Friday 26th of April 2024 04:20:24 PM GMT

LANGUAGE - TAMIL
-
கனடா -  அமெரிக்கா எல்லைக் கட்டுப்பாடு  டிசம்பர்-21 வரை நீடிக்கப்படும் சாத்தியம்!

கனடா - அமெரிக்கா எல்லைக் கட்டுப்பாடு டிசம்பர்-21 வரை நீடிக்கப்படும் சாத்தியம்!


கனடா - அமெரிக்கா இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் குறைந்தது இன்னும் ஒரு மாதமாவது நடைமுறையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேரின் அலுவலகத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை அடுத்து கனடா - அமெரிக்கா எல்லை அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய நீடிப்பு நவம்பர் 21 ஆம் திகதியுடன் காலாவதியாகும் நிலையில் எல்லைக் கட்டுப்பாடு டிசம்பர் 21 ஆம் திகதி வரை மேலும் ஒரு மாதம் நீடிக்கப்படவுள்ளது.

எல்லைக் கட்டுப்பாடுகளின்படி சுற்றுலாப்பயணிகள் மற்றும் எல்லை தாண்டிய மக்களின் வருகைகள் தடை செய்யப்பட்டுள்ளன. எனினும் வர்த்தக நடவடிக்கைகள் இரு நாடுகளில் எல்லைகள் ஊடாக அனுமதிக்கப்படுகின்றன.

அத்துடன், கருணை அடிப்படையில் இரு நாடுகளையும் சேர்ந்த பிரிந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் சுகாதார வழிகாட்டல்களின் கீழ் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் உலக நாடுகளில் மிகுந்த அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுவரும் அகதிகளும் மனிதாபிமான அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்னிலையில் கனடியர்களின் நலன்களை முன்னிறுத்தி எல்லையை தொடர்ந்து மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் முடிவு எடுக்கப்படும் என கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோயாளர் தொகை இரு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பயணத்தைத் தடைசெய்வதற்கான முடிவு ஆச்சரியமல்ல. ஏனெனில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சுகாதார அதிகாரிகள் இந்த தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வரை எல்லைகளைத் திறப்பது இரு நாடுகளிலும் உள்ள மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கனடாவுடனான அமெரிக்க எல்லையைத் திறக்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்தார்.

எனினும் பொது சுகாதாரத் துறையின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே எல்லைகளை மீண்டும் திறக்கும் முடிவு எடுக்கப்படும் என கனடிய அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் கனடா - அமெரிக்காவிற்கும் இடையில் பொழுதுபோக்கு பயணங்களை மீண்டும் தொடங்க எப்போது அனுமதிப்பது பாதுகாப்பாக இருக்கும்? என்ற மதிப்பீடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக கனடிய தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் முன்பு கூறியிருந்தார்.

கனேடிய சுகாதார அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பொது சுகாதார அதிகாரிகள் இது தொடர்பில் பேசியுள்ளனர் எனவும் அவா் குறிப்பிட்டார்.

எனினும் எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து மிகக் கவனமாகவே முடிவு எடுக்கப்படும் எனவும் அவா் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கனடா, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE