Tuesday 19th of March 2024 03:15:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா?

இலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா?


சீனத் தூதுக்குழுவின் வருகை இலங்கை சீன நட்புறவை மேலும் பலப்படுத்திய போதும் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அதரிகம் பாதித்துள்ளதை காணமுடிகிறது. குறிப்பாக சீனாவின் உதவிகளை கடன்பொறி எனக்கூறமுடியாதென்ற கருத்தினை இலங்கையின் ஜனாதிபதி வலியுறுத்தியதுடன் இலங்கையின் இறைமையை சர்வதேச அளவில் பாதுகாக்கும் என சீனாவின் உயர்மட்ட தூதுக் குழு தெரிவித்திருந்தது. கடந்த 26.09.2020 அன்று இந்திய இலங்கை பிரதமர்களது உரையாடலை அடுத்து பெரும் இராஜதந்திர நகர்வுகள் ஆரம்பமாகியது.இத்தகைய சந்திப்புக்கு வழிவகுத்த இந்தியத் தூதுவருடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உரையாடலாகும். அதன் பிரதியாகவே சீனாத் தூதுக்குழுவின் வருகை அமைந்திருந்தது. அதற்கு பதிலீடாக இலங்கையில் ஏற்பட்டுவரும் இராஜதந்திர நகர்வுகளை நோக்குவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

எதிர்வரும் 28 ஆம் திகதி அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாள் மைக் பாம்பியோ இலங்கைக்கு வருகைதரவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதன் போது ஜனாதிபதி பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதாகவும் மிலேனிய உடன்படிக்கை மற்றும் சோபா உடன்பாடு தொடர்பில் பேசவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதே நேரம் கடந்த 13.10.2020 இல் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி உட்பட இரு வேறு அதிகாரிகள் சகிதம் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு சென்றுள்ளனர். இதற்கு மேலும் வலுக் கொடுக்கும் விதத்தில் இந்தியாவின் இலங்கைத் தூதுவர் கோபால் பாக்லே இலங்கையின் புத்த சாசன அமைச்சுடனும் அதன் இராஜாங்க அமைச்சுடனும் தொடர்ச்சியான உரையாடலை ஏற்படுத்திவருவதுடன் பௌத்த மத நிறுவனங்களது கட்டுமானம் தொடர்டபிலும் உள்கட்டுமான விருத்தி தொடர்பிலும் உரையாடிவருகின்றார். இதன் பிரதான நோக்கம் அண்மையில் இந்திய இலங்கைப் பிரதமர்கள் உரையாடும் போது இந்தியா பௌத்தமத விருத்திக்காக நிதி ஒதுக்கியிருந்தமையுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு செயல்படுவதாகவே தெரிகிறது. இதனூடாக இந்தியாவின் அணுகுமுறைகளை இலங்கையில் அதிகரிக்கவும் அதிக தொடர்பாடலை பராமரிக்கவும் இந்தியா முனைகிறது என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.

இவ்வாறு அமெரிக்காவின் நகர்வுகள் இலங்கையில் அதிகரித்ததை அடுத்து இலங்கை தரப்பு சில உபாயங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. அதில் பிரதான விடயமாகவே அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கெஹகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனத்திற்குரியதாகும். இலங்கைக்கு சாதகமான வர்த்தக அபிவிருத்திக் கொள்கையுடன் இணங்கும் நாடுகளுடன் சேர்ந்து செயல்படுவதற்கே நாம் எதிர்பார்கிறோம். அதற்கமையவே சீனாவுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். இலங்கை நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியா இணங்காத திட்டங்களையே சீனா தானாக முன்வந்து மேற்கொள்கிறது.இதனால் சீனாவின் பொருளாதாரக் கொள்கையுடன் நாம் நாம் பயணிப்பதே எமக்கு பயனள்ளதாக அமையும். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மிகத் தெளிவானது. எந்தவொரு நாட்டுடனும் நாம் முரண்படும் கொள்கையில் செயல்பட நாம் தயாராக இல்லை.சீனா அமெரிக்கா இந்தியா இலங்கையுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ள போதும் வர்த்தகம் அபிவிருத்தித் திட்டங்களில் எமக்கு சாதகமான நாடுகளுடன் நாம் இணைந்து பயணிகிறோம். சீனாவுக்கு முன்னுரிமை கொடுப்பதாக சில விமர்சனங்கள் எழுந்தாலும் அதில் உண்மையில்லை. ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து தெற்கின் கடல் ஆதிக்கத்தை பலப்படுத்த வேண்டும் என இலங்கை தீர்மானித்த போது முதலில் இந்தியாவுடனே பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன.ஆனால் இந்திய அரசு அதற்கு இணக்கம் தெரிவிக்காததால் சீனா அதனை கையில் எடுத்தது எனத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்த விடயங்கள் இராஜதந்திர உரையாடலாக அமைந்தாலும் விண்ணப்பங்கள் நியாயமானவையே.ஆனால் சீனா-இந்திய முரண்பாடே இங்கு கவனத்திற்குரியதாகும். கொழும்புத் துறைமுக நகரத்தின் தெற்கு முனையத்தை தொழிலாளர்கள் எதிர்க்கும் போது கைவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது போல் நுரைச்சோலை விடயத்தில் அரசாங்கம் செயல்படவில்லை என்பதுவும் இராஜீக முயற்ச்சிக்குள் பாரபட்சமான நடைமுறையாக அமைந்துள்ளதை காணமுடிகிறது. அது மட்டுமன்றி ஹம்பாந்தோட்டை விடயம் ஜப்பானிடமும் கையளிக்கப்பட்டது. நோர்வேயே அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்கான அனுமதியை தென் இலங்கைப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மேற்கொண்டு முடிபினை அறிவித்தது தெரிந்ததே.ஆனால் இங்கு பொருளாதார அபிவிருத்தியோ உள்கட்டுமான வளர்ச்சி பற்றிய விடயமோ முதன்மையல்ல. மாறாக சீனா இலங்கை ஊடாக இந்தியாவுக்கு நெருக்கடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற அச்சமே அடிப்படையானதாகும். இராணுவ ரீதியான பாதுகாப்புப் பொறுத்தே அத்தகைய குழப்பத்தை இந்தியா ஏற்படுத்துகிறது. அது இந்தியா –சீன-இலங்கை சார்ந்த பவிசார் அரசியல் உட்பட்ட விடயமாகவே தெரிகிறது. புவிசார் அரசியலும் இராணுவமுமே புவிசார் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வல்லமையுடையதாக உள்ளது.அதனடிப்படையிலேயே இலங்கையின் போக்கும் உலகளாவிய அரசுகளின் நலன்களில் சார்ந்திருக்கின்றதை அவதானிக்க முடியும்.

இலங்கையின் இராஜதந்திரப் பலமானது கடந்த பல தசாப்தங்களாக தனித்துவமானதாக அமைந்துவருகிறது. அதிலும் பனிப் போருக்கு பிந்திய அரசியலில் இந்தியாவையும் அமெரிக்காவையும் கையாளும் முனைப்பில் வலுவான சக்தியாக இலங்கை இராஜதந்திரம் காணப்படுகிறது.குறிப்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் விரிசல் ஏற்படும் போதெல்லாம் சீனாவிடம் கைகோர்ப்பதுவும் பின்பு இந்திய அமெரிக்க தரப்பு பின்வாங்குவதுமாக கடந்த இரு தசாப்தங்கள் நகர்வதனை காணமுடிகிறது. தற்போதும் அதற்கான ஒரு காலப்பகுதியைக் காணமுடிகிறது. சீனத் தூதுக்குழுவின் வருகையை அடுத்து அமெரிக்காவும் இந்தியாவும் அதிக முரண்படும் போக்கினை வெளிப்படுத்தும் போது வேகமாக இலங்கை தனது நியாயப்பாட்டினை வெளிப்படுத்திவருகிறது. அத்தகைய நியாயப்பாடு சரியானதாகவும் தெரிகிறது. ஆனால் அதனுடன் அமெரிக்க இந்தியத் தரப்பு இலங்கையுடன் முரண்படவில்லை மாறாக அமெரிக்க இந்திய நலன்களுக்கு முரணபாடுடைய சீனாவுடனான இலங்கையுடனான நட்பே அவர்களது முரண்பாட்டுக்கு மூல வேராக அமைந்துள்ளது. சர்வதேச அரசியலில் அமெரிக்காவும் இந்தியாவும் வெளிப்படையாக நிராகரிக்கும் சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்பே பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாகும். இத்தகைய உபாயத்தை இலங்கை இராஜதந்திரிகள் மிக நீண்ட காலமாக கடைப்பிடித்துவருகின்றனர். சுதந்திர இலங்கையில் பிரித்தானியா பக்கமிருந்த கொண்டு இந்தியாவை கையாண்டது போல் திறந்த பொருளாதாரக் கொள்கையின் பெயரால் அமெரிக்காவுடன் இருந்து கொண்டு இந்தியாவை கையாண்டது போல் தற்போது சீனா பக்கம் இருந்து கொண்டு இலங்கை அமெரிக்காவையும் இந்தியாவையும் கையாள வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டு;ள்ளது. இத்தகைய இராஜதந்திரமே இலங்கையின் இருப்பையும் ஆட்சி அதிகாரத்தையும் பாதுகாத்துவருகின்றது. அதனை அவதானிக்கும் போது இலங்கையின் இராஜதந்திரம் மிக உச்சமான விளைவைத் தரவல்லதாக மாறியுள்ளது.இலங்கை ஒரே தேசமாக இருக்கவும் இறைமையுடைய நாடாக விளங்கவும் இராதந்திரமே அடிப்படையாக உள்ளது. இது வரைகாலமம் இந்தியாவை மட்டுமே எதிர்கொள்ளவும் கையாளவும் தயாரான இலங்கை அதற்போது அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் ஒரே நேரத்தில் கையாளுகையை மேற்கொள்கிறது. இத்தகைய நெருக்கடிக்குள் இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் இருதடவை தோற்றார்hகள். 2015 இல் ஆட்சிமாற்றத்தின் போதும் 2018 இல் பாராளுமன்ற நெருக்கடி ஏற்பட்ட போதும் தற்போதைய ஆட்சியாளர்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்கள். ஆனால் மீண்டும்’ எழுச்சி பெற்ற நிலையில் மீளவும் ஒரு நெருக்கடியா? அல்லது வெற்றி கரமான கையாளுகையா? என்பது அடுத்துவரும் வாரங்களில் தெரிந்துவிடும். அல்லது முழுமையாக சீன பக்கம் நின்று கொண்டு இந்திய அமெரிக்க தரப்பினை எதிர்ப்பதாக மாறும். அது அதிக நெருக்கடியானதாக அமையும் என்ற எதிர்பாக்கை உள்ளது.புவிசார் சக்தியுடன் மோதுவத இலகுவான விடயமாக அமையாது.

எனவே இலங்கை அமெரிக்க இந்திய சீனா முரண்பாடுடைய சக்திகளுக்குள் அதிக சவாலைச் சந்தித்துவருகிறது.அதனை வெற்றிகரமானதாக கையாளும் இராஜதந்திரமுடைய நாடு என்பதை கடந்த காலத்தில் நிறுவியுள்ளது. அதனையே செயல்படுத்துமா அல்லது முறிந்துபோகுமா என்பதே முக்கியமான கேள்வியாகும். இதில் தமிழ் தலைமைகள் பார்வையாளராகக் கூட காணமுடியாத சூழலுக்குள் காணப்படுகின்டறனர் அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE