Friday 26th of April 2024 09:50:21 PM GMT

LANGUAGE - TAMIL
-
வேலைக்குப் போகாமல் இருக்க கடத்தல்  நாடகமாடிய இளைஞன்!

வேலைக்குப் போகாமல் இருக்க கடத்தல் நாடகமாடிய இளைஞன்!


அமெரிக்கா - அரிசோனாவில் உள்ள கூலிட்ஜ் என்ற நகரத்தைச் சேர்ந்த 19 வயதான பிராண்டன் சோல்ஸ் என்பவர் வேலைக்குப் போகாமல் இருப்பதற்காக தன்னைத் தானே கட்டிவைத்து யாரோ தன்னைக் கடத்தியதாக நாடகமாடிய விடயம் பொலிஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கூலிட்ஜ் பகுதியில் இருக்கும் டயர் தொழிற்சாலை ஒன்றில் பிராண்டன் சோல்ஸ் பணிபுரிந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அவர் வாயில் துணி திணிக்கப்பட்டு, கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் தொழிற்சாலை இருக்கும் பகுதிக்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார். அப்போது அந்த வழியே வந்தவர்கள் அவரை பார்த்து பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் பிராண்டன்னிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தன்னை இருவர் கடத்தி சென்றதாக கூறினார். தனது தந்தை பெருந்தொகைப் பணத்தை மறைத்து வைத்திருப்பதாகவும் இது குறித்து தகவல் பெறவே தான் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்,

எனினும் அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்ததில் அவர் கடத்தி செல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை. அத்துடன் அவரது உடலில் கடத்தி செல்லப்பட்டதற்கான எந்த அடையாளங்களும் காணப்படவில்லை. இது பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அவரிடம் துருவித்-துருவி பொலிஸார் விசாரணை நடத்தியபோது தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், வேலைக்கு செல்ல மனமில்லாமல் விடுமுறை எடுப்பதற்காக கடத்தல் நாடகம் ஆடியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்த இளைஞனை எச்சரித்து பொலிஸார் விடுவித்தனர். எனினும் வேலைக்கு வராமல் இருக்க குறித்த இளைஞன் கடத்தல் நாடகம் ஆடியதை அறிந்துகொண்ட அவர் பணியாற்றிய தொழிற்சாலை நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE