Friday 26th of April 2024 11:25:20 AM GMT

LANGUAGE - TAMIL
-
கடும்  அழுத்தங்களை எதிர்கொள்ளும்   கனேடியர் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ!

கடும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் கனேடியர் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ!


கனடாவில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டங்கள் மிக மெதுவாக இருப்பதாக கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுவரும் நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த விவகாரத்தால் கடும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகிறார்.

கனடாவில் கோவிட்-19 தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் கடந்த டிசம்பரில் அமெரிக்காவில் தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட அதேநாளில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது தென்னமெரிக்க நாடுகள் உட்பட பல நாடுகளை விட கனடா தடுப்பூசி செயற்றிட்டத்தில் பின்னணியிலேயே உள்ளது.

ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகள் தமக்கென சொந்தத் தடுப்பூசிகளைக் கொண்டுள்ளன. ஆனால் கனடா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள ஏனைய நாடுகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, கனடா இப்போது தடுப்பூசித் திட்டங்களை முன்னெடுக்கும் நாடுகளின் பட்டியலில் உலகில் 40-ஆவது இடத்தில் உள்ளது. இது எதிர்க்கட்சிகளின் கடுமையாக விமர்சனத்துக்குக் காரணியாகியுள்ளது.

தடுப்பூசி நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் பிரகாரம் முழுமையான அளவு தடுப்பூசிகளை நாங்கள் பெற முடியுமா? என்பதில் சந்தேகம் உள்ளது என எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ’டூல் செவ்வாயன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தாா்.

தடுப்பூசி போட விரும்பும் அனைத்துக் கனேடியர்களுக்கும் செப்டம்பர் இறுதிக்குள் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் ட்ரூடோ கூறுகிறார். ஆனால் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு பெரும்பாலான கனேடியர்கள் அவரது இந்தக் கருத்தை நம்பவில்லை எனக் கூறுகிறது.

கனடாவின் 38 மில்லியன் மக்களில் 3% -க்கும் குறைவானவர்களே இதுவரை இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

இவ்வாறான நெருக்கடிகளின் மத்தியில் 49 வயதான ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது. பொதுமன்றத்தில் ஏற்கனவே பெரும்பான்மை இன்றியே ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசு உள்ளது. முக்கிய தீா்மானங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளையே ட்ரூடோ அரசு நம்பியிருக்க வேண்டி உள்ளது.

இந்நிலையில் மீண்டும் விரைவில் ஒரு பொதுத் தேர்தலை நாடு சந்திக்கலாம் எனவும் கருதப்படுகிறது. விரைவில் மீண்டும் ஒரு தோ்தல் வருமானால் தொற்று நோய் நெருக்கடி , பொருளாதார மந்த நிலை, வேலையின்மை மற்றும் தடுப்பூசித் திட்டங்களில் உள்ள மந்த நிலை உள்ளிட்டவை லிபரல் கட்சியினருக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனக் கருதப்படுகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE