Thursday 25th of April 2024 10:44:30 PM GMT

LANGUAGE - TAMIL
.
தாமதப்படும் நீதியும் மறுக்கப்படும் நீதியும்! - நா.யோகேந்திரநாதன்!

தாமதப்படும் நீதியும் மறுக்கப்படும் நீதியும்! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனம் வழங்கி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உரையாற்றும்போது தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமனாகும் எனத் தெரிவித்திருந்தார். அதாவது ஏற்கனவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு நீதிபதிகளின் பற்றாக்குறையே காரணமெனவும் அதன் பொருட்டே நீதிபதிகளின் தொகையை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதென்ற தொனியிலேயே அவரின் கருத்துகள் அமைந்திருந்தன.

அதே நிகழ்வில் உரையாற்றிய நீதியமைச்சர் உரையாற்றும்போது, தற்சமயம் நிலுவையில் 2,50,560 வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியுள்ளதாகவும் அவற்றில் பல 25 வருடங்கள், 15 வருடங்கள், 10 வருடங்கள் காலத்தைக் கடந்துள்ள வழக்குகளும் உள்ளடங்கும் எனவும் தெரிவித்திருந்தார். அவ்வாறான பெரும் தொகை பற்றியோ, இவ்வளவு நீண்ட காலப்பகுதியில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது பற்றியோ ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஏனெனில் 25 வருடங்கள் உட்பட நீண்ட காலமாக வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்படாமலே 800க்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களின் வழக்குகள் முடிவடையாத நிலையில் அவர்களின் ஆயுள் சிறையிலேயே முடிவடைந்த சம்பவங்களும் இடம் பெற்றதுண்டு. சாதாரணமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் கைதியின் தண்டனைக் காலம் 20 வருடங்களாகும். ஆனால் தமிழ் அரசியல் கைதிகளோ எந்தவொரு நீதிமன்றத் தீர்ப்புமின்றியே ஆயுள் கைதிகளை விடக் கூடியகாலம் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவ்வகையில் ஜனாதிபதியின் கூற்றுப்படி தமிழ் அரசியல் கைதிகளுக்குத் தாமதப்படுத்தப்படும் நீதி மூலம் அவர்களுக்கான நீதி படுமோசமான முறையில் மறுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஏற்கனவே நீதிமன்றங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 607 போதைவஸ்து குற்றங்கள் தொடர்பான குற்றப் பத்திரிகைகளில் மாற்றங்களைச் செய்து அவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னொருபுறம் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப்போவதாகவும் சிறு குற்றங்களின் பேரில் சிறைவாசம் அனுபவிக்கும் 800 கைதிகளை பொது மன்னிப்பில் விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போதைவஸ்து குற்றவாளிகள், மரண தண்டனைக் கைதிகள் சிறுகுற்றங்களுக்காகச் சிறைவாசம் அனுபவிப்பவர் என்ற வகையினருக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அடக்கப்படமாட்டார்கள் என்பதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை.

ஒரு கைதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்;டால் அவர் மீது மீண்டும் இன்னொரு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அவரை மீண்டும் தடுத்து வைக்கப்படும் சம்பவங்களும் இடம்பெறாமலில்லை.

அந்நிலையில் தான் வியாழேந்திரனும், அங்கஜன் இராமநாதனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுமாகப் 15 பேர் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். அவர்கள் நீதியமைச்சர் அல்சப்ரியைச் சந்தித்துப் 15 பேரும் கையெழுத்திட்ட மகஜரைக் கையளித்து அது தொடர்பாகப் பேச்சுகளை நடத்தியுள்ளனர். அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்துள்ளார். அதே மகஜரின் பிரதி ஜனாதிபதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதராதலிங்கம் தலைமையில் செல்வராஜா கஜேந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகியோர் பிரதமர் மஹிந்தவைச் சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் 15 பேர் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர். பிரதமரும் சாதகமான முறையில் பரிசீலிப்பதாகப் பதிலளித்துள்ளார்.

இம்முயற்சிகள் தொடங்கப்பட்டபோது அரசாங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மல்பில அரசியல் கைதிகள் என எவரும் இல்லையெனவும் அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே எனவும் தெரிவித்துள்ளார். அவர்கள் அரசியல் கைதிகள் இல்லையென்றால் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற குற்றவியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களென்றால் அவர்கள் ஏன் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படவேண்டும்? இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லப்போதில்லை. இன ஒடுக்குமுறைக்குள் நியாயங்களைப் புதைப்பது அவர்களுக்கு அப்படியொன்றும் புதிதல்ல.

அரசியல் கைதிகள் என எவருமில்லை என்ற கருத்து இப்போதுதான் அவரால் மட்டும் கூறப்படுவதல்ல. இது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது பலமுறை கூறிய விடயம் தான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி நடத்திய ஐ.தே.கட்சியின் நீதி அமைச்சர்களாகவிருந்த விஜயதாச ராஜபக்ஷவும் தலதா அத்துக்கோரளவும் அவர்கள் அதிகாரத்திலிருந்தபோதும் கூறியவைதான்.

எனவே ஆட்சியிலிருந்த, ஆட்சியிலிருக்கின்ற எந்த ஒரு தரப்பும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அக்கறை காட்டுவதில்லை. மாறாக அவர்களைத் தடுத்து வைக்கப் புதிய புதிய காரணங்களைச் சொல்லியே ஏமாற்றி வருகின்றனர்.

இப்படியான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி பொதுசன முன்னணியில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தற்சமயம் கோத்தபாய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகிக்கிறார். அவர் அரசாங்கக் கட்சி உறுப்பினர் என்ற வகையில் இம்முயற்சியில் இறங்கினாலும் பல கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டமை வரவேற்க வேண்டிய விடயம்.

அதுமட்டுமின்றிச் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடிகளைத் தீர்க்க கைதிகளை பல்வேறு வழிகள் மூலமும் விடுதலை செய்வது பற்றி ஜனாதிபதி, நீதி அமைச்சர் ஆகியோர் கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில் அவர் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார் போலவே தோன்றுகிறது.

ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் தமிழ் அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யும்படி அல்லது தங்கள் வழக்குகளைத் துரிதப்படுத்தும்படி கோரித் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அப்போது வடக்குக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி அங்கு வைத்துத் தான் அரசியல் கைதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

அவ்வகையில் அவரால் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சட்டமா அதிபர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில் கலந்து கொண்ட சம்பந்தனும் சுமந்திரனும் நியாயப்படி அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டிய காரணங்களை முன் வைத்து வாதாடியிருக்கவேண்டும். தாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்துவரும் நிலையில் அந்த சக்தியைப் பாவித்து அரசியல் கைதிகளைப் பொது மன்னிப்பின் பேரிலோ, புனர்வாழ்வுக்குச் சிலகாலம் அனுப்பி விடுவிப்பது தொடர்பாகவோ உறுதியாக நின்று பேரம் பேசியிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலிலுள்ள போதே சட்ட ரீதியாகக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக சட்டமா அதிபருடனும் நீதியமைச்சருடனும் இணைந்து ஆராய்ந்தார்கள். அதன்படி அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதப்படுத்த அனுராதபுரத்தில் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த நீதிமன்றம் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட இலங்கையின் குற்றவியல். சட்டங்களுக்கு அமைவாகவே விசாரணைகளை மேற்கொண்டது. இதனால் ஏற்பட்ட பலன், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டாலும் குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுத்த ஒரு சில கைதிகளுக்கு 200 வருடம் 100 வருடம் 15 வருடம் எனவும் சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு தான் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சட்டமா அதிபர், இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நிறைவேற்றினர். ஆனால் இன்றுவரை அரசியல் கைதிகளின் விடுதலை தீர்க்கப்படாத பிரச்சினையாக நிலைபெற்றுள்ளது. அவர்களின் சிறை வாழ்வும் காலவரையின்றி நீண்டு செல்கிறது.

இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் ஏனைய தமிழ்க் கட்சிகளையும் தங்களுடன் இணைத்து அரசியல் கைதி;கள் விடுதலை விடயத்தில் களமிறங்கியுள்ளனர்.

அரசாங்கத்தில் அவர்கள் இருவரும் அங்கம் வகிப்பவர்கள் என்ற வகையிலும் சிறைச்சாலை நெருக்கடிகள் காரணமாகப் பல கைதிகளை வௌ;வேறு வழிமுறைகளில் விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் முயன்று கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியும் அவர்களின் முயற்சி வெற்றியளிக்க வாய்ப்புகள் உண்டு. அதை எவ்வாறு தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் சரியாகப் பயன்படுத்தி ஊக்குவிக்கப் போகின்றனர் என்பது தமிழ் மக்களிடம் எழும் கேள்வியாகும். ஏனெனில் சுமந்திரன் போன்ற சட்ட மேதைகளின் மூளையில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்படியான விடயங்களை அரசியல் ரீதியாக அணுகாமல் சட்டபூர்வமாக அணுகும் வழிமுறைகளுக்கு விலைபோய் விடுவார்கள்.

இப்படித்தான் கடந்த காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை வாய்ப்புக்கள் இவர்களால் தவறவிடப்பட்டன.

குறிப்பாக சாள்ஸ் நிர்மலநாதன், வினோதராதலிங்கம் கலையரசன், செல்வராசா கஜேந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகப் பிரதமருடன் பேச்சுக்களை நடத்தியதுடன் 15 பேர் கையெழுத்திட்ட மகஜரையும் சமர்ப்பித்துள்ளனர். ஏற்கனவே வியாழேந்திரன், அங்கஜன் ஆகியோருடன் இணைந்து இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இல்லாமல் ஏன் இச் சந்திப்பு நிகழ்ந்தது என்பது கேள்வியாக உள்ளது. எப்படியிருப்பினும் இச் சந்திப்பின் போது பிரதமர் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக வாக்குறுதியளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே மிருசுவில் படுகொலையில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டான்.

அந்த நிலையில் பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யவேண்டுமெனக் கோரி பொதுசன முன்னணியைச் சேர்ந்த ஏறக்குறைய 100 பேர் கையெடுத்திட்டு மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி ராஜபக்ஷ சகோதரர்களின் ஆதரவாளர்களான வேறு ஒரு நகரசபைத் தலைவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் மரணதண்டனைக் கைதிகளாகச் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இவர்களையெல்லாம் விடுவிக்க வேண்டுமென்ற அழுத்தம் அரசாங்கத்துக்கு அவர்களின் கட்சிக்குள்ளேயே வலுப்பெற்று வருகிறது.

அவர்களைச் சட்டபூர்வமாக விடுவிக்க முடியாத நிலையில் அவர்களின் விடுவிப்புக்கான ஒரு பொது வழியொன்றைத் தேட வேண்டியுள்ளது. எனவே வியாழேந்திரன், அங்கஜன் ஆகியோரின் முயற்சிகள் மறைமுகமான அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம் பெறுகின்றனவா என்ற கேள்வி எழவும் இடமுண்டு. எப்படியிருப்பினும் இது ஒரு அரிய சந்தர்ப்பம் என்பதில் சந்தேகத்துக்கிடமில்லை. எனவே தமிழ்த் தரப்பினர் இதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்பதே முக்கிய விடயமாகும். ஏனெனில் அரசியல் ரீதியான குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது என்ற பேரில் அரசாங்கம் தமது ஆதரவாளர்களை விடுதலை செய்யும்போது கண்துடைப்புக்காகச் சில அரசியல் கைதிகளை விடுவிக்கக்கூடும். ஏனையோர் அரசியல் சம்பந்தப்படாத குற்றங்களையே இழைத்தவர்களென்றோ அல்லது வேறு காரணங்களைச் சொல்லியோ விடுவிக்காமல் விடலாம். இப்போது நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளவர்களை விடுவிக்க முடியாதென ஒரு சட்டக் காரணத்தைக் கூடக் காட்டலாம்.

இங்கு தான் அரசாங்கக் கட்சியிலிருந்தாலென்ன, எதிர்க்கட்சியிலிருந்தாலென்ன தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும். அதாவது சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படும் வகையில் நியாயங்களையும் வழிமுறைகளையும் முன்வைத்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். தற்போது நிலுவையிலுள்ள வழக்குகளைச் சட்டமா அதிபர் மீளப்பெறுவதன் மூலம் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படும் சாத்தியத்தை உருவாக்கமுடியும். மீண்டுமொருமுறை வழக்குகளைத் துரிதப்படுத்தி அவர்களுக்கு புர்வாழ்வளிப்பது போன்ற ஏமாற்றுகளில் மடங்கிப் போய்விடக்கூடாது.

எப்படியிருப்பினும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இதுவரை தாமதப்படுத்தப்பட்ட நீதி இனி நிரந்தரமாக மறுக்கப்பட்ட நீதியாக மாற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் கொடுக்கக்கூடாதென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அவ்வகையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வேறுபாடுகளையும் தேர்தல் வெற்றியை நோக்கியுமே சகல விடயங்களையும் கையாளும் ஒருவித சுயநல நோக்கங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு தமிழ்க்கைதிகள் விடுதலை விடயத்தில் ஐக்கியத்துடனும் புத்திசாதுர்த்துடனும் நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மட்டுமே சாதகமான பலன்களைப் பெறமுடியும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

15.12.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE