Friday 26th of April 2024 02:40:18 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையை நிர்க்கதியாக இந்தியா கைவிடவேகூடாது! - வெளிவிவகார அமைச்சின் செயலாளர்!

இலங்கையை நிர்க்கதியாக இந்தியா கைவிடவேகூடாது! - வெளிவிவகார அமைச்சின் செயலாளர்!


"ஜெனிவா நெருக்கடியில் எமது அயல்நாடான இந்தியா, 'அங்குமில்லை, இங்குமில்லை' என்ற பாணியில் பங்கேற்காமைப் போக்கைப் பேணாமல், முழு ஈடுபாட்டுடனும், ஆக்கபூர்வமாகவும் எங்களுக்கு ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும். இலங்கையை நிர்க்கதியாக இந்தியா கைவிட்டு விடக்கூடாது."

- இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே.

கொழும்பில் வைத்து இந்தியாவின் 'த ஹிண்டு' நாளிதழுக்கு அளித்த விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை விடயம் விரைவில் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் வாக்கெடுப்புக்கு வர இருக்கின்றது. அச்சமயம் எமது உடனடி அயல் தேசமான இந்தியா, எங்களை நிர்க்கதியாககக் கைவிட்டு விடமுடியாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஐ.நா.மனித உரிமைகள் சபையில் அண்மையில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், முழு உலகத்தையும் ஒரு குடும்பம் என்று குறிக்கும் விதத்தில் 'வஸூதைவ குடும்பகம்' என்று தெரிவித்திருந்தார். அதைச் சுட்டிக்காட்டிய கொலம்பகே, "உங்கள் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டமைபோல் முழு உலகமும் ஒரு குடும்பம் என்றால், நாங்கள் உடனடியாக உங்கள் பக்கத்துக் குடும்பம், அப்படியல்லவா?" எனக் கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இலங்கைக்கு அருகில் உள்ள அயல் தேசங்களான இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் எல்லாம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள். கொரோனா நெருக்கடி, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் என்று அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் ஒரே மாதிரியானவை. எனவே, அவை எல்லாம் ஜெனிவாவில் இலங்கையை ஒன்றுபட்டு நின்று ஆதரிக்க வேண்டும். ஆதரிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

எமது பிராந்திய நாடுகள் எம்மை ஆதரிக்கா விட்டால் அது எமக்கு பெரும் அசெளகரியமாகிவிடும்.

எங்கள் ஜனாதிபதியின் (கோட்டாபய ராஜபக்சவின்) ஆதரவு கோரும் முதல் கடிதம் இந்தியப் பிரதமருக்குத்தான் அனுப்பப்பட்டது. இந்த விடயத்தில் இந்தியத் தூதருடன்தான் முதல் சந்திப்பை அவர் மேற்கொண்டார். அதற்கு முக்கிய காரணம் இந்த விடயத்தில் தென்னாசியாவின் ஐக்கியம் குறித்து நாங்கள் அதிக சிரத்தை கொண்டுள்ளோம்.

இலங்கை தனது அண்டை நாடுகளின் ஆதரவை அவசியமாகத் தேடி வேண்டி நிற்கின்றது. நாங்கள் விசேடமாக எதையும் கோரவில்லை. இந்தப் பிராந்தியத்தில் எல்லோருடைய (எல்லா நாடுகளினுடைய) பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒரு முகமாக இருக்க வேண்டும் என்ற அயலுறவுக் கொள்கையின் ஆரம்ப அம்சத்தின் அடிப்படையிலான பங்களிப்பையே உரிமையுடன் எதிர்பார்க்கின்றோம்" - என்றார்.

வக்கெடுப்பில் இந்தியா பங்குபற்றாமல் விடுவது, இலங்கைக்கு ஆதரவானதாக அமையுமா என்று கேட்கப்பட்டபோது,

"நாங்கள் இந்தியாவின் முழு ஈடுபாட்டுடனான ஆக்கபூர்வமான பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். பங்குபற்றாமல் விடுவதன் மூலமான அங்குமில்லை, இங்குமில்லை என்ற நிலைப்பாட்டையல்ல'' என்றார் அவர்.

மோசமான - இலங்கைக்கு எதிராகக் காட்டமான - பிரேரணை ஒன்றைத் தோற்கடிப்பது சாத்தியமற்றது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

"ஐ.நா.மனித உரிமைகள் சபையின் இரட்டை வேடம் மற்றும் பாசாங்குத்தனமான போக்குக்கு மத்தியில் தென்கோடி நாடு ஒன்று இத்தகைய பிரேரணையை வெற்றி கொள்வது மிகவும் இயலாத காரியம்'' - என்றார் அவர்.

"இத்தகைய தீர்மானம் ஒன்றின் பின்னர் வரக்கூடிய பொருளாதாரத் தடை போன்ற தண்டிப்பு நடவடிக்கைகள் நாட்டை விட மக்களையே அதிகம் நெருக்கடியில் ஆழ்த்தும்" என்று குறிப்பிட்ட அவர், நல்லிணக்கம் நாட்டுக்குள், நாட்டு மக்களிடையே இருந்து ஏற்பட வேண்டுமே தவிர, வெளியில் இருந்து அதனைத் திணிக்க முடியாது என்று சாரப்படவும் கருத்து வெளியிட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE