Monday 25th of January 2021 03:50:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கையளிக்கும் தீர்மானம் ஜெனீவாவை கையாளும் உத்தியா?

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கையளிக்கும் தீர்மானம் ஜெனீவாவை கையாளும் உத்தியா?


இலங்கையின் இந்திய அரசியல் களம் மீளவும் ஒரு உரையாடலுக்குள் நகருகின்றது. அதனை இந்திய ஆட்சித்துறையின் நலனுக்கான வாய்ப்புக்கள் என்றும் இன்னோர் பக்கம் இலங்கை ஆட்சியாளரின் நலனுக்கான வாய்பான களம் என்றும் வாதிட முடியும்.

வெளிப்படையாகப் பார்த்தால் இரு தரப்பும் தமது நலன்களை நோக்கி நகர்வதாகவும் அதில் சமபலமுடையவையாகவும் தெரியும். ஆனால் உள்ளார்ந்த அர்த்தத்தில் பார்த்தால் எத்தகைய போக்கு நிலவுகிறது என்ற தெளிவாகும். எப்போதும் இலங்கை இந்தியத் தரப்புக்களுக்கிடையே நிலவும் அரசியல் நகர்வுகள் இரு தரப்புக்கும் ஏற்றமும் இறக்கமும் உடையதாகவே தெரிகிறது. சில சந்தர்ப்பங்களில் மட்டுமே சமவலுவுடையதாக அமைவதனைக் காணமுடிகிறது. அந்தவகையில் இலங்கையின் தற்போதைய அமைச்சரவை இரு முக்கிய தீர்மானங்களை 14 .12.2020 அமைச்சரவைத் தீர்மானத்தின் போது முன்மொழிந்துள்ளன. அத்தகைய தீர்மானங்களால் பிராந்திய மட்டத்திலும் உள்நாட்டிலும் ஏற்படப் போகும் அரசியலை தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது.

முதலாவது இந்தியாவும் ஜப்பானும் நீண்ட காலமாக முன்னைய அரசாங்கத்திடம் உடன்பட்டுக் கொண்ட கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான கோரிக்கைக்கு தற்போதைய அரசாங்கம் அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்தை கடந்த நிலையிலேயே அத்தகைய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் போராட்டங்கள் ஒருபக்கம் அதன் திட்டமிடலையும் செயல்பாடுகளையும் இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என்ற தொழிலாளரது கோரிக்கைகளும் ஒன்றிணைந்து இழுபறிநிலைக்குத் தள்ளப்பட்டதுடன் தற்போதும் இரு குழுக்களை அமைத்துள்ளது அமைச்சரவை என்ற தகவலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகவுள்ளது. ஏறக்குறைய ஒருவருடத்திற்கு பின்பும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தின் அபிவிருத்திப் பணியை முழுமையாக வழங்குமாக இருகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்படியாயின் ஏன் இத்தகைய அறிவிப்பினை இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை தெரிவித்துள்ளது என்பது இயல்பாக எழும் கேள்வியாகும்.

இந்தியாவுடன் இணைந்து போகவேண்டிய நிலைக்குள் இலங்கையின் புவிசார் அரசியல் காணப்படுகிறது. குறைந்தபட்சம் இந்தியாவுடன் இணைந்து போவது போலாவது இலங்கை காட்டிக் கொள்வது அவசியமானது. இந்தியாவுக்கு முதலிடம் இந்தோ-பசுபிக் விடயத்திற்கு முதலிடம் எனும் இலங்கையின் வெளியுறவுச் செயலாளரது அறிவிப்பின் உள்ளடக்கமும் அதுவாகவே உள்ளது. அதனால் பிராந்திய புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் கையாளுவதுடன் அவற்றின் விளைவாக ஜெனீவா அரங்கையும் பொருளாதார இருப்பினையும் தக்கவைத்துக் கொள்ள முடியுமொன இலங்கை அரசாங்கம் கருதுகிறது. ஜெனீவாத் தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறிய போதும் இதனை விடவும் இறுக்கமான தீர்மானம் ஒன்றுக்கான சூழலோ அல்லது கால நீடிப்புக்கான வாய்ப்போ ஏற்படலாம் என்ற எண்ணம் இலங்கை அரசாங்கத்திடம் உண்டு. அதனைத் தடுப்பது அல்லது கைவிடச் செய்வதென்பது இந்திய அமெரிக்க சக்திகளால் மமட்டுமே முடியும். அதனால் அந்த இரு சக்திகளையும் திருப்திப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் நிகழ ஆரம்பித்துள்ளன. ஆனால் இத்தகைய நகர்வு ஒர் இராஜதந்திர செய்முறையாகவே தெரிகிறது. சிலவேளைகளில் கிழக்கு முனையம் தொடர்பான அறிவிப்புக்கு மாறான செய்முறை கூட எதிர்காலத்தில் அமைய வாய்ப்புள்ளது.

ஜெனீவா விடயத்தில் இலங்கைத் தமிழ் தலைமைகளின் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதாக தென்படவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக இலங்கை அரசாங்கம் தீர்மானத்திலிருந்து வெளியேறிய பின்பு காலநீடிப்புக்கு சிபார்சு செய்யும் செயல்முறையொன்றினை தமிழ் அரசியல் கட்சியொன்றின் பாராளுமன்ற பிரதிநிதி வரைபென்றை கையளிப்பதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறதாக தகவல்கள் வெளி-யாகியுள்ளன. அதே நேரம் புலம்பெயர்ந்தவர்கள் சார்பிலும் தனியான வரைபொன்று மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கிடைத்த வாய்ப்புக்களை மிக மோசமாக புலத்திலிருந்து பலவீனப்படுத்தியவர்களே மீளவும் தற்போதைய சூழலையும் கையாள முனைவதாக தெரிகிறது. அது ஆபத்தானது. வெளியேறிய அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்குவதென்பது வேடிக்கையானதாகவே தெரிகிறது. மாறாக புதிய தீர்மானம் ஒன்றினை உருவாக்கி அதனூடாக நியாயாதிக்கத்தை கோருவது பொருத்தமானது. அத்துடன் தனித்தனியே தீர்மானம் எதனையும் மேற்கொள்ளாது புலத்திலுள்ள அரசியல் கட்சிகளும் புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து ஒரு தீர்மானத்தை கொண்டுவருதல் அவசியமானது.

இரண்டாவது மாகாண சபைக்கான தேர்தலை நடாத்த அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் தேர்தலை நடாத்துவது என்ற முடிபானது இந்திய அமெரிக்க கூட்டையும் ஜெனீவாவையும் கையாளுவதாகவே தெரிகிறது. அதிலும் அமைச்சர் வாசுதேவநாணயக்கார மாகாணசபைத் தேர்தல் பற்றிக் குறிப்பிடும் போது இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட இலங்கை-இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் உருவாகிய மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறும் என்ற கருத்துப்பட ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.அது மட்டுமல்ல மாகாணசபையை முறைமையே இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்ற எண்ணப்பாங்குடன் செயல்படும் அரசாங்கம் திடீரென தேர்தலை அறிவித்துள்ளமை கவனிக்கப்பட வேண்டிய வடயமாகவே தெரிகிறது. புதிய அரசியல் அமைப்பில் மாகாணசபை முறைமையே தேவையில்லை என மகாசங்கத்தினரும் கடும்போக்கு அரசியல் வாதிகளும் பௌத்த துறவிகளும் கருத்துநிலையிலுள்ளதென்பது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு நிகழ்ந்த பதிவுகளாக உள்ளன. அரசாங்கத்தின் ஜனாதிபதியோ பிரதமரோ அதற்கு பதிலளிக்காததும் அத்தகைய சந்தேகத்தை வலுப்படுத்தியிருந்தது.

அதிலும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறக்கொடவும் அவரது பாத்பைண்டர் அமைப்பும் மாகாணசபையை இல்லாது ஒழித்துவிட்டு உள்ளூராட்சியமைப்புக்கூடாக அதிகாரத்தை கைமாற்றலாம் எனவும் பொருளாதார அபிவிருத்தியே அவசியமானதெனவும் கருத்து முன்வைத்துள்ள நிலையில் அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல மாகாணசபைகளின் காலப்பகுதி முடிவடைந்து வருடக்கணக்காகிய நிலையில் தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ள போதிலும் உடனடியாக அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது அதிக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் கோபால் பாக்லே அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இலங்கை பன்மைத்துவ ஜனநாயகத்தை கொண்டிருப்பது சிறப்பானது என்ற சாரப்பட கருத்து தெரிவித்திருந்தார். அதாவது தமிழ் மக்கள் மட்டுமல்ல அனைத்து சமூகங்களும் ஐக்கியத்துடன் இருப்பது இலங்கைக்கு எப்போதும் சிறப்பான நன்மையளிக்கும் என்று தெரிவித்தார். ஆனால் மாகாணசபை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காது இவ்வாறு தெரிவித்திருந்தமையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகவே தெரிகிறது.

எனவே இலங்கை தனது இராஜதந்திர நகர்வில் மிகச் சாதுரியமாக பயணிக்கின்றது. அதற்கான முனைப்புக்களை பிராந்திய சர்வதேச தளத்தில் ஏற்படுத்திவருகிறது. அரசியல் செய்முறை என்பது தந்திரோபாயத்தினால் உருவாக்கப்படுவதாகும். அத்தகைய தந்திரோபாய நடவடிக்கைகளே அரசாங்கத்தினையும் அரசுகளையும் பாதுகாக்கும் என்ற விதியினை இலங்கை மிக நீண்ட காலமாக கடைப்பிடித்துவருகிறது. அதுவும் அதன் இருப்புக்கும் உறுதிப்பாட்டுக்கும் காரணமாகவுள்ளது. அமைச்சரவையின் தீர்மானம் இரண்டும் அமெரிக்க-இந்திய அணுகுமுறைகளை கையாளுவதற்கானதாக அமைந்தாலும் அதனால் உள்நாடடு மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் சில நன்மைகளை ஏற்படுத்துவதாக அமையும்.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE