின விழாவை பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் தலைமைதாங்கி சிறப்பாக கொண்டாடியள்ளார்.அந்த நிகழ்வு சீனாவுடனான உறவின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகிறது.

அவ்வாறே இலங்கை ஜனாதிபதி இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களுக்கான சான்றிதழை வழங்கும் போது ஆற்றிய உரை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். சீன நிதி உதவியுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதை சிலர் கடன் பொறி என்று அழைத்த போதிலும் அது பெரும் அபிவிருத்தி திறன் கொண்ட ஒரு திட்டமாகும். பயங்கரவாதம் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.விரைவான வளர்ச்சிக்கு வெளிநாட்டு உதவி தேவைப்பட்டது. இதன்போது இலங்கை வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய சீனா முன்வந்தது. எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சானது. இலங்கை ஒவ்வொரு நாட்டுடனும் நட்புறவுடன்தான் உள்ளது. எமது நாடு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடதர்தில் அமைந்துள்ளது. இலங்கை இச்சூழலில் ஒரு மிதமான வெளியுறவுக் கொள்கையை தேர்ந்தெடுத்துள்ளது. பரஸ்பரம் நன்மைபயக்கும் வளர்ச்சிக்கும் ஒத்துழைப்பிற்கும் முதலிடம். இந்த நாடு வெளிநாட்டு முதலீட்டுக்கு திறந்திருகிறது எனக்குறிப்பிட்டார். தற்போது இந்தியா முதலிடம் என்பது கைவிடப்பட்டு வளர்ச்சிக்கும் ஒத்துழைப்பிற்கும் முதலிடம் என மாறியுள்ளது.

இந்திய -இலங்கை காணெளி உரையாடலின் பின்பு தமிழ் அரசியல் தலைமைகளின் நகர்வுகள் எப்படியுள்ளது என மதிப்பீடு செய்தல் வேண்டும். ஏனெனில் இந்தியத் தரப்பு உரையாடிய முக்கிய விடயம் தமிழ் மக்களது அரசியலாகும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் டுவட்டர் பக்கத்தில் தமிழ் மக்கள் பற்pறி இந்திய பிரதமர் உரையாடியதற்கு வரவேற்பு என மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழர் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏசுமந்திரன் இலங்கை இந்தியாவுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளது அதனை மீற முடியாது என அறிக்கை இட்டுள்ளார். இவற்றை விடுத்து எத்தகைய நகர்வும் எடுக்கப்படாது உள்ளதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக இலங்கைக்கான இந்திய தூதரகத்தை அனுகவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சரை அணுகவில்லை. புதுடில்லியுடன் எத்தகைய உறவையும் தொடக்கவில்லை. குறைந்த பட்சம் காணெளி உரையாடலைக் கூட மேற்கொள்ள முயலவில்லை. நன்றி தெரிவித்து ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதை விடுத்து உரிய தரப்புகளுக்கு செல்லக் கூடிய விதத்தில் செயல்படவில்லை. இது ஏதோ இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பிரச்சினை என்பது போல் 'நன்றி' 'வரவேற்கிறோம்' 'மீறமுடியாது' என்ற வார்த்தைகளை ஊடகங்களுக்கு தெரிவிப்பது பொருத்தமான இராஜதந்திரமும் கிடையதாது உரையாடலாகவும் அமையாது. இந்தியா தமிழ் தலைமைகளுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துள்ளது. அதனை தமிழ் தரப்பு பயன்படுத்த தவறுமாயின் மீளவும் அதே நிலைதான் ஏற்படும்.

எனவே தமிழ் தரப்புக்கு இரு வாய்ப்புக்கள் கிடைத்துள்ளது. ஒன்று ஜெனீவா அரங்கம் அதிக உரையாடலை தமிழர் சார்பில் நகர்த்த முயலுகிறது. இந்தோ-பசுபிக் திட்டமிடல் தமிழரது பக்கம் அதிக வாய்ப்புக்களை திறக்கிறது.இரண்டாவது இந்தியா முடிந்தவரை தமிழர் பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அந்த அரசுகள் தமது நலனுக்குட்பட்டே அனைத்துவிடயத்தையும் மேற்கொள்வன. அது ஒரு போதும் தவறெனக் குறிப்பிட முடியாது ஆனால் அதில் கிடைக்கும் வாய்ப்பினையே தேடவேண்டும். அல்லது கண்டறிய வேண்டும். அதன்படி நகர வேண்டும். தீர்வை எத்தரப்பும் தமிழருக்கு தூக்கித் தந்துவிடாது. எனவே தமிழ் தரப்பு முயலவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை குறைகூறி பாராளுமன்றம் சென்ற தரப்புக்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. பத்து கட்சிகளின் கூட்டு ஏன் இந்த விடயத்தை கண்டு கொள்ளவில்லை. அடுத்த மகாணசபைத் தேர்தல் மட்டும் தான் அதன் இலக்கா? அல்லது நினைவு கோரல் மடடும் தான் கூட்டின் நோக்கமா? இத்தகைய மௌனத்தால் சாதிக்கப்போவது என்ன?

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீகணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE