Wednesday 1st of May 2024 04:19:30 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை - இந்திய உறவுகளை எந்தத் தரப்பும் பிரிக்க முடியாது! - சம்பந்தன் இடித்துரைப்பு!

இலங்கை - இந்திய உறவுகளை எந்தத் தரப்பும் பிரிக்க முடியாது! - சம்பந்தன் இடித்துரைப்பு!


"இலங்கையும் இந்தியாவும் சரித்திர ரீதியில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை எந்தத் தரப்பும் அல்லது எந்த நாடும் பிரிக்கவே முடியாது. அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டோம்."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் காணொளி ஊடாக அண்மையில் கலந்துரையாடல் நடத்தியிருந்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.

13ஆவது திருத்தச் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று ராஜபக்ச அரசிலுள்ள முக்கிய அமைச்சர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மோடியின் இந்த நிலைப்பாட்டால் அதிருப்தியடைந்து இராஜதந்திர ரீதியிலான பதிலடியை வெளிக்காட்டுவதற்காகவா, சீனத்தூதுக்குழுவை இலங்கை அரசு அவசர அவசரமாகச் சந்தித்தது என்று அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"சீனத் தூதுக்குழு எதற்காக இலங்கை வந்தது? அந்தக் குழுவை இலங்கை அரசு ஏன் அழைத்தது? உண்மையில் இரு தரப்பும் நேரில் என்ன பேசினார்கள்? என்பது தொடர்பில் எமக்குத் தெரியாது. ஆனால், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள உறவை எந்தத் தரப்பும் அல்லது எந்த நாடும் முறிக்கவே முடியாது.

இலங்கையின் அயல் நாடு இந்தியா. இன ரீதியில் - மொழி ரீதியில் - மத ரீதியில் - கலாசார ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்பு உண்டு.

அதற்கமைய இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூவின மக்களும் பெருமளவில் இந்தியா சென்று வருவார்கள். அதேபோல் இந்தியா நாட்டைச் சேர்ந்த மக்களும் இலங்கை வந்து போவார்கள். இது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கின்றது. இதை எவரும் தடுக்க முடியாது.

இந்தியா வல்லரசு நாடு. இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடு. எனவே, இந்தியாவிடமிருந்து சகல உதவிகளையும் இலங்கை பெற முடியும்.

அதேபோல் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா கூறும் அறிவுரைகளையும் ஆட்சியிலுள்ள அரசு கேட்டு நடக்க வேண்டும். அதனைப் புறக்கணிக்கும் வகையில் இலங்கை அரசு செயற்படக்கூடாது.

இலங்கையின் அரசியல், அபிவிருத்தி மற்றும் பொருளாதாரம் எனப் பல துறைகள் தொடர்பில் இந்தியா அதிக சிரத்தை கொண்டுள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், சீனா, இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE