Friday 26th of April 2024 02:01:25 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு நீடிக்கும் சுவை, வாசனை உணர்வு இழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு நீடிக்கும் சுவை, வாசனை உணர்வு இழப்பு!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 5 மாதங்கள் வரை சுவை மற்றும் வாசனை உணர்வுகளை இழக்க நேரிடும் என கனடா - கியூபெக் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 813 கியூபெக் சுகாதாரப் பாதுகாப்புத் தொழிலாளர்களை மையப்படுத்தி மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இணைய வழியில் பகிரப்பட்ட வினாத் தாள் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தக் கணிப்பீட்டில் பங்கேற்றவர்கள் தங்கள் சுவை மற்றும் வாசனை உணர்வுகளை பொறுத்து பூஜ்ஜிய முதல் 10 வரை மதிப்பெண்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பதிலளித்தவர்களில் 580 பேர் நோயின் ஆரம்ப கட்டங்களில் சுவை அல்லது வாசனை இழப்பு அல்லது இரண்டையும் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

297 பேர் 5 மாதங்கள் வரை சுவை மற்றும் வாசனை உணர்வுகளை முழுமையாக மீளப் பெற முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். 134 பேர் அதற்கு மேற்பட்ட நீண்ட கால சுவை மற்றும் வாசனை உணர்வுகளை இழந்துள்ளதாகக் கூறியுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட பலருக்கு வாசனை மற்றும் சுவை உணர்வுகள் பாதிக்கப்படக்கூடும். சிலருக்கு இது நீண்ட நாட்கள் நீடிக்கக்கூடும் என்பதை எங்கள் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என ஆய்வு ஆசிரியரும் கியூபெக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரியருமான ஜோஹன்னஸ் ஃப்ராஸ்னெல்லி தெரிவித்துள்ளார்.

இந்த முடிவுகள் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துத்தை உணர்த்துகிறது. அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நரம்பியல் சிக்கல்கள் குறித்து குணமடைந்த பின்னரும் கண்காணிக்க வேண்டியதன் அவசியமும் இதன்மூலம் உணரப்படுவதாக அவா் கூறினார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் பலருக்கு இவ்வாறு பொதுவாக ஏற்படும் சுவை மற்றும் மணம் உணர்வு இழப்பு குணமடைந்த பின்னரும் சிலருக்கு தொடர்ந்து நிரந்தரமாக நீடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிதான இந்த நோய் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவை மற்றும் மணம் இழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் தாக்கம் காரணமாக உடல், உள ரீதியாப் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்டலாம் என அஞ்சப்படுகிறது.

மணம் குறைந்து வரும் உணர்வு அனோஸ்மியா (anosmia) என அழைக்கப்படுகிறது. இது சிலருக்கு கோவிட் -19 தொற்று நோயின் ஏற்படும் முதல் அறிகுறிகளில் ஒன்றாகும். தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட மேலும் சிலருக்கு மணத்துடன், சுவை உணர்வும் அற்றுப் போய்விடுகிறது.

எனினும் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் குணமடைந்த பிறகு பொதுவாக சில வாரங்களுக்குள் வாசனை மற்றும் சுவை உணர்வை மீண்டும் பெறுகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட அளவு நோயாளிகளுக்கு சுவை, மணம் போன்ற உணர்வு இழப்புக்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்த உணா்வுகள் எப்போது மீண்டும் வழமைக்கும் திரும்பும்? என மருத்துவர்களால் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட மேலும் ஏராளமானவர்கள் நிரந்தரமாகவே மணம் மற்றும் சுவை உணர்வுகளை இழக்க நேரிடும் என்று சில நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஏன் இந்த அத்தியாவசிய உணர்வுகளை இழக்கிறார்கள்? அவர்களுக்கு எவ்வாறு உதவுவது? என்பதை கண்டறிய அவசரமாகப் போராட வேண்டிய நிலையை இது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

சுவை மற்றும் வாசனை இழப்பு நோய்க்கு தீா்வு கண்டறிய பல ஆய்வாளர்கள் பல தசாப்தங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இப்போது கொரோனா வைரஸால் இவ்வாறான உணா்வுகளை இழந்து பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து இன்னும் வேகமாக ஆரயப்பட வேண்டியுள்ளது என நியூயோர்க் சினாய் மவுண்டில் உள்ள இகான் மருத்துவக் கல்லூரியின் உளவியல், நரம்பியல் மற்றும் மரபியல் பேராசிரியர் டாக்டர் டோலோரஸ் மலாஸ்பினா முன்னர் கருத்து வெளியிட்டிருந்தார். வாசனை, சுவை மற்றும் பசி ஆகிய உணர்வுகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்நிலையில் திடீரென ஏற்படும் அனோஸ்மியா எனப்படும் வாசனை இழப்பு மற்றும் சுவை இழப்பு உடல், உள ரீதியாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வாசனை, சுவை ஆகிய இன்பத்தை உணர இயலாமை, இவற்றால் ஏற்படும் பற்றின்மை ஆகிய விசித்திரமான உணர்வுகள் ஆரோக்கியத்தில் பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியின் நரம்பியல், உயிரியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் சந்தீப் ராபர்ட் தத்தா இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அனோஸ்மியா என்ற வாசனை உணர்விழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து ஆழமாகக் கவலை கொண்டுள்ளனர். இதனால் தாம் மிகவும் பலவீனப்பட்டுள்ளதாக அவா்கள் விவரிக்கிறார்கள் எனவும் பேராசிரியர் சந்தீப் ராபர்ட் தத்தா இது குறித்து அமெரிக்காவில் முன்னர் வெளியான ஆய்வொன்று குறித்து கருத்து வெளியிட்டிருந்தார். வாசனை உணர்வு அற்றுப் போகும் வரை நாம் அது குறித்து அதிக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அந்த உணர்வு திடீரென அற்றுப்போகும்போது அதன் தாக்கங்கள் பல்வேறு வழிகளில் பிரதிபலிக்கின்றன என பிலடெல்பியாவில் உள்ள மோனெல் மையத்தில் உணர்வாற்றல்கள் குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்துவரும் பமீலா டால்டன் குறிப்பிடுகிறார்.

வாசனை இழப்பு என்பது கவலை மற்றும் மனச்சோர்வுக்கான ஆபத்தான காரணியாக உள்ளது. எனவே, இது குறித்து மனநல வைத்திய நிபுணர்கள் ஆழமான கரிசனை கொண்டுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான குறைந்தளவானோருக்கு மட்டுமே நீண்டகால வாசனை இழப்பு ஏற்பட்டாலும் பொது சுகாதார கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமானது என மருத்தவ வலிலுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வாசனையை உணர முடியாத பலர் பசி உணர்வையும் இழக்கின்றனர்.இதனால் உணவில் நாட்டமின்றி ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் எதிர்பாராத எடைக் குறைவு போன்றவற்றுக்கு அவர்கள் உள்ளாக நேரிடலாம் எனவும் அஞ்சப்படுகிறது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE