Friday 26th of April 2024 06:38:55 PM GMT

LANGUAGE - TAMIL
-
அமெரிக்க தோ்தலில் ரஷ்யாவின்  தலையீடுகள் குறித்து  முதல் அழைப்பிலேயே புடினை எச்சரித்த ஜோ பைடன்!

அமெரிக்க தோ்தலில் ரஷ்யாவின் தலையீடுகள் குறித்து முதல் அழைப்பிலேயே புடினை எச்சரித்த ஜோ பைடன்!


அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேசிய முதல் தொலைபேசி அழைப்பிலேயே அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்ததாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தொலைபேசி உரையாடலின்போது ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு விசம் கொடுக்கப்பட்ட விவகாரம், அதனைத் தொடர்ந்து அவரது கைது மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் இரு நாடுகளின் தலைவர்களும் பேசியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக செயற்படும் என்பதை புடினுடனான உரையாடலின்போது ஜனாதிபதி பைடன் தெளிவுபடுத்தினார்.

இதுமட்டுமின்றி ரஷ்யா மீது உலக நாடுகள் தொடர்ந்து முன்வைத்து வரும் இணையவழி தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் குறித்தும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பிலும் பேசப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பைடன் எழுப்பியதாக வெள்ளை மாளிகையால் குறிப்பிடப்பட்ட எந்த ஒரு விடயமும் குறிப்பிடப்படவில்லை.

தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள பைடனுக்கு புடின் வாழ்த்துகள் தெரிவித்தாக ரஷ்ய தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதன் மூலம் இரு நாடுகளின் நலன்களையும் உறுதிசெய்வது குறித்தும், உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் இருநாடுகளுக்கும் உள்ள சிறப்பு பொறுப்பு குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைவிட இந்த உரையாடலின்போது அமெரிக்க - ரஷ்ய அணு ஆயுத போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணைகளின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒபாமா கால ஒப்பந்தத்தை புதுப்பிக்க இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக தெரியவருகிறது.

அடுத்த மாதம் முடிவடையவுள்ள இந்த ஒப்பந்ததை மீண்டும் புதுப்பிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மறுப்பு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE