Thursday 25th of April 2024 09:52:12 PM GMT

LANGUAGE - TAMIL
-
கனடாவில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி  விரைவில் பயன்பாட்டுக்கு வரும் சாத்தியம்!

கனடாவில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் சாத்தியம்!


கனடாவில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியை பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதிப்பது குறித்து ஆய்வுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கனடா சுகாதாரத் துறை தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சுப்ரியா சர்மா தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி ஒக்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா கனடாவில் விண்ணப்பித்துள்ளன.

இந்நிலையில் இந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் குறித்து ஹெல்த் கனடாவின் மருந்து ஒழுங்குமுறை ஆணைய நிபுணர்கள் மதிப்பீடு செய்து வருகின்றனர் எனவும் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சுப்ரியா சர்மா கூறினார்.

அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு ஏற்கனவே பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட பல நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

எனினும் சமீத்திய நாட்களில் இந்தத் தடுப்பூசியின் செயல் திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தென்னாப்பிரிக்கா தனது நாட்டில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடும் பணிகளை இடைநிறுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதிய திரிவு கொரோனா வைரஸூக்கு எதிராக இந்தத் தடுப்பூசி சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தவில்லை என வெளியான தகவல்களை அடுத்தே அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பிரான்ஸ் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான செய்திகளை கனடா கவனத்தில் எடுத்துள்ளது. மதிப்பாய்வின்போது இவை குறித்துக் கவனம் செலுத்தப்படும். எனினும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை கனடாவில் அங்கீகரிப்பதற்கான நடைமுறை இதனால் தாமதமடையாது என கனடா தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சுப்ரியா சர்மா கூறினார்.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கனடாவில் அங்கீகரிக்கப்பட்டால் பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளைத் தொடர்ந்து, நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது தடுப்பூசியாக இது அமையும்.

இதேவேளை, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை மதிப்பாய்வு செய்யும் பணியில் கனேடிய சுகாதார அதிகாரிகள், மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

அத்துடன், ஜோன்சன் & ஜோன்சன் மற்றும் நோவாவாக்ஸ் தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தார்.

பொதுவாக, தடுப்பூசி தொடர்பான மதிப்பீட்டு செயல்முறை ஒரு வருடம் வரை ஆகலாம். ஆனால் அவசர தேவையைக் கருத்தில் கொண்டு ஹெல்த் கனடா தடுப்பூசிகளை அங்கீகரிப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்தியுள்ளது.

கனடா 20 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை பெற முன்பதிவு செய்துள்ளது. அத்துடன், 38 மில்லியன் ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசிகள், 76 மில்லியன் நோவாவாக்ஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவும் அந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஹெல்த் கனடாவின் அங்கீகாரம் கிடைத்தவுடன், எந்தவொரு தடுப்பூசியையும் மிக விரைவாக கனடாவுக்கு எடுத்துவருவதற்கு தயார் நிலையில் உள்ளதாக கனேடிய கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம் கிடைத்ததும் மார்ச் மாத இறுதிக்கும் சுமார் 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் கனடாவுக்கு வந்து சேரும் எனவும் அவா் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE