Friday 26th of April 2024 06:18:11 PM GMT

LANGUAGE - TAMIL
-
மீண்டும் மூத்தோர் பலிக் களங்களாகும்  ஒன்ராறியோ பராமரிப்பு மையங்கள்!

மீண்டும் மூத்தோர் பலிக் களங்களாகும் ஒன்ராறியோ பராமரிப்பு மையங்கள்!


ஒன்ராறியோவில் தொற்று நோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் அங்குள்ள சில நீண்டகால மூத்தோர் பராமரிப்பு மையங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ரொரண்டோ – ஸ்கார்பாரோவில் உள்ள ரெவெரா குழுமத்தால் இயக்கப்படும் கென்னடி நீண்டகால முதியோர் பராமரிப்பு மையத்தில் வசித்த 29 பேர் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

தொற்று நோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் இந்தப் பராமரிப்பு மையத்தில் கடந்த ஒக்டோபர்-02 ஆம் திகதி முதல் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. இதுவரை இங்கு வசிக்கும் 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பராமரிப்பு மைய நிர்வாகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்ட 92 பேரில் 32 பேர் குணமடைந்துள்ளனர். 31 பேர் தொடர்ந்து தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று நோய்களின்போது காலமான மூத்தோர் இல்ல குடியிருப்பாளர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு மிகுந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பராமரிப்பு இல்ல நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

289 படுக்கை வசதி கொண்ட இந்த நீண்டகால முதியோர் பராமரிப்பு மைய ஊழியர்கள் 35 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 17 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.ஏனைய ஊழியர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இந்நிலையில் தொற்று நோய்க்கு மத்தியில் முதியோர் பராமரிப்பு மைய கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ரொரண்டோ பொது சுகாதார சேவைத் துறையினர் மற்றும் ஸ்கார்பாரோ சுகாதார வலையமைப்பு (SHN) ஆகியவற்றின் பணியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த மூத்தோர் குடியிருப்பு மையத்தில் உள்ளவர்கள் தினமும் இரண்டு முறை கண்காணிக்கப்படுகிறார்கள் என ரெவெரா பராமரிப்பு மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த இல்லத்தில் வசிக்கும் மூத்தோர்களின் குடும்பங்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அவர்களும் தினசரி நிலைமைகளை அறிவிக்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ரெவெராவால் இயக்கப்படும் கிங்ஸ்டன் சாலை பகுதியில் உள்ள 150 பேர் வசிக்கும் மற்றொரு நீண்ட கால பராமரிப்பு மையத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கு 86 முதியவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மையத்தில் இதுவரை ஏழு பேர் இறந்துள்ளனர். 31 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த மையத்தில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 15 ஊழியர்களில் 12 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று நோயின் முதல் அலையின்போது ஒன்ராறியோவில் உள்ள பல முதியோர் பராமரிப்பு மையங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான முதியவர்கள் இறந்தனர். பல முதியவர்கள் பராமரிப்பின்றிக் கைவிடப்பட்டனர். இதனையடுத்து சில முதியோர் இல்ல பராமரிப்பில் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE